Wednesday, August 27, 2008

நரேந்திரனின் பயிற்சிக் களம் - 3 : பக்தியா?, ஞானியா?


விவேகானந்தரின் வாழ்க்கைச் சரித்திரம் தனை இந்தத் தொடரில் படித்து வருகிறோம்.
மெய்யன்பர்களே, தொடர்ந்து படிக்கலாமா?

கடந்த பகுதிகள்:
பகுதி 1
பகுதி 2

கிட்டத்தட்ட இப்போது, நரேந்திரன், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் சிறப்பு சீடன் எனப்பெயர் பெற்றுவிட்டார். சிறப்பானதொரு பயனுக்காக, இராமகிருஷ்ணராலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனல்லவா!. எல்லா மாணவர்களுக்கும் சமமாக தன் சக்தியினைச் செலவிட்டாலும், எப்போதும் இராமகிருஷ்ணர் நரேந்திரன் மீது ஒரு 'கண்' வைத்திருந்தார். இடர் வரும் போதெல்லாம், இராமகிருஷ்ணரின் உதவியை நாடினார் நரேந்திரன். ஒருமுறை பக்கத்தில் இருந்த ஒரு ஆலையில் இருந்து வந்த சங்கூதும் சப்தம் அடிக்கடி வர, அது தன் கவனத்தை திசை திருப்புவதாகச் சொல்ல, இராமகிருஷ்ணரோ, அந்த சப்தத்தின் மீதே கவனத்தை நிறுத்தச் சொன்னாராம். இன்னொருமுறை, தியானம் செய்யும் போது, தன் உடலை மறக்க கடினப்பட, இராமகிருஷ்ணர் நரேந்திரனின் புருவ மத்தியில் ஒரு விரலை அழுத்தி, அந்த அழுத்தத்தைக் கவனிக்கச்சொல்ல, அந்த செயல்முறை நரேந்திரனுக்கு உதவியாய் இருந்தது.

ஒருமுறை, மற்ற சீடர்களில் சிலர் இறைஇன்பத்தில் ஆட்டம் வந்து ஆடிட, நரேந்திரன், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுவதில்லை என தன் ஆசிரியரிடம் கேட்க, அவர் சொன்னார்: "குழந்தாய், ஒரு பெரிய யானை, சிறிய குளத்தில் இறங்கினால், அதிலுள்ள தண்ணீர் நாலாபக்கமும் தெறித்தோடும். ஆனால் அதே யானை கங்கையில் இறங்கினால், ஆற்றில் சலசலப்பேதும் இல்லை. நீ குறிப்பிட்டவர்கள், அவர்களின் மிகக் குறைந்த அனுபவத்தால் கூத்தாடுகிறார்கள். நீயோ, பெரும் ஆற்றுக்கு ஒப்பானவன்." என்றாராம்.

மற்றொருமுறை, அதிகப்படியான இறையருள் தந்த ஊக்கத்தினால், சற்றே பயந்துவிட்டார் நரேந்திரன். அதைப்பார்த்த இராமகிருஷ்ணர், அவரிடம் வந்து, 'இறைவன் இனிப்பான கடல் போன்றவன். நீ அதில் மூழ்குவதற்கு அஞ்சுவானேன்?
ஒரு கோப்பையில் இனிப்பான ரசம் ஒன்று நிறைந்திருக்கிறது. அந்தப்பக்கம் மிகவும் பசியான தேனீ ஒன்று வருகிறது. அந்த தேனீயாக இருந்தால் நீ என் செய்வாய்?' என்று வினவினார். நரேந்திரனோ, 'நானாக இருந்தால் அந்த கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து கொண்டு, மெதுவாக அந்த இரசத்தைப் பருகப்பார்ப்பேன். இல்லாவிடின், அந்த இரசத்தில் தவறி விழுந்து மூழ்கி விட்டால், உயிரல்லவோ போகும்?' என்றாராம். இராமகிருஷ்ணரோ, 'நல்லது, ஆனால் நாம் இங்கே இரசமாக பார்ப்பது - பேரின்பம் தரும் சச்சிதானந்தக் கடல். இங்கே இறப்பென்பதே இல்லை. யாராவது இறை அன்பைப்போய் அதிகம் எனச் சொல்ல இயலுமா? எவ்வளவானாலும், அது அதிகமில்லை. நீ அந்தக் கடலில் ஆழத்திற்கு செல்ல வேண்டும்' என்றாராம்.

பின்னொருநாள், ஆசரமத்தில் மாணவர்கள் அனைவரும் இறைவனின் இயல்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறைவன் அவதாரமெடுத்து உண்மையா அல்லது இறைவன் எப்போதும் உருவமற்றவனா - இப்படியெல்லாம் விவாதங்கள். இவற்றில் நரேந்திரனும் உண்டு. நரேந்திரனோ, தனது கூரிய சொல் ஆற்றலால் அந்த விவாதத்தை பிரித்து மேய்ந்து, எல்லோரையும் வாயடைத்துப் போகும்படி செய்து விட்டு, அந்த வெற்றியில் பெருமிதம் கொண்டார். அவர்களின் விவாதத்தை இரசித்து வந்த இராமகிருஷ்ணர், அது முடிந்ததும், ஒரு பாட்டும் பாடினார். அதன் வரிகள்:

எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனமே
எம்பெருமானை அறிய,
எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனமே?

இருட்டறையில் அடைத்த பித்து
பிதற்றுவதுபோல் அல்லவோ நீ?

அன்பால் மட்டுமே அடையத்தக்கவன் அவன்,
அன்பிலாமல் அவனை அளக்கத்தான் இயலுமோ?

உறுதியால் மட்டுமே அவனை அடைய இயலும்,
மறுப்பினால் ஒருபோதும் இயலாது.

வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ
ஒன்றும் உதவாது என அறிவாய்.

இதன் பொருளை உணர்ந்த நரேந்திரன், அறிவால் மட்டும் இறைவனை அளவிட, அவனை அறிந்திட முடியாது என உணர்ந்தார்.

உண்மையில், விவேகானந்தரின் இதயத்தில் பெரும் இறை அன்பு நிறைந்திருந்தது. அதை அவர், அவ்வளவாக எல்லோருக்கும் வெளிப்படுத்தியதுதான் இல்லை. ஒருமுறை இராமகிருஷ்ணர், நரேந்திரனின் கண்களைக் காட்டி, 'இறை பக்தனுக்கு மட்டுமே இப்படி இளகிய பார்வை இருக்கும். ஞானியின் கண்களோ வரண்டு இருக்கும்.' என்றாராம்.
பல ஆண்டுகளுக்குப் பின், விவேகானந்தர், தன்னையும் தன் குருவின் மெய்ஞான நிலைப்பாட்டினையும் ஒப்பிட்டு இவ்வாறு சொன்னாராம் : "என் குருவோ உள்ளே பெரும் ஞானி; ஆனால் வெளியே மற்றவர் பார்வைக்கு பக்திமான். நானோ உள்ளே பக்தியாளன்; வெளியில் உங்கள் கண்களுக்கு ஞானியாகத் தெரிகிறேன்." என்றாராம். அதாவது, இராமகிருஷ்ணரின் மிகப்பெரும் ஞானமெல்லாம், மிக மெல்லிய பக்தி எனும் திரையால் மூடப்பட்டிருந்தது என்றும் தன் பக்தியெல்லாம் தன்னுள்ளேயே இருப்பதை மற்றவர் அதிகம் அறியார், ஆனால், தான் செய்யும் பிரசங்கங்களினால், தான் ஞானிபோல தோன்றிடச் செய்கிறது என்கிற பொருளில்.

(நாம் இந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்க இருக்கிறோம், நீங்களும் தொடர்ந்து வரவும்.)

உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தர்.

17 comments:

 1. இராமகிருஷ்ணர்/விவேகானந்தர் வாழ்வியில் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் சத்திய விளக்கம்! வெறுமனே பேச்சுக்காகவும் பிரசங்கத்துக்காகவும் அவர்கள் வாழ்ந்தாரில்லை!

  நடைமுறையில் செய்த செயல்களே, அனுபவங்களே, அவர்கள் பிரசங்கங்களாக வெளிப்பட்டன! அதனால் தான் ஒவ்வொரு சொல்லும் கூர்மை! அந்தச் சொற்களை எல்லாம் இந்தப் பதிவிலும் கண்டேன் ஜீவா!

  //யானை கங்கையில் இறங்கினால், ஆற்றில் சலசலப்பேதும் இல்லை//

  //யாராவது இறை அன்பைப்போய் அதிகம் எனச் சொல்ல இயலுமா//

  //அன்பிலாமல் அவனை அளக்கத்தான் இயலுமோ?
  வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ
  ஒன்றும் உதவாது என அறிவாய்//

  ReplyDelete
 2. //யானை கங்கையில் இறங்கினால், ஆற்றில் சலசலப்பேதும் இல்லை//

  இதில் இன்னொரு பார்வை:
  யானை என்னமோ ஒரே யானை தான்!
  ஆனால் எதில் இறங்குதோ, அதைப் பொறுத்து தான் சலசலப்பு!
  குளத்தில் இறங்கினால் சலசலப்பு உண்டு! ஆற்றில் இறங்கினால் இல்லை!

  இதில் யானையின் சுயபெருமை ஒன்றும் இல்லை! இறங்கும் இடத்தின் தன்மை தான் பெருமை சேர்க்கிறது!

  அதே போல் ஜீவாத்மா தன்னைப் பற்றித் தனியாகப் பெருமை பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை! ஒருவர் தள்ளாடாமல் ஒளிர்கின்றார் என்றால் அது அவர் பெருமை இல்லை! அவர் இறங்கிய இடத்தின் பெருமை! அவரை இறக்கி விட்ட இறைவனின் பெருமை!!

  இதை உணர்ந்ததால் தான் போலும், விவேகானந்தர் முதலானவர்கள், துறவிக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்கள்! இன்றைய சிலரைப் போல ஆட்டம் போடவும் இல்லை! தள்ளாடவும் இல்லை!

  ReplyDelete
 3. //அன்பிலாமல் அவனை அளக்கத்தான் இயலுமோ?//

  உலகையே அளந்த உத்தமனை நாம் அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்-என்று அதான் மாதவிப் பந்தலில் இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? பதிவில் சொல்லி இருந்தேன்!

  //வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ
  ஒன்றும் உதவாது என அறிவாய்//

  :)
  அன்பே சிவம்!
  இறை அன்பே சிவம்!
  வேதமே சிவம்! தந்திரமே சிவம்-ன்னு சொல்லலை பாருங்க!

  ////யாராவது இறை அன்பைப்போய் அதிகம் எனச் சொல்ல இயலுமா//

  அருமை! அருமை!

  ReplyDelete
 4. நல்ல பதிவு. எறக்குறைய எல்லாமே எனக்கு புதுசு!

  ReplyDelete
 5. அன்பிருந்தால் போதும் அவனை அடைய என்பது என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஆறுதலான செய்தி. ஸ்ரீராமகிருஷ்ணர் எளிமையான உதாரணங்களுடன் பெரும் செய்திகளை சொல்லும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவருடைய சிறப்பான சீடரைப் பற்றி சிறப்பாகப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜீவா.

  ReplyDelete
 6. @கே.ஆர்.எஸ்,
  மறுமொழிகளில் தங்கள் மறுபலிப்பு நெகிழ்ச்சியூட்டுகிறது. மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 7. @கே.ஆர்.எஸ்,
  'இன்னொரு' பார்வையும் அருமை!
  யானையை ஆற்றின் இடத்திலும்

  ஆற்றை யானையின் இடத்திலும்

  முற்றிலும் இடம் மாற்றினாலும்,
  முற்றிலும் சரியாய் பொருந்துகிறது!

  ReplyDelete
 8. வாங்க திவா சார்,
  //எல்லாமே எனக்கு புதுசு!//
  நானும் உங்க கட்சி தான்!

  ReplyDelete
 9. வாங்க கவிநயா,
  இராமகிருஷ்ணரின் உபதேசங்கள் எளியவையும், இனிமையானவையும், மிகவும் உயர்ந்தவையும் கூட.
  உலகில் உய்ய வேறொன்றும் வேண்டா.
  தத்துவங்களை எளிதாக மனதில் ஒட்ட வைத்துவிடுவார். பல குழப்பங்களை எளிதில் தீர்த்துவிடுவார்.
  The Complete Works of Swami Vivekananda, ஒன்பது பாகங்களாக விரிந்து கிடக்கிறது. எப்போது இவற்றை எல்லாம் படித்து முடிப்பது எப்போது, பல ஜென்மங்கள் வேண்டும் போலிருக்கிறது!

  ReplyDelete
 10. உங்களின் நட்சத்திர வாரத்தில் என் எதிர்பார்ப்புகள் நிறைவேற தொடங்கியிருக்கின்றன நன்றி!

  :))

  ReplyDelete
 11. வாங்க ஆயில்யன்,
  //உங்களின் நட்சத்திர வாரத்தில் என் எதிர்பார்ப்புகள் நிறைவேற தொடங்கியிருக்கின்றன நன்றி!//
  ஆகா, மெத்த மகிழ்ச்சி!
  இன்னும் ஒரே ஒரு ஆன்மீக இடுகையாவது இட இயலும் இந்த வாரத்தில் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. சிறுவயதில் மதுரை ராமகிருஷ்ண மடத்தில் தினம் மாலை ஆரத்தி, மற்றும் பஜனை முடிந்து ஒரு சொற்பொழிவு நடக்கும். நீங்க இந்த பதிவில் சொன்ன சிலவற்றை அங்கே கேட்டிருக்கிறேன். 2 வருடங்கள் அங்கு அங்கேயே வாசம்... அதெல்லாம் நினைவுக்கு வருது.

  பழைய லிங்க் எல்லாமும் கொடுத்தமைக்கு நன்றி ஜீவா. நேரம் கிடைக்கையில் ஒவ்வொன்றாக படிக்கிறேன்.

  ReplyDelete
 13. வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ
  ஒன்றும் உதவாது என அறிவாய்.//  ஸ‌ம்ப்ராதே ஸ‌ன்னிஹிதே காலே
  ந‌ஹி ந‌ஹி ர‌க்ஷ‌தி டுக்ர‌ங்க‌ர‌ணே

  என‌ ஆதி ச‌ங்க‌ர‌ரும் இதையே தான்
  மோஹ‌ முத்க‌ர‌ஹ‌ என‌ப்ப‌டும் ப‌ஜ‌ கோவிந்த‌த்தில்
  சொன்னாரோ ?


  (டுகிர‌ங்க‌ர‌ணே == Rules of Grammar .. த‌ந்திர‌ம் )


  சுப்பு ர‌த்தின‌ம்
  த‌ஞ்சை.

  ReplyDelete
 14. வாங்க மௌலி சார், மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 15. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
  பஜ கோவிந்தத்திம் முதல் சுலோகத்தை குறிப்பிட்டு இருக்கீங்க, நன்றி!.
  குமரன், இதற்கு இங்கே பொருள் விளக்கிஇருக்கிறார்.
  மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? என்பது தலைப்பு!

  ReplyDelete
 16. விவேகானந்தரின் வாழ்வியல் நிகழ்ச்சிகளால் நாம் பெறும் பெரும் படிப்புகளை நன்கு சொல்லியிருக்கிறீர்கள் ஜீவா. நன்றிகள்.

  ReplyDelete
 17. ஆம் குமரன்,
  நமக்கு பெரும் படிப்பினையைத் தரும் அரும் நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கைச் சரித்திரம்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails