Monday, June 15, 2009

Humility - தமிழில் என்னங்க?

Humility - ஆங்கிலத்தில் அழகானதொரு சொல்!

தமிழில் எப்படிச் சொல்வது?

அகராதியைப் புரட்டிப் பார்த்தால், அது சொல்வது:

தாழ்வு
பணிவு/பவ்யம்/தலைவணக்கம்
செருக்கின்மை

இவற்றைக் காட்டிலும், எனக்குப் பிடித்தது : விநயம்!

அட, விநயம், என்ன அழகான சொல்!

"வித்தைக்கு அழகு விநயம்" என்பார்கள்.

பல கற்று அறிந்து இருந்தாலும், அதனால் தலைக்கனம் இல்லாமல் இருப்பது விநயம்.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
என்பார் வள்ளுவப் பெருந்தகை.

ஆனால், பல சமயம் இதனை தாழ்வு மனப்பான்மை/கோழைத்தனம் எனச் சிலர் குழப்பிக் கொள்வதும் உண்டு.

எப்படி இதனில் வேற்றுமை அறிவது?
விநயம் உண்டெனில், அங்கு தாழ்வில்லை. ஒருவர் தன் பெருமையை விட்டுவிடுவதில்லை. ஆனால், அப்பெருமை தரும் கர்வமோ, அகங்காரமோ அவரிடம் இருப்பதில்லை. மாற்றாக, அவரிடம் தன்நம்பிக்கை சுடர் விடும்.
நிறைய சாதித்தவர் பெற்றிருக்கும் நிறைவு, அவரது விநயத்தினால் வெளிப்படும்.

இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும்போது, கோபத்தினால் ஏற்படும் இறுமாப்பு, அவர்களின் வாக்குவாதத்தினையே வளர்க்கிறது. பெரும்பாலும், இதனால், வேறுப்பும், வேதனையுமே மிஞ்சுகிறது. அதற்கு பதிலாக, அவர்கள் விநயத்துடம் அணுகினால், அங்கே நன்மையே பயக்கும்.

எந்த அளவிற்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அவர்களிடம் விநயம் அதிகமாக வெளிப்படும். ஏனெனில், அகங்காரம் குறைய, ஈகோவின் வெளிப்பாடுகள் குறைய, விநயம் அங்கே அதிகம்.

நமது சமுதாயத்தில், மற்றவர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களான பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது தலைவர்கள் போன்றவர்கள், விநயத்தோடு செயல்படுவது அவசியம். ஏனெனில், சமுதாயத்தில் இவர்களின் பணி, இறைவனின் பணிக்கு ஒப்பானது. தங்களுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதே சமயம், அவர்கள் விநயத்தின் அவசியத்தினை அறிந்திருப்பார்களா? உண்மையான அன்பிருந்தால், அறிந்திருப்பார்கள். அன்பு, இறைவனின் பணிக்கு ஒப்பானதொரு செயலினை ஆற்றிடும் பொறுப்பினை அவர்களுக்குத் தந்திடும். அன்பு வார்த்திடும் விநயமானது மனிதனை இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு கொண்டு செல்லக் கூடியது.

இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு மட்டுமல்ல, இறைவனை உணரவும், இறைவனை அடையவும், வழி வகுக்கிறது.

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே.
- திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை.

"நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய்."
என நாவுக்கரசர் நவில்வது இவ் விநயத்தினால்தான்.