Friday, September 26, 2008

கனவில் வந்த கதைகள் : விழிக்குத் துணை

ன்றைக்கு அந்த ஆறு லேன் சாலையில் என் வாகனத்தை சீரானதொரு வேகத்தில் நிறுத்திப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து லேனில் சென்று கொண்டிருந்த திறந்த கார் என் கவனத்தை ஈர்த்தது. அந்த காரின் பின் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் 'Hello Uncle, Where are you? In Search of you - NORA.' அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த இளைஞன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டிருந்தவாறு, ஏதோ தாளத்திற்கு ஏற்றாற்போல் தலையை வேகமாக அசைத்தவாறு இருந்தான். அவனைப் பார்த்தவாறும், அந்த வாசகத்தை படித்தவாறும், ஒன்றும் புரியாமல், நானிருக்க, சற்றுத் தொலைவில் இன்னொரு லேனில் வந்து கொண்டிருந்த காரில் இருந்து ஒரு நபர், இந்த இளைஞனை நோக்கி கையசைத்து, சமிஞ்சை காட்டினார். ஆனால் அந்து இளைஞனோ அதை கவனிக்கவில்லை. லேசாக அவர் காரின் ஹார்னை அழுத்தி, ஒலி எழுப்பியும், அவனது கவனத்தை அவரது பக்கம் திருப்பிட இயலவில்லை. சற்று நேரத்தில் அந்த இளைஞனின் கார், அடுத்த சாலைத் திருப்பத்தில், திரும்பிவிட, அவர் முகமும் அந்த கார் சென்ற பக்கமாய் திரும்பிப் பார்த்தது. அவரது முகத்தை எங்கோ பார்த்ததுபோல் இருந்திட, அவரைக் கூர்ந்து கவனித்தேன். ஆ, ப்ரொபசர் மனோகர் தான் அவர், எனக் கண்டுகொண்டேன்.

அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டேன். அன்றைக்கு மாலை, கந்தர் அலங்காரப் பாடல்களை படித்து, ஒரு பாடலுக்கு விளக்கத்தினை கூகிளில் தேடிக்கொண்டிருக்கையில், மீண்டும் அந்த இளைஞன் நோராவைச் சந்திக்க நேர்ந்தது - பதிவர் நோராவாக! ப்ரொஃபைலில் இருந்த அவனது புகைப்படத்திலிருந்து, அவன் அன்று காரில் பார்த்த அந்த இளைஞன்தான் என்பதையும் உறுதிப் படுத்தியது. அவனது ப்ளாக்கில் இருந்த பதிவுகளைப் பார்த்த போது, சில வருடங்களுக்கு முன், நிறைய ஆன்மீகப் பதிவுகளை, குறிப்பாக முருகன் பற்றி நிறைய எழுதி இருந்ததெல்லாம் பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கலானேன். சடாரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இந்த இளைஞனுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி, இவன் தேடும் அங்கிள் பற்றியான விவரத்தை தெரிவிக்கலாமே என்று.

அவனுக்கு மின் அஞ்சல் எழுதும் போதுதான் தோன்றியது, இந்த இளைஞனை இந்த சாக்கிட்டு நம் வீட்டில் விருந்துக்கு அழைத்து, அவனிடம் கந்தர் அலங்காரம் பற்றி கொஞ்சம் பேசித் தெரிந்து கொள்ளலாமே என்று! அப்படியே மின் அஞ்சல் தட்டி விட்டேன். என் வீட்டு முகவரியோடு. அந்த இளைஞனிடம் இருந்து, சிறிது நேரத்தில் பதில் வந்தது. அவனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தான் என் வீடு இருக்கிறதென்றும், அந்த வழியில் வந்து நாளை மாலை என்னைப் பார்ப்பதாகவும்.

அந்த மாலையும் வந்தது. ப்ரொபசர் மனோகரின் வீடு இருக்கும் இடம் எனக்குத் தெரியுமாதலால், விருந்துக்குப்பின், நோரோவை, நானே ப்ரொபசரின் வீட்டுக்கு அழைத்துப்போவதாக திட்டம். விருந்தின் போது பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். விருந்தும் முடிந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ப்ரொபசர் மனோகரின் வீட்டுக்குப் புறப்படலாம் என்று பேசிக்கொண்டோம். அதற்குமுன் அவரிடம் தொலைபேசியில் நாங்கள் வருவதை தெரிவிக்க கூப்பிட்டோம். முதலில் நான் அவரிடம் பேசிவிட்டு, தொலைபேசியை நோராவிடம் தந்தேன்.

அவர்கள் உரையாடத் துவங்கினார்கள்.
'அலோ அங்கிள். போன வாரம்தான் இந்த ஊருக்கு வேலை மாற்றலில் வந்தேன். உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும் இல்லாததால் எப்படி தொடர்பு கொள்ளுவதென விழித்துக் கொண்டிருந்த போது, இப்படி காரில் விளம்பரப்படுத்தலாம் என தோன்றிற்று. சின்ன உலகம் பாருங்கள், கை மேல் பலன்' என்றான் நோரா.
இப்படியாக தொடர்ந்த பேச்சினை கவனிக்காமல் எதோ செய்து கொண்டிருக்கும் என் கவனத்தையும் ஈர்த்தது, தொடர்ந்த அவர்களது பேச்சு.
'அங்கிள், இன்றிறவே நமது Reuniuon-ஐக் கொண்டாடலாம். வரும்போது என்னென்ன பொருட்கள் வாங்கி வர சொல்லுங்கள்....ஆங்... முக்கியமாக ஒரு 24 பேக் பியர் கேன், அப்புறம் காண்டோம் - இதெல்லாம், வாங்கி வந்துடறேன்...மஜா பண்ணிடலாம்' என்றான் நோரா.

அவர்கள் பேச்சு முடிந்த கையோடு, நோராவின் ப்ளாகைப் பற்றியும், கந்தர் அலங்காரம் பற்றியும் பேச்சைத் துவங்கினேன், நான்.
'அதெல்லாம் அந்தக்காலம். அப்போது எங்கள் தமிழாசிரியரின் தூண்டுதலால், தமிழார்வம் ஏற்பட்டு, நிறையப் படித்ததுண்டு. அகராதி கொண்டு, பல பழந்தமிழ் பாடல்களின் பொருளை ஷெர்லாக் ஹோம்ஸ் போல தேடிக் கண்டுபிடித்து, எழுதுவதில் ஒரு 'திரில்' இருந்தது.' என்றான் நோரா.
'இப்போது...?', என ஆவலோடு வினவினேன் நான்.
'இப்போ, பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பயணிக்கிறேன். வாழ்க்கையை அனுபவிக்க, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். செல்லும் இடத்தில் நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' என்றான்.
'சரி. அனுபவித்துக் கொண்டே இருக்கும் போது, திடீரென ஒருநாள் இந்த அனுபவிப்பையெல்லாம் துறக்க வேண்டும் என்றால் இயலுமா' என வினவினேன்.
'ஏதற்காக துறக்க வேண்டும்?' என்றான் அவன்.
'உனக்கும் உலகுக்கும் இருக்கும் தொடர்பு எந்த அளவில் என்பதைக் கணிக்க... அதைவிடு. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லேன்.' என்றேன் நான்.
'நல்லா திளைத்து விட்டால், எப்படி துறக்க இயலும்?' என்றான்.
'அப்போ கற்றதனால், ஆய பயனென் கொல்?' என்றேன்.
'ஓ, நீங்க அங்கே வரீங்களா?. இந்த தமிழ் இருக்கே, அதுவும் மது போல. அதைக் கற்க கற்க கிடைத்த இன்பத்தில் திளைத்தேன். அது தந்த இன்பம் போல், இப்போது இன்னும் பலவும் இருக்கக் கண்டேன். எனக்கு இவற்றில் வேறுபாடில்லை.' என்றான்.
இதுபோல மொழியின் வசத்தில் சிக்கி, அதைத்தாண்டி செல்ல இயலார் நிறைய பேர் உண்டு' என என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், அவனிடம் சொல்லவில்லை. ஆனால், இதை மட்டும் சொன்னேன்.
'இருக்கட்டும். எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும். உனக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும் கந்தர் அலங்காரச் செய்யுளையும், அப்படி தேவைப்படும்போது, மனதில் நினைத்துக்கொள்:
“விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”
விழிக்கு - மொழிக்கு - பழிக்கு - தனி வழிக்கு - இவை யாவைக்கும், இன்னும் நீ சாதிக்க விரும்பும் இன்ன பிறவற்றிற்கும், அவனைத் துணையாக கொண்டால், இயலாதது இல்லையப்பா.' என்றேன்.

அவன் என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த தருணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுபோல், 'என்ன ப்ரொபசர் வீட்டுக்கு கிளம்பலாமா?' என்றேன். அவ்வாறாகவே செய்தோம்.

கனவும் கலைந்தது.

மெய்ம்மை?: சுட்டி!

Wednesday, September 24, 2008

என்றைக்கு சிவ கிருபை வருமோ?

ளிதாகச் சொல்லி விடுவோம், முகாரி இராகத்தைப் பற்றி - அது சோக உணர்வினைத் தருவதற்கு ஏற்ற இராகம் என்று. ஆம் என்றாலும், மிகவும் உருக்கமான வேண்டுதலுக்காகவும் இந்த இராகத்தினை பயன்படுத்துவதுண்டு. திரு. நீலகண்ட சிவன், இயற்றிய இந்தப் பாடலில் முகாரியைப் பார்க்கலாமா. இவர் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே' பாடலை முன்பொரு இடுகையில் பார்த்திருக்கிறோம் என்பதையும் நினைவு கூர்கிறேன் இங்கே. இவரைப் பற்றி சுவையான கதைகளும் இருக்கு, அவற்றை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.

இராகம் : முகாரி
தாளம் : மிஸ்ர சாபு
இயற்றியவர் : திரு.நீலகண்ட சிவன்
பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி

என்றைக்கு சிவ கிருபை...


எடுப்பு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? - ஏழைக்கு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? - ஏழை,
என் மன சங்கடம்(/சஞ்சலம்) அறுமோ?

தொடுப்பு
கன்றின் குரலைக்கேட்டு கனிந்து வரும் பசுபோல்
ஒன்றுக்கும் அஞ்சாத என் உளத் துயரம் தீர்க்க
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

முடிப்பு
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி கொண்டாடிக் கொள்வார் - தனம்
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி தொண்டாடிக் கொள்வார் - தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார் - இந்த கைத்தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தை தள்ளி நற்கதி செல்ல
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

பாடல் முழுதும், என்னமாய் எதுகை வந்து, அழகாய் வடித்திருக்கு, இந்தப் பாடலை, என்று வியக்காமலிருக்க முடியவில்லை. தொடுப்பில் இவர் சொல்லும் வரிகளை கவனிக்க. 'இளங்கன்று பயமறியாது' என்பதுபோல, ஒன்றுக்கும் அஞ்சாமல் நான் உன் பின்னே தொடர்ந்தாலும், என்னுள்ளே துயரம் தீர்ந்த பாடில்லை என்கிறார்.

சில நாத்தீக நண்பர்கள் கேட்பார்கள், கிண்டலாக. நீங்கள் தான் ஆன்மீகவாதியே - உங்களுக்கு துயரமே இருக்கக் கூடாதே என்று. துயரம் இல்லாமல் இருப்பதற்கல்ல ஆன்மீகம். துயரை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை அளிப்பது ஆன்மீகம். துயர் முடிவது, தான் என்பதே இல்லாமல் இருக்கும்போதுதான். இதனை உணர்த்துவதுதான் ஆன்மீகம். அந்த துயரம், எப்போதைக்குமாக, முடிவாக, முடிவது எப்போதென்றால், சிவ கிருபை வந்தென்னை தடுத்தாட்கொளும்போது. அந்த நிலை வருவது எப்போது என்கிறார், சிவன் இப்பாடலில்.

இப்பேதை உலகில், பொருளுக்காக பொல்லாத செயலை எல்லாம் செய்து, பெரும் பாதகப் பழிகளில் உழன்று வரும் மனித உலகத்தைப் பார்த்து, சண்டாள உலகம் என வெறுப்பதினை, சரண அடிகளில் காணலாம். உறவு என்று சொல்லி, ஓடி வரும் மனிதர்கள் நம்மை போற்றிக் கொண்டாடுவர், பலப்பல தொண்டாற்றுவர். ஆனால், நம் கையில் இருக்கும் செல்வம் குறைந்து போனாலோ, முகமெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார் என்பதனைக் கவிஞர் அழகாகச் சொல்கிறார்.

நற்கதி என்னும் பேறினை அடைய என்றைக்கு சிவ கிருபை வருமோ?

உசாத்துணை:
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் @ சென்னை ஆன்லைன்.காம் தளம்

Thursday, September 18, 2008

இப்பேர்பட்டவரு யாருங்க? : குளிர்மழை

என்னவோ போங்க, இவரை இப்படியெல்லாம் சொல்லறாங்க, யாரு இவரு? கிரிதாரியாமே, பெரிய உபகாரியாமே, அப்புறம் சக்ரதாரியமே, அப்படிப்படவரு யாருங்க?

கிராமத்து அதிகாரி சரி, அது என்ன கிரிதாரி? கிரின்னா மலையாமே. மலைக்கு அதிகாரியா?, அல்லது மலையை தூக்கியவரா? ஓ, தன் சுண்டு விரலில், கோவர்த்தன மலையைத் தூக்கி நிறுத்தி, அங்கே இருக்கிற கிராமம், குளிர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படாம, மலையையே குடையா பிடிச்சவாரா! ஓகோ!

அப்புறம் என்ன சொல்லறாங்க, உபகாரி?, பெரிய உபகாரம் செஞ்சவராமே - அப்படி என்ன செஞ்சாரு? ஓ, கதறி அழைத்த பெண்ணின் மானத்தைக் காத்தவராமே. ஆமாங்க அது பெரிய உபகாரம் தான்.

இன்னமும் சொல்லறாங்க என்னவோ, சக்ரதாரி என்று. சக்கரம் கொண்டவரு என்ன செஞ்சாரு?. பிளிரு கேட்டபோது, பதறிப்போய் காப்பதினாராமே. அது என்ன பிளிறு, ஓ அதுவா, இந்த யானைகள் கத்துமே, அந்த சப்தம் தானே பிளிறு.
அட, களிறுனா யானை இல்லையா. களிறு - அதன் சப்தம் - பிளிறு : என்ன சொற்பொருத்தம்!.
அட, ஆமாம், அன்று, முதலை தன் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தபோது, அக்களிறின் பிளிரிடும் சப்தம் கேட்டு ஓடி வந்து, தன் சக்கரம் விட்டு, அந்தக் களிறைக் காப்பாற்றினாராமே!

இப்பேர்பட்டவரு, யாருங்க, கொஞ்சம் படம் போட்டுக் காட்டுங்களேன்?

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி:

துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி:

பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி:


ஓ, அப்படியா, இவரு கிட்ட நாம என்ன கேட்கலாம்?,

வளர்த்தென்னை இங்கு பரிபாலி. என்னை உன்பால் மிகுந்த அன்பு காட்டுமாறு வளர்த்து விடு.
உன் நாமம் அதைப்பாடி, நற்கதி பெறும் வழிகாட்டு.
களிறு மீட்டதுபோல், களபம் என் அறியாமை போக்கிடு.
துகில் மீட்டியதுபோல், என் அறிவினை மீட்டிடு.
கூக்குரல் கேட்டிட, வந்து காத்திடு.

குடை பிடித்த கிரிதாரி, துகில் மீட்டிய உபகாரி, களிறு மீட்ட சக்ரதாரி என்னை இங்கு பரிபாலி!. நம்ம தமிழ் மறை என்ன சொல்லுது பார்ப்போமா:

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
- நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (3042)

...
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே.
- தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (915)

ஆமாங்க, நீந்திக் கடக்க முடியாத, பிறவிக் கடலைக் கடக்க இவர் உதவியை நாடினால், கடக்க முடியுமாமே.
அலோ, சாரு,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
நேரா வந்து இங்கே என்ன பரிபாலிக்கணுமுங்க!

விருத்தம்

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி,
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி,
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி.


பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி
குளிர் மழை

Monday, September 15, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பனிரெண்டு

ஆத்ம போதம் பா 47:
நன்று தனையறிவின் ஞானியாம் யோகியும்
ஒன்றுமெலான் தன்னில் உறுவதை - ஒன்றான
தானெல்லாமாய் உளதை தன்ஞானக் கண்ணினாற்றான்
காண்பான் என்றே தறி.
~~~
உண்மையாகவே தான் யார் என அறியும் யோகியும், தன்னில் தோன்றும் பேரின்பத்தை அறியுங்கால்,
எல்லாப் பொருட்களும், எல்லா பெயர்களும், எல்லா வடிவங்களும், இறுதியில் ஒன்றே என, ஒன்றாக தன்னில் வந்து இணைவதைக் காண்பான்.
அவனைத்தவிர வேறொரு பொருளோ, உயிரோ எதும் இல்லை என்பதை தன் ஞானக் கண்ணால் காண்பான்.
~~~
இதையே, வள்ளலார், பதினொன்றாம் திருஅருட்பாவில் "நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை..." என்பார்.
~~~
தன்னைத்தவிர வேறொருவரையும் காண இயலாத ஞானியால் எப்படி இன்னொருவரிடம் போய், தான் கண்டதைச் சொல்ல இயலும்? கண்டவர் விண்டிலார் அல்லவா!.


ஆத்ம போதம் பா 48:
ஆன்மாவே இவ்வுலகமெல்லாம் ஆகும் அற்பமும்
ஆன்மாவுக்கு அன்னியமாய் இல்லை - ஆன்மாவாய்க்
காண்பன் எல்லாமுங் கடாதிகள் மண்ணின்வேறாய்க்
காண்பதும் உண்டோ கழறு.
(கடாதிகள்: கடம் போன்ற மண்பாண்டங்கள்)

இவ்வுலகும், எவ்வுலகும், அண்ட சராசரமும், இவ்வான்மாவேயாகும்.
மிக மிக நுண்ணிய அணுவும், ஆன்மாவில் இருந்து வேறில்லை.
- இப்படி, எல்லாமும் ஆன்மாவாய்க் காண்பவனுக்கு எப்படி எல்லாம் ஒன்றாய் இருக்கும் என்றால்:
மண்பானை போன்ற மண்ணாலான பாண்டங்களில், மண்ணைத் தவிர வேறொன்றும் இல்லாமல் இருக்கிறதோ அதுபோல.
~~~
இதைப்போலவே, கபீரும்: மலையும் கடுகும், அவனுக்குள் அடக்கம் எனச்சொல்லியிருப்பதை,
திரு.கபீரன்பன் இங்கு குறிப்பிட்டிருப்பதை நினைவு கூர்கிறேன்.
~~~
இவ்வுலகம், அவ்வுலகம் என்றெல்லாம் வெவ்வேறாய் காண்பதே கானல் நீர்போலத்தான். கண்முன் தோன்றும் தோற்ற மயக்கங்கள் தான். வெவ்வேறு வடிவங்களில் காண்பது தற்காலிகமானது தான். அதன் தற்காலிகத் தன்மையிலும், அதன் மெய்ப்பொருள் வேறொன்றாய் இல்லை. பானையில் இருக்கும் சுட்ட மண்ணும், மண்ணாய்த் தான் இருக்கிறது. பானையின் வடிவம் மட்டுமே வேறு. அந்த வடிவம் போனபின், அந்தப் பானையும் மண் தானே.
பிரம்மம் இரண்டு வழிகளில் இருப்பதாக அறிகிறோம். ஒன்று விகாரப்பட்டது. இன்னொன்று விகாரப்படாதது. இந்த பிரபஞ்சம், விகாரப்படாததற்கான அடையாளம். ஜீவனோ, விகாரப்பட்டதற்கான அடையாளம் - மண் கடமாவதும் - அந்த கடம், மீண்டும் மண்ணாவதும் அதன் சுழற்சியில் அடங்கிடும்.
~~~
இதுவரை வந்த ஆத்ம போதம் பகுதிகளின் தொகுப்பு இங்கே.

Thursday, September 11, 2008

அர்ஜூனன் சந்தேகம்! : பாரதி

வேடிக்கை கதைகள் என்கிற பகுதியில், சின்னச்சின்னதாய் சில கதைகளும் எழுதி வைத்திருக்கிறார் நம்ம பாரதி.
அவற்றில் ஒன்று - இந்த "அர்ஜூனன் சந்தேகம்":

ஊர்: ஹஸ்தினாபுரம்
இடம்: துரோணரின் பள்ளிக்கூடம்

பாண்டுவின் பிள்ளைகளும், துரியோதனாதிகளும் அங்கே பள்ளி பயில்கிறார்கள். ஒருநாள் சாயங்கால வேளையில்,
அர்ஜூனன், கர்ணனைப் பார்த்து, 'ஏ கர்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
'சமாதானம் நல்லது' என்று கர்ணன் சொன்னான்.
'காரணமென்ன?' என்று கிரீடி கேட்டான்.
கர்ணன் சொல்லுகிறான்: "அடே, அர்ஜூனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அதனால் உனக்குக் கஷ்டம். நானோ இரக்க சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால், சமாதானமே சிறந்தது' என்றான்!
அர்ஜூனன்: 'அடே, கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்' என்றான்.
அதற்கு கர்ணன்: "பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை' என்றான்.
இந்தப் பயலைக் கொன்றுபோட வேண்டும் என்று அர்ஜூனன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான்.

பிறகு துராணாச்சாரியாரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டான்.
'சண்டை நல்லது' என்று துரோணாச்சாரியர் சொன்னார்.
'எதனால?' என்று பார்த்தன் கேட்டான்.
அப்போது துரோணாச்சாரியர் சொல்லுகிறார்:
'அடே, விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும். இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம் - ச-ச-ச' என்றார்!

பிறகு அர்ஜூனன் பீஷ்மாச்சாரியாரிடம் போனான், 'சண்டை நல்லதா தாத்தா, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவர் சொல்லுகிறார்: 'குழந்தாய் அர்ஜூனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய க்ஷத்திரிய குலத்திற்கு நன்மையுண்டு. சமாதானத்தால் லோகத்திற்கே மகிமை' என்றார்.
'நீர் சொல்லுவது நியாயமில்ல' என்று அர்ஜூனன் சொன்னான்.
'காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும் அர்ஜூனா, தீர்மானத்தை அதன் பிறகு சொல்லுவாய்' என்றார் கிழவர்.
அர்ஜூனன் சொல்லுகிறான்: 'தாத்தாஜீ, சமாதானத்தில், கர்ணன் மேலாகவும், நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்' என்றான்.
அதற்கு பீஷ்மாச்சாரியார், 'குழந்தாய், தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால், உன் மனதில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப்போல பரஸ்பரம் அன்போடு இருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்.' என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.
...............................................
சில தினங்களாயிற்று...
ஹஸ்தினாபுரத்திற்கு வேத வியாசர் வந்தார். அர்ஜூனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான். அப்போது வேத வியாசர் சொல்லுகிறார்" 'இரண்டும் நல்லன. சமயத்துக்கு தக்கவாறு செய்ய வேண்டும்' என்றார்.
................................................
பல வருடங்களாயின...
காட்டில் இருந்து கொண்டு, துரியோதனாதிகளுக்கு தூது விடுக்கும் முன்பு, அர்ஜூனன், ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து 'கிருஷ்ணா, சண்டை நல்லதா?, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
அதற்குக் கிருஷ்ணன், 'இப்போதைக்கு, சமாதானம் நல்லது. அதனாலேதான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்' என்றாராம்.
------------------------------------------------
பாரதியின் கதை இத்துடன் இக்கதை முடிகிறது.
மகாபாரதக் கதையில் அதன்பின் நிகழ்ந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்ணனுக்கு அர்ஜூனனின் மேலே காழ்ப்பு.
அர்ஜூனனுக்கு 'நானா, கர்ணனா' எனக்கண்டறிவதே நோக்கம்.
துரணரோ, தனக்கு ஆகவேண்டியதைப் பேசுகிறார்.
பீஷ்மரோ சாகப்போகிற நேரத்தில் மட்டும் 'சங்கரா சங்கரா' என்கிறார்.
வியாசரோ, தத்துவம் சொல்கிறார்.
இறுதியில் கண்ணன், தக்க சமயத்தில் செய்ய வேண்டியதை செய்கிறார். :-)

வயலினை கொன்னக்கோலாக்கிய குன்னக்குடி!

குன்னக்குடி, குன்னக்குடி எனச் சொல்லி, குன்றக்குடியில் பிறந்தவருக்கு, அவர் பெயரே குன்னக்குடியாகி விட்டது!

இசை மேதை குன்னக்குடி வைத்யநாதன், வயலின் வாத்தியத்தில் கோலோச்சி உயர் நிலையில் வீற்றிருந்தார் என்பது நாமெல்லாம் அறிந்திருந்தது.


அது மட்டுமல்லாமல் திரை இசையிலும் அவர் பங்கேற்று பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இது அவர் இசை அமைத்த ஒரு பாடல்: படம்: திருமலை தேன்குமரி (1970)


அவரது பன்னிரெண்டு வயதினிலேயே, அரியக்குடி இராமானுஜ ஐய்யங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்களுக்கு, பக்க வாத்தியமாக வயலின் வாசித்த பெருமை, இவரைச் சாரும். பின்னாளில் வயலினை முதன்மையாகக் கொண்டு, வயலின் கச்சேரிகளை பெரிதும் நடத்தி, தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். அந்த தனி இடத்தில் அவரது தனி பாணியும், தனித்தன்மையுடன் பிரகாசிக்கும். திரு.ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாயன வித்தவான்களுடன் சேர்ந்தும், திரு.வளையப்பட்டி சுப்ரமணியன் போன்ற தவில் வித்வான்களுடன் சேர்ந்தும் கச்சேரிகளை நடத்தி, இசைக் கருவிகளில் இசை மழைகளை பொழிந்திருக்கிறார். பண்டிட் ஜாகீர் ஹூசைன் போன்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுடன் இணைந்து ஜுகல்பந்தி நிகழ்சிகளையும் தந்திருக்கிறார். தர்பாரி கானடாவில், இவர் இசையமைத்த 'மருதமலை மாமணியே முருகய்யா' பாடல், பாரெங்கும் பிரசிதம். இசையின் மருத்துவ குணங்களில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.

இசையில் தனிப் பெருமையுடன் திகழ்ந்த பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவரைப்போல் அந்த வயலினை எடுத்து யார் வாசிப்பார்கள் என்று கேட்கிறார், திரு.சுப்புரத்தினம் ஐயா: துன்பம் நேர்கையில்....

திரு. குன்னக்குடி வைத்யநாதன் அவர்களின் மறைவுக்கு நம் இதய அஞ்சலிகள்.

Thursday, September 04, 2008

முற்றுப்பெற்றேன் நான், விடுதலை செய்வாய்!

"என் விளையாட்டு முற்றுப் பெற்றது" (My Play is Done) என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர், 16 மார்ச், 1895இல், நியூ யார்க்கில் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்:
--------------------------------------------------
எழுதலும், வீழ்தலும் இயற்கையாய் இயைந்த நீரலை போன்ற நேரத்தில்,
இன்னமும் நான் உருண்டு கொண்டே இருக்கிறேன்;

சின்னதும், பெரியதுமாய், வாழ்க்கைச் சுழலில், நீர்த்தும், ஓடியும்;
ஓ, முடிவிலா விசை எனக்கு துன்பம்தான் தருகிறது. இனியும் அவற்றில் விருப்பமில்லை;

எப்போதும் உழன்றுகொண்டே, இலக்கை அடைய இயலாமல் இருக்க, ஏன் கரை கண்ணுக்குக்கூடத் தென்படவில்லை.

பிறவிக்குமேல் பிறவியெடுத்தும், இன்னமும் வாசலிலேயே நான்; வாசற்கதவுகள் திறந்தபாடில்லை.

மங்கிய கண்கள், நீண்டநாளாய் தேடிய, அந்த ஒற்றை ஒளிக்கற்றையைப் பிடிக்க, வீணாய் முயலுகின்றன;

வாழ்க்கையின் உயர்வான, ஒடிசலான பாலத்தின் மீதேறி கீழே பார்க்கிறேன்:
மக்கள் கூட்டமங்கே - மிகவும் கடினப்படுபவர்களும், அழுபவர்களும், சிரிப்பவர்களுமாய் - எதற்காக? யாருக்கும் தெரிவதில்லை.

கதவுகளுக்கு முன்னால், கடுமையான முகத்துடன், குரலொன்று கேட்கிறது: 'இதற்குமேல் ஓரடியும் எடுத்து வைக்காதே. விதியை உன் வசப்படுத்தப் பார்க்காதே. இயன்ற அளவு அதை ஏற்றுக் கொள்ளப்பார்' என்று.

மேலும், 'அதோ அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள். இந்தக் கோப்பையில் இருக்கும் ரசத்தைக் குடித்து, அவர்களைப்போல எவ்வளவு பித்துக்கொள்ள இயலுமோ, அதைக்கொள்.
அறிவதற்கு துணிவிருந்த உனக்கு, எதற்கு ஒப்பாரி?. நில், அவர்களோடு, கிட', என்றது.

அந்தோ, என்னால், சும்மா இருக்க இயலவில்லையே. மிதக்கும் நீர்க்குமிழியான புவி -
அதன் வெற்று வடிவமும், வெற்று பெயரும், வெற்று பிறப்பு இறப்பு சுழலும் - இவையெல்லாம் எனக்கு ஒன்றுமிலா. நாமம், வடிவம் போன்ற தோற்றங்களைத் தாண்டி உள்ளே செல்ல எவ்வளவு காத்துக் கிடக்கிறேன்!

ஆ, கதவுகள் திறக்காதோ, எனக்காக அவை திறந்தேதான் ஆக வேண்டும்.

அன்னையே, சோர்ந்துபோன மகனுக்காக, வெளிச்சக் கதவுகளை திறந்து விடாயோ?

வீட்டுக்குத் திரும்பக் காத்திருக்கிறேன், அம்மா என் விளையாடல் முடிந்துவிட்டது.

நீ என்னை இருளில் விளையாட அனுப்பிவிட்டு, பயமுறுத்தும் முகமூடியை அணிந்தாயோ?

நம்பிக்கை இழக்க, துன்பம் வர, விளையாட்டு வினையானது.

இங்கும் அங்குமாய் அலைகளில் அலைக்கழிக்கப்பட, பொங்கும் கடலில்,
வலிய இச்சைகளும், ஆழ்ந்த துக்கங்களும், நிறைய, இருப்பது சோகம், வேண்டுவது மகிழ்ச்சி.

வாழ்க்கையோ, வாழும் இறப்பெனவாக, அந்தோ இறப்போ - யாரறிவார்?, ஏனெனில்,
இன்னொரு துவக்கம், இன்னொரு சுழற்சி, - மீண்டும் சோகமும், ஆனந்தமும்?

சின்னஞ்சிறார் பெரிதாய்க் கனவுகாண, பொற்கனவுகள், சீக்கிரமே, பொடிப்பொடியாய்ப் போக,
நம்பிக்கை நீரூற்றிக் காத்திருக்க, வாழ்க்கையோ பெரிதாய் துருப்பிடித்த இரும்பு.
தாமதமாக, வயதாக ஆக, பெறும் அனுபவ அறிவோ சுழற்சியை பயமுறுத்த, போய் சேர்ந்து விடுகிறோம்.

இளைஞராய், துவக்கத்தில், இருக்கும் சக்தியில் சக்கரம் சுழல, நாட்கள் நகர,
ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தோற்ற மயக்கத்தின் விளையாட்டு பொம்மையாய்,
அறியாமை தரும் நம்பிக்கை இன்னமும் சுழற்றிவிட, ஆசை நமைக்க,
துன்பமும், இன்பமும், சக்கரத்தின் ஆரங்கள்.

நானோ, நீரோட்டத்தில் இருந்து விலகிடுகிறேன், செல்வது எவ்விடத்திற்கென அறியாமல்.
இந்த நெருப்பில் இருந்து காப்பாற்று.

கருணை நிறை அன்னையே, ஆசையில் மிதக்கும் என்னைத் தடுத்தாட்கொள்!

உன் அச்சுறுத்தும் முகத்தைக் காட்டாதே, என்னால் அவ்வளவைத் தாங்க இயலுவதில்லை.

கருணை கொள்வாய், இச்சிறுவனின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு.

என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு, என்னை எடுத்துச் செல்வாய் அம்மா - துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்.

சூரியனோ, சந்திரனோ, அல்லது மின்னும் நட்சத்திரங்களோ, அல்லது பளிச்சிடும் மின்னலோ - இவர்கள் யாராலும் வனின் புகழை, முழுமையாக வெளிப்படுத்த இயலாது, அவன் ஒளியையே அவர்கள் எல்லோரும் பிரதிபலித்தாலும்!

இனியும் சிதறடிக்கும் கனவுகள், வன் முகத்தை என்னிடம் இருந்து மறைப்பதை, அனுமதிக்காதே.
என் விளையாட்டு முற்றுப் பெற்றது; அன்னையே என் தளைகளை, உடைப்பாய், விடுதலை செய்வாய்!
------
மூலம்: The Complete works of Swami Vivekananda, Vol.6

Tuesday, September 02, 2008

கணேச கானங்கள்



சில சமயங்களில், இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான், என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில், எளிய, இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனதும், இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும், மனது அமைதி அடையும். அகம் ஆதாரமானவனின் அருளில் திளைக்கும். இந்த இடுகையும் ஒரு கணேச சத்சங்கம் தான்!

ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்படித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன். வாயிற் காப்போன். மூலாதாரத்திற்கு கீழே உள்ள சக்கரங்களில் ஆன்ம சக்தி விரைந்தோடாமல், மேலே மேலே மட்டும் எழுப்பிட துணை நிற்பவன்.


கணேசனை, வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத, சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன். இந்த சதுர்த்தி தினத்தில், சங்கர பாலனுக்கு பாடல்கள் பாடி, நன்றி செலுத்துவோம்.

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.

பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல், நமது பாராம்பரிய சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா. அது இன்னமும் மனதை அகலாமல் நிறைந்திருப்பதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.

வாதாபி கணபதிம் - இங்கே எம்.எஸ் அம்மா பாடிடக் கேட்கலாம்:

பாடல் வரிகள் மற்றும் ஸ்வர நோட்ஸ்கள் திரு.சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது. இம்மின்நூலை தரவிறக்கிக் கொண்டு நீங்களும் பாடிப் பழகலாமே!

இந்தப் பாடலில், தீக்ஷிதர் சுவாமிகள், 'ஹம்சத்வனி ஹே பூஷித...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!. எத்தனை சிறப்பு பாருங்கள் இந்த இராகத்திற்கு. எனவேதான், பல கணபதி கிருதிகள், ஹம்சத்வனி இராகத்தில் அமைந்திருக்கின்றன.

தமிழில், பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த கணபதி துதிப் பாடலாகும்.

பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:

கருணை செய்வாய்...


ஹம்சத்வனி ராகம், கல்யாணி ராகத்தைப்போலவே, மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!

கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.

ஒருமணிக்கொருமணி...


அடுத்தாக இந்த ஸ்ரீரஞ்சனி இராகக் கீர்த்தனை - எனக்கு மிகவும் பிடித்த பாடல் -
பத்ம பூஷன் திரு.ஜேசுதாஸ் பாடியுள்ள - "கஜவதனா கருணா சதனா..." பாடல்.
இதுவும் பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்:

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர

தொடுப்பு
அகனமரேந்திரனும் முனிவரும் பணி
பங்கஜ சரணம் சரணம் சரணம்

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வின் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் ஓம்காராப் பொருளே!

கஜவதனா கருணா சதனா


தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதியுங்கள், துயரனைத்தும் அகன்று, அகம் துலங்கிடும், இகமதில் பரம்பெருள் பேரின்பமதைத் தரும்.