Showing posts with label முத்துத்தாண்டவர். Show all posts
Showing posts with label முத்துத்தாண்டவர். Show all posts

Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Wednesday, January 05, 2011

சுதந்திரமும் சிதம்பரமும்

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

இவை எல்லாம் பார்வையின் வீச்சின் பழுதுகள் தானோ.

"குலோத்துங்கா, சோழநாடு முன்னூற்று முப்பது காத தூரம் தானே பரவியுள்ளது. உனக்குப்பின் யார் திரிபுவனச் சக்ரவர்த்தி என பட்டப்பெயர் தந்தது?. பட்டத்தினாலோ, விருதினாலோ நாடு விரிந்துவிடாது." என்று கம்பன் கேட்டதுபோல, நமது பார்வையின் வீச்சு முன்னூற்று முப்பது காத தூரம் வரைதான் செல்கிறது. இருப்பினும், நமக்கு நாம் தான் புவியாளும் மன்னன் என்ற எண்ணம். நான் சுதந்திரமாய் நினைப்பதைச் செய்வேன். என் விருப்பங்களுக்கு குறுக்கே வரும் யாரையும் துச்சமெனக் கொள்வேன். எப்படியும் என் எண்ணத்தை நிறைவேற்றி விடுவேன். இப்படிப்பட்ட நினைப்புகளில் நாம் நம்மைச் சக்ரவர்த்தியாகத்தான் எண்ணிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் நினைப்பதெல்லாம் நிகழ்த்திவிடும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் நாம் நினைப்பது போலில்லை. அது வன் நினைப்பது போல்.

இராமலிங்க வள்ளலார் பெருமான் இறைவனிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

"என்னிடம் உண்மையில் ஒரு சுதந்திரமும் இல்லை. உன்னால் நிகழுவதே எல்லாம். என் மூலமாய் நடப்பது எல்லாமும் உன்னால். ஓரளவிற்கு நீ தயவு செய்வது போல், நின் சகல சுதந்திரத்தையும் என்பால் காட்டி தயை செய்." என்கிறார்.

இதன் மூலம், உண்மையான சுதந்திரம் பெற்றவன் இறைவன் மட்டுமே என்பது தெளிவாகிறது.

தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் இதே கருத்தை
"தில்லை சிதம்பரமே" என்று பாடுவார் காபிநாராயணி இராகப் பாடலில்:


எடுப்பு
தில்லை சிதம்பரமே - அல்லாமல்
வேறில்லை சுதந்திரமே!

தொடுப்பு
சொல்லுக் கெளிது நெஞ்சே
சொல்லுவாய் - சிவகாம வல்லிக்கு அன்புள்ள
சபைவாணன் வீற்றிருக்கும்

முடிப்பு
காசினி தன்னில் கைலாசன் என்றொரு
நடராஜன் இருந்து பாபநாசம் செய்வதிதுவே
வாசம் செய்வோருக்கு மோசம் வராது - எம
பாசம் வராது - மனக்கேசம் வராது!

~~~~~~
தொடர்ந்து வள்ளலார் பெருமான், தற்சுதந்திரமின்மை என்கிற பகுதியில் சொல்வதைப் பார்த்தோமேயானால்,


"நான் என்று எதைச் சொல்வேன் அது நீயே ஆனாய்
ஞானம் சேர் ஆன்மாணு நானோ நீ தானே
ஊன் என்னும் உடல் எனதோ அதுவுமுனதாமே
உடல்பெற்ற உயிர் உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான் இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்த சுதந்தரம் உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக் கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே."

நான் என்பது நீ அல்லவோ! என்று வள்ளலார் என்றும் தன்னை உணர்ந்த ஞானத்தில் சொல்கிறார்: "தனித்த சுதந்திரம் தரும் தயவெல்லாம் அவன்பால் இருக்கிறது" என்றும், "அதனாலே, அச்சுதந்திரத்தை எனக்களித்து நானாய் விளங்கத் தயவு செய்வாய்" எனும் அவரது வேண்டுதலும் தெளிவாகிறது.

அவன் எது வேண்டத்தக்கது என்பதை அறிந்தவனாய் இருக்கிறான்.
அதை முழுதுமாய் தருபவனாயும் இருக்கிறான்.
அவன் அருள் செய்வதையே நான் வேண்டினேன்.
அவன் அருள் செய்வதல்லாததை நான் வேண்டிலேன். சுதந்திரமாய் வேண்டிலேன்.

“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினன் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே”
- திருவாசகம், எட்டாம் திருமுறை.

என்றும் மாணிக்கவாசகர் வேண்டுவதுபோல், தனக்குவமை இலாதன் அருள் செய்ய, அதுவே நம் சுதந்திரமாய் இருக்கவே வேண்டுதல்கள்.

Thursday, July 31, 2008

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ?

ந்த இடுகையில் தமிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் மூவரில் ஒருவர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் பாடலில் ஒன்று பார்க்கவிருக்கிறோம். 'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழிசை நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை - மாயாமாளவகௌளை
ஈசனே கோடி சூரிய பிராகசனே - நளினகாந்தி
தரிசித்தளவில் - லதாங்கி

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

இந்த இடுகையில் நாம் கேட்கப்போகும் 'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது! Hats off Sanjay!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

உசாத்துணை:
* திரு. வி. சுப்ரமணியம் - சுருதி இதழ்
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் - சென்னை ஆன்லைன்