Thursday, September 04, 2008

முற்றுப்பெற்றேன் நான், விடுதலை செய்வாய்!

"என் விளையாட்டு முற்றுப் பெற்றது" (My Play is Done) என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர், 16 மார்ச், 1895இல், நியூ யார்க்கில் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்:
--------------------------------------------------
எழுதலும், வீழ்தலும் இயற்கையாய் இயைந்த நீரலை போன்ற நேரத்தில்,
இன்னமும் நான் உருண்டு கொண்டே இருக்கிறேன்;

சின்னதும், பெரியதுமாய், வாழ்க்கைச் சுழலில், நீர்த்தும், ஓடியும்;
ஓ, முடிவிலா விசை எனக்கு துன்பம்தான் தருகிறது. இனியும் அவற்றில் விருப்பமில்லை;

எப்போதும் உழன்றுகொண்டே, இலக்கை அடைய இயலாமல் இருக்க, ஏன் கரை கண்ணுக்குக்கூடத் தென்படவில்லை.

பிறவிக்குமேல் பிறவியெடுத்தும், இன்னமும் வாசலிலேயே நான்; வாசற்கதவுகள் திறந்தபாடில்லை.

மங்கிய கண்கள், நீண்டநாளாய் தேடிய, அந்த ஒற்றை ஒளிக்கற்றையைப் பிடிக்க, வீணாய் முயலுகின்றன;

வாழ்க்கையின் உயர்வான, ஒடிசலான பாலத்தின் மீதேறி கீழே பார்க்கிறேன்:
மக்கள் கூட்டமங்கே - மிகவும் கடினப்படுபவர்களும், அழுபவர்களும், சிரிப்பவர்களுமாய் - எதற்காக? யாருக்கும் தெரிவதில்லை.

கதவுகளுக்கு முன்னால், கடுமையான முகத்துடன், குரலொன்று கேட்கிறது: 'இதற்குமேல் ஓரடியும் எடுத்து வைக்காதே. விதியை உன் வசப்படுத்தப் பார்க்காதே. இயன்ற அளவு அதை ஏற்றுக் கொள்ளப்பார்' என்று.

மேலும், 'அதோ அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள். இந்தக் கோப்பையில் இருக்கும் ரசத்தைக் குடித்து, அவர்களைப்போல எவ்வளவு பித்துக்கொள்ள இயலுமோ, அதைக்கொள்.
அறிவதற்கு துணிவிருந்த உனக்கு, எதற்கு ஒப்பாரி?. நில், அவர்களோடு, கிட', என்றது.

அந்தோ, என்னால், சும்மா இருக்க இயலவில்லையே. மிதக்கும் நீர்க்குமிழியான புவி -
அதன் வெற்று வடிவமும், வெற்று பெயரும், வெற்று பிறப்பு இறப்பு சுழலும் - இவையெல்லாம் எனக்கு ஒன்றுமிலா. நாமம், வடிவம் போன்ற தோற்றங்களைத் தாண்டி உள்ளே செல்ல எவ்வளவு காத்துக் கிடக்கிறேன்!

ஆ, கதவுகள் திறக்காதோ, எனக்காக அவை திறந்தேதான் ஆக வேண்டும்.

அன்னையே, சோர்ந்துபோன மகனுக்காக, வெளிச்சக் கதவுகளை திறந்து விடாயோ?

வீட்டுக்குத் திரும்பக் காத்திருக்கிறேன், அம்மா என் விளையாடல் முடிந்துவிட்டது.

நீ என்னை இருளில் விளையாட அனுப்பிவிட்டு, பயமுறுத்தும் முகமூடியை அணிந்தாயோ?

நம்பிக்கை இழக்க, துன்பம் வர, விளையாட்டு வினையானது.

இங்கும் அங்குமாய் அலைகளில் அலைக்கழிக்கப்பட, பொங்கும் கடலில்,
வலிய இச்சைகளும், ஆழ்ந்த துக்கங்களும், நிறைய, இருப்பது சோகம், வேண்டுவது மகிழ்ச்சி.

வாழ்க்கையோ, வாழும் இறப்பெனவாக, அந்தோ இறப்போ - யாரறிவார்?, ஏனெனில்,
இன்னொரு துவக்கம், இன்னொரு சுழற்சி, - மீண்டும் சோகமும், ஆனந்தமும்?

சின்னஞ்சிறார் பெரிதாய்க் கனவுகாண, பொற்கனவுகள், சீக்கிரமே, பொடிப்பொடியாய்ப் போக,
நம்பிக்கை நீரூற்றிக் காத்திருக்க, வாழ்க்கையோ பெரிதாய் துருப்பிடித்த இரும்பு.
தாமதமாக, வயதாக ஆக, பெறும் அனுபவ அறிவோ சுழற்சியை பயமுறுத்த, போய் சேர்ந்து விடுகிறோம்.

இளைஞராய், துவக்கத்தில், இருக்கும் சக்தியில் சக்கரம் சுழல, நாட்கள் நகர,
ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தோற்ற மயக்கத்தின் விளையாட்டு பொம்மையாய்,
அறியாமை தரும் நம்பிக்கை இன்னமும் சுழற்றிவிட, ஆசை நமைக்க,
துன்பமும், இன்பமும், சக்கரத்தின் ஆரங்கள்.

நானோ, நீரோட்டத்தில் இருந்து விலகிடுகிறேன், செல்வது எவ்விடத்திற்கென அறியாமல்.
இந்த நெருப்பில் இருந்து காப்பாற்று.

கருணை நிறை அன்னையே, ஆசையில் மிதக்கும் என்னைத் தடுத்தாட்கொள்!

உன் அச்சுறுத்தும் முகத்தைக் காட்டாதே, என்னால் அவ்வளவைத் தாங்க இயலுவதில்லை.

கருணை கொள்வாய், இச்சிறுவனின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு.

என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு, என்னை எடுத்துச் செல்வாய் அம்மா - துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்.

சூரியனோ, சந்திரனோ, அல்லது மின்னும் நட்சத்திரங்களோ, அல்லது பளிச்சிடும் மின்னலோ - இவர்கள் யாராலும் வனின் புகழை, முழுமையாக வெளிப்படுத்த இயலாது, அவன் ஒளியையே அவர்கள் எல்லோரும் பிரதிபலித்தாலும்!

இனியும் சிதறடிக்கும் கனவுகள், வன் முகத்தை என்னிடம் இருந்து மறைப்பதை, அனுமதிக்காதே.
என் விளையாட்டு முற்றுப் பெற்றது; அன்னையே என் தளைகளை, உடைப்பாய், விடுதலை செய்வாய்!
------
மூலம்: The Complete works of Swami Vivekananda, Vol.6

23 comments:

  1. எல்லாவற்றிலும் விழுந்து எழுந்து கடைசியில் இங்கேதான் வர வேண்டி இருக்கிறது!

    ReplyDelete
  2. என்செய்வது ஐயா!
    தனியாக யாரும் பிறப்பதில்லையே.
    சமூகமும் தனியாக யாரையும் விட்டுவைப்பதில்லையே.
    கிட்டிய ஞானம், அவதியுறும் அவனிக்கு பயனாக இருக்க என்ன வழி எனத் தேடிப்போனால், அந்த அவதியையும் நீயே கொள் எனவல்லவோ முடிகிறது! மாந்தர் படும் துன்பத்தைக் களைய நீ யார் எனவல்லொவோ கேள்வி வருகிறது. துன்பம் கழிய வழி இருக்குதென்று, கடை விரித்தாரே, கொள்வாரில்லை என ஏங்கிட, நாம் எம்மாத்திரம்?

    ReplyDelete
  3. //என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு, என்னை எடுத்துச் செல்வாய் அம்மா - துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்.//

    படிக்கையில் கண்கள் நிறைந்தன. விவேகானந்தரே இப்படி சொன்னால் நாம் என்னாவது :'(((

    ReplyDelete
  4. // சூரியனோ, சந்திரனோ, அல்லது மின்னும் நட்சத்திரங்களோ, அல்லது பளிச்சிடும் மின்னலோ - இவர்கள் யாராலும் அவனின் புகழை, முழுமையாக வெளிப்படுத்த இயலாது, அவன் ஒளியையே அவர்கள் எல்லோரும் பிரதிபலித்தாலும்!//


    க‌டோப‌னிஷ‌த்தில் இதே க‌ருத்தினை உள்ள‌டக்கிய‌ வ‌ரிக‌ள் இதோ:

    na thathra SooryO bhathi na chandhradharakam nEmaa
    vidhyuthO bhanthi kuthOyamagnihi
    thamEva bhanthamanubhaathi sarvam thasya
    bhaasaa sarvamidham vibhathi. ( 5 - 15)

    சூரிய‌ன் அங்கு பிர‌காசிப்ப‌தில்லை. ச‌ந்திர‌னும் ந‌க்ஷ‌த்திர‌ங்க‌ளும் மின்ன‌ல்க‌ளும்
    ஆங்கு ஒளிர்வ‌தில்லை. இனி, இந்த‌ நெருப்பு எப்ப‌டிப் பிர‌காசிக்கும் ? பிர‌ம்ம‌த்தைச்
    சார் ந்தே யாவும் பிர‌காசிக்கின்ற‌ன‌. அத‌ன் பிர‌காசத்தினின்று இவை யாவுக்கும்
    வெளிச்ச‌ம் வ‌ருகிற‌து.
    (ஸ்ரீம‌த் ஸ்வாமி சித்ப‌வான‌ந்தாவின் விள‌க்க‌ம்)

    இந்த‌ விவேக‌ம் வ‌ரும்போது பெருகும் ஆன‌ந்த‌ம்
    சொல்லில் அடங்காது.ஆதலால் அவர்.
    விவேகானந்தர்.


    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  5. வாருங்கள் கவிநயாக்கா,
    //படிக்கையில் கண்கள் நிறைந்தன. விவேகானந்தரே இப்படி சொன்னால் நாம் என்னாவது :'(((//
    Exactly!.
    இந்த கவிதை நமக்குச் சொல்லும் பாடத்தை சரியாக தூக்கிக் காட்டியமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  6. வாருங்கள் சுப்புரத்தினம் ஐயா,
    விவேகமான வரிகளை உபநிடத்திலிருந்து மேற்கோள் காட்டியமைக்கு நன்றிகள்.
    அதனால்தான் அந்த வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதை முற்றுப்பெறுவதற்கு முன்னால் தந்த்திருக்கிறார் போலும்!

    ReplyDelete
  7. //வாழ்க்கையின் உயர்வான, ஒடிசலான பாலத்தின் மீதேறி கீழே பார்க்கிறேன்:
    மக்கள் கூட்டமங்கே - மிகவும் கடனப்படுபவர்களும், அழுபவர்களும், சிரிப்பவர்களுமாய் - எதற்காக? யாருக்கும் தெரிவதில்லை. //

    ஆம் பலமுறை இந்த வெறுமையை உணர முடிகிறது. எதற்காக எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது ??

    நன்றி

    ReplyDelete
  8. வாருங்கள் கபீரன்பன்!
    சமூக அக்கறையுள்ள ஆன்ம ஞானியின் கேள்வியில் தான் எத்தனை ஆழம்!

    ReplyDelete
  9. வாங்க அகரம்.அமுதா!

    ReplyDelete
  10. //கருணை நிறை அன்னையே, ஆசையில் மிதக்கும் என்னைத் தடுத்தாட்கொள்! //


    இந்த மனிதப்பிறவியின் நோக்கம் என்ன எனப்தை விவேகானந்தர் கூறியதை தாங்கள் பதிவிட்டதற்கு நன்றி ஜீவா ஐயா.

    ReplyDelete
  11. வாருங்கள் கைலாசி ஐயா.
    மனிதப்பிறவியின் நோக்கமென அழகாகச் சொன்னீர்கள், மிக்க நன்றி.
    சேயினை மறந்த தாயும் உண்டோ? பரிதவிக்கும் பக்தனை துயரினில் ஆழ விடமாட்டாள் அன்னை.

    ReplyDelete
  12. ஐயோ ஜீவா சார்,

    //சின்னதும், பெரியதுமாய், வாழ்க்கைச் சுழலில், நீர்த்தும், ஓடியும்;
    ஓ, முடிவிலா விசை எனக்கு துன்பம்தான் தருகிறது. இனியும் அவற்றில் விருப்பமில்லை;

    எப்போதும் உழன்றுகொண்டே, இலக்கை அடைய இயலாமல் இருக்க, ஏன் கரை கண்ணுக்குக்கூடத் தென்படவில்லை.

    பிறவிக்குமேல் பிறவியெடுத்தும், இன்னமும் வாசலிலேயே நான்; வாசற்கதவுகள் திறந்தபாடில்லை.

    மங்கிய கண்கள், நீண்டநாளாய் தேடிய, அந்த ஒற்றை ஒளிக்கற்றையைப் பிடிக்க, வீணாய் முயலுகின்றன;//

    விழி, எழு, இலக்கை அடையும் வரை விடாதே என்று சொன்ன விவேகானந்தரா இந்த வரிகளையும் எழுதியது? அவருடைய வாழ்க்கையின் எந்த காலகட்டத்தில் என்றும் குறிப்பு தருகிறீர்களா?

    ReplyDelete
  13. வருக திரு.ரத்னேஷ் சார்,
    இந்தக் கவிதையை எழுதியது அமெரிக்காவில் - அவரது முதல் அமெரிக்க பயணத்தின் போது; சிகாகோ மாநாடு, முடிந்து சில மாதங்களுக்குப் பிற்பாடு.
    //விழி, எழு, இலக்கை அடையும் வரை விடாதே //

    இதற்கு முன்னர், ஒரு சாதாரண சந்நியாசியாக இந்தியாவில் அலைந்து திரிந்தபோது - பல சமயம் இறப்பின் விளிம்பிற்கு சென்றிட - எப்படியாவது அங்கிருந்து எழுந்து நிற்க வலுப்பெற வேண்டி, "விழி, எழு, இலக்கை அடையும் வரை விடாதே" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட வாசகம் என அவரே குறிப்பிடுகிறார்.

    இதில் ஏதும் முரண்பாடு தெரியவில்லை எனக்கு!
    இலக்கு என்பது என்ன என்று அறிந்தவர்க்கு, அந்த இலக்கை அடைய உறுதி பூண்டவர்க்கு,
    இந்த வாசகம் சாலப்பொருந்தும்.

    My Play is Done - கவிதையோ பின்னாளில் அந்த இலக்கை கிட்டத்தட்ட எட்டியபின்னர், இலக்கின் வாயிலில் இருந்து கொண்டு, வாயிற்கதவு திறக்க வேண்டி பாடுவதாகத் தெரிகிறது!
    விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் பதிவில் படித்துக் கொண்டிருக்கிறேம். கடைசி பகுதி இங்கே. தங்களுக்கு அவற்றைப் படிக்க ஆவலிருக்கும் என நினைக்கிறேன். வருகைக்கும், பின்புல விசாரிப்புக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  14. சுட்டியைத் தர மறந்து விட்டேன் போலும், அது இங்கே.

    ReplyDelete
  15. சமீபத்தில் திருவல்லிக்கேணி கோவிலுக்கு சென்றிருந்தேன்.நுழைவாயிலில் அளசிங்கர் எனும் அன்பருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதத்தை பொறித்திருந்தனர்.அதைப் பார்த்தவுடன் உங்களது பதிவுதான் ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  16. வருக திரு.வேளராசி,
    அப்படியா!
    திருவல்லிக்கேணியா - தற்போது விவேகானந்தர் இல்லமாகியுள்ள - ஐஸ் ஹவுஸ் அங்குதானே - விவேகானந்தர் ஒன்பது நாட்களுக்குச் சென்னையில் தங்கி இருந்தார்!
    நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  17. simply superb!
    Each & Every word reflects the pain we undergo in the path of searching God.
    Really, I feel proud of u swamiji!

    ReplyDelete
  18. Yes, Indeed, Shree!,
    Thanks for dropping in!

    ReplyDelete
  19. ஸ்ரீதாசன்1:32 AM

    இறைவனை உண௫ம் போது அ௫ள் சே௫ம். அ௫ள் சேர்ந்தால், இ௫ள் விலகும். இ௫ள் விலகினால் வெளிச்சம் வ௫ம். வெளிச்சம் வந்தால் பாதை தெரியும். பாதை தெரிந்தால் தடுமாற்றமில்லாமல் நடக்௧லாம். வெளிச்சக் கதவுகள் நிச்சயம் திறந்து கொள்ளும்.

    விவேகானந்தரின் கவிதை எனக்குள் புதிய தேடலை தந்திருக்கிறது.
    மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  20. வாங்க ஸ்ரீதாசன்,
    மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  21. அன்புள்ள ஜீவா!
    உங்கள் வலைப் பூவில் மிகவும்
    உயர்ந்த பதிவுகள் இட்டிருக்கின்றீர்கள்!
    எல்லாம் நிதானமாகப் படித்து வருகிறேன்.

    //என் விளையாட்டு முற்றுப் பெற்றது; அன்னையே என் தளைகளை,
    உடைப்பாய், விடுதலை செய்வாய்!//என்ற விவேகானந்தரின்
    வேண்டுதல் மனதைத் தொடுகிறது!
    நன்றி!ஜீவா!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  22. வாங்க தங்கமணியம்மா,
    மிக்க மகிழ்ச்சி!
    தங்கள் அன்பான வார்த்தைகள் ஊக்கத்தை ஊட்டுகின்றன, நன்றிகள்!

    ReplyDelete