Wednesday, May 07, 2008

தேறுவது எப்போ நெஞ்சே?

தமிழிசை தழைத்திட தமிழ்ப்பாடல்களை இயற்றித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு.நீலகண்ட சிவன் (1839-1900). 2000 க்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார் இவர். தமிழ் மூவர் இயற்றிய பாடல்களை படித்து வளர்ந்த கன்னியாகுமரிக்காரரான இவர், சிவ-பார்வதி தரிசனம் கிடைக்கப் பேறு பெற்றவர். இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபநாசம் சிவன் அவர்கள்!

நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய "தேறுவதெப்போ நெஞ்சே..." பாடலை இங்கு பார்க்கலாம். நீந்திக் கரை ஏற இயலாத பெருங்கடலென பிறவியினைச் சொல்வார்கள் பெரியோர்கள். பிறந்த முதலே, புலன்கள் சொல்லித்தரும் ஈர்ப்புகளில் நம்மை இழந்து விடுகிறோம். இந்த உலகில் சேர்க்கும் செல்வத்தோடும், சொந்த பந்தங்களுடனும், இன்ன பிற விருப்பங்களுடனும் இருக்கமானதொரு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த இணைப்பில் தவறேதும் இல்லை. ஆனால் அவையெல்லாம் நிலையில்லாதவை என்பதினை நாம் நமது சுயலாபத்திற்காக எளிதாக மறந்து விடுகிறோம். நிலையில்லா உலகில் நிலைப்பதெப்போ? நீந்திக் கரை ஏறுவதெப்போ? எல்லா இணைப்புகளையும் அறிந்திடும் அதே புத்தியில் ஒரு ஓரத்திலாவது, நிலையான நீலகண்டனின் நினைப்பிருந்தாலே போதுமே. அகந்தை அழிந்திட, சித்தினை அறிந்திடும் புத்தியினை நெஞ்சில் வார்க்கும் அவன் கருணையைத் தேடிட, கடைத்தேறாதோ பிறவி?
வேதம் நான்கும் சொல்லிடும் நாதன் நாமமே மெய்ப்பொருளாக இருக்கையில், வேறேன்ன வேண்டும்?

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே.

(மூன்றாம் திருமுறை - திருஞான சம்பந்தர் தேவாரம்).

இப்போது திரு.நீலகண்ட சிவனின் பாடலைப் பார்ப்போம்:
------------------------------------------------------------------------------------------
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி

எடுப்பு
தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை
ஏறுவதெப்போ நெஞ்சே

தொடுப்பு
கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான
காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

முடிப்பு
மண்ணே பொருளே யெந்தன் மனைவி மக்களேசொந்த
கண்ணே நீங்களே அல்லால் கதியில்லை என்றிருந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

உடலை நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி
மடமை பெருக நின்று வனமிருகம் போல் அலைந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல
கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜன்மம்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட, இந்தப் பாடலை கேட்கலாம்:

தேறுவதெப்போ நேஞ்சே?

-------------------------------------------------------------------
நீலகண்ட சிவன் இயற்றிய பாடல்களில் இதர புகழ் பெற்ற பாடல்கள்:
சம்போ மகாதேவா,
உமைக்குரிய திருமைந்தா,
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை