Sunday, October 16, 2016

ஆனந்தபைரவியில் மூன்றாவது ஆனந்தம்

இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா!

ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி - கமலாம்பாள் அன்னையே - என்னைக் காத்து அருள்வாய்.

இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் முதலாவது கிருதி. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஸ்ரீசக்ர ஆவரணம் என ஒன்பது ஆவரணங்களையும் பாடுவதாக அமைத்துள்ளார்.



பல்லவி
கமலாம்பா3 ஸம்ரக்ஷது மாம்
ஹ்ருத்கமலா நக3ர நிவாஸினீ அம்பா31

அனுபல்லவி
ஸுமனஸாராதி4தாப்3ஜ முகீ2
ஸுந்த3ர மன:ப்ரியகர ஸகீ2
கமலஜானந்த3 போ3த4 ஸுகீ2
காந்தா தார2 பஞ்ஜர ஶுகீ

சரணம்
த்ரிபுராதி3 சக்ரேஶ்வரீ அணிமாதி3 ஸித்3தீ4ஶ்வரீ
நித்ய காமேஶ்வரீ
க்ஷிதி புர த்ரை-லோக்ய மோஹன சக்ரவர்தினீ
ப்ரகட யோகி3னீ
ஸுர ரிபு மஹிஷாஸுராதி3 மர்தி3னீ
நிக3ம புராணாதி3 ஸம்வேதி3னீ

த்ரிபுரேஶீ கு3ரு கு3ஹ ஜனனீ
த்ரிபுர ப4ஞ்ஜன ரஞ்ஜனீ
மது4 ரிபு ஸஹோத3ரீ தலோத3ரீ
த்ரிபுர ஸுந்த3ரீ மஹேஶ்வரீ

பாடல் வரிகளுக்கு உதவி சாகித்யம்.நெட்




ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு முறையினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீசக்ரத்தின் முதலாவது ஆவரணமாகிய  த்ரை லோக்ய மோஹன சக்ரம் பாடற்பெருவதைப் பார்க்கலாம். இந்த சக்ரத்தின் தேவதை பூபுரம் எனப்படும். மேலும் விவரங்களுக்கு இத்தளத்தில் பார்க்கலாம்.

இந்த கிருதியை இரஞ்ஜனி-காயத்ரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


Tuesday, September 20, 2016

ஆனந்த பைரவியில் ஆனந்தமான இரண்டு!

தியாகராஜர் "இராமா நீ சமானம் எவரு?" என்பார்,
கோபால கிருஷ்ண பாரதி "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பார்,
ஷ்யாமா சாஸ்த்ரிகள் இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே - உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்!

தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் - பிரஹதீஸ்வரின் இடது பாகமாம் - பிருஹநாயகி அன்னையைப் பாடும் பாடலாகும் இது.

இப்பாடலை சௌம்யா அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்த்ரிகள்

பல்லவி
ஹிமாசல தனய ப்ரோசூடகிதி
மஞ்சி சமயமுராவே அம்பா

அனுபல்லவி
குமார ஜனனி சமானம் எவரு?
குமார ஜனனி சமானம் எவரிலனு
மானவதி ஸ்ரீ ப்ருஹநாயகி

சரணம்
உமா ஹம்ஸகமா! தாமசமா?
ப்ரோவ திக்கெவரு நிக்கமுகனு
மாகி இபுட அபிமானமு சூப
பாரமா சலமா வினுமா தயதோனு

சதா நத வர தாயகீ நிஜ
தாசூடனு ஷ்யாம க்ருஷ்ண சோதரி
கதா மொர வினதா துரித
நிவாரிணி ஸ்ரீ ப்ருஹநாயகி

தமிழில்:

இமயனின் புதல்வியே! காப்பதற்கு இதுவே
நல்ல சமயமே! வாராயோ? அம்பாள்!

குமாரனை ஈன்றவளே! உனக்கு நிகர் எவருமில்லை!
மதிப்பிற்குரிய பெரிய நாயகியே!

உமையே! அன்ன நடையாளே! தாமதமா!
காத்திட வழியேது? உறுதியாக
என்மீது இப்போது அன்பு காட்ட
கடினமோ? மலையோ? கேளாயோ? தயை காட்ட

எப்போதும் பணிபவர்க்கு வரம் அளிப்பவளே!
நான் நிஜ பக்தனம்மா!

நீ நீல கிருஷ்ணனின் சகோதரி அன்றோ!
நீ என் முறைதனைக் கேளாயோ!

பாவங்களைப் போக்குபவளே!
பெரிய நாயகியே!

----------------------------------------------
ஆனந்த பைரவி இராகமானது, ஷ்யாமா சாஸ்திரிகளின் சொத்து எனச்சொன்னால், இப்பாடல் அதில் ஒரு இரத்தினம்.

எனினும் அனுபல்லவியில் மானவதி எனும் ஐந்தாவது மேளகர்த்தா இராகத்தின் பெயர் வருவதைக் கவனிக்க. ஒருவேளை தற்செயலோ?

பல்லவி, அனுபல்லவி மற்றும் முதல் சரணத்தில் எத்தனை எத்தனை "மா" வருகிறது சாகித்யத்தில் என்று பார்க்க!

ஹிமாசல
குமா
மானம்
மானவதி
மா
ஹம்ஸகமா
தாமசமா
மாகி
அபிமா
பாரமா
சலமா
வினுமா

அப்பாடா! இத்தனை "மா" போதுமா?

அடுத்த சரணத்திலோ, "மா" வில் இருந்து "தா"விற்கு தாவினதோ?

தா

தாயகீ
தாசூடனு
தா
வினதா
துரி

-------------------------------------------------------------------------------------------
மேற்சொன்ன பாடல் பிரஹநாயகி அம்பாளின் மீது என்றால்,
அடுத்த பாடல் பிரகதீஸ்வரர் மீதானது.
இடப்பக்கத்தில் இருந்து அடுத்து வலப்பக்கத்திற்கு!

இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: தஞ்சை சிவானந்தம்

எடுப்பு
காப்பதுவே உனது பாரம்

தொடுப்பு
வாய்ப்பதுவே உனது அருள்
வையகத்தில் வாழச் செய்து
(சிட்டை ஸ்வரம்)

முடிப்பு
இன்பதென்பது அறியாத ஏழை
எனை மறந்திடாமல்
நின் புகழைப் பாடிடவே
நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா!
(சிட்டை ஸ்வரம்)

இப்பாடலை காயத்ரி வெங்கட்ராகவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


Tuesday, August 30, 2016

இதயமெனும் கண்ணாடி

தெளிவான தண்ணீரில் தெரியும் பகலவனின் பிம்பத்தினைப்போல,
இதயக் கண்ணாடியில் தெரியக்கூடிய சக்தியானது - 
சகுணப் பிரம்மம். 
ஆனால் இந்தக் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது!
ஏனெனில் மாசு படிந்த கண்ணாடியில் தெரியும் பிம்பமானது சரியான ஒன்றாக இருப்பதில்லை.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்முடைய புறக் கண்ணாடிகளில் அழுக்கு படிந்தாலும் தெரியும் பிம்பமானது மாறுவதில்லை. என்ன மங்கலாகத் தெரியும், அல்லது சில இடங்களில் தெரியாமல் போகும்.



இதயக் கண்ணாடியில் படிந்த மாசு என்பது - நான்/எனது என்பது போன்ற எண்ணங்கள். இந்த மாசினைத் துடைக்காவிட்டால், இதயக் கண்ணாடியில் - எந்த பரமனின் துகளாக இந்த ஜீவன் இருக்கிறதோ - அந்த பரமனின் சகுண பிம்பத்தினைக் காண இயலாமல் போகிறது. அதற்கு பதிலாக அவித்தையினால்  தன் வயப்படுதலே நிகழ்கிறது. இதனால் தன் செயல்கள் எல்லாம் தன்னாலேயே நடக்கின்றதென நினைக்கின்றோம். உண்மையில் நம்மை ஆட்டுவிக்கும் சக்தியின் கையில் நாம் வெறும் கருவிதான் என்பதனை உணர முடிவதில்லை.

சுஃபி கவிஞர் ரூமியும் சொல்லுவார்:


இந்த மாசானது பிறக்கும்போதே இந்த ஜீவனோடு இணைந்தவிட்ட ஒன்று. சக்தியினால் பிறப்பானது நிகழச் செய்யப்பட்ட சித்து வேலை. இதனால் தான் சக்தி அன்னையை உலகத்தை ஈன்ற அன்னையாகச் சொல்கிறோம். அவள் அந்த மாயையினை ஏற்படுத்தியதனால் உலகில் உழல்கிறோம்.



இந்த கண்ணாடியை என்ன செய்வது?

இந்த கண்ணாடியில் மேல் படிந்த மாசினால் தெரியும் பிம்பமானது - நான், எனது போன்ற எண்ணங்களயே தோற்றுவிக்கிறது. ஆகையால் இந்த கண்ணாடியைப் புறந்தள்ளி வைக்க வேண்டியதாகிறது. மாயையினால் ஏற்படும் பிம்பத்தினை ஒதுக்க வேண்டியதாகிறது. 

விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் - எவ்வாறு இந்த கண்ணாடியை புறந்தள்ளி வைத்து, ஜீவனானது உண்மையில் பரமனின் பிம்பம் என்பதனைக் கண்டறியும் வழியினை 16 சுலோகங்களில் சொல்கிறார். 

கண்ணாடியை புறந்தள்ளி வைப்பதினை - மனதினைக் கலைப்பது எனவும் சொல்லலாம். ஆழ்நிலை தூக்கத்தில் - கனவுகள் இல்லாத நிலையில் மனமானது கலைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். அந்நிலையில் இருந்து வெளி வரும்போது, மீண்டும் மனமானது செயல்படத் தொடங்குகிறது.

வசிஷ்ட மாமுனி இராமருக்கு சொல்லும் உபதேசத்தில் இருந்து:
ஓ இராமா! உடல், உணர்வு முதலான மனதில் தோற்றுவிக்கப்பட்ட கூற்றுகள் உண்மையானவையல்ல. உண்மையில் ஆன்மாவனது இதுபோன்ற கூற்றுகளால் குறுக்கப்பட்டவையல்லை. மாற்றாக, சுதந்திரமாக எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பது. 

ஆகையால், நான் எனக் கண்ணாடியில் தெரிவதை நீக்கிட, நான் என்பது என் உடல் அல்ல, என் மனம் அல்ல. நான் அறிந்த எதுவுமே அல்ல, ஆனால் எல்லாமுமான நீ, நீ மட்டுமே - என்பதுவே பிறப்பின் இலக்கினை அடைதல் ஆகும்.

Friday, August 26, 2016

கொண்டல் வண்ணன்

10. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!

திருபாணழ்வார் அருளிச் செய்தது. "அமலனாதி பிரான்" எனத் தொடங்கும் பத்து பாசுரங்களில் பத்தாவது ஆகும் இது. இதற்கு முந்தைய ஒன்பது பாசுரங்களும் ஆழ்வார் தனது ஞான திருஷ்டியில் அருளியதாகவும், பத்தாவது பாசுரமோ, திருவரங்கனை நேரடியாக தரிசித்தபின் அருளியதாக பெரியோர்கள் சொல்வார்கள். 

பாணர் குலத்தில் பிறந்த இவருக்கு இசை எனபது இயற்கை அன்றோ! பத்து பாசுரங்களில் பரந்தாமன் மேனி அழகை ஒவ்வொன்றாகப் பாடி இருப்பது அருமை!

1: திருவடி அழகு
அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே


உயர்ந்த மதில்கள் உடைய அரங்கநாதன் உறையும் திருவரங்கத்திலேயே தானும் இருந்தாலும் அரங்கனைத் தன் மனக்கண்ணால் மட்டுமே கண்டு வந்த ஆழவாரின் முதல் பாசுரம். வெளியில் இருந்தே பார்த்தாலோ என்னவோ, மதில்கள் சூழ்ந்ததே திருவரங்கத்தை விளிக்கும் பெயரடையாய்(adjective) வந்தது!

2: ஆடை அழகு
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

திருவடிக்கு அடுத்து அரைக்கு அசைத்த செவ்வாடையில் தன்சிந்தையைப் பறி கொடுத்தாராம் ஆழ்வார்.

3. நாபிக்கமல அழகு
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

அரையைத் தாண்டி அயனைக் கமலத்தில் தாங்கி நிற்கும் எழிலான உந்தியில் தன்னுடைய உள்ளத்தைப் பதித்தாராம்.

4. அரை ஞாண் கயிறு
சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

அடுத்தாற்போல் அரங்கனின் அரையை அலங்கரித்த அரை ஞாண் கயிறானது அவரது மனத்தில் நிலைத்து உலாவியதெனச் சொல்கிறார்.

5. திருமார்பழகு
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

அடுத்து ஆழ்வார் சிந்தையுள் புகுந்தாட்கொண்டது அரங்கனின் அழகு மார்பு, திருவும் (இலக்குமியும்), முத்து மாலைகளும் அலங்கரிக்கும் மார்பினை "திருஆர"மார்பென்றார்!

6. திருக்கழுத்தழகு
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

தொடர்ந்து அரங்கன் அழகைப் பருகும் ஆழ்வார் அரங்கனின் கண்டமானது தான்  உய்ய ஒரு வழி வகுத்ததெனச் சொல்கிறார்.

7. திருவாயழகு
கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

கழுத்தைத் தாண்டி முகத்தை அடைந்த ஆழ்வார் அங்கு முதலிற் கண்டது அரங்கனின் செவ்வாயினை. அதுவே முதலில் அவரது சிந்தைக் கவர்ந்தது போலும்.

8. கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

திருமுகத்தில் அடுத்து பளிச்சிடும் கண்களைக் கண்டு அவை தன்னை பேதமை செய்ததாகச் சொல்கிறார்.


9.முழு மேனி எழில்
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே



இப்படியாக மேனி முழுதையும் தனது மனத்தில் நிறைத்து விட்டு, இனி அந்நெஞ்சில் வேறேதும் நுழைய இடமில்லாதபடி எல்லாமும் அரங்கனே என நிறைந்து விட்டதென நிறைவடைகிறார்! அதன் பின் மற்றொன்றினைக் காண எப்படி முடியும்!

Sunday, August 21, 2016

கனவில் வந்த கதைகள் - ஸ்பெஷல் காபி

ப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளி இருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே என் அப்பாவின் அலுவலகமும் இருந்தது. சில சமயம் பள்ளி முடிந்த பின் அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று வருவதுண்டு.

ன்றொருநாள் வீட்டில் பிரத்யோகமானதொரு காபி செய்திருந்தார்கள். வறுத்த முந்திரியெல்லாம் போட்ட ஸ்பெஷல் காபி. காபியா பாயசமா என்று கேட்க வேண்டாம், கனவில் எல்லாம் சாத்தியம். நான் அவ்வளவாக காபி அருந்துவதில்லை. இருந்த காபியை பள்ளிக்கு எடுத்துச் சென்றால், பள்ளி முடிந்து திரும்புகையில் அப்பாவின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு காபியை கொடுக்கலாமே என்று தோன்றியது. அதன்படி அந்த ஸ்பெஷல் காபியை எடுத்துக் கொண்டேன்.

ன்றைய பள்ளி முடிந்தவுடன் ஞாபகமாக பையினில் இருந்து காபி கொண்டு வந்திருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தேன். அதனை கையில் பிடித்துக் கொண்டிருந்தவாறு அப்பாவின் அலுவலகத்தை நோக்கி நடக்கலானேன். நடக்கும்போது இந்த ஸ்பெஷல் காபி எப்படித்தான் இருக்குமோ தோன்றியது. கொஞ்சம் சுவைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் அதிலிருந்து இரண்டு மூன்று ஸ்பூன் அளவு எடுத்துப் பருகினேன். சுவையாக இருந்தது.

லுவலத்தை அடைந்ததும், அப்பா வேலையில் அமரும் அறைப்பகுதி அருகே சென்றேன். நுழையுமுன், அங்கே இருந்த பாத்ரூமிற்குள் சென்று டவல் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே என்று தோன்றியது, ஏனெனில் ஒருவளை அலுவலகத்தில் காபி சிந்தும்படி ஏற்பட்டால் உடனே அதை துடைத்து விடலாமே என்ற முன் எச்சரிக்கைக்காக. ஆனால் கையில் காபி பாத்திரத்துடம் பாத்ரூமில் எப்படி நுழைவது என்ற எண்ணம் வேறு. பின்னர் பையினில் மீண்டும் பாத்திரத்தை வைத்து, சுவரின் ஓரமாக பையை வைத்து விட்டு, பின் பாத்ரூமிற்குள் சென்று ஒரு டவலை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

லுவலக அறைக்குள் நுழைந்ததும்,  ஒருவர் தரையில் அமர்ந்தவாறு எதையோ சரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவருக்கு ஒரு ஹலோ சொல்லலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே அவரை கடந்து செல்கையில், அவரே எனக்கு ஹலோ சொல்லி விட்டார். அவருக்கு பதில் ஹலோ சொல்லிவிட்டு, அவரைத்தாண்டி அப்பா அமரும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

ப்பாவைப் பார்த்து அவருக்கு காபி கொண்டு வந்திருப்பதைச் சொன்னேன். "சரி, தா" என்றார். காபி வைத்திருந்த பாத்திரத்தை அவருடைய மேஜையின் மேல் வைத்தேன். அதை லேசாக திறக்கும்போதுதான் அதை தலை கீழாக வைத்திருக்கிறோம் என்று உணரத்தொடங்கினேன். அதை திருப்ப வேண்டும் என்று தோன்றுமுன் பாத்திரம் திறந்தி விட்டது. நல்ல வேளை அதிலுருந்த காபி அதன் மூடி வரை தான் நிரம்பியதால் வெளியே சிந்தவில்லை. மீதம் இருந்ததோ கொண்டு வந்ததில் கால் பங்கு காபிதான். அதை அப்பா பருகி விட்டு, "நல்லது" என்று சொல்லி என்னிடம் பாத்திரத்தை திருப்பித் தந்தார். அதை பெற்றுக்கொண்டு, வீடு நோக்கி நடக்கலானேன்.

கனவும் கலைந்தது!

Sunday, August 14, 2016

காம்போதியில் மனங்கவர் இரண்டு!

இங்க பார்க்கப் போகிற இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான். இரண்டுமே காம்போதி இராகம் தான். இரண்டு பாடல்களை இயற்றியவரும் ஒருவர் தான் - பாபநாசம் சிவன் அவர்கள்.
இந்த இரண்டு பாடலிலும் "இராமதாசன்" அல்லது "சௌரிராஜன்" ஆகிய அவருடைய இயற்றியவர் முத்திரைகளைக் காணோம்.  ஆனா இந்த பாடல்களில் சொல்நயம் தான் எவ்வளவு அருமையாக அமைஞ்சு இருக்கு!  இரண்டு பாடல்களிலும் சரளமான சொல்லாடல்கள் வந்து விழுந்திருக்கு!
முதல் பாடல்:
எடுப்பு
ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
இடது பாதம் தூக்கி (ஆடும்)
தொடுப்பு
நாடும் அடியர் பிறவித் துயரற
வீடும் தரும் கருணை நிதியே  நடம் (ஆடும்)
முடிப்பு
சுபம் சேர் காளியுடன் ஆடிப் படு தோல்வி அஞ்சி
திருச் செவியில் அணிந்த மணித்தோடு விழுந்ததாக 
மாயம் காட்டியும் தொழும் பதம் உயரத் தூக்கியும் – விரி
பிரபஞ்சம் முழுதும் ஆட்டும்  நின் திருப் பதம்  
தஞ்சம்  என உன்னை அடைந்தேன்
பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே 
சபை நடுவில் தத்திமி என்று (ஆடும்)

உக்கர கோலத்தில் உலகை உலுக்கும் காளியுடனான ஆட்டத்தில்
ஊர்த்துவ தாண்டவம் காட்ட திருச்செவி வரை தூக்கிய  காலானது!
எப்போதும் விரிந்து கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கும் ஈசனது திருப்பாதமானது!

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியன் பாடிட இங்கு கேட்கலாம்:


அடுத்த பாடல் :

எடுப்பு
காணக் கண் கோடி வேண்டும்- கபாலியின் பவனி
காணக் கண் கோடி வேண்டும் (காணக்)

தொடுப்பு
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ கமலவனமோ என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும்-
இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்)

முடிப்பு
மாலோடையன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்
காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்
சிவகணமும் தொடரக்கலை
வாணி திருவும் பணி கற்பக நாயகி
வாமன் அதிகார நந்தி சேவைதனைக் (காணக்)

களை நிறை திருக்கபாலி மயிலை வீதிகளில் பவனி வரும் காட்சியானது 
கண்ணாறக் கண்டாலும் போதாது, கண்ணாயிரம் இருந்தாலும் போதாது. 
பாபநாசம் சிவனின் வர்ணனை தான் என்னே!
தரித்த பிறை மதியோடு, விண்மீன் கூட்டங்களையும் காண -
இது என்ன அந்தி வானமோ என மயங்கியதில் விந்தை இல்லை.
கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை சிவகணங்கள் தொடர கற்பகாம்பாளுடன் பவனி வரும் காட்சியைப் இப்பாடலில் அழகாகப்
பதிவு செய்திருக்கிறார்!

இப்பாடலை மதுரை மணி ஐயர் பாடிட இங்கு கேட்கலாம்:

Friday, January 08, 2016

குறிப்பினை பகர்ந்திடு குமரேசா

அகமதில் நின்முகமது அனுதினம் நிலைத்திட
அறுமுகவேளே அருள்வாயே

இகமதில் துயரது இனியேனும் வாராது
இவனுக்கினி அருள்வாயே

உலகினில் உழல்வோருக்கு ஒருபகை அண்டாது
தலைமுதல்கால்வரை காப்பாயே

பலகணி வழிதனில் நினதொளி படர்ந்திட
பனிமுகம் தெரிந்திட அருள்வாயே

வழிதனில் விழிவைத்து எதிர்பார்த்திடும் அன்பரது
விழிதனில் தெரிந்தே அருள்வாயே

எனதிருசெவி தனிலும்  ஓம்கார நாதமெனும்
உனதொலி ஒலித்திட அருள்வாயே

நாசிவழி சுவாசம்தனை ஒருநிலைப்படுத்தி
வாசியோகம் செய்ய அருள்வோனே

பாயும் மனமதை சுழிதனில் அடக்கிடும்
மாயம் தன்னை அருள்வாயே

குணமது மூன்றும் குறையின்றி சமமாகிடும்
குறிப்பினை பகர்ந்திடு குமரேசா.