Tuesday, November 25, 2008

மார்கழி ராகம்!

இசையின் இனிமையை இரசிக்க இன்னுமொரு மார்கழி
கார்த்திகை விரதங்களால் மார்கழியில் பயன்!
கார்த்திகை மழைக்குப்பின் மார்கழியிலேயே நாற்று!
மார்கழியின் வருகைக்கு கார்த்திகை வகுத்தவழி.
மார்கழிப் பனியினில் மனதிற்கு இளஞ்சூடு!
காலைமுதல் கார்மேகக் கண்ணனின் குழல் நாதம்,
கசிந்து இசைந்து வர, குழைந்திடும் உள்ளம்.
ஊனுருகி உள்ளம் உன்னத இசையினை இரசித்திட
தேனான நாதத்தில் திளைத்திட, கிடைக்காதோ பேறு.

Sunday, November 23, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினைந்து

பா 53:

உபாதிநா சத்த லுறுவான் முனிவ
னுபாதியில் விஷ்ணுவி னுள்ளே - யபேதமே
தோயத்திற் றோயமும் தூவிண்ணி லேவிண்ணும்
தீயிற்றீ யும்போலத் தேர்.

(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதி நாசத்தல் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே ஏய - பேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயிற் தீயும்போலத் தேர்.

பொருள்:
தான் உண்மையில் யாரென தெரியாமற் செய்யும் உபாதிகளை அழித்து ஒழித்தவன், உபாதி இல்லாத, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், விஷ்ணுவின் உள்ளே சென்று, அதுவாகவே ஆவான். அவனுக்கும், பரமனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது - தண்ணீரில் தண்ணீர் போலவும், தூய விண்ணில் விண் போலவும், நெருப்பில் நெருப்பு போலவும், தான் இரண்டற இருப்பதை அறிந்து தெளிந்தான்.

விளக்கம்:
தன் முந்தைய வினைகள் களையப்பட்டவன், உபாதிகளையெல்லாம் இழந்து, இறுதியான நிலையினை அடையுங்கால், எல்லாமும் ஆன பரமனும், தன் ஆன்மாவும், இரண்டு என்றில்லாமல், ஒன்றாக இருப்பதை அறிவான்.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.

ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர வெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.

முக்தி என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, அல்லலோ அல்லல் படும் நிலைகளில் இருந்து, சுதந்தரம் பெறும் நிலையே முக்தி என்பதாகும். பொதுவாக இரண்டு வகையில், குறிப்பிடுகிறார்கள்: ஜீவன் முக்தி - அதாவது, மனிதர் உடலில் உயிர் இருக்கும் போதே, அடையும் முக்தி நிலை. விதேக முக்தி - உடலை விடுத்தபின், அடையும் முக்தி நிலை. ஜீவன் முக்தர், உடலோடு இருப்பதனால், இன்னும் அவருக்கு, தன் ஆன்மாவும், பரமனும், இரண்டாகத் தெரியும் நிலையில் இருப்பார். ஆனால், அது உண்மையல்ல என்பதையும் அவர் அறிவார். உண்மையான இறுதி நிலை, ஒன்றான நிலை, என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதால், மனக் கலக்கங்கள் இல்லை. என்றாலும், அவர் பரமனின் நிலையான நிலையை அறிந்திருந்தாலும், தன் உடலைத் துறக்கும் வரையிலும், அவர் பரமனாகவே மாறுதல் நிகழாது. (உடலோடு, சேர்ந்து, மறைதல் என்னும் நிலையும் சொல்லப்படுகிறது. இந்நிலை, வேதாந்தத்தைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வலியுறுத்தப் படுகிறது.)

உபநிடதங்களில் இருந்து குறிப்புகள்:
"அவன் எப்போது, எல்லா தளைகளில் (கர்ம வினைகள்) இருந்து விடுபடுகிறானோ, அக்காலம் வரை, தாமதமாகின்றது. அதன் பின், அவன் முழுமை அடைகிறான்."
சாந்தோக்ய உபநிடதம் VI. xiv, 2

"அவனுக்கு, இறுதியில், எல்லா மாயைகளும், அவற்றால் ஏற்படும் எல்லா குறைபாடுகளும் முற்றுப்பெறுகின்றன."
ஸ்வேதஸ்வதார உபநிடதம் 1.10

"எப்படி, நதிகளெல்லாம், கடலினில் கலந்திடுகையில், தம், நாம, உருவங்களை இழக்கின்றதோ, அது போல, தன்னறிவு பெற்றவன், பரமனை அடைகையில், தன் நாம, உருவங்களை இழக்கிறான்."
முண்டக உபநிடதம் III. ii.8


இப்போது, இரண்டு பகுதிகளுக்கு முன்னால், கே.ஆர்.எஸ் எழுப்பிய வினாக்களை, திரும்பிப் பார்க்கலாமா?

1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?
ஜீவன் முக்தருக்கு, முழுமையாக எல்லா வினைகளும் முடிந்திருக்காவிட்டாலும், உபாதிகளால் குறைபாடுகள் இல்லை. அவற்றால், தான் இரண்டாகத் தெரிவதை நன்கறிந்திருப்பார்.

2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?
ஜீவன் முக்தருக்கு, உண்பது, உறங்குவது போன்ற உபாதிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அவற்றால், யாதொரு குறைபாடும் இல்லை.

3. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.

Monday, November 17, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிநான்கு

சென்ற பகுதியில் மறுமொழிகளால் நிறைத்தருளிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு வந்தனங்கள் பலப்பல. ஜீவன் முக்தரைப் பற்றி அறிந்திட, அவர் எழுப்பிய வினாக்கள், ஆத்ம போதத்தில், அடுத்து வரும் செய்யுள்களுக்கு, முன்னோடியாய் அமைந்திருக்கின்றன என்றால், வியப்பும் மேலிடுகிறது. இப்போது பார்க்கப்போகிற இரண்டு பாக்களுமே, ஜீவன் முக்தரைப் பற்றியவைதான்!

இந்தப்பாடல், ஜீவன் முக்தன் ஒருவன், எப்படி உலகத்தில் வாழ்வான் எனச் சொல்கிறது:
பா 51:
அனித்தவெளி யின்பிச்சை யற்றானா யான்மா
தானின்பித் திருத்தி தன்னையுற் - றனிசமுன்
தன்னொளி யாற்குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தானொளிர்வன் றான்.
(சீர்களைப் பிரித்தபின்:)
அனித்தவெளியில் இன்ப இச்சை அற்றனாய் ஆன்மா
தான் இன்பித்தில் இருத்தி தன்னையுற்ற நிஜமுன்
தன்னொளியால் குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தான் ஒளிர்வன் தான்.

பொருள்:
தன்னின் வெளியே இருக்கும் உலகத்தின் பால் ஏற்படக்கூடிய இச்சை அல்லது விருப்பம் தீர்ந்திருக்க,
அவ்விச்சைகளெல்லாம், இப்போது தன் ஆன்மாவின் மேல் அன்பாய் மாறியிருக்க,
அந்த 'தான்'(ஆன்மா) தரும் அணையா ஒளியால்,
குடத்தினுள் வைத்த விளக்குபோல, அவன், அவ்வான்மாவால் ஒளிர்வான்.

விளக்கம்:
பரமனின் ஒரு பகுதியாக ஒளிரும், விகாரமேற்படா ஆன்மா, எப்போதும் ஒவ்வொருவர் உள்ளும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஜீவன் எப்போதுமே, தன்னின் வெளியிலேயே தான் கவனம் செலுத்தி வருவதால், தன் அக ஒளியை தானே கவனிக்க இயலுவதில்லை. ஜீவன் முக்தன், தன் உபாதிகளை எல்லாம் இழந்து வருவதனால், அவனால், வெளி உலகத்தின் ஈடுபாடுகளை புறக்கணித்து, தன் அகவொளியினை உணர இயல்கிறது.
வெளி இன்பங்களில் சிதறடிக்கும் உபாதிகளை இழந்தவன், தன் ஆன்மாவின் பெருமையைப் போற்றும் அன்பில் திளைத்திட,
அவனின் அகங்காரமிலாத மனதில், ஒளிர்ந்திடும் ஒளியினை உணர, அந்த ஒளியாகவே மாறிட, அம்மனதும் விழைகிறது.
எப்படி, கண்ணாடிக் குடத்தினுள், ஒளிதரும் விளக்கினை வைத்துவிட்டு, வெளியில் இருந்து பார்த்தால், அக்குடமே, ஒளியுடன் திகழ்கிறதோ, அதுபோல, அந்த ஜீவனும் ஒளிர்வான்.

கீதையில் கண்ணனும் உரைப்பான்: (2.55):
பார்த்தா, எப்போதும் தன்னுடைய மனதில் எழும் ஆசைகளைத் இழந்து, தனக்குள் மகிழ்ச்சியுடன் ஒருவன் இருப்பானேயானால், அவன் நிலையான ஞானம் அடைந்தவன் எனக் கூறப்படுவான்.

பா 52:
உபாதியுற் றானேனு மொட்டாவிண் போலவ்
உபாதித்தரு மங்களொ டொட்டா - னுபாதியில்லான்
முற்றறிவ னெனுமுனி மூடனென வாயுபோற்
பற்றறச் சஞ்சரிப் பான்.
(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதியுற்றா னேனும் ஒட்டா விண் போல
உபாதி தரும் அங்களோடு ஒட்டான் - உபாதியில்லான்
முற்றறிவன் எனும் முனி, மூடன் என வாயுபோல்
பற்று அறச் சஞ்சரிப் பான்.

பொருள்:
உபாதிகளைக் கொண்டவனாய் இருப்பினும், ஜீவன் முக்தன், விண்ணைப்போல, அந்த உபாதிகள் தரும் குறைபாடுகளோடு, ஒட்டாமல் இருப்பான். அவைகளால், அவனுக்கு மாறுதல்கள் ஏதும் ஏற்படா. உபாதிகள் முற்றிலும் அறும் வரை, வாயுபோல இப்பூவுலகில் ஒட்டாமல் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான்.

விளக்கம்:
உபாதி : எவையெல்லாம், நான், எனது, என்று ஜீவனை, நினைக்க வைக்கிறதோ, அவையெல்லாம் உபாதிகளாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றின் விளைவால், ஆவதெல்லாமே, என்னால் எனக் கொள்கிறோம். நம்மோடு பிறந்த இவ் உபாதிகளை ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

ஜீவன் முக்தனுக்கு, இன்னும் உபாதிகள் முழுமையாக முடிவடையவில்லை. அவற்றுக்கு அவன் பார்வையாளனாக இருப்பினும், அவைகளோடு, தாமரை இலைத் தண்ணீர் போல, ஒட்டாமல் அவன் இருப்பான். உபாதிகளால் ஜீவனில் ஏற்படும் குறைபாடுகளான, மறு பிறப்பு, நிலையிலாமை, இறப்பு போன்றவை ஜீவன் முக்தனுக்கு இல்லை.

விண்ணைப்போல : பொதுவாக வானம், வெளிர் நீல நிறத்தில் தெரிகிறது. சில நேரம், கருமைத் தூசிகளாலோ, அல்லது கரும் மேகங்களாலோ, கருமையாகவும் தெரிகிறது. ஆனால், ஆகாயத்திற்கு, இதனால், பாதிப்போ, அல்லது மாற்றமோ, இல்லையே. விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே இருக்கும் பார்வையில் தான் பிழை. விண்ணுக்கேதும் குறை இல்லை. அதுபோல, ஜீவன் முக்தர், உண்ணுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், அதனால், அவர்களுக்கேதும் குறைவில்லை.

மூடன்: ஜீவன் முக்தர், யார் என்ன சொன்னாலும், போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி, அவர், யாதொரு மாறுதலும் அதனால் அடையாமல், அமைதியாக அதைக் கேட்டுக்கொள்வார் - கிட்டத்தட்ட மூடன் போல. எல்லாவற்றில் அவர் பிரம்மத்தினையே பார்ப்பதால், தனக்காக, ஏதையும் செய்ய இயலார்.

மேலும்:
ஜீவன் முக்தனுக்கு, பிராப்த கர்ம வினைகள், இன்னமும் இருந்திடலாம் என்றும், இவ்வினைகள் முழுவதும் முடியும் வரை, நிலையான, இறுதியான முக்தி அடைய இயலாது என்றும் சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ, ஜீவன் முக்தி என்னும் நிலையே, இறுதியான நிலை. இந்நிலையிலேயே, எல்லா வினைகளும் அற்று இருப்பார்கள் என்கிறார்கள். இப்படி ஏதும், பொதுமைப்படுத்தாமல், ஒவ்வொரு ஞானிக்கும், ஒவ்வொரு விதமாக, இறைவனின் திரு உளத்திற்கு ஏற்றால் போல் அவ்வாறு அமைந்தது எனக் கொள்ளவே வேண்டும். எதுவாக இருப்பினும், உபாதிகளை இழந்து, எல்லாமும் ஆன பரமனை அடைந்து, துவங்கிய இடத்தை, மீண்டும் அடைவதுதான் ஜீவனின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்த பகுதியில், ஜீவன் முக்தன் பூவுலகை அகலும் இறுதியான நிலையினையும், அவன் பரமனை அடைவதைப் பற்றியும், ஆத்ம போதம் செல்லுவதைப் பார்ப்போம்.

Friday, November 14, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிமூன்று

பா 49:
சீவன் முக்தன் வித்வான் தேருவதன் முன் தன்னை
மேவும் உபாதிகுணம் விட்டுடனே - மேவுவான்
தன்னுரு சச்சித் இன்பத் தாங்கிடும் வண்டினுருத்
தன்னையுறல் போலத் தறி.

சீவன் முக்தன், அவன் ஆன்மஞானி ஆவதற்கு முன்னம் இருந்த உபாதிகளை கைவிட்ட உடனேயே, சச்சிதானந்த நிலை தனை அடைவான். வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல.

ஜீவன் முக்தர் - என அழைக்கப்படுபவர், முக்தி என்னும் நிலையினை அடைந்த பின்னரும், உலக நன்மை பொருட்டு, தம் பூவுடலை துறக்காமல் இருப்பராவர். எனினும், அவருக்கு, அவருடைய ஞானத்தினால், அவர் சச்சிதானந்த சொருபீயாக இருப்பதினால், அவரே பிரம்மமாகவும் இருப்பவர். அவருக்கு முந்தைய உபாதிகள் ஏதும் அப்போது இல்லை. அதாவது, அவர் அந்நிலையை எட்டுமுன், அவருக்கு இருந்த, உடல், புலன் உணர்வுகள், மனம், போன்ற உபாதிகள் இல்லை.
எப்படி தங்கள் புழு போன்ற தோற்றத்தில் இருந்து, பறக்கும் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறிட, தங்கள் தோற்றத்தை, வண்டு போன்ற பூச்சிகள் இழக்கின்றனவோ, அதைப்போல.

பா 50:
மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று - யோகி
அமைதியொடு கூடியான் அவ்வின்பத்
தமைந்து ஒளிர்வானென்றே அறி.

மோகமெனும் கடலினைக் கடந்து, ஆசை, கோபம் எனும் அரக்கர்களைக் கொன்றபின், யோகியானவன், அமைதி என்னும் சாந்த நிலையினை அடைந்து, அது தரும் பேரின்ப நிலையில் ஒளிர்வான்.

மோகம், ஆசை, கோபம் என்னும் மூன்று அரக்கரையும் வெல்லுதல் யோகியின் முதற்செயலாகும். அவ்வாறு வென்றவன், எளிதாக, தான் யாரென்று அறியாமற் மறைக்கும் மாயைதனை வெல்வான். அறியாமை அகன்றால், பின் இனியெல்லாம் ஞானமே அல்லவோ. அங்கு, அமைதியைத் தழுவிதல் என்பது, "சும்மா இரு சொல்லற", என்பதைச் சொல்லுகிறதோ! அந்நிலையில், நான் யார் என வினவிட, அவ்வினவலின் தோன்றலின் ஆதாரத்தினை ஆராய்ந்திட, கிட்டாதோ யாதும்!.

(கடல் கடந்து, அரக்கரைக் கொன்று, பிரிந்த மனைவியொடு சேர்ந்து, ஒளிர்ந்தான் இராமனும்!.)

இந்தத் தொடரில், இரமண மகரிஷி அவர்கள், வெண்பாக்களாய் வடித்த, ஆத்மபோதம் தனைப் பார்த்து வருகிறோம். அடியேனுக்குப் புரிந்த வரையில், செய்யுட்களைப் பிரித்துப் பொருள் தேடி வருகிறேன். பிழைகளைச் சுட்டினால், திருத்திட ஏதுவாய் இருக்கும். இதுவரை வந்த பகுதிகளை இங்கே காணலாம்.

Sunday, November 09, 2008

எல்லாம் கண்ணனுக்கே!

கண்ணனைப் பாடுவதென்றாலே, எப்போதுமே சொல்லிலடங்கா சுகம். கண்ணன் உருவம் என்றதுமே, நமக்கு பற்பலத் தோன்றும். ஒன்றா, இரண்டா, நொடியில் சொல்லி முடிக்க. ஓராயிரம் வேண்டுமே!. எதைச்சொல்ல, எதை விட!
காற்பாத விரலை வாயிலே சுவைக்கும் ஆலிலைக் கண்ணன் முதல், பார்த்தசாரதியாய், கர்மயோகம் உரைக்கும் கண்ணன் வரை, அவன் புரிந்த விந்தைகள்தான் எத்தனை, எத்தனை!. அவ்விந்தைகளில் மயங்கி, அவன் நினைவன்றி வேறொன்றும் அறியா கோபியர் போல், அவன் நினைவில் திளைத்திடும் சாதகம் போல் வேறொன்றோ, சொல் மனமே!.

இங்கே, பாபநாசம் சிவன் அவர்கள், மிக எளிதாக, கண்ணனைப் பாடுகிறார் பாருங்கள். கண்ணன் பாடலுக்கு, கர்ணரஞ்சனி இராகம்!

இராகம் : கர்ணரஞ்சனி
இயற்றியவர்: பாநாசம் சிவன்

எடுப்பு
தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே!

தொடுப்பு
கானவிலோலனே, கௌஸ்துப மாலனே,
கனகாம்பரதர வனமாலாதரனே,

முடிப்பு
சியாமள ரூபனே, சரசிஜ நேத்ரனே,
சகலபுவன பரிபாலனே சீலனே,
மாமணி வண்ணனே, மரகதக் கண்ணனே
மங்கையர் மனங்கவர் மாயனே, ஆயனே,
(தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே.)

இப்பாடலை திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.

தீன சரண்யனே தேவகி பாலனே...

இம்முறை, பாடலுக்கு விளக்கம் சொல்லும் இன்பத்தை, உங்களிடமே விட்டுவிடுகிறேன்!. வாருங்கள் அன்பர்களே!. பாடல் வரிகளுக்கு, தங்கள் விளக்கம் வேண்டும். குறிப்பாக - கானவிலோலன், கௌஸ்துப மாலன், கனகாம்பரதர வனமாலாதரன், சியாமள ரூபன், சரசிஜ நேத்ரன், இப்படியெல்லாம், சிவனார் புகழ்வதென் பொருளென்னவோ!. ஒருவரிப் பொருள்தான் என்றில்லை, கதையாக இருந்தாலும் சொல்லலாம்!

எல்லாமுமே கண்ணனுக்கே போய்ச் சேரட்டும்.

Friday, November 07, 2008

இறையருள் - கேள்வி பதில்

இறைவன் உருவம் கொண்டவனா, உருவம் அற்றவனா?
உருவத்தில் பார்ப்பவர்களுக்கு, உருவம் கொண்டவன், உருவத்தையும் தாண்டி, அனைத்திலும் பார்ப்பவர்களுக்கு, உருவமற்றவன். தியாகராஜர் சொல்லுவது போல், உண்டு என்பவர்களுக்கு அவன் உண்டு. இல்லை என்பவர்களுக்கு அவன் இல்லை. ஏனெனில், அவர்களால் கண்டு கொள்ள இயல வில்லை.

அதெப்படி இரண்டாகவும் இருக்க முடியும்?
ஏனெனில் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. இரண்டு என்று மட்டும் இல்லாமல். எல்லாமுமாக. ஒன்றே எல்லாமுமாக. திறக்கமுடியாத பூட்டு என்பது இல்லையே. சரியான சாவியை கண்டுபிடிக்க முடியாதவர் மட்டுமே உண்டு. எங்கும் இறைவன் இருக்க, அவனைத் தேடி எங்கும் அலைவார் உண்டு. தங்கும் அருள் கிட்ட, மிஞ்சும் அன்பு வேண்டும். அதற்கு அவனிடம் தஞ்சம் கொள்வதே வழி.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், என்றால், ஏன் சில இடத்தில் இன்பங்கள், சில இடத்தில் துன்பங்கள்?
இறைவன் எங்கும் நிறைந்திருந்திருந்தாலும், நாம் இறைவனை விட்டு, பிரிந்தல்லவோ இருக்கிறோம். இறைவனோடு இரண்டற கலக்காதவரை, துன்பம் இருக்கத்தான் செய்யும்.

அப்படியானால், மண்ணுலகில் இன்பம் இல்லையா?
மண்ணுலகிலும் இன்பம் உண்டு. இந்த உடல் உயிரை சுமக்கையிலும் இன்பம் உண்டு. விண்ணுலகுக்கு சென்று சொர்கத்தனை அடைந்தால்தான் இன்பம் என்றில்லை. விண்ணுலகத்தை விண்ணில் காணாமல், தன்னில் காண்பவரும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், 'இகத்தில் பரம்' என்பார்கள். பரமனை தங்கள் அகத்தில் கண்ட அவர்களின், உடலுக்கும் சிதைவில்லை. அவர்கள் முக்தி அடைந்தாகும், உடலோடே மறைவார்கள். இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் போல.

இறைவனை அறிவது எப்படி?
இறையருள் பெறுவதன் மூலம்.

இறையருளினைப் பெறுவது எப்படி?
By Awareness. மனதை திறந்து வைப்பதன் மூலம், மனதில் அன்பு தூர்ந்திட, அருள் தானாகக் கிடைக்கும்.

மனதை திறந்து வைப்பது என்றால் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தினமும் காலையில் உங்களுக்கு வாக்கிங் செல்வது பழக்கம். இன்றைக்கு நீங்கள் நடந்து செல்லும் பொழுது, அந்தப் பக்கத்தில் இருந்து, இன்னொருவரும் நடந்து வர, ஒரு ஹலோ சொல்கிறீர்கள். அவரும், புன்னகைத்து, ஹலோ சொல்கிறார். ஆனால் அது, அந்த ஹலோவுடன் நின்று விடுகிறது. அடுத்த நாள், மீண்டும் அவரை பார்க்கிறீர். இப்போது, அது ஹலோவைத் தாண்டி, விசாரிப்பில் தொடர்கிறது. இன்னொரு நாள், விசாரிப்பு நீள்கிறது. இப்படியே போகப்போக, அவருடனான நட்பு, பல்கிப் பெருகுகிறது. இப்போதெல்லாம், வாக்கிங் கிளம்ப, செருப்பை மாட்டிக் கொள்ளும்போதே, அவரைப்பற்றிய நினைப்பும், கூடவே வந்து ஒட்டிக் கொள்கிறது. இதெல்லாம் எப்படி நடந்தேறியது? திறந்து வைத்த மனதால்.

மனதை திறந்து வைத்தால், இறையருள் எப்படிக் கிடைக்கும்?
மேலே சொன்ன உதாரணத்தில், மனது திறந்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்?. நம்மைச் சுற்றியே நாமே எழுப்பிக்கொள்ளும் ஈகோ சுவர்கள், நான், எனது, நானே பெரியவன், போன்ற தற்பெருமை நினைவுகள் வந்து மனதை ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்க, அந்த புதிய நண்பர் ஹலோ சொன்னாலும், சற்றே முகம் கடுகடுக்க, அங்கேயே முறிந்தது தொடர்பு. இதை, வேதாந்தம், அகங்காரம் - எனச் சொல்லும். இறையருள் எப்போதுமே இருந்து வந்தாலும், இந்த அகங்காரம் இருக்கும் வரை, மனதுக்கு, அதனால் ஒரு பயனும் கிட்டுவதில்லை. ஆனால், மனதை திறந்து வைத்தாலோ, அகங்காரத்தின் ஆளுமை குறையக் குறைய, இறை அருளானது அன்பாக இதயத்தில் மலர்கிறது. அந்த அன்பே, இறைவனை அடைந்திட வழி வகுக்கிறது. இந்த எளிய வழியைத் தான் பக்தி யோகம், ஞான யோகம் என்றும், கர்ம யோகம் என்றும் பலவாறு சொல்லி வைத்தனர் பெரியோர்கள். உண்மையில் எல்லாமே ஒன்றுதான். இறைவன் யாரெனவே அறியாமல், இறைவனிடம் அன்பு செலுத்த இயலுமா? அல்லது, அன்பு செலுத்தாமல், இறைவனை அறியத்தான் இயலுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், அன்பானது வியாபித்து இருக்க, அதுவே கர்மம். இவை எல்லாவற்றுக்கும் துவக்கப் புள்ளியாக, மனதினை தூய்மைப் படுத்துதல் என்னும் யோகம் ஆதாரமாய் அமைகிறது. மனதில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் களைந்து, மனத்துக்கண் மாசிலனாய் சாதகம் செய்திட, அவ்வறமே அகத்தைக் காக்கும், பின் ஜகத்தைக் காக்கும்.

இறைவன், இறைவன் என்று பிதற்றுகிறார்களே, இறைவனைக் காணாமலேயே பிதற்ற இவர்களென்ன பித்தர்களா?
ஆம், பித்தர்களே. இறைவனின் மீது பித்துப் பிடித்த பித்தர்களே. இவர்கள் இறைவனையும், 'பித்தன்' என்பார்கள்!. அறிமுகம், நட்பாகி, நட்பு, உறவாகி, உறவு, உற்ற துணையாகி வழிநடத்த, அந்த இறை அன்பு, அவனில் மேல் ஏற்படும் பித்தே, பின் எல்லாமுமாகி, எல்லாவற்றையும் வழிநடத்த, வழிவகுக்கும்.

மெய்யியலில் என் புரிதல்களை பிதற்றியிருக்கிறேன், பொறுமையுடன் படித்தமைக்கு நன்றிகள்!

Sunday, November 02, 2008

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ள வேண்டாம்!

கோபாலகிருஷ்ண பாரதியின், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவை. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை ஒரு தொடராகவே தந்திட நெடுநாளாகவே விருப்பம் இருப்பினும், அப்பெரிய சாதகத்திற்கு தயார் செய்து கொள்ளவே இன்னும் பல காலம் செல்ல வேண்டியிருப்பதால், அவற்றை பின்னர் தருகிறேன். அவற்றைத் தவிர, தனிப்பாடல்களையும், கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி இருக்கிறார்.
அவற்றில் ஒன்றான 'திருவடி சரணம்' பாடலை இங்கு பார்க்கப்போகிறோம்.

கோபால கிருஷ்ண பாரதியின் அனைத்து பாடல்களுக்குமான வரிகளை இங்கு காணலாம்.

இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். குறிஞ்சி எனும் பாடல் தொகுப்பில் நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடி முதலில் கேட்டது. முசிரி சுப்ரமணிய ஐயர், எம்.எஸ் அம்மா, மதுரை மணி ஐயர் போன்றோரின் கச்சேரிகளில் இடம்பெற்ற பாடல். வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளும் போது, வர்ணத்தினை தொடும் பொழுதே, இந்தக் கீர்த்தனையை சொல்லிக் கொடுக்கும் படி எனது ஆசிரியரிடம் கேட்டிட, அவரும் என் ஆர்வத்திற்கு அணை போடாமல், சொல்லிக் கொடுக்க முயன்றார். ஆனால், என்னிடம் போதிய பயிற்சி இன்மையால், அனுபல்லவியிலேயே நின்றுவிட்டது! (இந்தப் பாடல் அனுபல்லவியில் தொடங்கி, அதற்கு அப்புறம் பல்லவியில் தொடர்வது வழக்கம்)

இராகமோ, காம்போதி. 28ஆவது மேளம் ஹரிகாம்போதியின் ஜன்யம். இங்கு நிஷாதம், ககாலி நிஷாதம் (நி2). ஆகையால், சதுஸ்ருதி த்வைதம்(த2) ஸ்வரஸ்தானத்திற்கும், ககாலி நிஷாதம் ஸ்வரஸ்தானத்திற்கும் இடைவெளி அதிகம்.
ஆரோகணத்தில், நிஷாதம் இல்லை, ஆனால் அவரோகணத்தில் உண்டு. ஆகவே பத (ப-ஸ்த), நித (நி-நித) சஞ்சாரங்களில் நிறைந்திருக்கும் கமகங்கள் இசைக்கு செழுமை சேர்ப்பவை.

மா - கா - பா - தா - ஸ்அ ; - ஸ் ரீகா | ரிஸ்ஸ்த - ரீஸ்நீ - தா - பா ; தா ||
ம - று - ப - டி - யும் - கருவ | டையும் - கு.ழி - யில் - தள்.ளி ||

பா - தா - ஸ்அ - ஸ்நி - தா - பம - பா ; | தா ; ; பா - ; ; ப நி தா ||
வ - ரு - த்த - ப - டு - த்த - வேண் - | டா - ம் . . . . என்.னை ||

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இந்த சுட்டியில் கேட்கலாம்.

பல்லவி
திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
தேவாதி தேவா நின் (திருவடி சரணம்...)

அனுபல்லவி
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் - என்னை
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம்
பொன்னம்பலவா நின் (திருவடி சரணம்...)

சரணம்
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!

அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி சரணம்...)

(அடுத்து வருதல் : இடையறாது, தொடர்ந்து வருதல்)
பொன்னம்பலம் தன்னில் பொதுநடம் ஆடும் சபேசனே, உன் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்.
என்னை இதற்கு மேல், மீண்டும் மீண்டும் கருவடையும் கருங்குழியில் தள்ளி, வருத்தப்படுத்த வேண்டாம், ஐயா.
இப்பிறப்புக்கு மேல், இனி ஒரு பிறப்பில்லை எனும் பேறினைத் தாரும் ஐயா. அதற்காகவே, உங்கள் திருவடியே சரணம், என நான் நம்பி வந்தேன்.

புல்லாகி, பூண்டாகி, இன்னும் என்னவெல்லாம் என கணக்கெழுத முடியாத அளவிற்கு பிறப்பெல்லாம் பிறந்திளைத்தேன். தேவரீர், உம்மை இறைஞ்சிக் கேட்டு, இம்மானிட ஜன்மம் தனைப் பெற்றேன்.
அரிதாய் கிடைத்த இம்மானிடப் பிறப்பு நாளொரு வண்ணம், வீணாகி அல்லவோ போகின்றது.
எனினும், ஐயா, என் குறை இம்மியளவும், தீர்வதாகத் தெரியவில்லையே.
பிறந்த பிறப்பறுக்கும் பெம்மானே, என் பிறவிச் சுழலைதனை உடைத்திடுவாயே.

உன்னை இடையறாது, தொடர்ந்து வந்திடும், என்னை நீ ஒதுக்கித் தள்ளலாகாது.
உன்னை அரஹர வென சொன்னாலே, போதுமல்லவா.
சொல்கிறேன் நானும், அரகர, ஹரஹர, அரஹர.
ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர.
ஐயா, என்னை தடுத்தாட்கொள்ள, நீயும் வந்தருள நற்சமயம் ஈதய்யா.
கோபாலகிருஷ்ணன், உன்னை எப்போதும்,
புகழ்ந்து, பணிந்து, போற்றி, திருவடி சரணம் என,
உன் திருவடிகளில், உன் திருவருளுக்காக இறைஞ்சிப் பணிகிறேன் ஐயா.

திருமந்திரம்:
அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றோ.
(அரகர எனச்சொல்ல, அடைய அரிதானது ஏதுமில்லை. எனினும், அதைச்சொல்ல அறியாரே. அரகர எனச் சொல்ல, அமரராய் ஆவாரே, ஏனெனில், பிறப்பறுக்கும், பெரும் துயர் முடிக்கும், அருஞ்சொல் தானே அரகர.)

LinkWithin

Related Posts with Thumbnails