Sunday, June 05, 2011

திருமுருகன் உதித்தனன் உலகம் உய்ய!

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்

"பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிலம்பு உரைக்கும் ஈசனே, அறுமுகச் செவ்வேள் முருகனாக உதித்தனனாம். அருணகிரியார் முருகனை "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்பார். காளிதாசன் "குமார சம்பவம்" எனப் பெயரிட்டதுபோல; அந்த நிகழ்வை விளக்கும் காண்டத்தைக் கந்தபுராணத்தில் "உற்பத்திக் காண்டம்" எனப் பெயரிட்டுள்ளது போல;- உலகம் உய்வதெற்கன ஈசனே குழந்தை வடிவம் கொண்டு தோன்றிய அரும்பெரும் நிகழ்வு அஃது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க! என்றார்.
-கந்தபுராணம்

தேவர்கள் ஈசனிடம் வந்து வேண்டுகிறார்களாம். எப்படி? "வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்!”. நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும் என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்வது - திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

முகங்கள் ஆறு:
முருகனுக்கு முகங்கள் ஏன் ஆறு?

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆதி அருணாசலம் அமரும் ஈசனாகவே குமரக்கடவுள் இருப்பதால், முருகனுக்கும் ஆறு முகங்கள்.
சிவனுக்கும் அறுமுகங்களா? சிவனுக்கு ஐந்து முகங்கள் தானே என்றால், ஆம் பொதுவாக ஐந்து முகங்கள்தான்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் தவிர, உள்நோக்கி இருக்கும் 'அரோமுகம்' என்றொரு முகமும் சொல்லப்படுகிறது - அது ஞானிகளுக்கு மட்டுமே புலப்படுமாம். அந்த அரோமுகம் வெளிப்பட்ட நேரத்தில், ஆறு முகத்தின், ஆறு நெற்றிக்கண்ணில் இருந்தும் வெளிப்பட்ட ஆறு அருட்பெரும்ஜோதிகளாக வெளிப்பட்டனவாம்.
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பானது - ஆறு ஜோதிகளாய், ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என ஐம்பெரும் பூதங்களால் சரவணப்பொய்கைக்கு வந்து, ஆங்கே உதித்தனன் திருமுருகன்.
(தந்தையின் முகம் ஐந்து + தாயின் முகம் ஒன்று - இரண்டும் சேர்ந்து ஆறுமுகன் என்றும் சொல்வதுண்டு.)

கரங்கள் பன்னிரெண்டு, கண்கள் பதினெட்டு
சிவனுக்கு கரங்கள் பத்து. சிவனைவிடப் பெருமை வாய்ந்தது அவனது முருகப் பெருமான் தோற்றம் எனக்குறிக்கவோ அவனுக்கு பன்னிரெண்டு கரங்கள்!
சூரியன், சந்திரன், அக்னி - இவை மூன்று கண்களாக ஒவ்வொரு முகத்திலும் என, அவனுக்கு மூவாறு கண்கள்.
முன்பொரு பதிவிலும் பதினெட்டு கண்களைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம்.

அப்படியாக ஆங்கு வந்து கந்தப்பெருமான் உதித்ததன் பொருள் சூரபதுமன் வதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் உய்யவதற்கான உக்தியினைத் தந்திடத்தான்.

அப்படிப்பட்ட கந்தபெருமாளை நாவினிக்கப் பாடும் திருப்புகழ் சொல்வது:

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது

(ஓலமிடும் மறைகளால் 'ஒன்றென' உரைக்கப்படும் பரம்பொருள் அது. மேலைப் பெருவெளிதனில் ஒளிர்கின்ற பரஞ்சுடர் அது. ஓதும் நூல்களால் சொல்லப்படும் மூன்று வழிகளை பின்பற்றுபவர்களாலும் "இது தான் அது" என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு துரிய நிலைதனைக் கடந்தது பரம்பொருள் அது.)

போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
(அருவம், உருவம் - இரண்டு நிலைகளிலும் இருப்பது அது.
பிரபஞ்சம், உடல், உயிர் - என எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பது அது.)

சால வுடைய தவர்கண்டு கொண்டது
(சிவஞான சித்தி மிகுந்த தவயோகியர் கண்டுகொண்டது அது.)
மூல நிறைவு குறைவின்றி நின்றது
(மூலப் பொருளாய், குறைவு ஏதுமின்றி நின்றது அது.)
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
(சாதி, குலம் போன்றவை அற்றது.)

சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
(அனுபவம் வாய்ந்தவர்கள் ஒடுங்கும் வீடுபேறு பரமானந்தக் கடலான,
நின் பாத மலர்களை, நான் அடையப் பெறுவேனோ.)

வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
(பாலன், குமரன், குகன், கந்தன், கிரொஞ்ச மலையைப் பிளந்தோன், மயில் வாகனன்
என்றெல்லாம் துதித்துப் போற்றிய இந்திரன் கடும் துயரத்தைக் களைந்தவனே)

வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
(சந்தனம், மங்கலம், கடகம் முதலியவற்றை அணிந்த புயங்களை உடையோனே,
சிங்கம் போன்ற கம்பீர அழகு பொருந்தியவனே,
வெற்றி சூடி போர்களத்தில் சிறந்த சிகாமணியே வயலூரா)

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
(ஞாலத்தின் முதல்வியும் இமவான் மகளுமான நீலி/ கௌரி,
குண்டலினி சக்தியான அம்பிகையாம்)

நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
(நாத வடிவினளாள், அகிலம் எங்கும் பரந்தவள்
அன்னை பராசக்தி தந்தருளிய பெருமாளே)

6 comments:

 1. முருகா!
  உனக்கு நான் முதலே!:)
  எனக்கு நீ முதலே!
  வஞ்சி தந்தருள் பெருமானே!

  ReplyDelete
 2. முதலுக்கு வணக்கம், வருக கே.ஆர்.எஸ்!

  ReplyDelete
 3. பிறந்ததிலிருந்தே நான் ஒரு கத்தோலிக்க கிறித்துவன். படித்ததும் convent பள்ளியில்.... ஆங்கிலத்தில்... கோயம்புத்தூரில். இருந்தாலும், தமிழ் இரண்டாம் மொழியாக கொண்டதனால் முருகப் பெருமான் பற்றிய பாடல்களும் அதன் பொருள்களும் நுகரும் பாக்கியம் கிடைத்தது. இந்தப் பாடல்களை இன்று இந்தத் தளத்தில் பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பாயாசத்தில் முந்திரியும் திராட்சையும் இழைத்து கொடுத்தது போல அருமையான தமிழ் சொற்களாலும், பக்தியின் உச்சத்தில் உதிர்த்து எழும் எண்ணங்களின் ஆழமாக இருக்கட்டும், முருகப்பெருமானின் பாடல்களின் தீன்சுவையே தனி அலாதி தான் போங்கள். தொடரட்டும் தொண்டர்கட்கு உங்கள் தமிழ்ப்பணி.

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி அருள் சார்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. A.BALAMURUGAN KAMAKKUR
  உங்களுக்கு நன்றி!நன்றி!நன்றி!

  ReplyDelete
 6. தேன் கலந்து சாப்பிடகொடுத்தது போல் இருந்தது

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails