Saturday, September 29, 2007

ஸ்மார்த்தம் - ஒரு அறிமுகம்

சென்ற பதிவில் அருந்ததி என்பவர் ஸ்மார்த்தம் பற்றி விரிவாக எழுதும்படி கேட்டிருந்தார். மேலும் விக்கிபீடியாவிற்கும் கட்டுரை ஒன்று தேவைப்படுகிறது. ஆகவே, இதோ இங்கே எனக்கு தெரிந்தவற்றை கோர்த்து விடுகிறேன்.

ஸ்மார்த்தம் என்பது பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன்் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில்் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.

தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும்.

முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.

ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம்.


ஸ்மார்த்தர்களின் அன்றாட செயல்பாடுகள்:

1. ஸ்நானம்

2. சந்தியாவந்தனம்

3. ஜபம்

4. பூஜை

5. உபாசனை

6. அக்னிஹோத்ரம் அல்லது அக்னிகிரையம்

இவை தவிர அமாவாசை தர்பணம் மற்றும் ஸ்ரார்தம் செய்வதும் இவர்கள் வழக்கம்.

இவர்கள் வழி செல்லும் மறைகள்:

வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்

மேலும் விவரம் அறிய இந்த தளங்களைப் பார்க்கவும்:

* ஆதி சங்கரர் - அத்வைதம்
* அத்வைத வேதாந்தம்
* சிருங்கேரி சாரதா பீடம்
* சங்கர சம்பிரதாயம்
* இந்து மதத்தின் நான்கு பிரிவுகள்
* ஸ்மார்தர்களின் ஷண்மதம்
* ஸ்மார்த்தம்

Friday, September 28, 2007

இறைவழி நான்கு

உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று.

இப்படி பெருமைகள் பலவும் என்றாலும், பலப்பல சிறுமைகளும் இருக்கத்தான் இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் தானாக தோன்றிய வழிகளிலும், நம்பிக்கைகளிலும் உண்மைகள் பல இருந்தாலும், வேண்டாத, ஒவ்வாத நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற தேர்வு அவரவர் சுயமாக எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், இந்திய இறைவழிகள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன என்ற அரிச்சுவடி அனைவரும் அரிய வேண்டிய ஒன்று.

இந்து மதத்தின் நான்கு இறைவழிப் பாதைகள் பற்றி என் கற்றலிலும், கேட்டலிலும் அறிந்தவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றியெல்லாம் எழுதி பட்டவர்கள் பலர் இருப்பினும்!

இறைவழியில் முக்கிய நான்கு - சைவம், சக்தி வழிபாடு, வைணவம், ஸ்மார்தம்

சைவம்: சிவன் முழு முதல் கடவுள். அறநெறியும், ஞானமும் பெற சத்குரு துணை நாடுவர். ஆலயம் சென்று தொழுவர். யோக நெறியில் ஆழ்ந்து, தனக்குள்ளே இருக்கும் ஈசனை கண்டுணர்ந்து, அவனோடு ஒன்றர கலப்பதே அவரதம்் நோக்கம்.

சக்தி வழிபாடு (சாக்தம்): சக்தியே முழு முதல் கடவுள். சிலருக்கு அவள் சாந்த ஸ்வரூபி. பலருக்கு அவள் பத்ரகாளி. ஓதுதல், மந்திர தந்திர தாந்ரீகங்கள், சக்கரங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி வழிபடுவர்.

வைணவம்: திருமாலே முழு முதல் கடவுள். திருமாலின் அவதார புருஷர்களில் முக்கியமாக கண்ண பெருமானையும், இராம பெருமானையும் வணங்குவர். இவர்களிடம் ஆழ்ந்த இறை பக்தியைப் பார்க்கலாம். இறை அடியார்கள், ஆலயங்கள் மற்றும் மறைகள் வைணவத்தின் தூண்கள்.

ஸ்மார்த்தம்: முழு முதல் கடவுளை ஆறு வடிவங்களில் வழிபடுவார் - அவை: கணேசர், சிவன், சக்தி, திருமால், சூரியன் மற்றும் முருகன். பக்தியோடு சேர்ந்த ஞான வழிதனில், யோகம் மற்றும் த்யானம துணை கொண்டு, இறைவனை புரிந்து கொண்டு அவனை அடைதலை வழியாய் மேற்கொள்வர்.

்இப்போ, ஒரு சில பொதுவான விஷயங்களில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?


இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:

சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.

ஜீவனும், பரமனும் பற்றி:

சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத முக்தி அடையலாம்.
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.

பயிற்சிகள்:

சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதகங்களை செய்வது.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.


மறைகள்:

சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள்.
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.

பரவியுள்ள பகுதிகள்:

சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.

Tuesday, September 25, 2007

யாரிந்த நடராஜன்?

எந்த நடராஜனைப் பற்றி இந்த பதிவென்று பார்க்க இந்தப் பதிவின் பக்கம் வருகை தந்த வாசகருக்கு என் வாசக சொல்வதென்ன? எத்தனையோ நடராஜன் இங்கே இருந்தாலும் எல்லா நடராஜனுக்கும் ஆதியாய் ஆதி சிவன்் - ஆனந்த தாண்டவன் - தில்லையின் கூத்தன் - தென்னவர் தலைவன் பற்றித் தான்!

இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜ சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன என வரலாறு சொல்வதைப் படித்திருப்போம். நடராஜ சிலை முழுதும் குறியீடுகளாக நிறைந்திருப்பதை பார்க்கலாம்.

அந்தக் குறியீடுகளில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.

ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.



இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?

முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.



பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில்:

சேஷநாகம் - கால சுயற்சியையும்
கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை - அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.


பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.


வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.


தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது.


இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.


அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!



அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
- பன்னிரெண்டாம் திருமுறை

Friday, September 21, 2007

ரோஜா மணம்


சென்ற வெண்பா முயற்சியைத் தொடர்ந்து அடுத்த முயற்சி:

இந்த முறையும் தலைப்பும் ஊக்கமும் வாஞ்சிநாதன் அவர்களிடம் இருந்தே:
ரோஜாப்பூ மல்லிகை ஆன கதை

ரோஜாவை மல்லிகை என்றழைத்தால் மாறிடுமா

ரோஜாவின் வாசனை? வாசனையும் நாதன்

தருவித்த போது மலர்கொண்ட நாமத்

தினாலல்ல பூவின் மணம்!

Monday, September 17, 2007

தட்டாமல் தங்கும் தளை?

"இயன்றவறை இனிய தமிழில்" பதிவில் வாஞ்சிநாதன் ஒரு தலைப்பைக் கொடுத்து வெண்பா வடிக்கச் சொன்னர். இதுவரை மரபில் பாட்டெழுதி பரிச்சயம் இல்லை. சரி இப்போதாவது முயன்று பார்ப்போமே, என்று முயன்றேன்:

பா எழுத கொடுக்கப்பட்ட கருத்து இதுதான்:

If it were possible to heal sorrow by weeping and to raise the dead with tears, gold were less prized than grief.

இந்த கருத்தை தமிழில் தர வேண்டும் - பாவாக.

முதலில் நான்கு வரிகள் வருமாறு மேற்சொன்ன கருத்தை கவிதை வடிவில் எழுதிக் கொண்டேன். அடுத்ததாக சீர்களை சீராக வேண்டும். தளைகள் தட்டாமல் தட்டிக் கொடுக்க வேண்டும்.

இதற்காக தெரிய வேண்டிய இலக்கணம் எல்லாம் இவ்வளவேதான்:

1. காய் முன் நேர்

2. விளம் முன் நேர்

3. மா முன் நிரை

4. ஓரசை / நான்கு அசை சீர்கள் கூடாது

5. கனி வேண்டாம்

6. கடைசி சீர் - நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடிய வேண்டும்.


ஆகா, இவ்வளவுதானா இலக்கணம் என்று தளைகள் தட்டாமல் பார்த்துக் கொண்டதில், விளைந்த பா:

புலம்பி அழுதால் மறைந்திடும் அன்பர்
திரும்பி வருவாரோ? கேளுமய்யா சுத்தசிவம்
அந்தோ வருகின் அழுகையும் விற்காதோ
ஆயிரம் பொன்னின் விலை.

மேற்சொன்ன பதிவுக்கு சென்றால் உங்களுக்கே தெரியும், எத்தனை பேர் எத்தனை வடிவாக, எத்தனை சரளமாக பா வடித்திருக்கிறார்கள் என்று. அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ முதல் முறை முயன்றதற்கு தேவலாம் என்று நினைத்திருந்தேன்.

பதிவாசிரியர் வாஞ்சிநாதன், பாவைப் பார்த்து விட்டு தன் மறுமொழியை பகிர்ந்தார்:


ஜீவா வெங்கட்ராமன், உங்களுடைய பா " அழுகையும் விற்காதோ ஆயிரம் பொன்னின் விலை" என்று முடிவது அழுத்தமாக இருக்கிறது (equivalent to a thousand golden exit lines!) ஆனாலும் எதுகையில் கவனம் தேவை. "அந்தோ" என்ற குறில்+ மெய் தொடக்கத்திற்கு எதுகை இல்லாவிட்டாலும் வேறாதாவது "குறில்+ மெய்" கொண்டு ஈற்றடியைத் தொடங்கினால்தான் பாவின் ஏற்றம் இறக்கம் சரியாக இருக்கும்
வெண்டளை தவறாமல் வருகிறதால் நீங்கள் தேர்ந்தவர் என்று தெரிகிறது.



தளையில் வெண்டளை என்றால் என்ன, பாவில் இதுவென்ன ஆசிரியப்பாவா, இவையெல்லாம் அடியேன் அறியேன்! ஆனால், முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றாயிற்று, இனி அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியதுதான்!


பின்னர் என் அப்பாவிடம் இந்த கவிதையை காட்டியதில் அவர் சொன்னது:


தொடங்குதல் எப்பொழுதுமே மங்கலமாயிருப்பது மரபு.
அதனால் தான் அந்தக்காலத்தில் அத்தனை புலவர்களும் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு எந்தக் காவியத்தையும் படைத்தார்கள்.
காவியம் என்று மட்டும் இல்லை, எந்த புது முயற்சியும் அப்படித்தான்.
அதனால் வேறு ஏதாவது வாழ்த்துக் கவிதை எழுதிவிட்டு, கவிதை எழுதத் தொடரலாம். இதற்கு முன் ஏதாவது எழுதியிருந்தால் சரி.


சரி, நாமும் கடவுள் வாழ்த்துப் பா எழுதாலாம் என துவங்க, எல்லா வெற்றிகளுக்கும் துவக்கமாய் இருக்கும் மூலதார முதல்வன், விநாயகனை முன்னிறுத்தி, இதோ என் அடுத்த முயற்சி:

சக்திமகன் வேழமுகன் என்றும் அருளிடுவாய்

முக்திதரும் நீள்பாதை ஒன்றில் நடந்திட

நீதருவாய் ஆனைமுகா தங்கத் தமிழ்தனில்

தட்டாமல் தங்கும் தளை.


நீங்களும் வெண்பா எழுத முயலலாமே?

தமிழ் மன்ற மையத்தில் வெண்பா எழுதவது பற்றி கட்டுரை ஒன்றும் இங்கே படிக்கலாம்!

சந்த நயத்துடன் புதுக் கவிதை எழுதவும், மரபிலக்கணம் தெரிந்திருந்தால் பெரிதும் துணை புரியும்.

"கவிதை எழுதப் பழகலாம் வாங்க" பதிவைப் படித்தாயிற்றா?

Friday, September 14, 2007

இலக்கியத்தில் ஆனைமுகன் துதி




இலக்கியத்தில் ஆனைமுகனை, வினைகள் அகற்றும் விக்னேஸ்வரனை துதித்து போற்றியவர் பலர்!
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கொடுத்து, அதற்கு பதிலாக சங்கத் தமிழ் மூன்று மட்டும் போதும் எனக் கேட்டு கணபதியுடன் 'வணிகம்' செய்த ஔவையைப் பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும். ஏனைய பலரும் கணேசனை துதித்து செய்யுள்களை இயற்றி உள்ளனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உங்களுக்காக இங்கே:


திருமந்திரம் - திருமூலர்


ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்்தினை

புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.



திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர்


பிடியதனுருவுமை கௌமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்

கடி கணபதிவர அருளினன் முகுகொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.


இரட்டை மணி மாலை - கபிலர்


திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்

பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.



விநாயகர் அகவல் - நக்கீரர்


வெண்ணீ றணியும் விமலன் புதலவர்

பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே

அரிதிரு மருகா அறுமுகன் துணைவா

கரிமுக வாரணக் கணபதி சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்

கண்ணே மணியே கதியே சரணம்

விண்ணே யொளி வேந்தே சரணம்


பெருந்தேவனார்

ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்

காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்

பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்

தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!


நம்பி ஆண்டார் நம்பி

என்னை நினைத்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் - புன்னை

விரசு மகிழ் சோலை, வியன் நாரையூர் முக்கண்

விரசு மகிழ் அத்தி முகத்தான்.


குமர குருபரர்

சீர்கொண்ட காசிநகர் சேர்துண்டி ராஜனெனும்

பேர்கொண்ட வைங்கரற்குப் பேசுபுகழ்த் - தார்கோண்ட

நற்றிருப்பாட் டீரைந்த்தும் ஞாலமிசைத் தொண்டரெலாங்

கற்றிருப்பார் மேலாங் கதி.


கந்தபுராணம்

மண்ணுலகத்தினிற் பிறவிமாசற

எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்

கண்ணுதல் உடையோர் களிற்றுமாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

திருஅருட்பா - இராமலிங்க அடிகளார்

முன்னவனே யானைமுகத்தவனே முத்தி் நலம்

சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே - மன்னவனே

சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின் தாள் சரண்.


திருப்பல்லாண்டு - சேந்தனார்

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்

மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.


உமாபதி சிவச்சாரியர்

வானுலகும் மண்ணுலகும் வாழ் மறைவாழப்

பான்மை தருசெய்ய தமிழ் பார்மிசை விளங்க

ஞானமத, ஐங்கர மூன்றுவிழி, நால்வாய்

ஆனைமுகனை பரவி அஞ்சலி செய்கிற்போம்