Sunday, December 25, 2005

மரபணுவியல் செய்திகள்

செய்திகள் வாசிப்பது ஜீவா!

ஓட்டப்பந்தையங்களில் கென்யாவைச் சேர்ந்தவர்களும், எத்தியோப்பியர்களும் - பொதுவாக ஆப்ரிக்க இனத்தினவர் முண்ணணியில் வருவது உங்களுக்கு தெரியும். முயன்றால் முடியாதது இல்லை என்றாலும், ஆப்பரிக்கர்களின் மரபணுவிலேயே ஏதாவது எழுதி வைத்து இருக்கிறதா என்றால் - 'ஆமாம்' என்கிறார்கள் - சமீபத்திய ஆய்வில் கிளாஸ்கோ பல்கலைக்கழக மரபணு ஆராய்சியாளர்கள். அவர்கள் ஆய்வு செய்த ஆப்ரிக்கர்களில் - அவர்களுக்கு நான்கு மரபணுக்களில் மாறுதல்கள் இருக்கிறதாக சொல்கிறார்கள். மாறுதலில் பொதுவானதொரு mutation ஏதும் இல்லாவிட்டாலும், மரபணு வகைகளில் ஏற்படும் கூட்டணிதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு 10 வயது அதிகமாகிறதாம். அது சரி, அதெப்படி கணக்கிட்டார்கள் என்கிறீர்களா? கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது பற்றி ஆராய்ந்தது. முதலில் கொஞ்சம் முன்னுரை: ஒவ்வொரு குரோமசோமின் முனைகளிலும் 'டீலோமியர்' என்கிற டி.என்.ஏ இருக்கும். ஒவ்வொரு முறை செல் உடைந்து குட்டி செல்கள் உருவாகும்போதும் இந்த டீலோமியரின் நீளமும் குறைந்துபோகும். சிறிய வயதுள்ளவர்களில், 'டீலோமிரேஸ்' என்கிற என்சைம்-இன் உதவியால், டீலோமியர் வளர்ந்து குரோமசோம்கள் திடமாக இருக்க உதவுகின்றன. ஆக, டீலோமியர் நீளமாக இருக்க, ஒருவரின் குரோமசோம்கள் நீண்ட நாள் தாக்குப்பிடுக்கும், அவர் நீண்ட நாள் வாழலாம். வயதானவர்களில், நீண்ட டீலோமியர் இருப்பவர்கள் நீண்ட நாள் இருப்பார்கள் என்றும், டீலோமியர் அவ்வளவு நீளமாக இல்லாதவர்கள் குறைவான நாட்களே வாழ்வார்கள் என்றும் சொல்லலாம். சரி, இப்போ நம்ம ஆராய்ச்சிக்கு வருவோம். அதிக மன அழுத்தத்துடன் வாழ்ந்த்துவரும் பெண்களை ஆராய்சியில் உட்படுத்தியபோது, அவர்களுக்கு சொல்லி வைத்தார்ப்போல, டீலோமியர்களின் நீளம் குறைவாக காணப்பட்டதாம். கிட்டத்தட்ட 9 முதல் 17 ஆண்டுகால செல் வளர்ச்சியின் (அல்லது தேய்தலின்) அளவிற்கு அந்த தாய்மார்களுக்கு, மன அழுத்தம் காரணமாக செல்களின் அடிப்படையில் வயது குறைந்து போனதாக சொல்லலாம் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

Sunday, December 18, 2005

தேடல்: ஐ-பாட் - முதலிடம்

கிருஸ்துமஸ் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பரிசுப்பொருட்களின் விற்பனையும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு சுவையான தகவல்:

சென்ற ஒரு மாதத்தில் மட்டும் இணைய 'தேடு' தளங்களில் (Search engines), அதிகமாக தேடப்பட்ட பொருள் என்ன தெரியுமா? - விடை: ஆப்பிளின் ஐ-பாட் (I-Pod). 6.6 மில்லியன் தேடல்கள். அதற்குபின், இரண்டாவது இடம்: X-பாக்ஸ் என்கிற மைக்ரோஸாஃப்டின் வீடியோ விளையாட்டு சாதனம் - 5 மில்லியன் தேடல்கள். மூன்றாவது இடம்: ஹாரி பாட்டர் - 4.8 மில்லியன் தேடல்கள். 'ஸ்டார் வார்ஸ்' - நான்காவது இடம், மற்றும், 'பார்பி' பொம்மைக்கு- ஐந்தாவது இடம்.

இந்த தகவலில் இருந்து இரண்டு விஷயங்கள் புலனாகிறது. ஒன்று : நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த பொருட்கள், எப்படி இத்தனை நபர்களிடம் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பது. மேலும், எப்படி, குழந்தைகளை திருப்திப்படுதுவது (இந்த பரிசுப்பொருள் விஷயத்திலாவது) என்பது தலையாய தேடலாக அமைந்து விட்டது என்பதும். பெரியவர்களின் பொருட்கள் இந்த தேடல்களில் முந்தவில்லையே!

இரண்டாவது: எப்படி இத்தனை நபர்கள் இணையத்தில் தேடு தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும்தான். தங்களுக்கு தெரியாத விஷயங்களைப்பற்றி அறிவுத்தேடலுக்கு இந்த தேடு தளங்களை நம்பி இருக்கிறார்கள் என்பதும். தேடு தளங்கள் தேடித்தரும் இணைய தளங்களில் எந்த அளவு நம்பிக்கை வைக்கமுடியும் என்பதில் எந்த யாரும் கவனம் செலுத்துவதாக இல்லை. அதற்கான சான்றிதழ் ஏதையும் தேடு தளங்கள் வழங்குவதும் இல்லை. இருப்பினும் அதை தேடு தளங்களின் குறையாக யாரும் கருதவில்லை!
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு பொருளை தேடும்போது வேண்டுமென்றே தேடுதளம் அந்த பொருளைவிட விலை குறைவான மாற்றுப்பொருளை உங்களுக்கு காட்டலாம். இது நல்லதுதானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!. ஆனால் எந்த பொருளைக் காட்டுவது என்பதை, எந்த பொருளின் விற்பனையாளர் அந்த தேடு தளத்திற்கு, கையூட்டு ஏதும் (!) அளித்திருக்கிறார், என்ற அடிப்படையில் அமைந்தால் என்ன செய்வது!
திறந்த சந்தையில் இதெல்லாம் நடப்பது சர்வசாதாரணம்தான். நுகர்வோர்தான் தனக்கு வேண்டிய பொருளை கவனமான ஆராய்ச்சியின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

இது இப்படி இருக்க, தேடு தளங்களின் முக்கியத்துவம் அதிகரிக்க, நீங்களும் ஒரு தேடுதளம் தொடங்கலாமே!. வட்டார மக்களின் தேவை மற்றும் வட்டார மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், உங்களுக்கென்று ஒரு தொழில் உங்கள் கையில்!

Wednesday, December 14, 2005

லேப்டாப் வாங்கலையோ லேப்டாப்!

லேப்டாப் என்றழைக்கப்படும் மடிக்கணிணி இப்போது ரொம்ப பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. என்ன, விலைதான் சாமன்யாமானவர்களில் கைகளுக்கு எட்டாக்கனியாய் இருக்கிறது - முன்பைக்காட்டிலும் வெகுவாக விலை குறைந்திருந்தாலும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ லேப்டாப்பின் உபயோகம் பல்கிப்பெருகி வளர்ந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி செல்லும் ஒவ்வொருவரிடம் பெரும்பாலும் மடிக்கணிணி உள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்...? சில ஆண்டுகளுக்கு முன் செல்போன் உபயோகமும் இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றோ செல்பேசி பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளது. அடுத்தது அதுபோல லேப்டாப் ?!?. கேட்க நன்றாக இருக்கிறது, நடக்குமா?

நடக்க வழி இருக்கிறது என்கிறது, 'One Laptop per Child (OLPC)' என்கிற என்.ஜி.ஓ நிறுவனம். 'Quanta Computer Inc', என்கிற தைவான் நிறுவனத்துடன் கூட்டாக,
U.S $100 க்கு, லேப்டாப் தயாரிக்க இருக்கிறார்களாம் - 2006 இன் அரை இறுதிக்குள். முதல் கட்டமாக 5 முதல் 15 மில்லியன் லேப்டாப்களை, ஏழு நாடுகளில் (சீனா, இந்தியா, பிரேசில், அர்ஜெண்டீனா, எகிப்து, நைஜீரியா, தாய்லாந்து) , அரசாங்கம் மூலமாக பள்ளிகளில் சோதனையில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

U.S $100 க்கு மடிக்கணிணி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா? நல்ல திடமானதாக உருவாக்கப்பட உள்ள இந்த மடிக்கணிணிகள், லினக்ஸ்-இல் (அப்படி போடு அறுவாளை) இயங்குமாம்.

செய்தியின் மூலம்
மேலும்

Friday, December 09, 2005

அடடே, 'அடா'!

என்னதான் சொல்லறேன்னு பாக்கறீங்களா?
அதாங்க, அடா. 'அடா' அப்படீன்னு ஒரு கணிணி ஆணைத்தொடர் மொழி கேள்விப்பட்டு இருக்கீங்களா? பத்து வருடங்களுக்கு முன்னால், '95 வாக்கில், பிரபலமடையத்தொடங்கிய இந்த கணிணி மொழி, பின்னால், விமான கட்டுப்படுதல் போன்ற mission critical applications களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. பின்னாளில் C மற்றும் ஜாவா ஆகிய கணிணி மொழிகள் பிரபலமடைய, நம்ம 'அடா', 'அடடா'ன்னு சொல்லற நிலமைக்கு வந்துட்டார்.
10 வருஷம் Fast Forward பண்ணினா, இப்போ 2005 இல், அடா-2005 அப்படீன்னு புது version வெளியிடப் போறாங்களாம். போன பத்து ஆண்டுகளில், புதிய மாற்றங்கள் பலவற்றை கொண்டு வந்திருக்காங்களாம் - முக்கால்வாசி தன்னார்வம் கொண்டவர்களின் முயற்சியால்.

இத்தனை நாள் C மற்றும் ஜாவா என்னதான் பிரபலமான கணிணி மொழியாக இருந்தாலும் ( எனக்கும் வேறெந்த கணிணி மொழியும் தெரியாதுங்க!), Memory Management விஷயத்தில் இரண்டைக்காட்டிலும் 'அடா' நல்லவே செயல்படுமாம்.

கணிணி ஆணைத்தொடர் இலக்கணத்தில்் சில சில மாறுதல்களுக்கு வழிவிட்டதால், பெரிய அனுகூலன்களை காணமுடிகிறது என்கிறார்கள். என்னென்ன மாறுதல்கள் என்கிற விரிவான விளக்கங்களை அவர்களது இணைய தளத்தில் காணலாம்.

'அடடே, அடா' என்று சொல்ல வைப்பார்களா என்று பார்ப்போம்.

Monday, October 31, 2005

சபாஷ் கார்த்திக்!!!


Gadam Karthik Posted by Picasa

கேட்டீங்களா சேதியை?
கொஞ்சம் பழைய செய்திதான், இருந்தாலும் Better late than Never.
சென்ற மாதம் 9ஆம் தேதி, பாரதிய வித்யா பவனில் கடம் கார்த்திக்-க்கு, கல்கி விருது வழங்கப்பட்டது.

கடம் கார்த்திக், விக்கு விநாயகம் அவர்களிடமிருந்து, கடம் பயின்று கொண்டு, இன்றைக்கு சிறந்ததொரு பக்க வாத்திய விற்பன்னராக வளர்ந்திருக்கிறார்.
இன்றைய முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் கடம் பக்கவாத்தியமாக வாசிக்கிறார் கடம் S கார்த்திக். மேலும் இசை நிகழ்சிகளையயும் தானே தாயாரித்து வழங்கி வருகிறார்.

மேலும் சாதனைகள் புரிந்து, விருதுகள் பல பெற வாழ்த்துக்கள் கார்த்திக்!

Friday, July 01, 2005

சென்னையில் கண்டதும் கேட்டதும்

தாயகம் சென்று திரும்பியாயிற்று. பயணம் இனிதாகவும் பயனாகவும் இருந்தது. உடன் ஒரு மகிழ்சியான செய்தி. எனக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இல்லறம் நல்லறமாய், அன்பும் அறனும் நிறைந்ததாய் நிறைவேற தங்கள் வாழ்த்துக்களை பகிர்வீர்.

இரண்டே வாரமானதலால், சென்னையை விட்டு வேறூர் ஏதும் செல்லவில்லை. சென்னையில் முதல் வாரம் வெயில் தகித்தது. இரண்டாவது வாரமோ பெரிதும் மேகமூட்டமாய் இருக்க வெயிலின்்லின் கடுமை சற்றே தணிந்து இருந்தது. இன்னமும் குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

சென்னையில் நாங்கள் வசிக்கும் அசோக் நகரில் காலையில் வாக்கிங் செல்வதற்காக நிறையபேர் அதிகாலையிலேயே எழுந்து தெருக்களில் வலம் வருவது ஆரோக்கியமான செய்தி. முதியவர்களும், பெண்களும், இளைஞர்களும் யாதொரு பாகுபாடில்லாமல் குடும்ப சகிதமாக நடந்து செல்வது இனிது. கூடவே அருகம்புல் சாறும், கீரையும் வாங்கக் கிடைக்கிறது.

சென்னையில் புதிதாக 'டெக்கான் க்ரானிகல்' என்ற தினசரி நாளிதழ் தனது சென்னைப் பதிப்பை துவக்கியிருக்கிறது. ஒரே ஒரு ரூபாய்க்கு கிடைப்பதால் பல வீடுகளில் இந்த நாளிதழுக்கு மாறி விட்டார்கள். 'டி.நகர் டாக்ஸ்', 'மாம்பலம் டைம்ஸ்' போன்ற இலவச உள்ளுர் குறும் இதழ்களும் பிரபலமாகியுள்ளன - தரமான கட்டுரைகளுடன் - ஒன்றே ஒன்று என்று இருந்தாலும்.

வீட்டில் 'லெண்டிங்' முறையில் அனைத்து பத்ரிக்கைகளும் வந்து போனாலும் அவற்றை படிக்க யாதொரு உற்சாகமும் இருக்கவில்லை. சில பத்ரிக்கைகளில், சில கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நபர்களால் பணம் கொடுத்து எழுதப்பட்டதாக தெரிந்தது. உதாரணத்திற்கு, நடிகை நமீதா பற்றிய கட்டுரை, ஒன்றுக்கும் மேற்பட்ட வார இதழில் ஒரே சமயத்தில்்!. மேலும் ஒவ்வொரு வார இதழிலும் ஒரு நடிகர் தன் சுய புராணத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார். மார்க்கெட் இழந்த நடிகர்களுக்குத்தான் வேலை இல்லை என்றால், படிப்பவர்களுக்கு கூடவா?. எப்படி, தொலைக்காட்சி நிகழ்சிகள் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்டதாக மாறிவிட்டதோ, அதுபோல பத்ரிக்கைகளும் மாறிக்கொண்டு இருக்கின்றன. கல்கி வார இதழின் தாள்தரமும் கணிசமாக குறைந்து இருந்தது. இன்னமும் ஜூ.வி, நக்கீரன் போன்ற இதழ்கள் பரபரப்பான செய்திகளை பதிப்பதிலும், தேவைப்பட்டால் அவற்றை தயாரிப்பதிலும் முனைப்பாய் இருக்கின்றன.

சுடோகு என்ற ஜப்பானிய எண்வரிசை விளையாட்டு சென்னையில் பிரபலமாகி உள்ளது. இளைஞர்கள் காலையில் பேப்பரும் பென்சிலும் கொண்டு அழித்து அழித்து கட்டங்களை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!. அதுபோல குழந்தைகளிடம் 'போகோ' என்கிற கார்ட்டூன் சேனல் பிரபலமாகி உள்ளது.

நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடைக்கு சென்றிருந்தேன். வெளிநாட்டு பதிப்பக புத்தகங்கள் (உதாரணம் பெங்குவின் க்ளாசிக்ஸ்) வெளிநாடு விலையில் பாதி விலையில் கிடைக்கிறது! உதாரணத்திற்கு ஒரு 5$ புத்தகம் ருபாய் விலையில் 110. சி.டி க்களின் விலைகளில் சீரற்ற தன்மை உள்ளது. 65 ரூபாய் தொடங்கி 250 ரூபாய் வரை செல்கிறது. தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்வார்கள் போலும். ஆனால் ஒன்று - 65 ரூபாய்க்கே ஒரிஜினல் சி.டி கிடைத்தால், சி.டி. திருட்டுக்கள் குறையும். இப்போதெல்லாம் யாரும் ஒலி நாடா கேசட்டுக்களை வாங்குவதில்லை என நினைக்கிறேன். இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சி.டி. க்கள் நீண்ட காத்திருப்புக்குப்பின் வெளி வந்துவிட்டன.

சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை எவ்வளவு நன்றாக உள்ளது என்று போய்பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது - தினசரி நாளிதழ்களில் கொலை, கொள்ளை சம்பவங்களைப் படிக்கும் வரை. இரவு ஒன்பது மணிக்குமேல் இந்தச் சாலையில் கொலை, கொள்ளை மலிவோ மலிவாம்.

சென்னையில் இப்போதெல்லாம் தரமான வெளிநாட்டு உணவகங்களும் பிரபலமாகியுள்ளன. சீன, தாய் உணவகங்கள் சென்னையிலும் இருப்பது வியப்பைத் தருகிறது. மௌபரீஸ் சாலையில் 'பெண்ஜராங்' என்ற தாய் உணவகம் இதிலொன்று.

அமெரிக்க ஆப்பிள் வகைகள் கூட சாதாரண பழக்கடைகளில் கிடைக்கிறது - 'Produce of U.S.A' என்ற ஸ்டிக்கருடன். (எந்த அளவுக்கு உண்மையான ஸ்டிக்கர் என்பது வேறு் விஷயம்)

டி.கே பட்டம்மாள் அவர்களின் நினைவாக சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி வாணி மாஹாலில் நடந்தது, சென்றிருந்தேன். டி.எம். கிருஷ்ணா வாய்ப்பாட்டு. ஸ்ரீராம்குமார் வயலின். கணேஷ்ராம் ம்ருதங்கம். கார்த்திக் கடம். டி.கே பட்டம்மாள் அவர்கள் இசை அமைத்த அரிய பாடல்களும் கேட்கக் கிடைத்தது.

Sunday, June 12, 2005

வி...டு...மு...றை...விடுமுறை

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு விடுமுறை...

ஆமாங்க, கோடை விடுமுறை விட்டாச்சு...

தாயகம் - தங்கத் தமிழகம் செல்கிறேன்...

இரண்டு வாரம் கழித்து புத்தம்புது பதிவுகளில் சந்திப்போம்...

அதுவரை விட்டுப்போன பதிவுகளில் காலடி பதியுங்களேன்...

வருகைக்கு நன்றி...மீண்டும் சந்திப்போம்!

Friday, June 10, 2005

சாத்தானுடன் ஒரு ஜெனரல்

SHAKE HANDS WITH THE DEVIL என்ற படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். ருவாண்டாவில் 94 இல் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி உருக்கமானதொரு ஆவணத் திரைப்படம் - இது நடந்த சமயம் ஐ.நா படையின் ஜெனரலாக இருந்த ரோமியோ டேலையர் என்பவரின் பார்வையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய புத்தகத்தின் திரைவடிவமே இது.


ruwanda Posted by Hello

Thursday, June 09, 2005

இளையராஜாவின் வெண்பா

ஜெயகாந்தன் பாராட்டு உரையில் இளையராஜா எழுதிப்படித்த வெண்பா - பி.கே.எஸ் பதிவில் இளையராஜா உரையில் கேட்டது:

கேட்டதை எழுதியிருக்கிறேன்.பிரித்த சீர்கள் இலக்கணப்படி அமைந்துள்ளதா தெரியவில்லை.
மரபியலார் யாரேனும் சரி பார்க்கவும். நன்றி.

பாரதியும் இவரும் ஒன்று என்று:

நிமிர்ந்த நடையதனால், நேர்கொண்டு பார்க்கும்
தமிழின் திறமதனால் தந்நேர் ஒன்றில்லா
அமுதமொழி வாக்கின் நாக்கொழுக்கால் காந்தன்
சமமாவான் பாரதிக்கு சாற்று.

சத்தியத்தை காட்டுவதால் சக்தி எழுத்துள்ளதால்
இத்துணையும் சோர்விலதால் முத்தமிழும் முன்னுள்ளதால்
இக்கரையோர் தேக்கமிடும் இன்னெழுத்தோன் பாரதியோடு
ஒத்தவனாம் காந்தனென்று செப்பு.

Wednesday, June 08, 2005

ஊன்றுகோல்

ஊன்றுகோல்
எல்லாம் ஊனம் அல்ல,
சுடர் விளக்கானாலும்
தூண்டுகோல்
தேவை...


Streets are for Walking! Posted by Hello

(படம்: பழைய Sports Illustrated இல் இருந்து பிரதி எடுத்தது)

Tuesday, June 07, 2005

நாவல் : Life of Pi

சரிதான், இந்த முறை இந்தியப் பயணத்தின்போது படிப்பதற்காக புத்தகம் வாங்கியாச்சு!. தொடர்ந்து முழு நீளமாக படிப்பதற்கு இதைப்போல் சந்தர்ப்பம் வேறேது?
இந்த முறை வாங்கியுள்ள புத்தகம் Life of Pi (Pi என்பது பைசைன் படேல் என்ற பெயரின் சுறுக்கம்). புத்தகத்தின் ஆசிரியர் கனேடியரான யான் மார்டெல். 2002 க்கான புக்கர் பரிசு பெற்ற நாவல். முன்பொருமுறை மதி இந்த புத்தகத்தைப்பற்றி எழுதியதாக ஞாபகம். 2006 இல் நைட் சியாமளன் இந்தக் கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னால் ஹேரி பாட்டரின் சென்ற பகுதியின் இயக்குனர் அல்போன்ஸோ க்யூரான் இயக்கப்போவதாக மாறிவிட்டது.

பைசைன் படேல் என்பவர் பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையில் காப்பாளராக உள்ளார். எழுபதுகளின் இறுதியில் இந்தியாவிலிருந்து நீர் வழியாக கனடா புலம் பெயர, கப்பல் நடு வழியில் மூழ்குகிறது. படேல் ஒரு படகில் ஒரு வங்க புலியுடனும் வேறு சில விலங்குகளுடன் தப்பிக்கிறார். இவர்கள் பசிபிக் பெருங்கடலில் 227 நாட்கள் தத்தளிப்பது கரை சேர்வது கதையின் முக்கிய பகுதி. பாண்டிச்சேரி - பசிபிக் - மெக்ஸிகோ - டொராண்டோ என பயணிக்கிறது கதை.


LifeOfPi Posted by Hello


Yann Martel Posted by Hello

ஆசிரியர் யான் மார்டெல் பாண்டிச்சேரிக்கு செல்லும்போது, அங்கு நேரு தெருவில் உள்ள இந்தியன் காஃபி ஹவுசில் ஒரு வயதான மனிதரை சந்திக்கிறார். அவர் பெயர் ஃப்ரான்ஸிஸ் அதிரூபசாமி. அவர் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைக்கும் கதை ஒன்று சொல்கிறேன் என்று துவங்கி சொல்லும் கதைதான் இது.

புத்தகத்தில் மொத்தம் 326 பக்கங்கள். முன்னுரை மட்டும்தான் படித்துள்ளேன். முழுதும் படித்து முடித்துவிட்டு, நான் ரசித்தவற்றை எழுதுகிறேன்.

இது சம்பந்தப்பட்ட கார்ட்டூன்/விளையாட்டு ஒன்றைஇங்கே பார்க்கலாம்.

Sunday, June 05, 2005

சாவிகளுக்கொரு இரும்புப்பெட்டி

எத்தனை இணைய தளங்களில் எத்தனை கடவுச்சொற்கள் (Passwords), இத்தனையும் யார் நினைவில் வைத்துக்கொள்வது என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்?

இணைய தளங்கள் மட்டுமல்ல, மின் அஞ்சல் முகவரிகள், ATM கணக்குகள், அலுவலக கணக்குகள் இத்யாதி, இத்யாதி - இப்படி பலதரப்பட்ட இடங்களில், பலதரப்பட்ட வகையான கடவுச்சொற்கள் நினைவில் வைத்துக்கொள்வது, கடினமே.

சிலர் எல்லா கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல் கொள்வார். சில வகையான கணக்குகளுக்கு, கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒன்றை மாற்றினால் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருக்கவும் முடியாது. மேலும் ஒரு கடவுச்சொல்லை யாருக்கேனும் தெரிவிக்கவும் முடியாது, ஏனென்றால் மற்றவையெல்லாம் வெளியே தெரிந்து விடும்.

வித விதமான கடவுச்சொற்களை ஒரு இரும்புப்பெட்டியில் பூட்டி வைத்துக்கொண்டு, ஒற்றைச்சாவியால் வேண்டும்போது திறந்து பார்த்துக்கொள்ளும் வசதி இருந்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

அதற்கும் வழி உள்ளது. இந்த மென்பொருள் இரும்புப்பெட்டியின் உதவியால்.
Password Safe எனப்படும் இந்த மென்பொருள் ஒரு SourceForge.net திட்டம். இலவசமாக இறக்கிக்கொள்ளலாம்.

அது செய்யும் வேலையெல்லாம் சுலபமானதுதான், இருப்பினும் பயனுள்ளது.
உங்களுக்குத் தேவையானவற்றை இதில் சேமிக்க, அது ஒரு கோப்பில் சங்கேத மொழியில் எழுதி வைத்துக்கொள்கிறது. இந்த மென்பொருள் இரும்புப்பெட்டிக்கு மூல கடவுச்சொல் ஒன்று கொண்டு, நீங்கள் அதை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளலாம். அதைக்கொண்டு பெட்டியைத் திறந்தவுடன், தேவையான கடவுச்சொல்லை எடுத்துக்கொண்டு பயன் படுத்திக்கொள்ளலாம்!. மேலும் நீங்கள் இந்த பெட்டியைத்திறக்கும்போது யாரேனும் அருகில் இருந்தால், அவருக்குத் தெரியாமல் கடவுச்சொல்லை மறைத்து வைத்துக்கொண்டே அதை பயன்படுத்திக் கொள்ள முடியும்!. மேலும் இது ஒரு சிறிய கோப்பிலே உங்கள் அனைத்து கடவுச்சொற்களையும் சேமித்து வைப்பதால், நீங்கள் வேறொரு இடத்திற்கு சென்றாலோ, வேறோரு கணிணி மூலமாக பார்க்க வேண்டுமானால், உங்களுக்கு தேவைப்படுவதெல்லம் இந்த ஒரு கோப்பு மட்டும்தான்!.

Friday, June 03, 2005

மரபணுவியல் - கடந்துவந்த பாதை

1951 - ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் க்ரிக் டி.என்.ஏ மாதிரி வடிவம் செய்கிறார்கள்.


Watson and Crick Posted by Hello

1952 - ரோசாலிந் ஃபிராங்க்ளின் என்ற பெண்மணி டி.என்.ஏ வை எக்ஸ் கதிர்கள் கொண்டு படம் பிடிக்கிறார்.


XRayImage Posted by Hello

- மேலே உள்ள படத்தில் இரண்டு சங்கிலிகளே தெரிகின்றன. வாட்சன் டி.என்.ஏ வில் மூன்று சங்கிலிகள் கொண்ட தன் மாதிரியை இன்னமும் நிரூபணம் செய்ய இயலவில்லை.

1953 - லினஸ் பாலிங்க் டி.என்.ஏ வில் மூன்று சங்கிலித் தொடர்புகள் உள்ளன என உறுதியாக சொல்கிறார்.

- பிப்ரவரி 28: திடீரென தோன்றிய 'யுரேகா' எண்ணத்தில் தன்னுடைய மாதிரியில் சிறிது மாற்றி அமைக்க, எல்லாம் சரியாக வருகிறது. க்ரிக்-கும் அதை ஆமோதிக்கிறார்.

- ஏப்ரல் 25: 'நேச்சர்' சஞ்சிகையில் தன் கண்டுபிடிப்பை வெளியிடுகிறார்கள் வாட்சனும் கிர்க்கும்.

1959 - 'டவுன் சிண்ட்ரோம்' குரோமோசோம்-தனின் குறைபாடுதான் என கண்டறிகிறார்கள்.

1960 - டி.என்.ஏ வுக்கும் புரதம் உருவாகும் செல்களுக்கும் இடையே இருக்கும் ஒரு 'தூதுவன் ஆர்.என்.ஏ' கண்டுபிடிக்கப்படுகிறது.

1962 - வாட்சன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


medal Posted by Hello


1967 - அலான் விட்சன், வின்செண்ட் சாரிச் ஆகியோர் ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னாலே மனித இனமும் மனித குரங்கு இனமும் பிரிந்திருக்க வேண்டுமென்று கணக்கிடுகின்றனர்.

1970 - விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் மரபணுவை முழுமையாக உருவாக்குகிறார்கள்.

1975 - ஆராய்சியாளர்கள் கலிஃபோரினியா கூட்டத்தில் மரபணு ஆராய்சிகள் வழிநெறிமுறைப்படுத்த வேண்டும் என்று முட்வெடுக்கிறார்கள்.

1976 - பாயர் மற்றும் ராபர்ட் ஸ்வான்சன் உலகின் முதல் மரபணு ஆராய்சி நிறுவனத்தை நிர்மாணிக்கிறார்கள்.

1978 - முதன்முதலாக மரபணுவிலிருந்து மனித இன்சுலின் தயாரிக்கிறார்கள்.

1982 - முதல் மரபணு மூலமாக உருவாகப்பட்ட இன்சுலின் மருந்து அனுமதிக்கப்படுகிறது.

1983 - கேரி முலிஸ் என்பவர் PCR என்னும் பாலிமெரீஸ் தொடர் வினையால் டி.என்.ஏ துண்டுகள் வேகமாக பல்கிப்பெருகும் வழி கண்டு பிடித்தார்.

1984 - அலெக் ஜெஃப்ரிஸ் டி.என்.ஏ கொண்டு ஒரு நபரை அடையாளம் கண்டு கொள்ளும் வழியை உருவாக்கினார்.

1985 - ராபர்ட் காலோ மற்றும் லூக் மாண்டாக்நீர் தனித்தனியே ஹெச்.ஐ.வி. வைரஸின் மரபணுத் தொடரினை பதிப்பிக்கிறார்கள்.

1986 - லெராய் ஹூட் உலகின் முதல் தானியங்கி மரபணு தொடர்பு உருவாக்கியை வடிவமைத்தார்.

1988 - ஹார்வார்ட் பல்கலைக்கழகம், மரபணு மாற்றியமைக்கப்பட்ட முதல் எலிக்கான உரிமைக்காப்பு பெறுகிறது.

1989 - பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் சோதனை முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது.

1990 - மனித டி.என்.ஏ தொடர்புச் சங்கிலியை நிறைவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

1993 - ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்சியாளர்கள் மனித கருவை இன்னொரு மனித கருவிலிருந்து க்ளோன் செய்து சில நாட்களுக்கு வளர்த்தனர்.

1994 - மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட தக்காளிப் பழம் சந்தைக்கு வருகிறது.

1997 - இயான் வில்மட் என்பவர் ஆட்டின் கருவை க்ளோன் செய்து இன்னொரு ஆட்டு குட்டியை (டாலி) உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

1999 - மரபணு சிகிச்சையின் விளைவாக முதன் மனித உயிரிழப்பு (ஒத்துக்கொள்ளப்பட்ட)


2002 - வீட்டுப்பூனை ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் க்ளோன் செய்கிறது.

- வாட்சன் மற்றும் க்ரிக் டி.என்.ஏ மாதிரி வடிவமைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

2003 - மனித மரபணுவின் தொடர்புகள் முழுதும் நிறைவு செய்யப்பட்டுவிட்டதாக மனித ஜீனோம் திட்டவியலார் அறிவிக்கின்றனர்.

Thursday, June 02, 2005

முழு நீளப் பாலம் !

நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார் - படம் மும்பையில் எடுத்தது என்ற விவரம் மட்டும் உள்ளது.


wooden bridge Posted by Hello

பின் குறிப்பு: முழு நீளம் முழுதாய்த் தெரிய உங்கள் கணிணியில் இறக்கிக்கொண்டு பின்னர் MS Paint போன்று ஏதேனும் ஒரு மென்பொருள் கொண்டு திறந்து பார்க்கவும்!

Monday, May 30, 2005

இழைக் கொள்கை - ஒரு முன்னோட்டம்

நமது அண்டத்தையும் அதன் ஆக்கங்களின் விதிகளைப்பற்றியும்் அலசும் அறிவியலின் பிரிவு கணித இயற்பியல் (இயல்பியல்?)்பியல்(தியரடிகல் ஃபிசிக்ஸ்)். ஆப்பிள் பழத்தைக் கொண்டு சோதனை செயத ஐசக் நீயூட்டனும், தொலைநோக்கி கொண்டு கோள்களைப் பார்த்தறிந்த கலிலீயோவும், பட்டம் விட்டு மின்விசைதனை தொட்டுப்பார்த்த பென்ஜாமின் ஃபிராங்க்ளினும், அணுவிசையாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ் கணித இயல்பியலாளர்களும் கூட, சோதனை அறிவியலாளர்கள் மட்டுமல்ல, கணித அறிவியலாளரும் கூட.

கணிதமும்் இயல்பியலும்்பியலும் எப்போதும் கைகோர்த்துக் கொண்டே நடந்து வந்துள்ளது. இயல்பியலில்்பியலின் பல்வேறு சோதனைகளின் நிரூபணத்திற்கு கணிதம் பேருதவி புரிந்த்துள்ளது. நேரடியாக சோதனை செய்து பார்க்க இயலாத பல கோட்பாடுகளை கணித சமன்பாடுகள் மூலமாக சரிபார்த்துக் கொண்டனர்.

பதினெட்டு மற்றும் பத்தின்பதாம் நூற்றாண்டுகளில் நியூட்டனின் புவியீர்ப்பு விசைக் கோட்பாடிற்கான கேல்குலஸ் கணக்குகள், அதையும் தாண்டி, மின்காந்த விசை சம்ந்தப்பட்ட கணக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் 'எலக்ட்ரான்' கண்டு பிடிக்கப் பட்டது. அதன் விளைவால் குவாண்டம் இயல்பியல் வளரத் தொடங்கியது. பின் நாட்களில் ஐன்ஸ்டைனின் Special thoery of Relativity (விசேஷ சார்நிலைக் கொள்கை) -க்குப் பின்னர், குவாண்டம் கணிதமும் அதனுடன் சேர்ந்து relativistic குவாண்டம் கொள்கைகள் உருவாகின.

கடைசியாக் சொன்ன relativistic குவாண்டம் கொள்கையில் விசேஷம் என்னவென்றால், இருபதாம் நூற்றாண்டின் நுண் அணுப் பொருட்களின்் (எலக்ட்ரான், புரொட்டான்) ஆய்விற்கு அவற்றின் கொள்கைளே அடித்தளம். மேலும் ஐன்ஸ்டைன் வேறொரு காரியமும் செய்தார். தன்னுடைய விசேஷ சார்நிலைக் கொள்கையைக் கொண்டு நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையையும் விளக்கினார். இதனல் Differential Geometry என்னும் கணிதப் பிரிவும் இயற்பியலுக்கு வந்து சேர்ந்தது. 'கேல்குலஸ் தொடங்கி Differential Geometry வரை எல்லாவற்றையும் பாத்துட்டேம்பா' என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது புவி ஈர்ப்பு விசை.

எல்லாம் சரியென்று எண்ணியிருந்த சமயம், சார்நிலைக் கொள்கைகளுக்கு வந்ததோர் சோதனை. அண்ட வெளி ஏன் நீண்டு கோண்டே போகிறது? என்ற கேள்விக்கும் அண்ட வெளியில் இருக்கும் கருப்பு ஓட்டைகளுக்கும்(Black Holes) சார்நிலைக் கொள்கை தந்த பதில்கள் பொதுவாக ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.

ஏனெப்படி?

ஏனென்றால், சார்நிலைக் கொள்கையானது, பூமியில் பொதுவாக புவி ஈர்ப்பு விசை குறைவாக உள்ளதால், இங்கு்கு நடத்தப்படும் சோதனைகளில் சரியான முடிவுகளைத் தருகிறது. புவி ஈர்ப்பு விசையினால் நுண் அணுப்பொருள்களில் மாறுதல் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே சார்நிலைக் கொள்கை செல்லுபடி ஆகிறது. இதென்னடா சிரமம் என்று இயல்பியலாளர் எண்ணியிருந்த சமயம் புதிதாக இன்னொரு கொள்க சமீப காலமாக உருவாகத் தொடங்கியுள்ளது. அதுதான் String Thoery. 'இழைக் கொள்கை' எனலாமா? (திருங்குக் கொள்கை?) சார்நிலைக் கொள்கை உள்ள ஓட்டையை நிறை செய்து விடும் இந்தக் கொள்கை என்கிறார்கள் அறிவியலார்.

Sunday, May 29, 2005

சரளி வரிசைகள்

ராகம்: மாயமாளவ கெளளா
தாளம்: ஆதி

புதிதாக சங்கீதம் கற்றுக்கொள்பவர்களுக்கான பால பாடத்தில் முதல் பாடமே சரளிவரிசைகள். பொதுவாக இவை 'மாயமாளகௌளா' ராகத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இவற்றில் 'ஸ', 'ப', 'ஸ்' ஆகிய ஸ்வரங்கள் நிலையான ஸ்வரஸ்தானங்களாதனால், முதலில் அவற்றின் நிலையான ஸ்தானத்தைக்கொற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், 'மாயமாளகௌளா' ராகத்தில் மற்ற ஸ்வரங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸரளிவரிசைகளில் முதல் வரிசையில் எல்லா ஸ்வரங்களையும், ஏறுமுகத்திலேயும், இறங்குமுகத்திலேயும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வரும் வரிசைகள், அவற்றின் அவற்றின் வெவ்வேறு மாற்றங்களிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 14 வரிசைகள். இவற்றில் முதல் 7 வரிசைகளில், எளிதாக இருக்கும், எனெனில், அவற்றில் ஏற்றமும் இறக்கமும் சீராக இருக்கும்.
அடுத்த 7 வரிசைகளில், ஏற்றமும் இறக்கமும் கலந்து வரும்.
இவ்வாறு அமைத்திருப்பதால், ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்கு ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ, ஸ்வரங்களில் சரியான ஸ்தானத்தை அடைய கற்றுக்கொள்ள முடியும்.

1.
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||

2.
ஸ ரி ஸ ரி | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி ஸ் நி | ஸ் நி த ப || ஸ் நி த ப| ம க ரி ஸ ||

3.
ஸ ரி க ஸ | ரி க ஸ ரி ||ஸ ரி க ம | ப த நி ஸ்||
ஸ் நி த ஸ் | நி த ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ||

4.
ஸ ரி க ம | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப |ஸ் நி த ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

5.
ஸ ரி க ம | ப அ ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம அ ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

6.
ஸ ரி க ம | ப த ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

7.
ஸ ரி க ம | ப த நி இ | ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ரி இ | ஸ் நி த ப | ம க ரி ஸ ||

8.
ஸ ரி க ம | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

9.
ஸ ரி க ம | ப ம த ப || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப க ம || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

10.
ஸ ரி க ம | ப அ க ம || ப அ அ அ | ப அ அ அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

11.
ஸ் அ நி த | நி இ த ப || த அ ப ம | ப அ ப அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

12.
ஸ் ஸ் நி த | நி நி த ப || த த ப ம | ப அ ப அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

13.
ஸ ரி க ரி | க அ க ம || ப ம ப அ | த ப த அ ||
ம ப த ப | த நி த ப || ம ப த ப | ம க ரி ஸ ||

14.
ஸ ரி க ம | ப அ ப அ || த த ப அ || ம ம ப அ ||
த நி ஸ் அ| ஸ் நி த ப || ஸ் நி த ப || ம க ரி ஸ ||

இந்த பாடங்களின் ஒலிப் பதிவுகளை இந்த தளங்களில் கேட்கலாம்:

ராணி ராயல் கார்பெட்
சிவ்குமார் கல்யாணராமன்

மேலும் கூடுதல் சரளி ஸ்வர வரிசைகள்
இவற்றை மேலே உள்ள ஏழாவது வரிசைக்கு அப்புறம் சேர்த்துக்கொள்ளலாம்.
1.
ரி ஸ க ரி | ம க ப ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
நி ஸ் த நி | ப த ம ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||
2.
க ரி ஸ ம | க ரி ப ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
த நி ஸ் ப | த நி ம ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||
3.
ம க ரி ஸ | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ப த நி ஸ் | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

Monday, May 23, 2005

வித்யாசமான ஓவியம்

ஒவியர்களின் தளத்தை பார்த்துக்கொண்டு இருந்தபோது இந்த வித்யாசமான படம் அகப்பட்டது. இதிலென்ன வித்யாசம் என்றால், ஓவியர் இதை Microsoft Paint கொண்டு வரைந்தாரம்! (நாம் எல்லோருமே முயற்சித்து இருப்போம் என்று நினைக்கிறேன்!)....ஆனால் அவர் வரைந்த்தோ....வெனிஸ் நகர அழகு என நினைக்கிறேன்...! கிட்டத்தட்ட 500 மணி நேரமானதாம் இதை வரைந்து முடிக்க...
டீவியன் ஆர்ட் என்ற மன்ற தளத்தில் கண்டெடுத்தது:


Painted with MS Paint? Posted by Hello

Sunday, May 22, 2005

இளைஞர் கீதம்

இளைய உள்ளங்களின் எழுச்சி கீதம் - டாக்டர் அப்துல் கலாம்
-------------------------------------------------------------------------------

President Dr. Kalam Posted by Hello

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
(வளமான நாடாக்குவோம்...)

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியம் தன்னில் சிந்தனைகள்
வீணாவதை மாபெரும் குற்றமென்போம்
(வளமான நாடாக்குவோம்...)

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் பல நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே.

வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்

இந்த சிலப்பதிகாரப் பாடல் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் பாடப்பெற்று பிரபலமடைந்த பாடல். 1966 இல் ஐ.நா சபையில் நடந்த எம்.எஸ் கச்சேரியில் இந்த பாடல் இடம் பெற்றது. பாடல் வரிகளும் பொருளும்:
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!

2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை,
கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?

3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!

4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?

5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

பொருள்:
பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும்
உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும்,
கையும், திருவாயும் வேலை செய்ய,
கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?


பாடலை இங்கே கேட்கலாம்:

Friday, May 20, 2005

நுண்பொருள் திரைப்படவியல்

அறிவியலில் வேகமான வளர்சியில் பல மைல்கற்களை கடந்து வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும், மனித இனத்தால் கற்பனையில்கூட எட்ட இயலா உயரத்தில் இயற்கை வளர்ந்து இருக்க, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தினம்தினம் வியந்து கொண்டே இருக்கிறான் மனிதன். (நம்மூர்காரர்கள் வெட்டி மேடைப்பேச்சில் காலவிரயம் செய்வது வேறு விஷயம்). வெற்று சூனியமாகத் தெரியும் அண்ட வெளிகளை ஆராய்வது மட்டுமில்லாமல், தன் சொந்த பூமியையும், அதிலுள்ள எண்ணற்ற உயிர் வகைகளையும் மனிதனின் வியப்பு ஆராயச்செய்துள்ளது. உயிர் வகைகளில் முதல் முதலாக தோன்றியிருக்க வேண்டிய நுண் உயிர்களை ஆராய்வதில் மேலும் ஒரு விஞ்ஞான முன்னேற்றம் - நுண்பொருள் திரைப்படவியல்.

நுண்பொருள் திரைப்படவியல் - MicroCinematography - என்பது நுண்ணிய பொருட்களை படம்பிடிப்பதாகும். இந்த துறையின் பயன்பாடுகள்:
* ஆராய்சிகளில் நுண்நோக்கியுடன் இணைக்கப்பட்டு நுண்ணுயிர்களை படம்பிடித்தல்
* மருத்துவத்துறை - உடல் உருப்புகள், கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி போன்றவற்றை முப்பரிமாண படம் பிடித்தல்
* திரைப்படத்துறையில் சிறப்புக் காட்சிகளில் வியத்தகு special effects காட்சிகளை உருவாக்குதல்

நுண் உயிர் ஆராய்ச்சி:
அமீபாவையும், செல்களையும் எத்தனை நாள்தான் பாடப்புத்தகங்களிலேயே கருப்பு வெள்ளை படங்களிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?
அதற்கு அடுத்த கட்டமாய் நுண்நோக்கிகளில் பார்த்து வந்தோம். எனினும் இதுவும் இரண்டு பரிமாண தோற்றமே. இதற்கு அடுத்த நிலையாக இதே நுண்நோக்கிகளில் மிக நுண்ணிய CCD கேமராக்களைப் பொருத்தி நுண் உயிர்களின் அசைவுகளைப் படம் பிடிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படமாக பிடிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. பல்வேறு நோக்குகளில் படம் பிடித்து அவற்றை முப்பரிமாணப் படமாக உருவகம் செய்யலாம். மென்பொருள் கொண்டு தானியங்கி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இன்னமும் மேலும் பல ஆய்வுகள் டிஜிடல் படமாக மாற்றியபின் சாத்தியமாகின்றன.
நகரா படங்களை மட்டுமே பார்த்து வந்த நிபுணர்களும் இப்போது இந்த நேர இடைவெளையை குறுக்கி, செல்களை நம் பார்வையில் 'நகர' வைத்த படங்களைப் பார்த்து வியக்கிறார்கள். செல்களும், ஏனைய நுண் உயிர்களும் இத்தனை வேலைகளை செய்கின்றனவா என்று, புதியதொரு புரிந்துகொள்ளுதலை உருவாக்கியுள்ளன இந்த படங்கள்.

இருபதாம் நூற்றாண்டில் நுண்பொருள் திரைப்படவியல் வளர்சிகளைச் சித்தரிக்கும் குறும்படம் பார்க்கலாமா? சுட்டுங்கள் இங்கே. (QuickTime Player தேவை)

செல்கள் எவ்வாறு தோன்றுகின்றன, மறைகின்றன, எவ்வாறு ஒன்றுக்கொண்று பேசிக்கொள்கின்றன போன்ற பல விஷயங்களை நிபுணர்களும், ஆர்வலர்களும் விளக்கப்படங்களாக செய்து இந்த இணையதளத்தில் வெளிக்கொணர்ந்துள்ளனர். நீங்களும் பார்த்து, கேட்டு பயனடையாலாமே!

மருத்துவத்துறை:
நுண்பொருள் திரைப்படவியலின் உதவியால், இப்போது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை முப்பரிமாணத்தில் கண்காணிக்க முடியும். இரு பரிணாமத்தில் ஸ்கேனர் கொண்டு ஒருசில நோக்குகளில் மட்டுமே கண்காணிக்க முடியும் என்ற நிலைமாறி, இப்போது எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் கருவில் வளரும் குழந்தையின் முப்பரிமாண தோற்றத்தை அச்சில் வார்க்கமுடியும் என்பது பெரியதொரு முன்னேற்றமாகும்.
மேலும் லேசர் அறுவை சிகிச்சை போன்ற அதி நுண்ணிய சிகிச்சைகளுக்கு நேரடியாக நுண்ணிய பகுதிகளை திரையில் பார்த்தவாறு நிபுணர்கள் அறுவை சிகிச்சையில் ஈடுபட பேருதவியாய் இருக்கிறது இந்த நுட்பம்.

திரைப்படத்துறை:
அறிவியல் வளர்சிக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்கும் பயன்படுகிறது இந்த துறை. மென்பொருளால் உருவாக்கப்படும் மாயத்தோற்றங்களை நிஜமான உருவங்கள் போல பெரிய திரையில் தோற்றமளிக்கச் செய்யும் சாகசமெல்லாம் நுண்பொருள் திரைப்படவியல் கொண்டு சாத்தியமாகிறது.

Saturday, May 14, 2005

ஏழே கணக்கா, இன்னும் இருக்கா?

அழகன் படத்தில் மரகதமணி இசையில் இந்த பாடலை கேட்டிருப்பீர்கள்:
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்...

சங்கீதம் என்பது பிறந்த குழந்தைகூட எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய இனிய மொழி. அந்த மொழியின் எழுத்துக்கள்தான் ஸ்வரங்கள். ஸ்வரங்கள்முத்துக்கள் என்றால் விதவிதமாய் கோர்க்கப்பட்ட முத்து மாலையே இசை. இசையில் மயங்காத மனிதனே இல்லை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்கங்களால் பல்வேறு விதமாக சங்கீதம் இசைக்கப் படுகிறது. என்றாலும் அனைத்து இசைக்கும் மூலம் ஒன்றுதான். ஸ்வரங்கள் எல்லா வகை இசைக்கும் அடிப்படை. ஸ்வரங்களோடு சேர்த்து தாளமும் சங்கீதத்தின் ஜீவநாடி. இந்தப்பதிவில் ஸ்வரங்களைப் பற்றி பார்ப்போம்.

சகலமும் தருபவள் சங்கீத தெய்வம்
ஸரிகமபதநி அவள் உருவம் - உலகில்...(சகலமும்...)

ஆம், ஸ ரி க ம ப த நி .... என்ற ஏழு ஸ்வரங்கள் தான் அவை.

அதென்னது ஸ்வரம்?
ஒலி...சப்தம்...அ.....ஆ....இ....ஈ....இப்படி எதுவேண்டுமென்றாலும் இருக்கட்டும்...
ஒரு குறிப்பிட்ட அலைஎண்ணில் (frequency) ஒலி எழுப்பினால் அதுதாங்க ஸ்வரம்.
அதுசரி, என்ன அலை எண்ணில் ஒலி எழுப்புகிறோம் என்றெப்படி கண்டுகொள்வது?
மேற்கத்திய நாடுகளில் அலைஎண் அளக்கும் கருவியொன்று இசைக்கருவிகளை மீட்டிட பயன்படுத்தப் படுகிறது என்றாலும், ஒவ்வொரு ஸ்வரத்தையும் அளவெடுத்துக்கொண்டு இருக்க முடியாது. ஆதாலால், இசை கற்றுக்கொள்பவர் தன் காதுகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எழுப்பும் ஒலி எந்த அலைஎண்ணில் வருகிறது என்பதை கணிக்க. இசைக்கருவிகளுக்கும் இது பொருந்தும். உதட்டை மூடிக்கொண்டு 'ம்ம்ம்ம்....' என்று சொல்லுங்கள். சற்றேறக்குறைய அதுதான் உங்களுடய 'ஸ'. 'ம்ம்ம்...' சொல்லிவிட்டு அதே தொனியில் வாயைத்திறந்து 'ஸ..அ..அ....' என்றீர்கள் ஆனால் இன்னமும் சரியான 'ஸ'. ஸ,ரி,க,...ஆகிய ஸ்வரங்கள் ஏறுமுகமான அதிர்வெண்ணில் இருப்பதால், அதிர்வெண்களைக் கூட்டிக்கொண்டே போனால், ஒவ்வொரு ஸ்வரத்தையும் சரியாக பிரயோகிக்க முடியும். இசை ஆசிரியரோ அல்லது சங்கீத ஞானம் உள்ள மற்றொருவரோ நீங்கள் சரியான ஸ்வர ஸ்தானத்தில் ஸ்வரத்தை ப்ரோயோகிக்கிறீர்களா என்று சொல்ல முடியும். அவ்வாறு அவர்களின் உதவியுடன் ஸ்வரங்களின் சரியான ஸ்வர ஸ்தானத்தை கற்றுக் கொள்ளலாம்.
போதுமான பயிற்சியுடன் கற்றதை பழகிக்கொள்ள வேண்டும். சங்கீத ஞானத்திற்கு நிறைய பயிற்சிகள் தேவை. நன்று தேர்ந்த சங்கீத வித்வானுக்கும் மற்றவர்களுக்கும் முக்கியமான வேறுபாடு மற்றவர்களிடம் பயிற்சி இன்மைதான்.

நமது இந்திய சங்கீதத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சங்கீதங்களுக்கும் ஸ்வரங்களே பிரதானம். மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், ஸ்வரங்கள், 'நோட்' என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீபோர்ட் ஒன்றைப் பார்த்தால், கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோட்-டைக் குறிக்கும். அவர்களது ஸ்வரங்கள் 'A', 'B', 'C' ,... போன்ற குறியீடுகளால் வழங்கப்படுகின்றன. கீழே உள்ள படத்தில் இருப்பதுபோல:


keyboard Posted by Hello

எழுத்து வடிவத்தில் 'A', 'B', 'C' ,... என்று குறிப்பிட்டாலும் பாடும்போது ஸ்வரங்களை குறிப்பதற்கு
'டோ', 'ரி', 'மி', 'ஃபா', 'ஸோ', 'லா', 'தீ'
என்று வழங்குகிறார்கள். இவை முறையே,
'ஸ', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி'
ஆகிய ஸ்வரஸ்தானங்களுக்கு சமானமாகும்.

ஆ, தலைப்பின் கேள்விக்கு வரும் தருணமாகி விட்டது. சங்கீதத்தில் ஸ்வரங்கள் இந்த ஏழுதானா, இன்னும் இருக்கா?
ஆம், இன்னும் இருக்கு, மொத்தம் பன்னிரெண்டு. பொதுவாக சொல்லும்போது அந்த கூடுதல் ஐந்தும் இந்த ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம்.
நமது சங்கீதத்தில் இவற்றை கீழே உள்ள பட்டியலில் இருப்பதுபோல் வழங்குகிறோம்.

ஸ - ஷட்ஜம்
ரி1 - சுத்த ரிஷபம்
ரி2 - சதுஸ்ருதி ரிஷபம் == க1 - சுத்த காந்தாரம்
ரி3 - ஷட்ஸ்ருதி ரிஷபம் == க2 - சதாரண காந்தாரம்
க3 - அந்தார காந்தாரம்
ம1 - சுத்த மத்யமம்
ம2 - ப்ரதி மத்யமம்
ப - பஞ்சமம்
த1 - சுத்த த்வைதம்
த2 - சதுஸ்ருதி த்வைதம் == நி1 - சுத்த நிஷாதம்
த3 - ஷட்ஸ்ருதி த்வைதம் == நி2 - கைசிகி நிஷாதம்
நி3 - ககாலி நிஷாதம்

இதற்கு ஈடாக மேற்கத்திய சங்கீதத்தின் 12 நோட்-கள்:
C, C#, D, D#, E, F, F#, G, G#, A, A#, B

இந்த ஸ்வரங்களின் அதிர்வெண்ணின் பின்னணியில் சுவரஸ்யமான கணிதமும், இயற்பியலும் இருக்கிறது!

அதிர்வலைகளின் நிறமாலையை(spectrum) எடுத்துக்கொண்டால், ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்கக்கூடிய ஒலியினை எழுப்பக் கூடியவை. இவற்றின் அதிர்வெண் 16Hz முதல் 16,000Hz வரை. அவற்றில் 1000 Hz முதல் 16,000 Hz வரையுள்ள பகுதியில்தான் காதுகளும், ஒலியை புரிந்துகொள்ள மூளையும் நன்றாக உணர முடியும். அதிலும் அதிலுள்ள ஒவ்வொரு அதிர்வெண் ஒலியையும் நம் காதுகளால் வேறுபடுத்தி அறிய இயலாது!. உதாரணத்திற்கு அதிர்வெண் 240Hz ஒலிக்கும், 241Hz ஒலிக்கும் வேறுபாடு எதிவும் நம் கேள்வியில் தெரியாது.


frequencyRanges Posted by Hello

மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதுபோல, ஒலிநிறமாலையை ஆக்டேவ் ஆக்டேவாக (ஆக்டேவ் என்பதற்கு எண்மம்? என்கிறார்கள் தமிழில்) பிரித்துக் கொள்ளலாம். மனிதர்களால் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து ஆக்டேவ்களில் ஒலி எழுப்ப முடியும். ஆக்டேவின் ஆரம்ப அதிர்வெண் f1 என்றால், முடியும் அதிர்வெண் தொடங்கிய அதிர்வெண்ணின் இரண்டு மடங்காக, 2 x f1 ஆக இருக்கும். விளக்குவதற்காக வேண்டி, ஒரு ஆக்டேவை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஒரு ஆக்டேவில் இருக்கும் ஒலி அதிர்வுகளை அதிர்வெண் வாரியாக பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அதிர்வெண்ணுக்கும் இடைவெளி, 1.059 இன் மடங்கு என்று வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு ஒலி அதிர்வின் எண் 240 Hz என்றால், அதற்கு அடுத்த அதிர்வெண், 240 x 1.059 = 254 Hz ஆக இருக்கும்.
இப்படியே, 240,254,269,...என்று, பன்னிரெண்டு மடங்கு செல்லுங்கள், பதிமூன்றாவது மடங்கு, தொடங்கிய 240Hz க்காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும்!. அதன் பின் அடுத்த ஆக்டேவ் துவங்கும். ஆக, ஒரு ஆக்டேவில் 12 அதிர்வெண் ஒலிகள். இந்த 12 என்னும் எண்ணுக்கும் நமது ஸ்வரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை இன்னேரம் ஊகித்து இருப்பீர்கள்!
ஆம், நமது 12 ஸ்வரங்களின் அதிர்வெண் இடைவெளியும் 1.509 Hz இன் மடங்குகள்தான்!.

மேற்கத்திய சங்கீதத்தில் மேற்சொன்ன பன்னிரெண்டு அதிர்வெண் கணக்கும், 240 Hz போன்றதொரு நிலையான அதிர்வெண் ஆக்டேவ் தொடக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்திய சங்கீதத்தில் இதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை. மேலும் இதை முதல் நிலையாக கொண்டு அதற்கு மேல் 'கமகம்' என்ற சொல்லப்படும் வழிமுறையையும் சேர்த்து, அடுத்த நிலையில் பயணிக்கிறார்கள். இம்முறை 16ஆம் நூற்றாண்டு ஃபிரன்ச் சங்கீதத்திலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எளிமைப்படுத்த வேண்டி, அவற்றை மேற்கத்திய சங்கீத வழக்கத்தில் அவ்வளவாக இல்லை. (Beatles, Simon போன்றவர்களின் ஆல்பங்களில் அவ்வப்போது காணலாம்).

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லை பகலா, எனக்கும் மயக்கம்...
சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கு, ஆனால்
இன்னும் இருக்கு, எனவே மயக்கம்...!

Sunday, May 08, 2005

உன்னால் முடியும் தம்பி!

டாக்டர் வாய்னே டையர், அமெரிக்காவில் "ஊக்கத்தின் தந்தை" என வர்ணிக்கப்படுபவர். தன்னைத்தானே முன்னேற்றிக்கொள்வது எப்படி என்று பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருடைய புத்தகங்கள் 48 மொழிகளில் 55 மில்லியன் புத்தக பிரதிகள் விற்பனை ஆகியுள்ளதாம்!. நம்ம நாட்டு, தீபக் சோப்ராவுடன் சேர்ந்துகூட ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அவருடைய சமீபத்திய புத்தகம் "Power of Intention".Dr Dyer Posted by Hello

பல சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார்.
10 Secrets for Success and Inner Peace,
There's a Spiritual Solution to Every Problem,
How to Get What You Really, Really, Really, Really Want,
Improve Your Life Using the Wisdom of the Ages
போன்றவை அவருடைய சுய முன்னேற்றம் பற்றிய சொற்பொழிவுகள் ஆகும்.

எதேச்சையாக PBS தொலைக்காட்சியில் அவரது சொற்பொழிவைக் கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அவர் என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று கவனித்தேன்;
நமது பழைய தத்துவங்களிலும், மதங்களிலும் தேங்கிக்கிடக்கும் உண்மைகளை இன்றைய அறிவியலோடு இணைத்து ஒருவர் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதுபோல சொற்பொழிவாற்றினார்.
முடிவில் தன் சொற்பொழிவை தொகுத்து '12 வெற்றிக்கான வழிமுறைகள்' என்றார்.
அவற்றை குறித்து வைத்துக்கொண்டு தமிழில் தருகிறேன் இங்கே:

1. உங்களுக்காக நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் மற்றவர்களுக்காக அதிகமாக விரும்புங்கள்.

2. எந்த ஒரு விஷயத்தையும் முடிவிலிருந்து எண்ணத் தொடங்குங்கள்.

3. பாராட்டுபவராக இருங்கள்.

4. உங்கள் உள்சக்தியுடன் நல்லதொரு உள்தொடர்பில்/பழக்கத்தில் (rapport) இருங்கள்.

5. எதிர்ப்புகள் இயற்கையானதென புரிந்து கொள்ளுங்கள்.

6. நீங்கள் உருவாக்குவதற்கு அல்லது செய்யவேண்டியதற்கான மூலக்கூறுகள் அனைத்தும் உங்கள் அருகாமையிலேயே இருப்பதாக "நினைத்து"க்கொள்ளுங்கள்.

7. விட்டுக்கொடுத்தல் என்பதனை பழகிக்கொள்ளுங்கள்.

8. பணிவு எப்போதும் பழக்கத்தில் இருக்கட்டும்.

9. எப்போதும் நன்றியுணர்சியுடன் நடந்துகொள்ளுங்கள்.

10. பழிப்பதும், கழித்துக்கட்டுவதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.

11. வாழ்க்கையை ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

12. தியானம் செய்யுங்கள்.

டாக்டர் வாய்னே டையரப் பற்றி மேலும் விவரங்களுக்கு அவரது இணைய தள முகவரி இங்கே.

Saturday, May 07, 2005

கொசுறுச் செய்திகள்

அமெரிக்காவில் 2004 இல் அதிகமாக குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள்:

ஆண்
1. ஜேகப் (1998 முதல் இந்த பெயருக்குத் தான் முதலிடமாம்!)
2. மைக்கேல்
3. ஜோஷ்
4. மேத்யூ
5. ஏதன்

பெண்
1. எமிலி (1996 முதல் இந்த பெயர்தான் முதலிடமாம்!)
2. எம்மா
3. மேடிசன்
4. ஒலிவியா
5. ஹன்னா

சிகாகோவில் ஒரு பாலத்திற்கு கீழே அன்னை மேரி தேன்றினாராம்
(நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!)


mary Posted by Hello

'பாப்புலர் சயன்ஸ்' இதழ் கூட ப்ளாக் பற்றி எழுதுகிறது.
அதன் இணையதள சுட்டிகள்: சுட்டி 1 சுட்டி 2
இப்போதுதான் செய்தி தளங்களும், செய்தி தொலைக்காட்சிகளும் கூட ப்ளாக் பற்றி அதிகமாக பேசத்தொடங்குகிறார்கள்.
ஒரு செய்தி தொலைக்காட்சியில் 'பாப்புலர் சயன்ஸ்' இதழ் எடிட்டர் 'ப்ளாக்' செய்வதுபற்றி பேட்டி யே(!) கொடுத்தார்.

Friday, May 06, 2005

புத்தம் - ஒரு அத்வைதப்பார்வை

புத்தம் என்ற தலைப்பில் வி.சுப்ரமணியம் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்:

புத்தர் (கெளதமர்) ஒரு மாபெரும் ஞானி, ஆனால் அவரை பெயர்த்து உரைத்தவர்களுக்கு அவ்வளவாக ஞானம் இருக்கவில்லை. புத்தரோ அவருக்கு முன் இருந்த வேதாந்தங்களுக்கு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அவருக்கு அது தேவையில்லாதாகப் பட்டது. ஆனால், அந்தோ அந்த ஒரு காரணத்தாலேயே இந்தியாவில் பெரிதும் நிராகரிக்கப் பட்டார்.
ஆதி சங்கரரோ, புத்தரின் ஏறக்குறைய அனைத்து கோட்பாடுகளிலும் ஒத்துப்போனாலும், புத்தர் செய்யாத ஒன்றைச் செய்தார். வேறொன்றும் இல்லை. 'ரோமானியபுரியில் ரோமானியனாக இரு' என்ற மொழிக்கு ஏற்றார்போல் செய்ததே - ஏற்கனவே ஏற்பட்ட வேதாந்தங்களுக்கு விளக்கம் சொல்வதுதான்! உண்மையை புரியவக்க, அதுவரை இருந்த அனைத்து சாத்திரங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தனது 'அத்வைதம்' என்ற சித்தாந்தத்தில் மறுமொழி அளித்தார். புத்தர் சொல்லியும் கேட்காத, புரியாத அல்லது விளங்க விரும்பாத மரமண்டைகளுக்கு அப்போதுதான் விளங்கத் தொடங்கியது.

saranath-buddha Posted by Hello
அது அப்படி இருக்கையில், புத்த மதமே கெளதமரையே தவறாகவேத்தான் புரிந்துகொண்டது - நிர்வாணத்திற்கு அப்புறம் மீதி இருப்பது ஒன்றுமே இல்லை என்று புத்தர் சொன்னதாக . பல நூற்றாண்டுகளாக புத்த மதத்தினரும் இதையே சாதித்து வந்தனர். மறைந்து போகும் ஈகோவினைப் பார்ப்பது யார்? என்ற கேள்விக்கு புத்தமதத்தினரால் பதிலேதும் சொல்ல இயலாது. அந்த கேள்விக்கு சரியான பதிலை அத்வைதம் மட்டுமே உரைக்க முடியும்: "மறைந்து போவதை பார்ப்பது யார் என்று திருப்பிப் பார்ப்பவன்தான்" என்று. நிர்வாணம் அடையும் நிலையில் ஈகோ மறைகிறது என்று சொல்கிற வரையில் புத்தத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர்களிடம் விட்டுப்போன ஒரு பகுதி - "திருப்பிப் பார்ப்பவன்". எப்படி ஈகோ உருவாகிறது?, ஈகோ வருவதையும், மறைவதையும் பார்த்துக்கொண்டு இருப்பது யார்? 'ஆத்மா' என்று விடையளிக்கிறது வேதாந்தம் - "தீர்க தேஸ்ய விவேகம்" என்னும் விவாதத்தின் மூலம்.

இன்னமும் எளிய முறையில் விளக்குகிறேன்.
'வருகிறது', 'போகிறது' என்று சொல்லும்போது, அவ்வாறு வந்ததையும், போவதையும் பார்த்துக்கொண்டு இருக்க இன்னொருவர் இருந்தால்தானே, அவ்வாறு சொல்ல முடியும்.? புத்த மதத்தில், இப்படி ஒரு இன்னொன்றுக்கான சாத்தியம் இல்லை. இப்படி ஒரு விஷயத்தை புத்த மதத்தில் விட்டுபோனதிற்கு மூல காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் - புத்தர் இதுபோன்ற தர்க்க ரீதியான விஷயங்களை விளக்கிக்கொண்டிருக்கவில்லை என்பதேயாகும்.

ஈகோ என்பது மாயை, அதற்கு தொடக்கம் இல்லை, ஆனால் முடிவு உண்டு புத்தர் உபதேசித்தார். அது முற்றிலும் சரி. ஆனால் அதற்கு மேல் அவர் விளக்கவில்லை. அது தானகவே கண்டறிய வேண்டிய விஷயம், சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அவரது வழிவந்தவர்களோ, ஏற்கனவே இருந்த சித்தாந்தங்களை உடைக்கும் முயற்சியில், இதையும் சேர்த்துக் கொண்டார்கள் - புத்தர் அந்த கூற்றைப்பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு விவாதமுமே செய்யாவிட்டாலும்.

புத்த மத சித்தாந்ததிற்கும், அத்வைதத்திற்கும் இது ஒன்று தான் வேறுபாடு, மற்றவையெல்லாம் ஒன்றுதான். ஆனால் இது மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய கூற்று.

Wednesday, May 04, 2005

புத்தம் சரணம் கச்சாமி

மே மாதம், இந்தியாவில் தோன்றிய மாபெரும் ஞானிகளில் ஒருவரான கெளதம புத்தர் பிறந்த மாதமாகும். தினம் நிகழ்வுகளில் தன்னைத்தொலைத்து மாயை என்னும் சுழலில் சிக்கித் தளிக்கும் மனித இனம் உய்வதற்கு வழி சொன்ன மகான். உலகுக்கெல்லாம் முதன்முதலின் புத்த மதம் போதிக்கப்பட்டது இந்தியாவில் இருந்துதான். இன்று புத்த மதம் இந்தியாவில் நொடிந்துபோனாலும், உலகின் மற்ற பகுதிகளில் அதன் வேர்களைக் காணலாம்!.

இளவரசன் சித்தார்த்தன் தன்னொளி பெற்று கெளதம புத்தனாக ஆன கதை உங்களுக்கெல்லாம் தெரிந்து இருக்கும். அவ்வாறு அவர் பெற்ற ஞானத்தின் சாரம்தான் புத்த மதம். புத்த மதம் முதலில் 'ஹீனயானம்', 'மஹாயானம்' என்ற இரண்டு பிரிவுகளில் இருந்தது. பின்னர் அதிலிருந்து பல்வேறு பிரிவுகள் தோன்றின. இந்த இரண்டு பெரிய பிரிவுகள் அதிகமாக பின்பற்றப்படும் நாடுகளை கீழே காணாலாம்:


Hinayana Map Posted by Hello
Mahayana Map Posted by Hello


இவற்றைத்தவிர, திபத்தில் பின்பற்றப்படும் பிரிவுக்கு வஜ்ரயானா என்று பெயர்.
பிரிவுகள்பல இருந்தாலும், அனைத்து பிரிவுகளும் புத்தரின் மூல போதனகளையே பின்பற்றுகின்றன.

புத்தரின் மூல போதனைகள்
ஹிந்து மதத்தின் மூல நெறிதனை நான்கு வார்த்தைகளில் அடக்கிவிடலாமென்பதுபோல, புத்தத்தின் மூல போதனைகளை நான்கு வரிகளில் சொல்லலாம். அவை:
1. "வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது"
என்ற அனைவருடைய சொந்த அனுபவத்தை கூறுகிறது.
2. "ஆசையே துன்பங்களுக்கு எல்லாம் காரணம்"
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பொழுது எவ்வளவு துன்பமடைகிறோம். ஆனால், எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும் நமக்கு உண்மையில் நிலையான இன்பம் கிடைப்பதில்லை. மேலும் மேலும் ஆசைகள் பெருகத் தான் வழி வகுக்கிறது.
3. "துன்பங்களை தடுக்கவும், பேரின்பம் கிட்டவும் வழி உண்டு"
தேவையில்லாத ஆசைகளை விட்டொதுக்கி, பொறுமையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் அற்று, இன்றைய பொழுதில் வாழ்ந்தோமானால், முழுமையுடன் வாழ முடியும். இதனால் நிர்வாணம் என்னும் பேரின்ப நிலையை எட்ட முடியும்.
4. "துன்மற்று வாழ இந்த எட்டு வழி நெறிகளைக் கடைப்பிடிக்கலாம்."

எட்டு வழி நெறிகள்
1. சரியான பார்வை
2. சரியான எண்ணம்
3. சரியான சொல்
4. சரியான செயல்
5. சரியான வாழ்க்கை
6. சரியான முயற்சி
7. சரியான மனநிலை
8. சரியான மனத்தீர்மானம்

புத்தரும் கடவுளும்
புத்தர் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் மகனெற்றோ, அல்லது கடவுளை வணங்குவதால் துன்பங்கள் தொலையும் என்றோ சொன்னதில்லை. ஒவ்வொருவரின் துன்பங்களையும் அவராலேயே போக்கிக்கொள்ளமுடியும், அவராகவே தன்னைத்தானே அறிந்து கொள்வதால்.
்புத்த மதம் பொதுவாக உருவ வழிபாட்டில் ஈடுபாடவிட்டாலும், புத்தர் சிலைகளை குறியீடாகவும், ஊக்க கருவிகளாகவும் பயன்படுத்துகின்றன.

உலகம் எப்படி தோன்றியது?
நீரில் முதலில் தோன்றிய உயிரானது, பல்வேறு விதங்களில் பல்வேறு உயிர் வகைகளாக மாறியது. இவற்றை யாரும் தோற்றுவிக்கவில்லை. இவற்றுக்கு தொடக்கமும் இல்லை. உலகம் ஒரு விதத்தில் இருந்து, அழிந்து, மறு உருவம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

தியானம்
புத்தரின் மூல தியான வழிமுறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
1. அனபாணா சாத்தி (பிராணயாணம்)
2. மேத பாவனை (சுய வாழ்த்து)

இந்த தியான வழிமுறைகளைப்பற்றி மேலும் அறிய விரும்புவோர்களுக்கு PDF சுட்டி.

மேலும் விவரங்களுக்கு: இந்த சுட்டியில் பல மின்னிதழ்களைப் பெறலாம்.

மேலும் இந்த தளத்தில் ஒலி வடிவத்தில் ஆங்கில சொற்பொழிவுகளைக் கேட்கலாம்.

Monday, May 02, 2005

திரைஇசையில் கீரவாணி

கீரவாணி 21வது மேளகர்த்தா ராகம்.
ஆரோஹணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ்
அவரோஹணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ

கீரவாணி இளையராஜாவிற்கு மிக மிக பரிச்சையமான ராகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பல பாடல்களுக்கு கீரவாணியை தேர்ந்தெடுத்திருப்பாரா?. இளையாராஜா பற்பல ராகங்களில் இசையமைத்திருந்தாலும், கீரவாணிப் பாடல்களில் பல பாடல்கள் மிகவும் பிரபலமான பாடல்களாக இருக்கின்றன.

இதோ கீரவாணி ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல்களின் தொகுப்பு:
(எந்த ஒரு குறிப்பான வரிசையிலும் இல்லை)

1. கீரவாணி இரவிலே கனவிலே / S.P.B, ஜானகி /பாடும் பறவைகள்
இந்தப்பாடலில் ஸ்வர வரிசைகளைப் பாடுதல் மிக இனிதாக இருக்கும்.
ஸ்அ நி ஸ் ரி ஸ் நி
ஸ் அ நி ஸ் ம் க் ம் ரி எனத்தொடங்கும்!

S.P.B வரிக்குவரி பாவத்தை மாற்றுவதைக்காணலாம்!
புலி வேட்டைக்கு வந்தவன் .... (பெருமிதம்)
குயில் வேட்டைதான் ஆடினேன்... (மகிழ்வு)
புயல் போலவே வந்தவன்... (அமைதி)
பூந்தென்றலாய் மாறினேன்.... (மகிழ்வு)

2. காற்றே எந்தன் கீதம் / S.ஜானகி / ஜானி
மிகப்பிரபலமான இந்தப்பாடல் இசைக்கருவிகளின் இனிதான சங்கமம் மட்டுமல்ல. ஜானகியின் குரல் இன்னுமொரு இசைக்கருவியைப்போல், மிகச்சீராகப் பாடியிருப்பார். இந்த பாடலின் பி்ன்ணணியில் ரஜினி மழையில் ஓடிவருவதையும், அதற்குத் தகுந்தாற்போல் வயலின்கள் வாசிப்பதும், பாட்டுக்கும் காட்சிக்கும் என்னதொரு பொருத்தம் என வியக்க வைக்கும்.

3. நெஞ்சுக்குள்ளே/S.P.B, S.ஜானகி /பொன்னுமணி
S.P.B பாடும்போதும்போது ஜானகி அந்த வரிகளை அகாரத்தில் பாடுவதும் பின்னர் ஜானகி பாரும்போது, S.P.B அகாரத்தில் பாடுவதும் நல்லதொரு கலவையாக இருக்கும். பல்லவி முடிந்தபின் புல்லாங்குழல் வாசித்தும் பின்னர் வயலின்கள் வாசித்து, அதிலிருத்து சீராக தொடர்த்து மறுபடி அடுத்த சரணம் தொடர்வது, 'இயற்கையாக' இருக்கும்.

4. மண்ணில் இந்த/ S.P.B / கேளடி கண்மனி
சரணங்களில் S.P.B மூச்சுவிடாமல் பாடியதாக சொல்லப்பட்டு பிரபலமான பாடல். அதை மறுத்தும், சாதகமாகவும் பல வாதங்கள் நடந்திருக்கின்றன. இந்த பாடலிலும் புல்லாங்குழலின் இனிமையை ரசிக்கலாம்.

5. முன்னம் செய்த தவம்/ S.ஜானகி , S.P.B / வனஜா கிரிஜா
புல்லாங்குழலில் 'கூக்கு...கூக்கு...கூஊக்கு' என்று கூவுவது புல்லாங்குழலை வாசிப்பது குயிலோ எனத் தோன்றச் செய்யும். மேலும் பாடலில் பின்குரல்கள் ஹம் செய்வதும் நன்றாக இருக்கும்.

மண்ணில் வானம் பந்தல் போல தோணுதே...
விண்ணில் மீன்கள் கண்கள் சிமிட்டி காணுதே...

எங்கும் எங்கும் ஓம்கார நாதம்,
வந்து வந்து நல்லாசி கூறும் .

6. போவோமா ஊர்கோலம்/S.ஜானகி , S.P.B/சின்னத்தம்பி
ஒருகாலத்தில் இது கேட்டு கேட்டு தெவிட்டிப்போன பாடலானாலும், இந்த பாடலின் interlude கள் நன்றாக இருக்கும்.

7. உன்னை நான் அறிவேன் /S.ஜானகி / குணா
இது இதமாக நெஞ்சைத்துவட்டும் பாடல். பாடலின் நடுவே ஹிந்துஸ்தானி கஸல் ஆலாபனையும் அமைத்திருப்பார் இளையராஜா. அது முடிந்த்து அதுவே ஒரு தெலுங்கு கூத்துப்் பாடலாகவும் மாறும்!. முடிவில் வரலட்சுமியையும் பல்லவியை முடிக்குமாறும் செய்திருப்பார்!

யார் இவர்கள் மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்

8.
நடந்தால் இரண்டடி / S.P.B /செம்பருத்தி
இது கனமில்லாத சாதாரணமனிதனின் தத்துவப்பாடல். S.P.B அனயாசமாக பாடியிருப்பதைக் காணலாம்.

9. தங்கச்சங்கிலி / S.ஜானகி , மலேஷியா வாசுதேவன்/தூறல் நின்னு போச்சு
எல்லோருக்கும் பிடித்த சிறந்ததொரு பாடல். மாலேஷியா வாசுதேவனின் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.

10. மலையோரம் வீசும் / S.P.B / பாடு நிலாவே
இந்த பாடலிலும் புல்லாங்்குழலின் இனிமையைக் காணலாம். சற்றே சோகமான பாடலாக பாடியிருப்பார் S.P.B.

11. எவனோ ஒருவன் / ஸ்வர்ணலதா / அலைபாயுதே
கீரவாணியில் இன்னுமொரு சோகப்பாடல். இந்த முறை ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து.
வைரமுத்துவின் வைர வார்த்தைகள் பாடலில் பிரகாசிக்கும்.

அந்த குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே...

12. பாடி பறந்த கிளி / S.P.B / கிழக்கு வாசல்
நாட்டுப்புறப் பாடலைப்போல, இருக்கும். ஆனாலும் intelude களில் வயலின் மற்றும் புல்லாங்குழல் பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. மற்றும்மொரு சோகப்பாடல்.

13. என்னுள்ளே / ஸ்வர்ணலதா / வள்ளி
மற்றுமொரு இதமான பாடல். வேலை செய்துகொண்டே பின்னோட்டமாக ஓடிகொண்டு இருக்க சிறந்த பாடல்.

14. குயிலுக்கு கூ கூ / S.P.B, ஹரிஹரன், சங்கர் மஹாதேவன் / ஃபிரண்ட்ஸ்
மூன்று புகழ்பெற்ற ஆண் பாடகர்கள் ஒரே பாடலின் இடம்பெறுவது அவ்வளவு வழக்கமான நிகழ்வல்ல. இந்த பாடலுக்கு அந்த பெருமை உண்டு. கோரஸ்ஸாக மூன்றுபேரும் பாடும் இடங்கள் பாடலில் வியப்பைத்தரும்.

15. கண்ணே கலைமானே/ஜேசுதாஸ்/மூன்றாம் பிறை
கேட்டவர் யாரலும் மறக்கமுடியாத அமரத்துவம் வாய்ந்த பாடல். கமல்-ஸ்ரீதேவி என்று சொல்லும்போது, இந்தப்பாடல் நினவிற்கு வராமல் இருக்க முடியாது.

16. பாட்டுப் பாடவா / ஏ.எம்.ராஜா / தேன்நிலவு
மற்றொரு புகழ்பெற்ற இந்த பாடலும் கீரவாணி ராகம் தான்.

17. பூவே செம்பூவே/ஜேசுதாஸ் / சொல்லத்துடிக்குது மனசு
இந்த பாடலும் மிகவும் பிரபலமான பாடல். இரண்டாவது interlude-இல் வயலின்கள் வேகமாக வாசித்து, நமது மனத்துடிப்பை அதிகரித்து, பின்னர் சரணம் பாடும்போது மீண்டும் சாதாரணமாவது, மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல இருக்கும்!

18. ராஜ ராஜ சோழன் நான் /ஜேசுதாஸ்/ இரட்டைவால் குருவி
ஜேசுதாஸ் இந்த பாடலையும் மிக அழகாக பாடி இருப்பார். சரணங்களில் ஒரு வரியை முடிக்குமிடத்தில், அதை 'ம்ம்ம்' என்று இழுத்து, அதிலிருந்து அடுத்த வரியைத் தொடங்குவார்!

19. உன்னை நினச்சேன் பாட்டு / S.P.B / அபூர்வ சகோதரர்கள்
இரண்டாவது interlude-இல் வரும் வயலின்களும், புல்லாங்குழலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். காட்சியில் கமல் சர்கஸ் ஜோக்கர் போல வேடமிட்டு ஆடுவதற்கு தோதாக வயலின்கள் இருக்கும்.

கண்ணிரண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை!

20. எங்கே எனது கவிதை /K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ் / கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மற்றுமொரு சிறந்த பாடல், சின்னக்குயில் சித்ராவின் குரலில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்.

Saturday, April 30, 2005

எதிர்பார்ப்புகள் - கவிதை

1.
இரவெல்லாம் விழிமூடி விழிப்பில்லை
பகலெல்லாம் விழிதிறந்தும் விழிப்பில்லை
இடையிடையே விழித்துக்கோண்டேனே
எதிர்பார்ப்பை விலக்கியபோது.
2.
மணிமணி எண்ணம்
மணிரதம் நடை
மான் துள்ளல்
கூடவே கரையான் எதிர்பார்ப்்புகள்.
3.
உருண்டோடிக்கொண்டு இருக்கையில்
நேற்றை அசைபோடுகையில்
நாளையை எதிர்பார்க்கையில்
இப்பொழுதை தொலைக்கிறேனே.

Friday, April 29, 2005

குடும்பப் பெயர்

குடும்பப் பெயர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நமது மாநிலத்திலேதான் குடும்பப் பெயர்(Family Name) அல்லது சர் நேம் (Sur Name) அல்லது Last Name கிடையாதே. வெறும் இனிஷியல்தான்.
தந்தையின் பெயரை (இப்போது தாயின் பெயரோ) இனிஷியலாகக் கொள்ளும் பழக்கம் நம்மிடம் உள்ளது. நம்மூரை விட்டு வெளியே வந்தாலோ, இந்த இனிஷியலை விரிவாக்கி அதையே குடும்பப் பெயராக கொள்ளத்தொடங்குகிறோம்.
வேறுவழியில்லாமல்.

இத்தனைக்கும் இந்த இனிஷியல் பழக்கம் தொன்று தொட்டு ஏற்பட்டதல்ல. அந்தக்காலத்தில் அரசர்கள் வம்சப்பெயர்களியும், குடிமக்கள் ஊர்ப்பெயர்களையும் குடும்பப்பெயர்களாக கொண்டிருந்தனர். பின்னர் மக்கள் தொகை பல்கிப்பெருக, ஊர்ப்பெயர்கள் போதாதென்பதால், ஜாதிப்பெயர்கள் குடும்பப்பெயர்களாக வந்து ஒட்டிக் கொண்டன. இதன் வழியாக தேவையில்லாத வேறுபாடுகள் நம்முள்ளே விதைக்கப்பட்டும் விட்டது. பெயரளவில் ஜாதிப்பெயர்களை விட்டுவிட்டாலும், மனதளவில் வேறுபாடுகள் களையறுக்கப் படவில்லை என்பது வேறு விஷயம். ஊர்ப்பெயர்களும், வம்சப்பெயர்களும், ஜாதிப்பெயர்களும் வழக்கொழிந்து போக, நமக்கு மீதம் விட்டது இனிஷியல் மட்டும் தான்.

இதில் நல்லது ஏதேனும் உண்டா என்றால் இருக்கத்தான் செய்கிறது!
* வெளிநாடுகளில் மரியாதையாக ஒருவரை அழைக்க, அவரது குடும்பப்பெயர் கொண்டே அழைக்கப்படுகிறார். அப்போது நம்மை நம் பெற்றோர் பெயர் கொண்டு அழைக்கும்போது, என் பெருமையெல்லாம் என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை/தாய்க்கேப் போய்ச் சேரட்டும் எனப் பெருமிதம் கொள்ளலாம்.
* நாங்கள் தமிழர், எங்களுக்கு தனித்துவம்தான் முக்கியம் என்று நீட்டி முழக்கலாம்!;-)

இதனால் சங்கடங்களும் வருகின்றன:
* குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பப்பெயர் கொண்டு அழைக்க முடிவதில்லை.
* வெளிநாடுகளில் குடும்பப் பெயர் கேட்க்கப்படும் நேரத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் ஒவ்வொரு பெயர் கொள்வதால், மற்றவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது.
* இதனை விளக்க மற்றவர்களுக்கு, நாங்கள் குடும்பப் பெயர் கொள்ளும் பழக்கம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டது என மற்றவர்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.
* உலகத்தோடு ஒட்டி ஒழுகாதார் பல கற்றும் அறிவிலாதர் என்ற சொல் ஏற்படுகிறது.
* பெயரைக்கொண்டு ஜீனலாஜி போன்ற விஷயங்கள் செய்ய இயலாமல் போகிறது.

சரி, மாற்றம் வர வேண்டும் என்றால் என்னவாக மாற்றலாம்?
மீண்டும் வேறுபாடுகள் வராமல், அவரவருக்கு பிடித்த தம் மூதாதயர் பெயரையோ, ஏன் தங்கள் தாய் தந்தை பெயரையோ, வேறு எந்த பிடித்த பெயரையோ கொள்ளலாம். தேர்வு தம் சந்ததி அனைவருக்கும் பொருந்தும் பெயராக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் மாற்றி விடுவார்கள்!

மேலும் 'Middle Name' ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். குடும்பப் பெயர் பெற்றோர் பெயாராக இல்லாத பட்சத்தில், இந்த 'நடுப்பெயரை' பெற்றோரில் ஒருவர் பெயராகக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட பெயர்களால் ஏற்படும் குழப்பங்கள் குறையலாம். வலைப்பதிவுகளில் பதிவாளர்கள் பெயரில் பின்னூட்டங்களில் வராத குழப்பமா என்கிறீர்களா?

நமது மக்கள்தொகை விரிவாகும் வேகத்தில், சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' வில் வருவதுபோல், அவரவருக்கு அரசாங்கம் ஒரு அடையாள எண்ணும் இரண்டு பைட் (யுனிகோட் என்றால் மூன்று பைட் வேண்டும்) கொண்ட பெயரும் தரும்வரை தான் இந்த பெயருக்கு 'மவுஸ்'. அதற்குள் செய்ய வேண்டியதை செய்து கொள்வோம் ;-)

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Tuesday, April 26, 2005

வாழ்க்கையின் குறிக்கோள்(கள்) என்ன?

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு குறிக்கோளோடு நாம் செயல்படுகிறோம். இளம் பருவத்தில் கல்வி கற்பதும் (எனக்கு விளையாடுவதுதான் என்கிறீர்களா, எனக்கும் அப்படித்தான்), பின்னர் வேலை கிடைக்க முயல்வதும், பின்னர் பணம் ஈட்டுவதும், ஈட்டிய பணத்தை சேமிப்பது/பெருக்குவதும், மண வாழ்க்கையில் இல்லறம் நடத்துவதும், முதுமைப்பருவத்தில் தம் சந்ததியருக்கு வழிநடத்துதலும் பொதுவான குறிக்கோள்களாக நம் சமூகத்தில் இருந்்து வருகின்றன.

மேலே சொன்னது, எழுதுவதற்கும், படிப்பதற்கும் எளிதாக இருந்தாலும், இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் தான் எத்தனை அல்லல்கள், எத்தனை தடுமாற்றங்கள்? நாம் நினைத்த காரியம் நடக்காவிட்டால், எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வி நம்முள் பெரிதாக எழுகிறது. நம் மொத்த வாழ்க்கையும் எதோ ஒரு சிறு நிகழ்வினால் நிர்ணயக்கப்பட்டுள்ளதுபோல். நம் தோல்விகளும், ஏமாற்றங்களும் நம்மை வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றன.

வேடிக்கை என்னவென்றால், தேல்விகளும் ஏமாற்றங்களும் ஏற்்படும்போதுதான் இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். இயற்கையாகவே நாம் ஏமாற்றங்களை தவிர்த்து வாழ முடியாதா? அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும் நம் மனதை பாதிக்காத வகையில் நம் மனதை பக்குவப்படுத்திக்கொள்ள முடியாதா?

இந்த கேள்விக்கும் இன்ன பிறவற்றிற்கும் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விடைபெயர முயல்கிறேன்.

முடியும். நம் மொத்த வாழ்விற்கும் குறிக்கோள் இதுவென்று ஒன்றினைக் கொண்டோமாயானால், அது முடியும். எந்த சூழ்நிலையிலும், எந்த தடுமாற்றம் ஏற்பட்டாலும் , என் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் போதும், தெளிவு பிறந்துவிடும்.

என்னது, நம் மொத்த வாழ்வுக்கும் ஒரு பெரிய குறிக்கோள் உண்டா?

ஆம். தமிழில் இதனை அழகாக ' அறம் பொருள் இன்பம் வீடு' என்பார்கள். பகவத் கீதையும்் இதையே, 'தர்மம் அர்தம் காமம் மோக்க்ஷம்' என்கிறது.

ஏதோ பெரிதாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி சுலபமாக இருக்கிறதே?

உலகத்தின் மிக உன்னதமான கருத்துக்கள் எல்லாமே சுலபமானதே. நாம் தான் அவற்றின் மதிப்புத் தெரியாமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளோம்.
பொருள் மற்றும் இன்பம் பெறுவது நம் மானிடப்பிறப்பின் இயல்பான குணமே. புத்த மதம் சொல்வதைப்போல் அவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. இந்து மதத்தின் உயரிய வழிமுறை அறம் வழியே பொருள் மற்றும் இன்பம் ஈட்டுவதே. அதுவே வாழ்க்கையின் முக்கிய நெறிமுறை.

அறம் என்றால் என்ன?

முதுபெரும் இந்தியாவில் அறம் என்னவென்று எடுத்துரைக்கும் நூல்களை பட்டியலிடத்தொடங்கினால் எண்ணி மாளாது. நாம் அனைவரும் கொஞ்சமாவது படித்திருப்போம். ஆனால் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே விட்டு விட்டோம். அவற்றைக் கூட்டுச் சுரைக்காயாக பயன்படுத்திக்கொள்ளும் கலை நம்மிடமே உள்ளது. அறம் என்றால் என்னவென்று திருவள்ளுவர் 380 குறள்களில் சொல்லியிருக்கிறார். கசடற கற்போம், கற்ற வழி நிற்போம்.

வாழ்க்கையின் இறுதியான குறிக்கோள் வீடுபேறு அடைதல். எல்லாவற்றையும் துறந்த துறவியால் மட்டும் தான் வீடுபேறு (மோக்க்ஷம்்) அடைய முடியும் என்பதல்ல. அறம் வழி நின்றவர் அனவரும் அடையலாம். மேலும் மோக்க்ஷம் என்பது உண்மையில் ஒரு இடமல்ல, அது ஒரு நிலை. குழந்தைப்பருவம் போல ஒரு நிலை. என்ன, ஒரே ஒரு வேறுபாடு. மோக்க்ஷம் என்னும் நிலையை அடைந்தவர் குழந்தை அல்லது மற்ற நிலைகளை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியதில்லை. இந்த கடைசி நிலையைப் பற்றி அறிந்து கொள்ளவோ, யொசித்துக்கொண்டு இருக்கவோ வேண்டியதில்லை. நம் செயலிகளில் தினம் தினம் அறம் வழி நடந்து நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வதால், தானாகவே அந்நிலை நமக்குத் தெளிவு பெறும். தன்னை அறிதல் வேண்டும் என்ற உந்துதல் தானாகவே ஏற்படும்.

If Winter comes, Can Spring be far behind?

Sunday, April 24, 2005

தாயே என் சரஸ்வதி

ஜேசுதாஸ் பாடி முதல் முறை கேட்ட பாடல்.
வள் அருள் வேண்டி நின்று பாடிடத் தோணுது.

தாயே என் சரஸ்வதி - கலை
ஞானம் அருள்வாயே...
(தாயே...)
மாயே என் கலைவாணி - சேய்
என்பால் கனிவாய்...
(தாயே...)
தாயே என் குறை தீர - நாவில்
நீ அமர வேண்டும் - நாவால்
உன் புகழ் பாடி - பாமாலை
சூட்ட வேண்டும்...
(தாயே...)
ஆகமங்கள் கூறுகின்ற ஆத்ம
சுகம் நான் பெறவே...
இராக தாள சந்தி சேர்த்து
தூய கானம் பாடிடவே...
யேக நாத ரூபிணி...
நாசிகாபூஷிணி...
தாகம் தீர்ப்பாய் கலைமகளே
வரம் யாவும் தருவாயே...
(தாயே...)

Friday, April 22, 2005

அட்லாண்டாவில் சந்திரமுகி

ரஜினி படம் என்றாலே வெகு ஜோர்தான். படத்தின் ஜோர் பாதி என்றால், படம் பார்ப்பவர்களை கவனிப்பது மீதி ஜோர். ரஜினி படத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்!. படம் பார்ப்பவர்கள் சினிமா என்பதை மறந்து, ஒரு நேரடி நிகழ்சியாக எண்ணிக்கொள்ள செய்கிறது படம். சென்ற முறை பாபா படம் அட்லாண்டாவில் திரையிடப்பட்டதும், இந்த மாயத்திரையில் நேரடி நிகழ்சியே நடந்தேறியது.
பாபா படத்தில் சொதப்பல்கள் பல இருந்தாலும், ரசிகர்களின் விசில்களுக்கு குறைவிருந்ததில்லை.

இந்தமுறை ரஜினி படத்திற்கு அட்லாண்டா ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் ஆவலாகவே இருந்தது.
இன்னும் இரண்டே நிமிடங்கள் இருக்கையில் திரையரங்கை அடைந்தோம். உடனடியாக நுழைவுச்சீட்டு விற்கும் இடத்தை அடைந்தோம்.
அதிலொன்றும் அதிக சிரமம் இல்லை. நம்மூர் ஆட்களின் வரிசை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டியதுதான். கண்டதும், மூன்று சீட்டுகளை பெற்றுக்கொண்டோம் - முப்பது டாலர்களுக்கு.

நுழைவிற்கு மட்டும்தான் சீட்டாம். அமர்வதற்கு அல்லவாம்!. கிடைத்த இடத்தை பிடித்துக்கோள்ள வேண்டியதுதானாம். முன்னமே வந்தவர்கள்
கைக்குட்டடையெல்லாம் பத்தாதென்று கம்பளி விரித்தார்களோ என்னவோ மொத்த சீட்டையும் பிடித்து விட்டார்கள்.கம்பளி போதாக்குறைக்கு,
கையில் செல்பேசி வேறு, நமக்கு பாவ்லா காட்ட. எங்களுக்கு மிஞ்சியது முதல் வரிசை சீட்தான். ஒரமாக இருந்த ஒரு முதல் வரிசை இருக்கையை
பிடித்துகொண்டேன். ஆரம்பக் காட்சிகள் 3D படம் போல இருந்தாலும் பின்னர் பழகி விட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு காட்சி என அறிவித்து இருந்ததால், படம் 2 மணிநேரப்படமோ என்ற சந்தேகம் வேறு. இடைவேளை விடமாட்டார்கள் என்று
எங்கேயோ படித்ததாக ஞாபகம். வந்திருந்த கூட்டத்தப்பார்த்து ஒரு நோட்டம் விட்டேன். பலதரவகைப்பட்டவரும் இருந்தனர். நம்மூர் கொட்டகையில்
தலைவருக்கு விசில் அடித்துக்கொண்டு இருந்தவர் முதல், தமிழை இதற்குமுன் கேள்விப்படாதவர் வரை சகலவிதமானவரும் 'உள்ளேன் அய்யா'
சொல்லியவாறு. தீவிர ரஜினி ரசிகர்களின் பக்தி தெரிந்த விஷயமே. புதியவர்களின் ஈடுபாட்டைப்பார்ப்பதிலே ஆவல்.

குடும்ப சகிதமாக ஆஜராகியிருந்த குடும்பத்தலைவர்கள் ஒருபுறம். அவர்களின் 'என் குடும்பத்தை நான் ரஜினி படத்திற்கு அழைத்து வந்துள்ளேன்'
என்ற பெருமிதம் அவர்களின் பார்வையிலேயே தெரியும். கையில் கைகுழந்தையுடன் கணவன்மார்கள்/மனைவிமார்கள் ஒருபுறம். படத்தையும்
விட மனசில்லாமல், குழந்தையையும் விட மனசில்லாமல், இரண்டிலும் ஒரு கண் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு இருப்பார்கள். பெண்கள்
சங்கம்/சங்கீத சங்கம் என்று சங்க தோழியர் கூட்டம் இன்னொரு புறம். கேட்டால், 'அவருக்கு தமிழ் படமெல்லாம் பிடிக்காது' என்று பெருமையாக
சொல்லிக்கொள்வார்கள். நமக்குத்தான் தெரியும், கணவன்மார்கள் வீட்டில் இருந்தால் படம் பார்க்க வர மறுக்கும் சிறுவர்களுக்கு 'பேபி சிட்டிங்' மிச்சம் என்று!.

சில நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிட்டது. சண்டைக்காட்சியுடன் படம் துவங்குகிறது. தலைவர் ரஜினி ,அவரின் ஷூ வழியாக திரையில் நுழைகிறார். பார்ப்பவர்கள் முகமெங்கும் தவறாமல் புன்னகை!. பின்னால் விசில் பறக்கிறது.
தமிழ்நாடுபோல், திரைக்கருகே வந்து கண்ணில் ஒற்றிக்கொள்ள யாரும் இல்லை!.

படமெங்கும் ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த மனநல மருத்துவர் என்று சொல்லப்படும்போது, எல்லோரும் உரத்த குரலில் 'ஓ' போடுகிறார்கள்!.
இப்படியாக படம் களை கட்ட, வேட்டைக்காரன் அரண்மணைக்கு படத்திலிருக்கும் மொத்த பாத்திரங்களும் (கே.ஆர்.விஜயா தவிர) நுழைகிறார்கள்.
இத்தனை பேரும் ஒரே இடத்தில் இருப்பதலோ என்னவோ ரஜினிக்கு அவ்வளவாக சோபிக்க வாய்ப்பில்லை. கிடைத்த நேரத்தில், வடிவேலுவுடன் நகைச்சுவை. அல்லது காமடி என்ற பெயரால் சகிக்க முடியாத கூத்து. ரஜினிக்கு ஆனாலும் இது தேவையில்லாததுதான்.

இது நடுவில் ரஜினி அரண்மணையைவிட்டு வெளியூருக்கு போய் விடுகிறார். நடுவில் ஜோதிகா, சந்திரமுகியின் ஆவி இருக்கும் அறைக்கதவை திறந்து அதை வெளியே விட்டு விடுகிறாராம். அதற்காக எதற்கு ரஜினியை வெளியூருக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரியவில்லை. திரும்பி வரும் ரஜினி அரண்மணையில் நடக்கும் மர்மங்களுக்கான காரணங்களை ஆராய்கிறார். பிரபு கொல்லப்பட இருக்கும் தருணங்களில் அவரை காப்பாற்றுகிறார்!. (விஷம் மற்றும் மீன் தொட்டி விழுந்து கொலை - அதரப்பழசு. சந்திரமுகியின் ஆவியும், இயக்குனரும்(!) சமகாலத்தவர்களோ?). 'கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, சூப்பர் ஸ்டாரை பாரப்பா', என்று பின்னால் இருந்து உரத்த குரல் வருகிறது!.

மாளவிகா, டேன்ஸ் மாஸ்டர், மந்திரவாதி, அடியாள் போன்ற பாத்திரங்கள் ஜவ்வு போன்று கதையை இழுக்க உதவுகின்றன. வேறு விஷேசமில்லை. அங்கங்கே சில இடங்களில் மட்டும் நகைச்சுவை ரசிக்கும்படியாகவும் உள்ளது. 'ஜோதிகா பாவம், என்ன கொடுமை இது' என்று சீரியசாக பிரபு சொல்லும் இடத்தில் எல்லோரும் சிரிக்கிறார்கள். (இயக்குனரையும் பார்த்து). இளம் கல்ல்லூரிப் பெண்கள் தாங்கள் வந்திருப்பதைக் காட்டிக்கொள்ள, நடுவே சத்தமாக subtitle-ஐ ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்!, அவர்களை முறைப்பவர்களையும் பொருட்பருத்தாமல்.

சந்திரமுகி ஆவி ரகசியத்தைக் கண்டு பிடித்த பின்னால் ஜோதிகாவின் உடலின் சந்திரமுகியின் ஆவியை வெளியேற்ற ரஜினி திட்டமிடுகிறார். பைத்தியம் போல தலையை கலைத்துக்கொண்டு ஜோதிகா பரதநாட்டியம் ஆடுகிறார். அந்த சமயம் மூன்று சதுர துளைகள் வழியே, ரஜினி உட்பட மூன்று பேரும் பரதநாட்டியத்தைப்பார்ப்பது Very Funny. நல்ல வேளை, பரதநாட்டியம் முழுதுமாக கலைந்த தலையுடன் இல்லை. அதுவரை, இயக்குனரை பாராட்ட வேண்டும். ஜோதிகா என்னவோ பெரிதாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். பிதாமகனில் லைலாவுக்கு முன்னால் இது ஒன்றுமில்ல்லை.

விதியை தன் மதியால் வென்றார் ரஜினி என்பதே முடிவு. முடிவு எனக்கு ஒகே. அதிரடி ரசிகர்களுக்கு? அதிரடி படங்களுக்கு நடுவே இது வித்யாசமாக இருக்கும். இந்த படம் வெற்றியடைந்து, அதன் மூலமாவது, இப்போது தொடர்ந்து வரும் சகிக்க முடியாத 'தனிநபர் சாடுதல்' முடிவுக்கு வந்தால் நல்லதே.

Saturday, April 16, 2005

பேட்ரிக் - நம் சங்கீதம் கற்ற ஜூலு பாடகர்

பி.பி.சி - யின் பழைய செய்திகளில் ஒன்று தேடலில் அகப்பட்டது.
செய்தி வியப்பானதாக இருந்தது.

பேட்ரிக் என்பவர் தென் ஆப்ரிக்காவில் நமது சங்கீதத்தைக்கேட்டு அதன்பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு, சங்கீதம் கற்க, சென்னைக்கே வந்து விட்டார். சினிமாவில் சேர்வதற்காக கிராமத்திலிருத்து சென்னைக்கு வந்தவர்கள் கதையயைக் கேட்டிருக்கிறோம். ஆப்ரிக்காவில் இருந்து சென்னக்கு வந்தவரின் கதையைக் கேட்பது எனக்கு இதுவே முதல்முறை.

அப்புறம் பெரிய சிரமங்களுக்கு இடையே, ஒருவழியாக கற்றுக்கொண்டு தன் நாடு திரும்பினார்.

அவர் சங்கீதம் கற்றுக்கொள்ள பட்ட இடர்களும், அவற்றையும் தாண்டி எப்படி வெற்றி கொண்டார் என்பதும் சங்கீதம் கர்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஊக்கப்பாடம்.

விவரமாய் பேட்ரிக்கின் பற்றிப்படிக்க சுட்டுங்கள் பி.பி.சி தளத்தை.
சுட்டி இங்கே.

Sunday, April 10, 2005

மகரந்த மழை

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கிறோம். காய்ந்து, மொட்டையாய்போன மரங்களெல்லாம் நன்றாக துளிர் விடத்துவங்கி விட்டன.

அட்லாண்டாவில் இந்த வாரத்தின் புதுவரவு என்ன தெரியுமா?
மகரந்த மழை.
நகரெங்கும் பச்சை வண்ணத்தூளை தூவினாற்போல் உள்ளது. புதிதாக பூக்கும் பூக்களிலல் இருந்து மகரந்தத் தூள் வெளியேறி நகரெங்கும பரவுகிறது.
இது இயற்கை நடத்தும் பச்சை ஹோலிப்பண்டிகையோ என வியக்கிறேன்.
வீட்டின் கதவுகள் மீதும், வீட்டின் வெளிப்புறத்திலும், வாகனங்கள் மீதும் பச்சைப்பொடி படியத்துவங்கி விட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களுக்கு இது இருக்கும்.
இதற்கு அப்பால் வண்ணமற்ற/கண்ணுக்குத்தெரியாத மகரந்த தூள்களின் அளவும் காற்றில் கலந்திருக்கும்.

சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தும். சென்ற வருடம், இந்த சமயம் வசந்தம் வந்துவிட்டது, டென்னிஸ் விளையாடலாம் என்று துவங்கி, சளி பிடித்துக் கொண்டதுதான் மிச்சம். ஃப்ளோநேஸ் போன்ற ஒவ்வாமை தடுக்கும் மருந்துகளும் அதிக விற்பனயாகும் இந்த காலத்தில். தொலைக்காட்சி பெட்டியில் விளம்பரங்களில் பாதி இந்த மருந்துகளாகவே இருக்கும்!.

வெறுங்காலுடன் தோட்டம் அல்லது திண்ணை சென்று வந்தால் ஞாபகமாக கை/கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மற்ற காலங்களைக் காட்டிலும் இந்த காலத்தில் மேலும் சில முறைகள் தரைக் கம்பளத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
தும்மல் வரும்போது தூக்கி எறியக்கூடிய நேப்கின் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். நோய்கள் அண்டாமல் இருந்தால்தானே இயற்கையை அனுபவிக்க முடியும்.

Saturday, April 09, 2005

நான் எந்த காலிங் கார்ட் பயன்படுத்துகிறேன்?

புலம் பெயர்ந்தவர்கள் தாய் நாட்டுடன் தொடர்புகொள்ள எளியதொரு சாதனம் காலிங் கார்ட்.
நான் எந்த காலிங் கார்ட் பயன்படுத்துகிறேன் என சமீபத்தில் கேட்பவருக்கு சொல்வது - எதுவும் இல்லை என்பதுதான்!
ஏனெனில், அமெரிக்காவில் இப்போது Voice over IP (VOIP) தெலைபேசி நிறுவனங்கள் வந்து விட்டன. அவற்றின் மூலம் அதிகம் செலவாகாமல் உங்கள் தொலைபேசியிலிருந்தே எந்த ஒரு நாட்டு தொலைபேசியுடனும் தொரட்பு கொள்ளலாம்.
இந்தியாவிலும் இருக்கிறது என கேள்விப்பட்டேன். சென்னையில் BSNL, 'Internet Phone' என்ற பெயரில் வழங்குகிறது என அறிகிறேன்.

இங்கு அமெரிக்காவில் எனது VOIP தொலைபேசி நிறுவனத்தின் பெயர் வானேஜ்.
(Vonage). இதற்கு உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு பிராட்பேண்ட் (broadand) இணையத்தொடர்பு மட்டுமே. உங்களுடைய பழைய தொலைபேசி நிறுவனத்தின் இணைப்பு தேவையில்லை.

VOIP தொலைபேசி எப்படி வேலை செய்கிறது?
இதன் முக்கியபாகம், உங்கள் தொலைபேசியிலிருந்து வெளிவரும் அனலாக் சிக்னலை, டிஜிடல் சிக்னலாக மாற்றும் சாதனமே. பின்னர் இந்த டிஜிடல் சிக்னலை இணையத்தொடர்பு மூலமாக செலுத்தி, கடைசியாக, நீங்கள் டயல் செய்த தொலைபேசி எண்ணை அடையும். இவ்வாறு பேசுவதற்கு உங்களிடமோ அல்லது நீங்கள் பேசும் நபரிடமோ கணிணி இருக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் கேபிள்/டி.எஸ்.எல் போன்ற வேகமான இணையத்தொடர்பு வேண்டும். 'டயல்-அப்' போதாது. மேற்சொன்ன சாதனத்தை தொலைபேசி நிறுவனமே இலவசமாக உங்களுக்கு தருகிறது, அவர்களது சேவையை பயன்படுத்தத் தொடங்கினால்.

எவ்வளவு செலவாகிறது?
அமெரிக்காவிலிருந்து சென்னைக்குப்பேச நிமிடத்திற்கு 10 cent மட்டுமே ஆகிறது. மற்ற இடங்களுக்கு, இடத்திற்கு தகுந்தாற்போல் சற்றே வேறுபடுகிறது.
அமெரிக்காவிற்குள்ளேயே அளவின்றி 'long-distance' பேசிக்கொள்ள மாதத்திற்கு 25 டாலரும், மாதம் 500 நிமிட அளவிற்கு 15 டாலரும் ஆகிறது. இது சம்பிரதாய தொலைபேசி நிறுவனங்களைவிட விலை குறைவுதான்.

தரம்?
அமெரிக்காவிற்குள்ளேயே பேசிக்கொள்வதில் எந்த வித்யாசமும் இல்லை. இந்தியாவிற்கு பேசும்போது, சிறிது குறைவாக இருப்பதுபோல் இருக்கிறது. ஆனால், காலிங் கார்ட்களைவிட எவ்வளவோ தேவலாம். மேலும் காலிங் கார்ட்டில் ஒவ்வொரு சமயம் தரம் வெவ்வேறாக இருக்கும். எந்த ஒரு புது கார்டையும் அதிக நபர்கள் பயன்படுத்த துவங்கினால் அம்பேல்!

அனுகூலம்?
காலிங்கார்ட்களைப்போல் 1-800 எண்களை டயல் செய்ய வேண்டாம். அந்த எண் டயல் செய்தால் சில சமயம் கிடைக்காமல் தவிக்க வேண்டியதில்லை.
நேராக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் எண்ணை சொடுக்கினால் போதும். ஒவ்வொரு கார்ட் கட்டினம் முடிந்தவுடன் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கட்டினம் முடியப்போகிறதே என்று பேச்சை குறைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பதை இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். வாய்ஸ் மெயில் போன்ற இதர வசதிகளும் உண்டு.

ஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்?

புலால் மறுப்பதற்கு ஐந்து காரணங்கள்:

1. அறம் / மறை காரணம்

புலால் உண்ணுதலை அறம் போதிக்கும் மறைகள் மறுக்கசொல்லுவதால்.
(வேதங்கள், திருக்குறள், திருமந்திரம், கீதை மற்றும் பல மறைகள்)
தன் ருசிக்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்ணுதல் அறமாகாது.

2. வினைப்பயன் காரணம்

நாம் செய்யும் எல்லா செயல்களும், நம் உணவின் தேர்வு உட்பட வினையென்னும் விளைவாய் திரும்புகிறதென்பது. அந்த உயிரினங்களின் வதையானது ஊழ்வினையாய் திரும்பாமல் தவிர்க்க.

3. றிவுத்தாகம் காரணம் (Supreme Conciousness)

உடலின் இரசாயனக்கூறுகளுக்கு நாம் உண்ணும் உணவே முதல். ஒருவருடைய றிவு, உணர்வுகள், அனுபவ வினைகள் ஆகியவற்றுக்கும் அவர் உண்ணும் உணவுக்கும் தொடர்புண்டு. ஒருவர், உயர்ந்த அறிவு, சமாதானம், மகிழ்சி மற்றும் மற்ற உயிர்களிடம் கருணை கொண்டவராக இருக்கவேண்டும் என விரும்பினால், புலால் உண்ணுதல் அந்த விருப்பவத்திற்கு எதிர்வினையாகத்தான் அமையும். புலால் உண்ணுவதால், பெருங்கோபம், மன உளைச்சல், பொறாமை, சந்தேகம், இறப்பைப்பற்றிய அதீத பயம் போன்றவை அவர் உண்ணும் மாமிசத்தலேயே அவருக்கு ஏற்படக்கூடும். இன்றைய சிக்கல் மிகுந்த சமுதாய சூழ்நிலையில், மேற்சொன்ன தீக்குணங்கள் தோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காரணங்களை சொல்லலாம் என்பது வேறு விஷயம். ஆனால் அவற்றில் இதுவும் ஒன்று.

4. உடல் நலம் காரணம்

புலால் தவிர்த்த உணவு ஜீரணமானதற்கு எளிதென்றும், பலவிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன என்றும் மருத்துவத்துறை கூறுகிறது. இன்றைய சூழ்நிலையில் மனித இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் பல்வேறு நோய்கள் புலால் தவிர்ப்பவர்களுக்கு உணவால் வரும் சாதகம் குறைவே. அவர்களிடம் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகம்.

5. சுற்றுப்புற சூழல் காரணம்

இந்த உலகம் பெருந்துன்பத்தில் உழல்கிறது. தினந்தேறும் குறைந்துபோகும் உயிரினங்களால். மாமிசத்திற்காக உயிர்வதைப்படுவதை தவிர்ப்பதால் உயிரினங்கள் அழிவதையும், காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதால், அதனால் அழிந்துபோகும் காடுகளை காப்பாற்றவும், ஏன் நீர், காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் கூட உதவும். இந்த ஒரு காரணத்திற்காகவே மாமிசம் உண்பதை நிறுத்தியவர்களும் உண்டு.

Wednesday, April 06, 2005

iTunes

ஆப்பிள் நிறுவனத்தின் iTunes மென்பொருள், உங்கள் mp3 க்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும், பாடல் பற்றிய தகவல்களை நேரடியாக யுனிகோடில் செலுத்திக்கொள்ளவும் முடியும்.
இதன் பயன்பாடுகள்:
1. பாடல்களை தொகுத்துக்கொள்ளுதல். இந்த தொகுதி வழியாக, உங்கள் கோப்புத் தொகுதிகளையும் (folder) மாற்றி அமைக்க முடியும்.
2. உங்களுக்கேற்ற கலவையை ஏற்படுத்தி, அவற்றை மட்டும் பாடச்செய்தல்
3. mp3 ID Tag களை யுனிகோடில் மாற்றி அமைக்க முடியும்.
4. CD க்களை கொளுத்திக்கொள்ளவும் முடியும்.
5. CD யின் அட்டையை ப்ரிண்ட் செய்யும்போதும், இதே யுனிகோடில் இருக்கிறது.

ஆக பாடல்களை பாடச்செய்யவும், தொகுத்துக்கொள்ளவும், IDTag களை மாற்றவும், CD யில் கொளுத்தவும் இந்த ஒரு மென்பொருள் போதும் உங்களுக்கு.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இது இலவசம்.

ஆப்பிள் தளத்திலிருந்து நீங்கள் iTunes-ஐ இறக்கிக்கொள்ளலாம்.


iTunes Posted by Hello

Monday, April 04, 2005

மும்பை எக்ஸ்பிரஸ் - பாடல்கள் - முன்னோட்டம்

மும்பை எக்ஸ்பிரஸ் பாடல்கள்களை ஒரு முறை கேட்டவுடன் செய்யும் பதிவு இது.

பூ பூத்தது என்று ஒரு மெலடி ட்யூட் பாடல் - ஆண் பாடகர் தெரியவில்லை. பெண் பாடகர் ஷ்ரேயா போலத்தெரிகிறது. intelude களில் ட்ரம்ஸ் மற்றும் பியானோ அசத்தலாகவும் நீளமாகவும் இருந்தது.

கமல் இரண்டு பாடல்களை பாடுகிறார் - அதில் ஒன்று ட்ரெயினில் பாடுவது போலும்.
படத்தோடு சேர்ந்து பார்க்க மட்டுமே இந்த பாடல் என நினக்கிறென். அன்பே சிவம் 'எலே மச்சி' போல ஆரம்பித்தாலும், பாடலில் intelude கள் நீளமாக இருக்கிறது.

இன்னொன்று 'குரங்கு கையில் மாலையை கொடுத்தது யாரு' என்று பல்லவி. இதிலும் நிறைய Rock & Roll Drums. பின்னணியில் நிறைய பியானோ. (பூ பூத்தது போலவே)
இவையெல்லாம் அக்னி நட்சத்திரத்தை ஞாபகம் செய்கிறது.

வந்தேமாதரம் என்று குழந்தைகள் பாடும் பாடலும் உள்ளது.

கமலும் இளையராஜாவும் இணைந்து எட்டாத உயரத்தையெல்லாம் தொட்டபின், இன்னும் செய்ய என்ன இருக்கிறது?
என்ன செய்திருக்கிறார்கள் இந்த பாடத்தில், பார்ப்போம்.

Sunday, April 03, 2005

மலேரியா

சமீபத்தில் அமெரிக்க நோய்தடுப்பு நிறுவனமான CDC இந்தியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு மலேரியவைப்பற்றி எச்சரிக்கை விடுத்தது. ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1000 பேர் மலேரியாவில் இறப்பதாகவும் செய்தி சொல்கிறது.
செய்தியின் சுட்டி இங்கே.
பல நூற்றாண்டுகளுக்கு, இந்தியாவில் மலேரியா பெரிய பிரச்சனை என்பது தெரியும். ஆனால் இன்னமும் மலேரியவின் தாக்கம் பெரிதுமாக இருக்கிறது.

70 களில் மிகப்பரவலாக இருந்த மலேரியா, பல்வேறு திட்டங்களின் உதவியால், கணிசமாக 80 களில் குறைக்கப்பட்டது. ஆனால், 80 களில் இருந்து இன்றுவரை பெரிதான முன்னேற்றம் ஏதும் இல்லை. 90 களில் புதிய காரணங்களாலும், தொழில்மயமாக்கத்தின் விளைவும், நீர்தேக்கங்களின் சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ( பதிவின் இறுதியில் கொடுத்துள்ள அட்டவணை ஆண்டு வாரியாக விவரிக்கிறது)

மலேரியாவைபற்றி அடிப்படை தகவல்களை சேகரித்து இங்கு பதிவு செய்கிறேன்.

மலேரியா எவ்வாறு வருகிறது:
கொசு கடிப்பதால் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் பெண் கொசு கடித்தால் மட்டுமே வரும். எப்படி பெண் கொசுவை கண்டு பிடிப்பது என்று கேட்காதீர்கள். மாலை நேரத்திலிருந்து நள்ளிரவுக்குள் கடிக்கும் சொசுக்களில்தான் மலேரியா பரவுகிறது. அதாவது மலேரியா கிருமியை கொசு உங்களுக்கு இரவல் தந்து விடுகிறது. பெண்களை விட ஆண்களையே அதிகமாக கடிக்கிறதாம். (ஆமாம் சார், நம்புங்கள்!). கொசுவிற்கு மோப்ப சக்தி உண்டு. ஒருவரை முகர்ந்து பார்த்து, தனக்கு பிடிக்காவிட்டால் கடிக்காதாம்.

கடிக்கும் சொசுவிற்கு பற்கள் உண்டா?
கொசு கடிக்கிறது என்று சொல்வதை விட, குடிக்கிறது என்றே சொல்ல வேண்டும், உங்கள் இரத்தத்தை. 2-3 மூன்று நாட்களுக்கு ஒருமுறை 30 முதல் 150 முட்டைகள் வரை இடும் பெண் கொசுவிற்கு ஊட்டச்சத்து மிக்க பானமே உங்கள் ரத்தம்!. கொசு இரத்தத்தை உறுஞ்சுவதற்காக அதற்கு இரண்டு ஊசி போன்ற குழல்கள் உண்டு. ஒரு குழல் மூலம் இரத்தத்தை உறிஞ்சியவாறே, மற்றொரு குழல் மூலன் தன் எச்சிலை செலுத்துகிறது. எச்சிலில் உள்ள இரசாயனப் பொருட்கள், இரத்தம் கட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது.
அதனால் உங்களுக்கு அதிகம் வலிக்காமலும், வீங்காமலும் இருக்கிறது. அப்போதுதானே அதன் வேலையயை தடையின்றி செயல்படுத்த முடியும்!

மலேரியாவின் அறிகுறிகள் என்ன:
அதிகமான காய்ச்சல், நடுநடுக்கம், சிலசமயம் குளிர் காய்ச்சல் மற்றும் வேர்த்துப்போகுதல்.

ஒருவருக்கு மலேரியா வந்துள்ளதா என தீர்மானிப்பது எப்படி:
இரத்தச் சோதனை மூலம், மலேரியா கிருமிகளில் எதேனும் ஒன்று இரத்தத்தில் உள்ளதா எனக் கண்டறிவது.

மலேரியாவை குணப்படுத்துவது பற்றி:
மலேரியாவை 48 மணி நேரத்திலேயே குணப்படுத்தி விடலாம். ஆனாலும், கவனிக்காமல் விட்டுவிட்டால், அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம்.

மலேரியா வராமல் தடுப்பது பற்றி:
மற்ற பல நோய்களுக்கு இருப்பதுபோல் வருமுன் தடுக்கும் தடுப்பூசி மலேரியாவிற்கு இதுவரை இல்லை. சாதரணமாக கொசு அண்டாமல் பார்த்துக்கொள்வதே மலேரியாவிலிருந்து தப்ப சிறந்த வழி. கதவு/ஜன்னல்களை மூடிவைத்தல், கொசுவர்த்தி/மேட்/லோஷன்/சொசு வலை போன்றவற்றை பயன்படுத்துதல் போன்ற வழிகளில்.
உயரமான மலைப்பகுதிகளில் (இந்தியாவில்) மலேரியா பரவும் வாய்ப்பு அதிகம்.
வீட்டிற்குள் இருளான பகுதிகளும், ஈரப்பதமான பகுதிகளும் கொசுக்கள் பதுங்கியுருக்க ஏதுவான இடங்கள். மாலை முதல் நள்ளிரவு வரை வீட்டுக்குள் புகுந்தபின் இதுபோன்ற இடங்களில் பதுங்கி இருந்து, பின்னர் நீங்கள் தூக்கியபின் உங்களை கடிக்கக்கூடும்.
உடுத்திய துணிகள் போன்றவற்றை கொடியில் தொங்கப்போட வேண்டாம்.
நீர்த்தேக்கங்களுக்கு (ஓடை, குளம்) அருகே வசிப்பர்கள் அதிக கவனமாக இருக்கலாம். நீர் தேங்குவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் மலேரியா புள்ளி விவரம்

வருடம்பாதிக்கப்பட்டவர்
இறப்புகள்

1947

75 million

8,00,000

1961

49151

--

1965

99667

--

1976

6.47 million

59

1984

2.18 million

247

1985

1.86 million

213

1986

1.79 million

323

1987

1.66 million

188

1988

1.85 million

209

1989

2.05 million

268

1990

2.02 million

353

1991

2.12 million

421

1992

2.13 million

422

1993

2.21 million

354

1994

2.51 million

1122

1995

2.93 million

1151

1996

3.04 million

1010

1997

2.57 million

874

1998

2.09 million

648மேலும் விவரங்களுக்கு:
உலக சுகதார நிறுவனம் ( WHO ) : மலேரியா பகுதி

மலேரியா தடுப்பூசி உறுவாக்கும் முயற்சிகள்

Thursday, March 31, 2005

சந்திரமுகி - இசை விமர்சனம்

எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். இசையமைப்பாளர் 'வித்யாசாகர்' என்று அறிவித்தவுடனேயே, நான் இவர் நல்ல தேர்வென்று நினைத்தேன். ஏனெனில், வித்யாசாகர், இயக்குனரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றமாதிரி இசையமைப்பதில் வல்லவர். சமீப காலங்களில் ட்ப்பாங்கூத்து கேட்டவர்களுக்கு, குத்திய குத்துப்பாடல்களாகட்டும், நெடுங்காலமாக அர்ஜூன் படங்களில் அமைத்த மெலடி பாடல்களாகட்டும். இளையராஜாவிற்கு அடுத்ததாக, ரஜினிக்கு ஹிட் கொடுக்கக்கூடிய வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் வித்யாசாகருக்கே. இப்படி இருக்கையில், பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா?

1. தேவுடா தேவுடா (SPB)

அனேகமாக இது அறிமுகமாகப்பாடலாக இருக்கவேண்டும். SPB சரியான தேர்வுதான். ஆரம்ப prelude நன்றாக இருந்த்தது. ஆனால், வாலியின் வரிகள், சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இசைக்கும், பாடல் வரிகளுக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் உள்ளது. காதில் விழுவதெல்லாம் வெறும் 'டம் டம்' மத்தள சப்தமே. தெலுங்கு வார்த்தைகளிளை ஆங்காகே இறைத்திருப்பதை கவனிக்கவும். பழைய ஞாபகம் வரவேண்டுமே?
மேலும், பாடலில், 'ரிப்பீட்டு...' என்று சொல்லுமிடம் பாபா படப்பாடல் 'டிப்பு டிப்பு' பாடலை நினைவுப்படுத்துகிறது. படத்தில் பார்கும்போது ரஜினி காட்டும் வேடிக்கையில் ஹிட் ஆனால்தான் உண்டு.

2. கொஞ்ச நேரம் (ஆஷா போன்ஸ்லே, மது பாலகிருஷ்ணன்)


வித்யாசாகர் என்றவுடனேயே, மது பாலகிருஷ்ணனை வைத்து மெலடி எதிர்பார்த்ததுதான். சதுரங்கம் படத்திலேயும் இதுபோல ஒருபாடல் இருக்கிறது. முதல் interlude-இல் வயலின்கள் ஒளிர்கின்றன. மது நன்றாக பாடியுள்ளார். ஜேசுதாஸ் ரஜினிக்கு கொடுத்த பல வெற்றிப்பாடல்களை இது நினைவு படுத்துகிறது. இசை வாத்தியங்கள் அனத்தும் நன்றாக கையாளப்பட்டுள்ளன. ஆனால், பாடகி தேர்வில் ஒரு பெரிய குறை. ஆஷா போன்ஸ்லே வடிவில். எதற்காக இவரை பாடச்சொல்லியிருக்கிறார்கள்? அவர் இந்த பாடல் பாட சொந்த செலவில் சென்னை வந்தாராம். நல்லது, ஆனால், தமிழை சரியாக உச்சரிக்கவாவது தெரிய வேண்டாமா?, நன்றாக வர வேண்டிய பாட்டு, குட்டிச்சுவர். ராம்குமார் காதுகளில் விழுந்தால் சரி.

3. அத்தித்தோம் (SPB, வைஷாலி)

பாடல் பாறை ஒலிகளுடன் தொடங்குகிறது பாடல். பறைஞானி வித்யாசாகர் பாடலயிற்றே. ஆனால் அளவோடு உபயோகப்படுத்தி இருப்பதால் நன்றாக இருக்கிறது. மேலும் பாதியில் அதுவே மிருதங்கமாக மாறும்போதும் அழகு. கிராமியப்பாடலா, இல்லை கிளாசிக்கல் பாடலா என வியக்கும் வகையில் இருக்கிறது. SPB பாடியிருக்கும் விதம், சின்னத்தம்பி படப்பாடல்களை நினைவு படுத்துகிறது. எளிதாக ஆல்பத்தின் சிறந்த பாடல். எளிமையும் அழகும் ததும்ப, இந்த மாதிரி பாடல்கள் அமைககக்கூடியவர்கள் வெகு சிலரே.


4. கொக்கு பற பற (டிப்பு, ராஜலக்ஷ்மி, மாணிக்க விநாயகம்)

ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல், சீனத்து இசையை நினைவுபடுத்தினாலும், பின்னர் ட்யூன் மாறுகிறது. இது ரஜினி, பிரபு, நயன், ஜோதிகா அனைவரும் சேர்ந்து பட்டம் விடும் பாட்டு என நினைக்கிறேன். பாபா படத்திலும் பட்டம், இந்த படத்திலும் பட்டம். ரஜினி அடுத்த தேர்தலில் பட்டம் சின்னத்தில் நின்றால், இந்த பாடல் வசதியாக இருக்கும்! ராஜலக்ஷ்மியின் ஹம்மிங், அதைத்தொடர்ந்து டிரம்ஸ், blow horn ஆகியவற்றின் 'தொடர்' நன்றாக இருந்தது.

5. ரா ரா (பின்னி கிருஷ்ண குமார், டிப்பு)

பாடல் வரிகள் முழுதும் தெலுங்கில் இருப்பது வியப்பு. சந்திரமுகி தெலுங்குப்பட பாடலை இங்கு தெரியாமல் சேர்த்து விட்டார்களா? இசை மொழிக்கு அப்பாற்பட்டது என்பார்கள். இசையை மட்டும் கேட்கும் போது படையப்பா பாடல் 'மின்சார கண்ணா' நினைவில் வந்தது. தொடர்ந்து கேட்க, பின்னியின் குரலும், பாடும் விதமும் சலங்கை ஒலி பாடல்களின் சாயல் தெரிகிறது. நடுவில் 'லக்கலக்க...' என்று ஏன் வருகின்றது எனத் தெரியவில்லை. படம் பார்த்தால் தெரியும். ஜதிகள் வருவதால் அநேகமாக பரதநாட்டியம் பாட்டில் இருக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டே கதையை கற்பனை செய்யலாமே!.

6. அண்ணனோட பாட்டு (கார்த்திக், கே கே, சுஜாதா)

நாட்டுப்புற பாடல் வரிகளுடன் தொடங்கும் பாடல், பின்னர் திரையரங்கில் இளசுகளை சீட்டிலிருந்து எழுந்து ஆட்டம் போட வைக்கும் பாடலாக மாறுகிறது. கார்த்திக், கே கே இருவரும் கலக்கியிருக்கிறார்கள். பாடலை எழுதியது எந்த ப்ரகஸ்பதி எனத்தெரியவில்லை. இது அண்ணனோட பாட்டு, பார்ப்பவரை ஆட்டம் போட வைக்கணும், சீட்டிலேயே உட்கார்ந்திருப்பவர்கள் 'போயும் போயும் இந்த படத்தை பார்க்க வந்தோமே' என முணுமுணுக்காமல் இருக்க இந்த பாட்டில் அர்தமுள்ள பாட்டாகவும் இருக்கவேணும் என்று இயக்குனர் சொன்னவுடன், அவர் சொன்னதையே இவரும் எழுதிவிட்டார். அதற்கு ஒரு ட்யூனும் போட்டு விட்டால் பாட்டகிவிட்டது. ஓ, மாற்றி சொல்லிவிட்டேனா? இதற்கு நடுவில் வாத்தியங்கள் வேறொரு பாடலை (அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு சிரிப்பு... பாடல்)வேறு வாசிக்கின்றன. படக்காட்சிக்கு தேவைப்படும் விதத்தில் இது சரி, இல்லாவிட்டால் இது கொஞ்சம் ஓவர்.


மொத்தத்தில் ஒரு சுமாரான (நல்ல விதத்தில்) ஆல்பமாக அமைந்துள்ளது. பாபா ஆல்பத்தைவிட சிறிது மேலாகவே இருக்கிறது. 'தேவுடா தேவுடா' பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானின் தாக்கம் நன்றாகத் தெரிகிறது. இசை அமைக்க வ்ரும் முன் முத்து, படையப்பா, பாபா பட பாடல்களை பத்துமுறை கேட்டுவிட்டு வந்தாரோ?
இருந்தாலும் வித்யாசாகர் தன்மேலிருந்த எதிர்பார்ப்பு என்னும் பளுவை ஒரளவு நன்றாகவே சமாளித்திருக்கிறார். எனக்கு வித்யாசாகரிடம் பிடித்த சோலோ வயலின் இந்த ஆல்பம் முழுவதிலும் இடம்பெறாததில் சிறிது வருத்தம்தான்.
'அத்தித்தோம்' பாடலும் 'கொக்கு பறபற' பாடலும் சூப்பர்.
'ரா ரா' பாடல் படத்தோடு சேர்ந்து கேட்க, பார்க்க வேண்டும். 'அண்ணனோட பாட்டு' Fast Forward.

LinkWithin

Related Posts with Thumbnails