Wednesday, September 24, 2008

என்றைக்கு சிவ கிருபை வருமோ?

ளிதாகச் சொல்லி விடுவோம், முகாரி இராகத்தைப் பற்றி - அது சோக உணர்வினைத் தருவதற்கு ஏற்ற இராகம் என்று. ஆம் என்றாலும், மிகவும் உருக்கமான வேண்டுதலுக்காகவும் இந்த இராகத்தினை பயன்படுத்துவதுண்டு. திரு. நீலகண்ட சிவன், இயற்றிய இந்தப் பாடலில் முகாரியைப் பார்க்கலாமா. இவர் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே' பாடலை முன்பொரு இடுகையில் பார்த்திருக்கிறோம் என்பதையும் நினைவு கூர்கிறேன் இங்கே. இவரைப் பற்றி சுவையான கதைகளும் இருக்கு, அவற்றை இன்னொரு இடுகையில் பார்க்கலாம்.

இராகம் : முகாரி
தாளம் : மிஸ்ர சாபு
இயற்றியவர் : திரு.நீலகண்ட சிவன்
பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி

என்றைக்கு சிவ கிருபை...


எடுப்பு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? - ஏழைக்கு
என்றைக்கு சிவ கிருபை வருமோ? - ஏழை,
என் மன சங்கடம்(/சஞ்சலம்) அறுமோ?

தொடுப்பு
கன்றின் குரலைக்கேட்டு கனிந்து வரும் பசுபோல்
ஒன்றுக்கும் அஞ்சாத என் உளத் துயரம் தீர்க்க
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

முடிப்பு
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி கொண்டாடிக் கொள்வார் - தனம்
உண்டானபோது கோடி உற(வு)முறையோர்கள் வந்து
கொண்டாடி தொண்டாடிக் கொள்வார் - தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார் - இந்த கைத்தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தை தள்ளி நற்கதி செல்ல
(என்றைக்கு சிவ கிருபை வருமோ?)

பாடல் முழுதும், என்னமாய் எதுகை வந்து, அழகாய் வடித்திருக்கு, இந்தப் பாடலை, என்று வியக்காமலிருக்க முடியவில்லை. தொடுப்பில் இவர் சொல்லும் வரிகளை கவனிக்க. 'இளங்கன்று பயமறியாது' என்பதுபோல, ஒன்றுக்கும் அஞ்சாமல் நான் உன் பின்னே தொடர்ந்தாலும், என்னுள்ளே துயரம் தீர்ந்த பாடில்லை என்கிறார்.

சில நாத்தீக நண்பர்கள் கேட்பார்கள், கிண்டலாக. நீங்கள் தான் ஆன்மீகவாதியே - உங்களுக்கு துயரமே இருக்கக் கூடாதே என்று. துயரம் இல்லாமல் இருப்பதற்கல்ல ஆன்மீகம். துயரை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை அளிப்பது ஆன்மீகம். துயர் முடிவது, தான் என்பதே இல்லாமல் இருக்கும்போதுதான். இதனை உணர்த்துவதுதான் ஆன்மீகம். அந்த துயரம், எப்போதைக்குமாக, முடிவாக, முடிவது எப்போதென்றால், சிவ கிருபை வந்தென்னை தடுத்தாட்கொளும்போது. அந்த நிலை வருவது எப்போது என்கிறார், சிவன் இப்பாடலில்.

இப்பேதை உலகில், பொருளுக்காக பொல்லாத செயலை எல்லாம் செய்து, பெரும் பாதகப் பழிகளில் உழன்று வரும் மனித உலகத்தைப் பார்த்து, சண்டாள உலகம் என வெறுப்பதினை, சரண அடிகளில் காணலாம். உறவு என்று சொல்லி, ஓடி வரும் மனிதர்கள் நம்மை போற்றிக் கொண்டாடுவர், பலப்பல தொண்டாற்றுவர். ஆனால், நம் கையில் இருக்கும் செல்வம் குறைந்து போனாலோ, முகமெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார் என்பதனைக் கவிஞர் அழகாகச் சொல்கிறார்.

நற்கதி என்னும் பேறினை அடைய என்றைக்கு சிவ கிருபை வருமோ?

உசாத்துணை:
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் @ சென்னை ஆன்லைன்.காம் தளம்

14 comments:

 1. ரஞ்சனி & காயத்ரி குரல் அதிகம் கேட்டதில்லை...இப்பாடல் மிக அழகாகப் பாடியிருக்கிறார்கள்.

  //உங்களுக்கு துயரமே இருக்கக் கூடாதே என்று. துயரம் இல்லாமல் இருப்பதற்கல்ல ஆன்மீகம். துயரை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை அளிப்பது ஆன்மீகம். துயர் முடிவது, தான் என்பதே இல்லாமல் இருக்கும்போதுதான். இதனை உணர்த்துவதுதான் ஆன்மீகம். //

  உண்மை....

  ReplyDelete
 2. வாங்க மௌலி,
  //இப்பாடல் மிக அழகாகப் பாடியிருக்கிறார்கள். //
  ஆமாம், மிகவும் உருக்கமாக பாடி இருக்கிறார்கள்.

  ReplyDelete
 3. // இந்த கைத்தவமான பொல்லாச்
  சண்டாள உலகத்தை தள்ளி நற்கதி செல்ல
  (என்றைக்கு சிவ கிருபை வருமோ?)//

  நாம் அறி ந்தும் அறியாம‌லும் செய்யும்
  ப‌ற்ப‌ல‌ க‌ர்ம‌வினைகளே பிறப்புக்குக் காரணம். அவைகளின் பலன்களை அனுபவித்துத்
  தீர்த்தே ஆகவேண்டும். "இந்த கைத்தவம் " அதாவது இந்தக் கைகள் செய்த‌
  நல்லவை, கெட்டவை ஆகியவற்றின் பலன் தான் இந்தப் பொல்லாத சண்டாள உலகத்தில்
  பிறப்பு. எந்தக்கைகள் செயலினால் இப்பொல்லா உலகப்பிறப்பு தோன்றியதோ,
  அதை, இதே கைகளினால் " தள்ளி " ( புறக்கணித்து, ஒதுக்கி, ஒதுங்கி, நீங்கி,
  மனத்திலிருந்து அழித்து, ஒழித்து ) விட இறைவன் பால் நாட்டம் வேண்டும்.
  இறையின் அருள் வேண்டும். இறையின் கிருபை வேண்டும்.

  அடுத்து, அவன் அருள் இருப்பின் மட்டுமே அவன் தாள் படியவும் முடியும். இறைபால் நாட்டமும் இறையின் அருளும் சித்திப்பது கர்மவினைகள் ஒயும்போது தான்.

  ஆக, இது ஒரு vicious cycle.
  இந்த வட்டத்திலிருந்து விடுபட்டு, நற்கதி பெறவேண்டும் என ஏங்கும் ஜீவனின்
  துடிப்பினை இதை விட துல்லியமாக விவரிக்கவும் கூடுமோ ?

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  பின் குறிப்பு: மேடம் கவி நயா அவர்கள் இது போலவே ஒரு ஏக்கத்தினை
  அழகான கவிதையாக வடித்து இருக்கிறார்கள்.
  இங்கு முகாரி ராகம். அங்கு ஜோன்புரி ராகம்.
  வருவீர்:
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 4. வருக சுப்புரத்தினம் ஐயா,
  உண்மையில், 'கைத்தவமான உலகத்தை' என்ற இடத்தை என்னால் முழுதுமாக புரிந்து கொள்ள இயலாமல் இருந்தது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து அழகாக விளக்கியுள்ளீர். அருமை!

  'உலகத்தை தள்ளி' என்று வருகிற இடத்தை, அந்த ஒரு பொருளில் மட்டுமே நினைத்திருந்தேன். அதற்கும், கைத்தவத்திற்கும் - பிறவிச் சுழல் என்னும் முடிச்சால், இணைத்துப் பார்த்துள்ளது, இன்னமும் அருமை.

  வருகைக்கும், விளக்கத்திற்கும் பெருநன்றிகள்.

  ReplyDelete
 5. >>"இந்த கைத்தவம் " அதாவது இந்தக் கைகள் செய்த‌
  நல்லவை, கெட்டவை<<

  I think NS uses the word "kaittavamAna" here to denote "falsehood, cunning nature, and suffering" that exist in the world and as such the world has become a miserable place in which to live. That is my take. Again, who knows what NS was thinking when he wrote this song?

  ReplyDelete
 6. வாங்க சேதுராமன் சார்,
  நீங்கள் சொல்லும் பொருளும் சரியாகத்தான் இருக்கிறது!

  ReplyDelete
 7. கைத்தவம் என்னும் சொல் இங்கெல்லாம் உள்ளது."தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்""செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்" .. ஒளவை பிராட்டியார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன்.


  வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சகர் வாள் முகம்
  கண்டது ஓர் பொழுதினில் தெரியும்; கைத்தவம்
  உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
  விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ?
  ..க‌ம்ப‌ ராமாய‌ண‌ம்.

  நான் புரிந்த‌வ‌ரை ந‌ம‌து க‌ர்ம‌ வினைப்ப‌ய‌ன்க‌ள் எனும் பொருளில் தான் உள்ள‌து.
  எனினும் கைத்த‌வ‌த்தின் அதாவ‌து க‌ர்ம‌வினையின் கார‌ண‌மாக‌த்தான் இப்பொல்லாத‌
  உல‌கில் பிற‌ப்பு ஏற்ப‌ட்ட‌மையால், பொல்லாத, வஞ்சனை சூழ் உல‌க‌த்திற்கும் ஒரு கார‌ண‌ப்பெய‌ராக‌ கைத்த‌வ‌ம் என‌க்கொள்வ‌தில் ஆட்சேப‌ம் இல்லை.

  அக‌ர‌ம் அருகில் இருந்தால், அழ‌காக‌ பொருள் உரைப்பார்.

  சுப்பு ர‌த்தின‌ம்.
  த‌ஞ்சை.


  PS: incidentally got introduced to nAradA blog. must be going to get familiarized with the scientist.

  ReplyDelete
 8. //வஞ்சனை சூழ் உல‌க‌த்திற்கும் ஒரு கார‌ண‌ப்பெய‌ராக‌ கைத்த‌வ‌ம் என‌க்கொள்வ‌தில் ஆட்சேப‌ம் இல்லை.//
  நானும் அப்படித்தான் கொண்டேன் ஐயா, விளக்கத்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. //அக‌ர‌ம் அருகில் இருந்தால், அழ‌காக‌ பொருள் உரைப்பார்.//
  அகரமாரே, அருகில் வாரும்,
  எங்கிருந்தாலும்.

  ReplyDelete
 10. //PS: incidentally got introduced to nAradA blog. must be going to get familiarized with the scientist.//
  I am glad to know that!

  ReplyDelete
 11. ஆஹா, அருமையான பாடல்.

  கன்றின் குரல் கேட்டதும் ஓடி வரும் பசுவைப் போல் வந்து என் துயரம் தீர்ப்பாய், என்கிறார்.

  ReplyDelete
 12. வாங்க கவிநயாக்கா,
  //கன்றின் குரல் கேட்டதும் ஓடி வரும் பசுவைப் போல் வந்து என் துயரம் தீர்ப்பாய், என்கிறார்.//
  கன்றின் குரலைக் கேட்டு வரும் பசு என்றால், அது தாயாகத்தானே இருக்கவேண்டும்.!
  -அல்லது, தாயுமானவன்!

  ReplyDelete
 13. மிகவும் உருக்கமான, மனம் ஒன்றிப்பாடும்போது, கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அருமையான பாடல்.

  தொடுப்பில் “என்னுள்ளே துயரம் தீர்க்க” என்பதற்குப் பதில் “என் உளத்துயரம் நீங்க” என்று இருக்க வேண்டும். அதுபோல், முடிப்பில் “கொண்டாடி கொண்டாடி” என்பதன் இடத்தில் “தொண்டாடிக் கொண்டாடி” என்று வரவேண்டும்.

  ஸ்ரீநிவாஸன்

  ReplyDelete
 14. வாங்க ஸ்ரீநிவாசன் சார்,
  //“என்னுள்ளே துயரம் தீர்க்க” என்பதற்குப் பதில் “என் உளத்துயரம் நீங்க” என்று இருக்க வேண்டும். //
  இது இன்னும் பொருத்தமாக இருக்கு!

  எடுப்பில் தொண்டாடிக் கொண்டாடி :
  நான்காவது வரியில் அவ்வாறு தந்திருக்கிறேன்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails