Monday, September 01, 2014

சுந்தர காண்டம் - காட்சிப் படலம் (2)

1. மனத்தவத்தால் உயர்ந்து விளங்கும்
மாசிலா மங்கையாம் சீதையைக் கண்ட அனுமன்
மாநிலம் உய்வதன் காரணத்தைக் கண்டான்.
வானவரும் உய்வர். முனிவரும் உய்வர்.
வேதியரும் ஏனையரும் உய்வர். 
தீவினையெலாம் மடிய
அறம் வாழும் என்றே ஆனந்தம் அடைந்தான்.

2. ஆங்கே அசுரர் கோமான் இராவணன்
அசோகவன வாயில் கண் தோன்றினான்.
இலங்கேஸ்வரனின் தலையில் மகுடமும்
தோளில் வலயமும் செவியிற் குண்டலமும்
பளபளத்தன.

3. 
அரக்கன் இராவணன் பிராட்டியை அணுகி
ஆசை வார்த்தைகளை மொழிவதை
அனுமன் மரத்திலிருந்து பார்த்தான்.

பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை ஒத்த
அழுக்கான அரக்கனது வார்த்தைகள் பிராட்டியை வந்து
அடைவதற்கு முன்னமே அவளது செவிகள் தீய்ந்து போனது.

4. சினந்த  சீதை அறிவுரை பகர்ந்தாள்.
என் இன்னுயுர்த் தலைவன் 
இராமபிரானின் பாணம் மேருவையும் துளைக்கும்.
விண்ணையும் பிளக்கும். ஈரேழு புவனங்களையும் அழிக்கும்
வல்லமை பெற்றது என அறிந்திருப்பாய். எனினும்
சிறப்பற்றவற்றைச் சொல்லி தலை பத்தும்
சிந்திப்போகச் செய்வாயோ இராவணா?

5. மாயமான் ஒன்று ஏவி மாயையினால்
மறைந்து வந்தென்னைக் கவர்ந்தாய்.
தப்பிப் பிழைக்க வேண்டின் வழி தேடு.
தவறிடின் போர்மூள உன்குலத்திற்கே நஞ்சாகும்.
பெற்ற வரம் யாவும் காலனிடம் இருந்து உனைக்காக்கவே.
பிரானின் பாணத்தின் முன்னே அவை தாங்குமோ மூடனே?

6. பெற்ற வாளும் ஆயிளும் அமைந்த வலிமையும்
பேறினால் வானோர் வழங்கிய வரங்களும்
இராமன் அம்பைத் தொடுத்து விட்டவுடனே
இலவமாய் பறந்து அழிந்து போகுமே.
இருளும் நிற்குமோ ஆதவனின் முன்பு?

7. மறைந்துநீ வாழும் இவ்விடமாம் இலங்கையை
அறிந்து என் கோமகன் வரும்கால் 
ஆழியும் அதன் நடுவே அமைந்த இலங்கையும் 
அழியும் - அதுமட்டுமா? ஊழிக்காலமும் ஏற்பட
அழிவது உன் உயிர் மட்டுமன்று, உணர்வாய் என்றாள்.

8. இப்பெருஞ் செல்வம் யாவும் வழங்கினான் ஈசன்
எப்பொழுதும் மாதவத்தில் நிற்பாய் என்றே.
ஒப்பிலா செல்வமும் உன் உறவெலாமும் ஒழிய
தப்புகின்றாய் அறத்தில் இருந்தே. 
முப்பொழுதும் அறத்தையே விரும்பாயோ? என்றாள்.

9. அறஉரை கேட்ட அரக்கன் இராவணனின்
இருபது கண்களும் மின்னலாய்ப் பிளந்தன.
வெப்பம் கக்கிடும் குன்றுகளும் இற்றுப்போக
வெளிப்பட்ட வெங்கனல் சீற்றமும் 
மிஞ்சியது முன்னிருந்த காமத்தையும்.

10. கோபத்தில் கால்கள் வளர்ந்தன. 
தோள்கள் திசைகளை அளந்தன.
நெருப்பைக் கண்கள் உமிழ்ந்தன.
பெண் இவளைப் பிளந்து தின்பேன் 
என்றே முதலில் புறப்பட்டான், 
பின் நின்றான்.
சீற்றமும் காதலும் எதிரெதிர் கிளம்ப
செய்வதறியாது திகைத்தான்.

11. புனலென புறப்பட்ட இராவணன்
பிராட்டியைத் தொடும் முன்னர் அவனை
நான் காலாலே மிதித்துக் கையாலே பிசைந்து
நற்பணி செய்வேன் என்றே 
உறுதி கொண்டான் அனுமன் மரத்திலிருந்தவாறே.

12. தலைகள் பத்தும் சிதற மோதிப்பின்
இலங்கையை கடலின் கீழ் அமிழ்த்தி
புனித பிராட்டியை சுமந்து போவேன்
எனக்கருதி கைகளை பிசைந்திருந்தான் அனுமன்.



13. சினம் தணிந்த இராவணன் பிராட்டியிடம் :
உனக்கு உரிமையான இராமனைக் கொன்றபின்
உன்னைக் கொண்டு வருதலைச் செய்வேனாயின்
அதனால் நீயுன் உயிரை விட்டால்
அதனால் என்னுயிரும் நீங்கும் - ஆகவே
அன்று வஞ்சகம் செய்தேன் என்றான்.

14. அற்ப ஆயுளாள் சீதையே, யான் அயோத்தி சென்று
அரசாளும் பரதன் முதலானோர் உயிரைப் பருகி 
மிதிலையில் வாழ்பவரையும் அடியோடு அழித்து
அதிவிரைவில் திரும்பிவந்து உன்னைக் கொல்வேன் என்றே
அதட்டிச் சொன்னான்.

15. அஞ்சிடச் செய்தாவது அல்லது அறிவில் 
எஞ்சிடச் செய்திடும் உபாயம் ஏதாவது கொண்டு
வஞ்சியினை வசியம் செய்வீர் - தவறினால்
நஞ்சினைப் போலாவேன் நான் என்றே
வெஞ்சினத்துடன் உரைத்தான் அரக்கர் கோமான்
தனித்தனியே ஒவ்வொரு அரக்கியரிடமும்.

16. பொங்கும் அரவமாம் இராகு விழுங்கிக் கக்கிய 
மங்காத் தூவெண் மதிபோன்று இருந்த அன்னையை
தீயவர் அரக்கியர் சூழ்ந்து இழித்து அதட்டித்
தீமனம் போன போக்கில் சீறிப் பேசினர்.

17.  குறையா மனம் பெற்ற பிராட்டியைக்
கொல்லும் பொருட்டு அணுகிய அரக்கியரையும்
தின்னும் பொருட்டு அணுகிய அரக்கியரையும்
தீமொழி பேசிச்சென்ற இராவணனின் ஏவலையும்
தன்மனத்திலே எண்ணிப்பார்த்து கண்களில் கண்ணீர்
ததும்பியவாறு சிரித்தவளானாள் சீதை.

18. இன்னல்களில் இடைமறித்த திரிசடை:
அன்னையே கவலை வேண்டாம், 
முன்பு சொன்ன கனவின் முடிவாய்
நன்றே நடக்கும் என்றே சொல்லித் தேற்றினாள்.

19. முக்காலமும் அறிந்தவரை ஒத்த திரிசடை
மொழிந்ததைக் கேட்ட அரக்கியர் சீற்றம் குறைத்தனர்.
மேலும் துன்புறுத்தாது அடங்கினர். 
மெலிந்த பிராட்டியோ தன்னுயிர் நிலைபெற்றாள்.

Saturday, August 16, 2014

சுந்தர காண்டம் - காட்சிப் படலம் (1)

1. இறுதியாக இங்காவது பார்ப்போமா இல்லை 
ஏமாற்றம் தான் அடைவோமா என்ற
ஏக்கத்துடனே அனுமனும் நுழைந்தான் அசோக வனம்.
அதுகாண் தேவரோ பூமாரி பொழிந்தனர்!
அதே அசோக வனத்தில் தான் அன்னை ஜானகியும்
அனேக அரக்கியர் சூழ மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
இரவாயினும் தூயிலுற நாட்டமில்லாமல் வாட்டத்தில் 
இராமனை எண்ணி வாடி இருந்தார்.

2. காணாததன் காரணம் என்னவோ?  என்னை வந்து
காணாததன் காரணம் என்னவோ?
இலங்கையில் சிறைவைத்ததை என்னவரும் அறியாரோ?
இராவணனை மறித்த ஜடாயுவும் மரித்தே போனாரோ?
என் நிலையை எடுத்து சொல்ல இனி யாரும் உளரோ?
மாரீசன் மாயம்தனை அறியாத பேதை இவள்
மானொன்று பிடித்துவர மனாளனைப்போய் அனுபிப்பினேனே.
என்னவரின் இளையோனையும் விரட்டினேனே.
என்னையும் அதனால் வெறுத்துப் போனாரோ?
வஞ்சனை அரக்கரும் என்னை விட்டுவைக்காமல் 
தின்றே தீர்த்திருப்பார் என்றே விட்டு விட்டாரோ?
ஒருவேளை பரதனும் காட்டுக்கு வந்து
மறுபடி நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ?
வேறு அசுரர்களோடு தான் போர் ஏற்பட்டு விட்டதோ?
வில்லொன்றை ஒரு நொடியில் உடைத்த பெருமான்
சொல்லொன்று உதிர்க்கும் நேரத்திற்குள்
வந்து என்னைக் காணாததன் காரணம் என்னவோ?

3. இனி பரதனே நாட்டை ஆள வேண்டும் 
என்று கைகேயி அன்னை சொன்ன போதும்
முன்னை விட மும்மடங்கு முகப்பொலிவு கொண்ட
என்னவரின் முகத்தை இனி எப்போது காண்பேன்?
வனம்போய்வா என்று சொன்னபொதும் 
அன்றலர்ந்த செந்தாமரை போல் மலர்ந்த முகத்தை 
இனி எப்போது காண்பேன்?

4. அன்று தந்தை ஜனகன் தனது கைகளை
அவரது கைகளில் ஒப்படைக்க,
அவர் என் பாதத்தைப் பற்றி
ஒன்பது முறை எடுத்து வைத்தாரோ!
பொன்முடி தரிக்க வேண்டிய
பரதனும் அவரது அன்பினால்
மரவுரி தரித்து கானகம் வந்தாரே!
கங்கைக் கரையில் குகனைத் தோழனாக்கி
அவனுக்கு இலக்குவனை தம்பியாக்கி
என்னை அவனுக்கு கொழுந்தியாயும் ஆக்கினாரே!
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைக் காட்ட
அன்று புல்லால் காக்கைக்கு கண் போகச் செய்தாரே!

5. அன்னையை சுற்றி இருந்த
அரக்கியர் அனைவரும் உறங்குகின்றனர்.
ஒருத்தி தவிர - அவள் பெயர் திரிசடை.
அவள் இன்சொல்லாள். அன்பு மொழி கூறி
அன்னைக்கு ஆறுதலாய் இருந்தாள்.
அன்னை ஜானகி அவளிடம் துடிக்கும்
தன் இடக்கண்ணைக் காட்டி சகுனம்
நன்மையோ தீமையோ நிகழப்போவது 
என்னவோ ஏதோ எனும் 
தன் கவலையைப் பகிர்ந்தாள்.
வேண்டாம் கவலை சீதையே நல் நிமித்தம் 
என்றே ஆறுதல் மொழிந்தாள் அன்பின் திரிசடை.

6. அச்சமயத்தில் அனுமன் சீதை இருக்கும் இடத்தை
அடைந்தான், அதே சமயம் உரக்கம்
கலைந்த அரக்கியரும் எழுந்தனர்.
ஆலமே உருவமாய் அமைந்த அரக்கியரின்
கொடூரத்தைக் காண அழுகையே வந்தது அன்னைக்கு,
இதையெல்லாம் மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்து
பார்த்த அனுமனுக்கு இதுதான் அன்னை ஜானகி
என்பது தீர்மானமாயிற்று.

7.
இங்கங்கெனாதபடி எங்கும் தேடிப்பின்
கண்டேன் கண்டேன் என்றே மட்டற்ற மகிழ்ச்சியில்
கரைபுரண்டு ஆடினான் பாடினான்.
உவகைத் தேனை உண்ட மகிழ்சியில்
அனுமன் ஆனந்தக் கூத்தாடினான்.

Monday, July 14, 2014

அவன் செயலும் துரியோதனனும்

பகவத் கீதையானது மகாபாரத்தில் பிற்காலத்து இடைச்சொருகல் என்று வாதிடுபவர்கள் மகாபாரதத்து நிகழ்சிகள் எப்படி கீதையின் சாரத்தை பிரதிபலிக்கின்றன என்று அறியாமலே இருக்கிறார்கள்.

அதற்கான ஒரு சான்றாக ஒரு மகாபாரதத்து நிகழ்வினை இங்கே பார்ப்போம். சமீபத்தில் விஜய் டி.வி மகாபாரதத்தொடரில் இக்காட்சி காட்டப்பட்டது.

கண்ண பெருமான் பாண்டவர் தரப்பில் இருந்து தூதுவனாக அஸ்தினாபுரத்து அரண்மணையில் நுழைகிறான். மாபாரதப் போர் நிகழாமல் தடுக்க இரு தரப்பிலும் முயற்சிக்கிறார்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில் கண்ணன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தர வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறான். சகுனியும் துரியோதனும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். துரியோதனன், ஐந்து கிராமங்கள் என்ன, ஐந்து ஊசி முனை நிலம் கூடத் தர முடியாது என்று மறுக்கிறான்.

சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகையில் போர் நிச்சயம் என்றாகிறது. போரில் கண்ணன் பாண்டவர் தரப்பில் போர்களம் புகுந்து விடக்கூடாது என்கிற சகுனியின் அறிவுரையின் பேரில், கண்ணனை கைது செய்யத் துணிகிறான் துரியோதனன். கண்ணனை இரும்புச் சங்கிலியால் பிணைக்க வீரர்களை ஆணியிடுகிறான். வீரர்கள் அச்சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அரசவைக்குள்ளே நுழைகிறார்கள். ஆனால் கண்ணனைப் பார்த்த உடனே அவர்களால் அச்சங்கிலியைத் தூக்க முடியாமல் கீழே விட்டு விடுகிறார்கள். அவர்களால் அதை இம்மியளவும் அசைக்கவும் முடியவில்லை.



அதைப்பார்த்து கண்ணன் துரியோதனனிடம் உரைக்கிறான். "துரியோதானா, உன் பாவச்சுமைகளை அவ்வீரர்களால் சுமக்க இயலாது. உன்னால் மட்டுமே அச்சங்கிலியை அசைக்கவும் முடியும். நீயே சங்கிலியைக் கொண்டு வந்து என்னை பிணைப்பாய்" என்கிறான். வியப்பில் துரியோதனன், சங்கிலியின் அருகில் சென்று அதை மெள்ள அசைத்துப் பார்க்கிறான். அதை எளிதாக அவனால் தூக்கவும் முடிகிறது. "ஆகா, என் பலத்தைப் பார். இத்தனை வீரர்களாலும் தூக்க இயலாத சங்கிலியை யான் ஒருவனே தூக்கி உன்னை பிணைப்பேன் பார்" என்ற அகந்தையில் அச்சங்கிலியால் கண்ணனைக் கட்டி, அவனைச் சிறையில் அடைக்கின்றான்.

இந்தக் கதையில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?

துரியோதனன் போலத்தான் கிட்டத்தட்ட நாம் அன்றாடம் நடந்து கொள்கிறோம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், ஆகா இது என்னால் செய்யப்பட்டது என்கிற இறுமாப்பினைக் கொள்கிறோம்.  ஆனால் ஒரு செயலை ஒருவரால் செய்ய இயலாமற் செய்வதும், செய்ய இயலச் செய்வதும் அவன் செயல் என்பதை அறியாமலே. அத்தனை வீரர்கள் இரவு பகலாக உழைத்து மிகவும் கடினமான, இந்திரனின் ஐராவதத்தாலும் முறிக்க முடியாத மிக உறுதியான இரும்புச் சங்கிலியைச் செய்ய இயன்றது என்றால் அதுவும் அவன் செயல் அன்றோ? அதனை அரசவை வரை எடுத்து வர வீரர்களால் இயன்றதும் அவன் செயல் அன்றோ? அவன் நினைத்திருந்தால் இச்செயல் எல்லாம் முதலிலேயே முடியாமல் போயிருக்கும் அல்லவா?

அரசவை வரை எடுத்துவரச் செய்து பின் வீரர்களால் தீடீரென அதைச் சுமக்க இயலாமற் செய்ததன் காரணம் என்ன? துரியோதனன் இன்னும் ஒரு பாவம் செய்யத் துணிகிறான் என்றால் அதற்குப் பொறுப்பாளி அவன் மட்டுமே என்று அவனைத் தனிமைப் படுத்துவதா? இல்லை. துரியோயதனனுக்கு தன் தவறுகளை உணர இன்னுமோர் வாய்ப்பு தரப்படுகிறது. "வீரர்களால் அசைக்க முடியாமற் போன சங்கிலியை தான் அசைக்க இயன்றதக்கு காரணம் தான் அல்ல! " என்று உணர்வதற்காக ஓர் நடமுறை வாய்ப்பு தரப்பட்டது. மூடனான அவனால் அவ்வாய்ப்பை பயன் படுத்த இயலாமற் போனது.

அன்றாடம் நமக்கும் இதுபோன்று வாய்ப்புகள் பலவும் வரவர துரியோதனன் போலவே மூடனாக இருப்பதும் அல்லது கிடைத்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தானே உள்ளது!

Monday, June 30, 2014

சுந்தர காண்டம் : ஊர் தேடு படலம்

1. என்னென்று சொல்வது இலங்கை நகர் அழகை!
பொன்னாலும் மணியாலும் இரத்தினங்களாலும்
மின்னும் கற்களாலும் இழைக்கப்பட்டு பளபளவென
கண்ணைப் பறித்து ஜொலித்தது.

2. மக்கள் கூட்டம் எங்கும் நிரம்பி வழிந்தது.
தேவர்கள் யாவரும் இங்கே சேவகம் புரிந்தனர்.
யானைகளும் குதிரைகளும் இலங்கைச் சேனையில்
மட்டுமே இருப்பதுபோல் தோன்றியது.

3. வாத்தியங்கள் பலவும் இசை முழங்கின.
நாலாபுறமும் முரசு ஒலித்தது.
யானைகளின் பிளிறல், அலைகளின் ஓசை,
இனிய இசையான பெண்களின் குரலும்,
காற் சிலம்பும் ஒலித்தது.

4. இலங்கைப் படைகளின் எது பெரிது?
விற்படையா வேற்படையா வேல்படையா மல்யுத்த
வீரர் படையா, அல்லது ஏனைய ஆயுதப் படையா?
அன்பு இராமனிடம் எதுவென்று சொல்வேன்
என வியந்தான் அனுமன்.

5. இரவு நேர வானத்தில் மின்னிய விண்மீன்கள்:
அனுமனை வாழ்த்தி தேவர்கள் தூவிய பூமழை
இராவணனுக்கு பயந்து மண்மீது செல்லாமலும்,
திரும்பிச் செல்ல இயலாமலும் இடையே
திண்டாடு கின்றனவோ?

6. கதிரவன் இராவணனிடம் பயந்துதான் நகரின்
மதிலின் உள்ளே நுழைவதில்லை என்பதைவிட, இம்
மதிலைக் கதிரவனும் தாண்டுவது கடினம்
என்பதே காரணமாக இருக்க வேண்டும்.



7. முன்னூறு வெள்ளம் வீரர் புறம் இரண்டிலும்
முனைப்புடனே புரிந்தனர் மதிற்காவல்.
எண்ணற்ற ஆயுதங்களை தாங்கிய அரக்கர் இவரோடு
வீணாய்ப் போர் புரியாமல் மதிலைத் தாவுவதே உசிதம்
என நினைத்தான் அனுமன்.

8. மதிலருகே சென்ற மாருதியை வழி மறித்தனள்
மாது இலங்காதேவி - "யாரடா நீ"  என்றே வினவி.
அனுமனோ நயமாய் "ஊரைப் பார்க்க ஆசை" என்றான்.
"முப்புரம் எரித்த சிவனும் இப்புறம் வர அஞ்சிட,
குரங்கான நீ எம்மாத்திரம்? ஓடிப்போ" என்றாள் அவ்வரக்கி.

9. இருவருக்கும் பேச்சு முற்றி கைகலப்பாயிற்று.
இறுதியில் அனுமன் விட்டான் பலமான குத்தொன்று.
அதில் அரக்கியும் மூர்ச்சையானள். பின் தெளிந்து,
அனுமன் யாரென்றும், தன் மதிற்காவல் தொழிலானது
அவனால் நிறவு பெற்றதையும் உணர்ந்து,
அவனை நகருக்குள் செல்ல அனுமதித்தாள்.

10. ஒவ்வொரு மலரிலும் தேனினை சேகரிக்கும்
வண்டு போல நகரில் ஒவ்வொரு இடமாய்
சென்று ஆராய்ந்தான். ஆங்கே கும்பகர்ணன்,
விபீஷணன், இந்தரஜித் முதலானோர்
மாளிகைகளை துழாவிச் சென்றான்.

11. நகரமே உறங்கிக் கொண்டிருக்கையில் அனுமன் மட்டும்
உறங்காமல் சீதா பிராட்டியைத் தேடினான்.
பெண்கள் இருக்கும் இடமெல்லாம், அங்கு சீதையைக்
காண்போமா என்று ஏங்கித் தேடினான்.

12. இறுதியில் இராவணனின் மாளிகையை அடைந்து
இனிதே உறங்கும் இராவணனைக் கண்டதும் கோபத்தில்
இவனை இப்படியே கொன்றால் என்ன? என நினைத்தான்.
பின்னார் ஆராய்ந்து அது தவறென்று தெளிந்தான்.

13. அங்கும் சீதையைக் காணமல் வருந்தினான்.
ஒருவேளை கொன்றானோ, இல்லை தின்றானோ?
ஒருவரும் எட்ட முடியாத இடத்தில் தான்
சிறை வைத்தானோ? என புலம்பினான்.

14. நல்வினை யாவும்  நீங்கியது, எனவே யானும்
அல்லல் அடைந்தேன் அன்னையைக் காணாமல்.
இல்லை இனிமேல் நன்மை! என மனம் உடைந்தான்.
அரக்கன் இராவணனை அடித்துக் கேட்கலாமோ
அன்னை இருக்கும் இடத்தை?

15. இனி எப்படி என் இனிய இராகவன் திருமுகம்
காண்பேன்? இப்போதே இலங்கையை தீக்கிரையாக்கிவிட்டு
தானும் உயர் துறப்பதே மேல் என்று
எண்ணுகையில் மலர்வனம் ஒன்றைக் கண்ணுற்றான்.

Monday, June 23, 2014

சுந்தர காண்டம் : கடல் தாவு படலம்

வாழ்த்து
அன்பெனும் அமுதைப் பொன்னெனப் பூண்டவன்
தன்மனம் முழுதிலும் இராமனை நிறைத்தவன்
அகிலமும் அவனை அனுமனெனப் போற்றிட
அன்பனின் அருமையைச் அடியேனும் சாற்றுவேன்.

கடல் தாவு படலம்
1. அன்பர் அனைவரின் விடைதனைப்பெற்று
அனுமன் பெற்றனன் பேருருவம்!
விண்வரை உயர்ந்தவன் இந்திர உலகத்தைக்
கண்டு ஐயுற்றான் இலங்கை இதுதானோ என்று;
பின் தெளிந்தான் இலங்கை இதுவல்ல வென்று.

2. பின்னர் கண்டனன் இலங்கை மூதூர் நகரை.
பொன்மதில்கள், கோட்டைகள், மாட வீதிகள்
எனப்பல கண்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்
அனுமனும் ஆகா வென்றே .

3. மூதூர் நோக்கி கால்களை அழுத்தி
வானில் எழும்பியபோது மகேந்திர
மலையோ பாவம் அழுந்திப் போனது அடியே.
மலையின் வயிறு பிதுங்கி அங்கிருந்த
மலைப்பாம்புகள் யாவும் வெளியே வந்து விழுந்தன.

4.  வானில் அனுமன் பறந்த காட்சி :
வால் எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி
கழுத்தினை சுருக்கி கை நீட்டி விசைத்தான்.
விண்ணவரும் முனிவரும் வாழ்த்த விரைவாய்
விண்ணிலே காற்றைக் கிழித்துப் பறந்தான்.
முன்னம் பரந்தாமன் காலால் அளந்த உலகை
அனுமன் வாலால் அளந்தானோ என
வானோர் மருண்டனர்.

5. காலனின் கயிற்றுக்கு இதுவரை இலங்கை
செல்லவே அச்சம்; ஆனால் இப்போது இல்லை.
ஏனெனில் தலைவனாம் அனுமனின் வாலின்
பின்னால் ஒளிந்து கொண்டு செல்லலாமே!

6. வான்வெளியை ஊடுறுவிப் பறந்த வேகத்தில்
வானவர்கள் ஆங்காங்கே பறந்து வந்த
விமானங்களோ அந்தோ ஒன்றோடு ஒன்று
விரைவாய் மோதி நசுங்கி வீழ்ந்தனவே!

7. இவன் பறந்த வேகத்தைக் கண்டு
இந்திரனும் வியந்தான் - ஆகா, இவ்வேகத்தில்
இலங்கை மட்டும் தான் என்னே?
இன்னுமும் பலதூரம் செல்வான் என்றான்!

8. ஆழ்கடலில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலம் முதலான
ஆபத்தான மீன்கள் எல்லாம் அந்தோ
அனுமனின் காற்று வேகத்தை தாக்குப் பிடிக்காமல்
தண்ணீரிலேயே மடிந்து மிதந்தனவே.

9. தடக்கை இரண்டையும் காற்றினில் செலுத்திப் பறக்க
தடக்கை இரண்டிலும் இருப்பது யாரோ?
தடக்கை இரண்டையும் இயக்க இருப்பது
சுடரொளி இராமனும் இலக்குவனும் ஆமே.

10. கடலின் மேலே விறையும் பாதையின் குறுக்கே
கடலினில் எழுந்தது மைந்நாகமலை.

அடடா இதுவென்ன தடை? என்று
அனுமனும் தன் காலினால் உதைத்திட
அம்மலையும் கடலினில் குப்புற வீழ்ந்தது.

அதன்பின் சிறு மானிட உருவம் கொண்டு,
அன்போடு உபசரித்து, இம்மலையில்
"இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லவும்" என்றது.

11. அனுமனும் அன்பினை மெச்சினான்.
அம்மலை விருந்துண்டுச் செல்ல வேண்டிட,
அனுமனோ, எண்ணிய கருமம் ஈடேறும் வரை
உண்ணேன் எனும் விரதம் தனை உரைத்தான்.
பின் திரும்பி வருங்கால் ஏற்பேன் என்றான்.


12. அடுத்து அனுமனின் வலிமைக்கு ஓர் சோதனை:

தக்கனின் மகளாம் சுரசையை
அரக்கி வடிவினில் அனுப்பினர் தேவர்.
இது மலையா? கடலா?
அல்லது மலை போன்றெழும் கடலா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
பிளந்த வாயில் "நீயாக வந்து விழுவாய்" என்றாள்.

அனுமனோ மிகச் சிறிய உருவம் கொண்டு,
கண் இமைக்கும் நேரத்தில் செவிக்குள் புகுந்து
வாய் வழியே வெளியே வந்தான்.

அஞ்சா நெஞ்சன் அனுமனனின் வேகத்தை
மெச்சி வாழ்த்தி வழி அனுப்பினர் தேவர் முதலானோர்.

13. முதலிரண்டு தடைகளும் அன்பால் என்றால்
மூன்றாவது தடையோ பகையால் வந்தது:

திடீரென கடலில் நடுவே எழுந்தனள்
அங்காரதாரை எனுமோர் அரக்கி.

 நிழலைப் பிடித்தே இழுக்கும் சக்தி கொண்ட அவள்,
பறக்கும் அனுமனை அவ்வாறே கீழே இழுத்தாள்.
"அடே என்னைக் கடந்து செல்வதார்" என வினவி,
அனுமனை விழுங்க தன் வாயைப் பிளந்தாள்.

அரக்கியின் வாய் வழியே நுழைந்த அனுமன்
அவளது வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான்.

அரக்கியும் அத்தோடு மாண்டிட,
தேவர் முதலானோர் அனுமனை வாழ்த்திட,
வீரன் விண்ணில் பறந்தான்.

14. இனிமேலும் இடர்கள் வாராமல் இருக்க
இனியதோர் உபாயம் இராம நாமம்
உச்சரிப்பதே எனத்தெளிந்து இராம நாமம்
செபித்தாவாறே பறந்தான் ஆஞ்சநேயன்.

15. இப்படியாக அனுமன் இலங்கை மூதூர் நகரில்
இலம்பகம் என்னும் பவழமலையில் வந்து இறங்கினான்.
இறங்கியபோது புயலில் சிக்கிய மரக்கலம் போலும்
ஆட்டம் கண்டு பின் நின்றது அம்மலை. அங்கிருந்து
அனுமன் இலங்கை நகர் தெரியக் கண்டான்.

Friday, May 30, 2014

மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?

சிங்கள வம்சாவளியினரின் இலங்கை வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்தின் படி, வங்கத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் (கி.மு 543 - கி.மு 505) என்பவன் வந்ததாகவும், அவனது வம்சாவளியினரே முதல் சிங்கள ராஜ வம்சமாகவும் கருதப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க, சிங்கள வம்சாவளியினருக்கும் மற்றவர்களுக்குமான மரபணுத் தொடர்பை ஆராயும் சோதனைகள் என்ன சொல்கின்றன?

பல்வேறு சோதனைகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தாலும், அவை யாவும் சிங்களர்களுக்கும் வங்காளியர்க்குமான மரபணுத் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன.

1995 வாக்கில் நடத்தப்பட்ட ஆரம்பகால சோதனைகள் இந்தியத் தமிழர்களின் மரபணுத்தொடர்பே சிங்களரிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் சிங்களர்க்கும் வங்கத்தினருக்குமான மரபணுத் தொடர்பு - மகாவம்சத்தின் கதையோடு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை.

சமீபத்தில், 2005-2006 இல் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் படி,  72 சதவிகிதமும் வங்காளியர்க்கும், 16 சதவிகிதம் தமிழருக்கும் மற்றும் 12 சதவிகிதம் குஜராதியினருக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது! இந்த ஆய்வில் தமிழரின் மரபணுத் தொடர்பின் பங்கு குறைந்துபோனதற்கு காரணமென்ன என்கிற கேள்விக்குச் செல்லாமல் (சோதனை செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்து பங்கு விகிதம் கூடவும் குறையவும் செய்யலாம்), வங்காளியர்க்கும், தமிழருக்குமான தொடர்பு எதிர்பார்த்ததே என்றாலும், குஜராத்தியினரின் குறிப்பிடத்தக்க பங்கு சிங்களரின் மரபணுவில் இருப்பதுமாக இவ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது.

மேலும் சில வரலாற்று ஆய்வளர்கள் - இளவரசன் விஜயன் வங்க நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை. மகாவம்சம் சொல்லுவதற்கு மாற்றாக வட மேற்கு இந்தியாவில் இருந்து - குறிப்பாக தற்போதைய குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

வங்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பவர்கள் கூற்றுப்படி - விஜயன் இருந்த சிம்மபுரம் என்ற இடம் என்பது தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கும் சிங்குர் எனகிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பர்கள் கூற்றுப்படி, சிம்மபுரம் என்கிற இடம், தற்போது குஜராத்தில் சிஹோர் என்கிறார்கள். விஜயனின் கப்பல் முதலில் சுப்பாரகா என்னும் இடத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் இருக்கும் சோபனா என்கிற இடமாக அறியப்படுகிறது. விஜயனின் கப்பல் வங்கத்தில் இருந்து கிளம்பி இருந்தால் எப்படி இந்தியாவின் மேற்கு கரையினை அடைந்திருக்க முடியம்? ஆகையால் மேற்கு கடற்கரையில் இருந்தே புறப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுக்கிறது.

குஜராத் நாட்டுப்புற பாடல்களிலும், மற்றும் ஒன்றிரண்டு திரைப்படங்களிலும் கூட, "இங்கு இருந்து இளவரசன் இலங்கை சென்று, அங்கு பெண்ணை மணந்தான்" என்கிற செய்தி பேசப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியிலும் இடம்பெறுகிறது சிங்கம். பழங்கால வங்கத்தில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் குஜராத்திலோ தொன்று தொட்டே சிங்கங்கள்  இருந்தன என்றும் தெரிகிறது.

மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கொண்டாலும் கூட - அதனை இந்தியாவின் வட மாநிலங்களான வங்காளம் மற்றும் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் நிதர்சனமான குறியீடாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் சிங்கள மொழி உருவாவதற்கும் இதுவே காரணமாகவும் அமைகிறது.

மரபணு சோதனை விவரங்களுக்கு விக்கி தளத்தில் இச்சுட்டியைப் பார்க்கவும்.

Monday, May 26, 2014

ஜெயதி ஜெயதி பாரத மாதா!

ஆகஸ்ட் 15, 1947 - சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இடையே நீங்கள் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பைக் கேட்டிருந்தால் "ஜெயதி ஜெயதி பாரத மாதா!"  எனத்தொடங்கும் கமாஸ் இராகப் பாடலைக் கேட்டிருக்க முடியும். பாரத தேசிய கீதத் தேர்வின் கடைசி சுற்று வரையிலுக் கூட இடம் பெற்ற இப்பாடலின் சொந்தக்காரர் - விஸ்வநாத சாஸ்திரி அவர்கள். ஜி.எம்.பி அவர்களின் ரெக்கார்டுகளிலும், டி.கே.பி யாலும் பெரிதும் பாடப்பட்டு பிரபலமானது இப்பாடல்.



மயூரம் விஸ்வநாத சாஸ்திரி (1893-1958) பல்வேறு இராகங்களில் பாடல்கள் புனைந்துள்ளார். இவருடைய பாடல் முத்திரை 'வேதபுரி' மற்றும் 'விஸ்வநாத' என்பதாகும். 'முருகன் புகழ்மாலை' மற்றும் 'முருகன் மதுர கீர்த்தனைகள்' போன்ற இசை நூல்களை ஸ்வரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.

திருக்குறளை இசை வடிவத்தில் கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். மூன்று முதல் ஒன்பது குறட்பாக்களை இணைத்து கிருதி வடிவில் பல்லவி-அனுபல்லவி-சரணம் முறையில் வழங்கியுள்ளார்.

2009 மார்கழி மகா உற்சவத்தின் போது - சஞ்சய் சுப்ரமணியம்  மயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு பாடி இருக்கிறார். இவற்றில் இரண்டு திருக்குறள் கிருதிகளும் அடங்கும். இப்பாடல்களுக்கான சுட்டிகள் இங்கே.

பகவன் முதற்றே உலகு - ஹம்சத்வனி
இந்த ஜாலமே - கமாஸ்
மயில் வாகனா - அமிர்தவர்ஷிணி
ஒழுக்கம் உயிரினும் - குந்தலவராளி
பாரத சாம்ராஜ்ய சுகி - தேஷ்


Sunday, May 18, 2014

உன்பாலே ஈர்ப்பதுமேன்?

விருத்தம்:

உன்னுருவைக் கண்டறியேன்
....உன்வரவைக் கண்டறியேன்
உன்பேச்சைக் கேட்டறியேன்
....உன்னிடத்தை தெரிந்தறியேன்
ஒன்றான என்மனத்தை
...உன்பாலே ஈர்ப்பதுமேன்?
என்றென்றும் எவ்வுருவிலும்
....எங்கெங்கும் இருப்பதாலோ!