Wednesday, September 15, 2010

முரண்களின் அரண்

காற்றே உன்னை வேற்றூருக்கு
திருப்பி விடவா?

கவிதையே உன்னை அயலூருக்கு
அனுப்பி விடவா?

பெற்றுத் தருவதற்கு அரிதான விடியல்
முற்றுப் பெறுவதோ அன்றாடம்!

உறக்கம் கலைந்தவுடம் கனவுகள் மட்டும்
பறப்பது ஏன்?

விற்றுத் தீர்ந்துபோன செங்கல் யாதும்
சுற்றுச்சுவரில் இடம்பெறுமோ?

அகலும் மோதிரம் விரல்கள் மெலிந்ததை
அறிவிக்கின்றதோ?

சரித்திரம் சொல்லும் சாக்ரடீஸ் கதைகள் மட்டும்
சாகாவரம் பெறுவது ஏன்?

மௌனத்தின் மொழியில் ஓசை நயத்தினை
மனதிற்குமட்டும் உரைப்பது யார்?

முரண்களின் அரணில் விழுந்த வட்டத்தில்
முளைத்துதான் புதுக்கவிதையோ?

Friday, September 10, 2010

வாரண முகவா துணை வருவாய்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நாந்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
ஔவைப் பாட்டி, சங்கத் தமிழ் மூன்றும் வேண்டி பாடிய பாட்டு எல்லோருக்கும்தெரிந்தது। இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் - இப்படி எல்லாமும் கேட்டு கோடீஸ்வர ஐயரால் இயற்றப்பட்ட பாடலை இங்கு பார்ப்போம். இவர் இயற்றிய "கந்த கானாமுதம்" என்னும் இசைப்பாடல்கள் தொகுப்பில் முன்னவனாம் ஆனைமுகத்தவனை வாழ்த்திப்பாடும் பாடல் - ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.

இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
இராகம் : ஹம்சத்வனி

இப்பாடலின் ஸ்வரக் குறிப்புகளுக்கு சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தினில் இங்கு பார்க்கலாம்.

எடுப்பு

வாரண முகவா துணை
வருவாய் - அருள்வாய், தயவாய்!

தொடுப்பு

ஆரணப் பொருளான கந்த
கானாமுதத்திற்குள் உன்
கருணாமுதம் உதவியே அருள் மத (வாரண..)

முடிப்பு

இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் அறிவேதும் இன்றி
கன்னல் அனை கந்த கானமுத நன்னூலை
உன்னும் கவிகுஞ்சரதாசன் நான்
உன்னருள் கொண்டே பண்ணத் துணிந்தேன்;
முன்னவனே நீ முன்நின்றால் முடியாதது
ஒன்றில்லை! ஆதலால் அதிவேகமாகவே... (வாரண...)

இப்பாடலை டி.எம் கிருஷ்ணா பாடிட ராகா.காம் தளத்தில் இங்கு கேட்கலாம்:



பாடலை பிரியா சகோதரிகள் பாடிட இங்கு கேட்கலாம்:


இப்படியாக வினைகள் தீர்க்கும் கணபதி கடவுள் வாழ்த்துப் பாடி துவங்கினால் - நினைத்தது முடியாதது இல்லைதான். 'கந்த கானாமுதம்' என்னும் இந்த இசைத்தொகுப்பில் 72 மேளகர்த்தா இராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இத்தனைக்கும் இவை அத்தனையும் தமிழ்ப்பாடல்கள். ஏற்கனவே இவற்றில் இரண்டு பாடல்களை இங்கே பார்த்திருக்கிறோம்। அண்மையில் மறைந்த கலைமேதை எஸ்.ராஜம் அவர்கள், இந்த இசைத்தொகுப்பின் கீர்த்தனைகளை ஸ்வரக்குறிப்புகளோடு பதிவு செய்திருக்கிறார், வருங்கால சந்ததியின் வளத்தினை மனத்தில் இருத்தி.

இந்த சதுர்த்தி தினத்தில் கணபதி அருள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று எல்லா வளங்களையும் எட்டிட நமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.