'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?'
'எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?'
இப்படி எல்லோரிடமும், இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கேட்ட அந்த வங்காளத்துச் சின்னப்பையன், நரேந்திரனைப் (நரேந்திரநாத் தத்தா) பற்றி நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். விவேகானந்தரான அவர் கதை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டு விட்டதல்லவா? அது சரி, நரேந்திரனின் பயிற்சிக்கூடம் எப்படி இருந்திருக்கும்? விவேகானந்தர் எப்படி கடவுளை கண்டறிந்தார்? சுவையான சில சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.
முதலாவதாக, இராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு இந்த ஒரு வழியினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை. அவரவர் பின்புலத்திற்கு தகுந்தவாறு தங்கள் வழியினில் தங்கள் இறைஅறிவுத் தேடலில் ஈடுபடலாம். அவ்வாறே நரேந்திரனுக்கும். அதே சமயம், நரேந்திரனின் பயிற்சி முறைகள் பரமஹம்சரால் நேரடியாக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.
பயிற்சிக்கூடத்தில் சக மாணவர்களுக்குள் பல சமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் வரும். பல கடவுள்களைப் பற்றியும், பல நம்பிக்கைகளைப் பற்றியும் விவாதங்கள் வளரும். இந்த விவாதங்களில் நரேந்திரனின் பேச்சுத் திறமைகளை தொலைவில் இருந்து ரசிப்பார் ராமகிருஷ்ணர். அப்படி ஒரு சமயத்தில், ராகல் என்னும் சக மாணவரின் காளி பக்தியை நரேந்திரன் கிண்டல் செய்வதைப் பார்த்து, மற்றவகள் இறை நம்பிக்கையை சிதைக்கும் படியாக ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.
இன்னொரு சமயம், இராமகிருஷ்ணர் விளக்கியிருந்த அத்வைதக் கோட்பாடுகளைப்பற்றி மாணவர்கள் விவாத்தித்து கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரனோ, 'இது என்ன பிதற்றல், இறைவன் எங்கேயும் இருக்கிறானாம். அருகிலிருந்த ஜாடியைக் காட்டி, இந்த ஜாடியிலும் இருக்கிறானம், அதன் மூடியிலும் இருக்கிறானாம்' - என்று கிண்டலாகச் சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டனர். இவர்களின் நகைப்புக்கு காரணம் அறிந்து அங்கு வந்த இராமகிருஷ்ணர், நரேந்திரனைத் லேசாக தொட்டுவிட்டு சென்று விட்டார். நரேந்திரனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நரேந்திரன் பார்ப்பதில் எல்லாம் பரப்பிரமம் தெரிந்ததாம்!. அத்வைதத்தின் சாரம் அப்போதே நரேந்திரனுக்கு காணக்கிடைத்தாலும் முழுஅறிவினைப் பெறுவதற்கு பின்னொரு நாளானது.
ராமகிருஷ்ணரும் தன் மாணவர்களை பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி வந்தார். ஒருமுறை, ஒரு காரணமே இல்லாமல் நரேந்திரனுடன் சில நாட்களாக பேசவே இல்லை. முகமெடுத்துக்கூட பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்தார். சில நாட்கள் கழித்து, அவரே நரேந்திரனிடம், 'உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறேன். நீயேன் தினமும் இங்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கிறாயே?' என்றார் கோபமாக. நரேனோ, சாந்தமாக, 'உங்கள் மீதுள்ள அன்பினால் உங்களைப் பார்க்க வருகிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்பதற்காக அல்ல' என்று சொன்னார். நரேனின் பதிலில் மகிழ்ந்த இராமகிருஷ்ணர், 'நல்லது, உன்னை சோதனை செய்யவே இப்படிச் செய்தேன். என் வெளி அணுகுமுறையில் மாற்றத்தினால் நீ மாறுகிறாயா என்று பார்த்தேன். வேறொருவாராய் இருந்தால் இங்கே திரும்பி வந்திருக்கமாட்டார்' என்றார்.
ஒருமுறை நரேந்திரனை அழைத்து, பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.
இராமகிருஷ்ணரைப்போல் நரேந்திரனால் உள்ளொளியில் அமைதியாக ஒளிர்ந்திட இயலவில்லை. தனக்கு தியானம் சொல்லித் தரும்படி மன்றாடிட, அதற்கு இராமகிருஷ்ணரோ, "கடவுள் நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ கடவுளைப் பார்க்கவும், பேசவும் முடியும் - என்னுடன் நீ பேசுவதைப் போலவே. அவர் பேசுவதைக் கேட்கவும் அவரைத் தொடுவதை உணரவும் முடியும்." என்றார். தொடர்ந்து, "நீ தெய்வங்களின் உருவங்களில் நம்பிக்கை அற்றவனாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால், அவனிடம் கேள் - 'இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்' என வேண்டிடு. உன் வேண்டுதல் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவன் அதற்கு செவி மடுப்பான்." என்றாரே பார்க்கலாம்.
உசாத்துணை : விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தா
(இன்னமும் வளரலாம்...)
நரேந்திரன்/இராமகிருஷ்ணர் அனுபவங்களை புத்தகங்கள் மூலம் படித்திருக்கிறேன்.Refresh செய்துகொண்டேன்.
ReplyDelete//'இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்' //
ReplyDeleteநிஜ சொரூபம் என்றால் என்ன ?
ஜீவா, நல்லதொரு பதிவு. கேள்விக் கணைகளைத் தொடுக்கத் துவங்கி விட்டார் நண்பர் கண்ணன்.
ReplyDeleteமிக்க நன்று திரு.குமார்.
ReplyDeleteவருக கோவி,
இப்படியும் அப்படியும் பலவாறு இறைவனைச் பலரும் சொல்கிறார்கள். இதில் எது நிஜம்? எது கற்பனை? இப்படி இறைவனையே கேட்பதாகக் கொள்ளலாம்.
வாங்க திரு.சீனா.
//நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது//
ReplyDeleteஇதனால்தான் நரேன் விவேகனந்தரானார் என்றே தோன்றுகிறது. பிரயாசை இன்றி எல்லாவற்றையும் அறிய முயற்சிக்கவில்லை அவர். தனது முயற்சியை முதலாக கொண்டு குருவின் வழிகாட்டல் மட்டுமே அவர் எதிர்பார்த்திருக்கிறார் இல்லையா ஜீவா?
//நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது//
ReplyDeleteஇதனால்தான் நரேன் விவேகனந்தரானார் என்றே தோன்றுகிறது. பிரயாசை இன்றி எல்லாவற்றையும் அறிய முயற்சிக்கவில்லை அவர். தனது முயற்சியை முதலாக கொண்டு குருவின் வழிகாட்டல் மட்டுமே அவர் எதிர்பார்த்திருக்கிறார் இல்லையா ஜீவா?
i like ur post of swami vivekanadha
ReplyDeleteand sri ramakrishna paramahamsa.
i am new to ur blog.
this blog highly impressed me.
i request you to post more like this.
thank you,
Have a nice day.
நிச்சயமாக திரு.மதுரையம்பதி.
ReplyDeleteஇறைவனை அடைந்தாலே அதுவே எல்லாவற்றையும் அறிந்தாற்போல் என்பதாலும். ஆசானாக இருப்பதைக் காட்டிலும் தான் யாரென்றும் அறியும் தவமே சிறந்ததென்று உணர்ந்தவராயிருந்தார். சக்தியைப் பெற்றவுடன் அதை வெறும் மாயாஜாலங்கள் செய்பவராக மாறினால் அப்புறம் மந்திரவாதிக்கும் மகானுக்கும் என்ன வேறுபாடு?
மேலும் இந்தக் காலகட்டத்தில் சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டவராயிருந்தார். அவர் தந்தையின் மறைவிற்கு பின்னர், ஏழ்மை வாட்டியது. வேலை தேடி சென்ற இடங்களிலெல்லாம், அவரை விரட்டி அடிக்கும் நிலை. இந்த வாட்டத்தையெல்லாம் ஒரு நொடியில் ஓட்டியிருக்க முடியும். ஆனால் கற்ற கல்வியென்னும் அருமருந்தின் துணையுடன், நல்லறிவுடன் மட்டுமே எதிர்கொண்டு நின்றார்.
வந்துட்டான்யா...!! வந்துட்டான்யா... !!!
ReplyDeleteநிஜம் என்ற வடமொழிச்சொல், தமிழில் இருப்பினும் பொருள் சற்று வேறு படும்.
இந்த சொல்லுக்கு தமிழ் நாட்டில் நடைமுறையில் "உண்மை" எனப்பொருள் ஆயிற்று. விளக்கிச்சொல்வோமானால், கற்பனை இல்லை, பொய் இல்லை என்பதாம்.
ஆயினும்,
நிஜம் என்ற சொல்லினை வடமொழியிலோ அல்லது அது வழியாக வந்த மற்ற இந்திய மொழிகளிலோ பயன்படுத்தும்போது, அந்த சொல்லுக்கு
inborn , innate , one's own, indigenous,
ஆகிய ஆங்கில சொற்கள் குறிப்பிடும் பொருளாம்.
ஆகவே, நிஜ ஸ்வரூபம் எனச்சொல்கையில், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்தல் வேண்டும்.
உலகாயத வாழ்க்கையிலே உழலும் பக்தன ஒருவன் தன் மனதிலே, பிரும்மனுக்கு குணங்களையும், ரூபங்களையும் பல்வேறாகக்கொண்டு, கற்பித்து, சகுண பிரம்மனாக அதாவது ஈஸ்வரனாக வழி படுகிறான்.
( பிள்ளையார், முருகன், சிவன், ராமன், எனவோ, அம்பிகை, தாயார், காளி எனவோ அல்லது அனுமன், ஹயக்ரீவன், நரசிம்மன் எனவோ உருவங்களைக்கொடுத்து அவரவர் தேச கால குடும்ப நியதிக்கு ஒத்தாற்போல் வழிபடுதல் சகுண உபாசனை ஆகும்.)
சகுண பிரம்மன் அதாவது ஈஸ்வரனை தொடர்ந்து தீவிரமாக உபாசனை செய்கையில், ஈஸ்வர பக்தியில் முழுமையாக லயித்தபின்னே மாயையின் ஆவரணங்கள் கொஞ்சம் கொஞசமாக பக்தனுக்கு விளங்குகின்றன். அப்போது அவன் சகுணத்தினை விட்டு நிர்குணமான பிரும்மனை அடைவதற்கான தகுதியினை ப் பெறுகிறான்.
ஆகவே பிரும்மனின் இயல்பு நிர்குணமானதால் அதைக்க்காட்டிட முடியாது. அதே சமயத்தில் அதை மாயாசகித பிரும்மன் அதாவது ஈச்வரனாகப்பார்க்கவேண்டும் எனின் அதற்கு கடு முயற்சி தேவையில்லை. காளி மாதா கண்முன்னே நிற்கிறாள்.
"இறைவா ! உன் நிஜ ஸ்வரூபத்தினை காட்டு" என வேண்டு என இராமகிருஷ்ணர் நரேந்திரனிடம் குறிப்பிட்டிருப்பதன் பொருள்:
இறைவா ! நீ எதுவோ அதை நான் உணர அருள் செய் என்பதே.
பிரும்மனை நிர்குணமாக, நிராகாரமாக, அந்தர்யாமியாக, எல்லாவற்றினையும் தன்னுள் அடக்கியவனாக, பூரணத்வம் கொண்டவனாக, பிரிக்கமுடியாதவனாக, அத்விதீயனாக ( தனக்கு உவமை இல்லாதவனாக)
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவனாக, காலரீதிகட்கு அப்பாற்பட்டவனாக நரேந்திரன்
உணர வேண்டும் என இராமகிருஷ்ணரின் எண்ணத்தின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது
இந்த சம்வாதம்.
பரிதி மாலன்.
சென்னை.
Basics of Advaitha may please be read :
ReplyDeletehttp://www.katha.org/Academics/Advaita-FrontPg.html
Subbarathinam
Thanjavur/
. //சக்தியைப் பெற்றவுடன் அதை வெறும் மாயாஜாலங்கள் செய்பவராக மாறினால் அப்புறம் மந்திரவாதிக்கும் மகானுக்கும் என்ன வேறுபாடு?//
ReplyDeleteஇது எங்கோ இடிக்கிறதே!.....
உலக அற்ப ஆசைகளில் அமுங்கி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள்குழந்தைகளுக்கு வித்தை வேடிக்கை காட்டி, முதலில்
அருகில் அழைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதான் மெதுமெதுவாக ஆன்மீக அருமருந்தைப் புகட்ட முடியும்.
கோவில்களில் கூட திருவிழாக்கள், ஆட்டம், பாட்டு, கூத்து எல்லாம் எம்மை உள்ளே அழைப்பதற்காக அன்றோ நடைபெறுகின்றன.
ஞானிகளுக்கு அவை அவசியமற்றவை ஆகலாம்.
விவேகானந்தரோ, இராமகிருஷ்ணரோ, பூஜை புனஸ்காரங்கள் , மந்திரங்கள் மூலமாக கடவுளைக்காணலாம் என்று சொல்லவில்லை, யோக மார்க்கம் வழியாக காணவே முயன்றார்கள், அப்படி இருக்கும் போது ஏன் அவர் வழி எல்லாம் அதை பின்ப்பற்றவில்லை, ஆன்மீகத்தை வலுப்படுத்த மட்டும், இராமகிருஷ்ணர், விவேகனந்தர் வேண்டும் ,ஆனால் அவர்கள் சொன்னது வேண்டாம் என்று தானே நீங்கள் உட்பட எல்லாரும் இருக்கிறீர்கள்! இதில் விவேகானந்தர் கடவுளைக்கண்டாரா இல்லையா என்று பதிவு வேறு!
ReplyDeleteஅல்பாயுசில் இறந்தவர் விவேகானந்தர் அவருக்கு கடவுள் காட்டிய கருணை அவ்வளவு தானா? உடனே கடவுள் யார் மீது அதிகம் பிரியம் கொண்டாரோ அவரை சீக்கிரம் உலகத்தில் இருந்து பிரித்துவிடுவார் என்று புளுகக்கூடாது!
பரிதிமாலன் ஐயா,
ReplyDeleteமிக அழகாக விழகாக விளக்கி இருக்கிறீர்கள், நிஜ சொரூபத்தினை.
இதுவே முந்தய பதிவின் சாராம்சமும் கூட.
கர்ம வினைகளும், மாயையும் தீர கடவுள்களின் அவசியம்தனை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
மேலும் ராஜ யோகத்தில் ஒவ்வொரு சக்ரத்திற்கும் ஒரு கடவுள் அதிபதி அல்லவா. ஒவ்வொரு தேவதையின் அருளில்லாமல் எப்படி எல்லாவற்றுக்கும் மேலான ஈசனை அடைவது?. ஆகவே அவர்கள் அனைவரின் உதவியும் வேணும்.
மிக்க நன்றி!
தஞ்சாவூர் சுப்புரத்தினம் அவர்களுக்கு,
ReplyDeleteதங்கள் சுட்டிக்கு மிக்க நன்றி.
நிறைய விஷயங்கள் அங்கிருக்கு.
மிகவும் நன்றி, சுட்டியதற்கு.
//இது எங்கோ இடிக்கிறதே!.....
ReplyDeleteஉலக அற்ப ஆசைகளில் அமுங்கி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள்குழந்தைகளுக்கு வித்தை வேடிக்கை காட்டி, முதலில்
அருகில் அழைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதான் மெதுமெதுவாக ஆன்மீக அருமருந்தைப் புகட்ட முடியும்.
கோவில்களில் கூட திருவிழாக்கள், ஆட்டம், பாட்டு, கூத்து எல்லாம் எம்மை உள்ளே அழைப்பதற்காக அன்றோ நடைபெறுகின்றன.
ஞானிகளுக்கு அவை அவசியமற்றவை ஆகலாம்.
//
நான் சொன்னது அதைப்பற்றி அல்ல அனானி அவர்களே.
*வெறும்* மாயாஜாலத்தை மற்றுமே அறிந்த போலிகளை.
வருக வவ்வால்,
ReplyDeleteநீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் குறிப்படுவதுபோல் இந்தப் பதிவில் எதுவும் சொல்லப்படவில்லை.
இங்கு சொல்லப்பட்ட சம்பவங்கள், நரேந்திரனுக்கு, (ஏன் அவரைபோல் ஆன்மீகத்தேடலில் ஈடுபடும் எவருக்கும்) பயிற்சிக் களங்கள். பயிற்சியில் ஆசிரியர், ஒரு பக்கம் சார்ந்தார்போல் மாணவனைத் தூண்டி விட்டு அவன் எப்படி தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான் என்று பார்ப்பதுதான் நோக்கம். மற்றபடி இதன் மூலமாக எல்லோருக்கும் இதுதான் வழி என்று யோக மார்க்கத்தையோ, இறை வழிபாட்டினையோ போதிப்பதல்ல.
இங்கே இராமகிருஷ்ணர் நரேந்திரனுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நம் வழிதான் சரியான வழி என்கிற மனப்பான்மை கொள்ளாமல் - எல்லா வழிகளிலும் மெய்யான பொருளும், மெய்ப்பொருளும் இருக்கலாம், அவற்றை உதாசீனப் படுத்தாதே, என்பதுதான்.
அப்புறம் விவேகானந்தர் சீக்கிரமே எல்லாம் இறக்கவில்லை என நான் நம்புகிறேன். அவராகவே, இந்த பூவுலகில் தன் பணி முடிந்தது என்று அறிந்த பின் தான் மஹாசாமாதி அடைந்தார்.
கோவி,
ReplyDeleteவேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என விவாதிப்பது, இந்த பதிவிற்கு அப்பாற்பட்டது. அதனால் அந்த மறுமொழியை மட்டுறுத்துகிறேன்.
"//மேலும் ராஜ யோகத்தில் ஒவ்வொரு சக்ரத்திற்கும் ஒரு கடவுள் அதிபதி அல்லவா. ஒவ்வொரு தேவதையின் அருளில்லாமல் எப்படி எல்லாவற்றுக்கும் மேலான ஈசனை அடைவது?//"
ReplyDeleteஉண்மையே. இருப்பினும் குறிப்பாக நண்பர் ஜீவா அவர்கள் அருள் கூர்ந்து மனமுவந்து படிப்பதற்காக கீழ்க்காணும் விளக்கத்தைத் தருகிறேன். மற்றவர்கள், போரடிக்கும என்று எண்ணுகையில் கடைசி வரிக்கு நேரடியாகச்செல்லவும்.
உபனிஷத்துக்களில் 2 பிரிவுகள் உள்ளன.
ஒன்று கர்ம காண்டம். அதில் பிரும்மசர்ய விருதத்தை எடுத்துக்கொண்டவன் செய்யவேண்டிய
பல்வேறு தேவதா உபாசனைகளப்பற்றியும், மற்றும் இது செய்தால் இது கிடைக்கும் எனவும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேவதை (கடவுள் எனவோ அல்லது ஈச்வரன் எனவோ அல்லது முன்னமே நீங்கள் சொன்ன personal God எனப்புரிந்து கொள்வதில் தவறில்லை)
மனதில் இருத்தி உபாசனை செய்கையில், அந்த தெய்வத்தின்பால் சொல்லப்படுகின்ற குணாம்சங்களெல்லாம் உபாசகனை அடைகின்றன். நுணுக்கமான விளக்கப்போனால், அந்த தெய்வத்தின் அனுக்ரஹம்* என்பதை விட, யத் பாவம் தத் பவதி ( You Become What you Believe )
எனும் வாக்யத்தின் படி, உபாசகன் தான் வேண்டியதை ( அவனவன் கர்மாக்களுக்கு ஏற்ற வகையிலே) பெறுகிறான். மேலும், ஒருவன் கர்மங்களைச்செய்கின்றான் என்றாலே அப்படிப்பட்ட கர்ம வினைகளைச்செய்யும் மன நிலை அவனுக்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் கர்ம வினைப்பயனே. " அவனருளாலே அவன் தாள் வணங்கி) என த்தேவார வாசகத்தை க்கூர்ந்து நோக்கின் , அவன் அருள் இல்லாது அவன் பக்கம் மனம் திரும்பாது என்பது வெள்ளிடைமலை.
இது சாஸ்த்ர பிரமாணம் ( some sort of an AXIOM ) என்ற வகையில் இருப்பதால், இவை தர்க்க விதர்க்கங்களுக்கு உட்பட்டதில்லை. Here is purely and simply a question of belief and firm faith.
கர்ம காண்டத்தின் அடிப்படையில் தான் அல்லது வழியில் தான் gnana maarg
க்கு செல்லவேண்டும் என்ற நியதி இல்லை. ஆயினும் இப்பாதையும், பூர்வ ஜன்ம கர்ம பந்த வசாது அதாவது முன்னைய பிறப்பின் செய்த வினைகளைப்பொறுத்தது. அனாதியாக வ்ர்ணிக்கப்படுகிற நமது தர்மத்தின் நிலைப்படுகளின் படி, நாம் பெறுகின்ற அல்லது பெற்ற அறிவு இப்பிறப்பில்தான் துவங்கியதில்லை. முன்னைய பிறப்புகளில் பெற்ற அறிவின் தொடர்ச்சி அல்லது முதிர்ச்சியே இப்பிறப்பில் தொடர்கிறது. gnana sambhandar அவெளிப்படுத்திய அறிவு இந்த ப்பிறவியில் தான் பெற்றதாகக் கொள்ள இயலுமோ ? ( அறிவு என நான் குறிப்ப்பிடுவது பரத்தைப்பற்றிய அறிவு )
ராஜ யோகத்தில் குறிப்பிடப்பட்ட, யமம், நியமம், பிரத்யாஹாரம், தாரணம், தியானம் இவற்றைத் தாங்கள் குறிப்பிட்டவாறு தேவதைகளை முன் வைத்து செய்வது முறைதான்.
அதுவும் விதிக்கப்பட்ட முறைதான். இருப்பினும் முதல் 5 நிலைகளை நீக்கி தியானத்தில் துவங்கி சமாதி நிலை வரை சென்று அடைவதும் இயலும். இது வானபிரஸ்த அல்லது நேரடியாக சன்னியாசதர்மத்தை மன வைராக்கியம் கொண்ட பிரும்மசர்யனுக்கும் பொருந்தும்.
நிற்க. இப்பிறப்பில் பிரும்ம ஜ்னானத்தின் விளிம்புகளைத்தொடுவோமா ? பூரணத்தின் அறிவினைப்பெறுவோமா என ஐயத்திலோ அல்லது கேள்விக்கணைகளின் தாக்கத்தில்
காலத்தைச்செலவிடாது, முன்னோர்களால் விதிக்கப்பட்ட பாதைகளில் தொடர, ஏதேனும் ஒரு பிறவியில் பிரும்ம ஜ்னானம் நிச்சயம். இதுவும் ஸாஸ்திர பிரமாணம்.
( வாசக தோஷஹ க்ஷந்தவ்யஹ .. வார்த்தைகளில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவேண்டும்)
பிற்குறிப்பு: 1. * தெய்வ அனுக்ரஹம் என்பது எல்லோருக்கும் முழு நிலவின் ஒளி போல கிடைப்பது. ஆனால், அதை உணர்வது அல்லது அனுபவிப்பது எனது கர்ம வினைகளைப்பொருத்தது. ஆண்டவனின் அளவற்ற அருளாளன். காய்தல் உவத்தல் என்ற மன நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். நான் அவனை பூசித்தாலும் அடைகிறேன். பூசிக்காவிடினும் பூர்வ ஜன்ம வினைப்படி அடைகிறேன்.
நன்றி. வணக்கம்.
சூரிய நாராயணன்.
சென்னை.
//*வெறும்* மாயாஜாலத்தை மற்றுமே அறிந்த போலிகளை.//
ReplyDeleteபல இடங்களில் நடக்கும் விவாதங்களைப் படிப்பதனால், என் மனமும் எங்கொ தாவிவிட்டது. :)
//விவேகானந்தரோ, இராமகிருஷ்ணரோ, பூஜை புனஸ்காரங்கள் , மந்திரங்கள் மூலமாக கடவுளைக்காணலாம் என்று சொல்லவில்லை, //
அவர்கள் சொல் வீரர்கள் அல்ல செயல் வீரர்கள். இராமகிருஷ்ண பகவான்
காளிக்கு செய்யாத பூஜையா!,,,,,,,
அவர் தனது மனைவியைக்கூட பராசத்தியயாகத்தானே பூஜை செய்திருக்கிறார்.
நடுச்சாமத்தில் மயானதில் அமர்ந்து மந்திர உச்சாடனங்கள் செய்துள்ளாரே.
விவேகானந்தரும் பக்தி மார்க்கத்தைத் தள்ளிவிடவில்லை பஜனைகள், பூஜைகள் எல்லாம் செய்துள்ளார். பலருக்கு மந்திர உபதேசமும் செய்துள்ளாரே.
விளக்கமான உரைக்கு மிக்க நன்றி சூரி ஐயா.
ReplyDelete//இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் பக்தி மார்க்கத்தைத் தள்ளிவிடவில்லை பஜனைகள், பூஜைகள் எல்லாம் செய்துள்ளார்.//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் அனானி.
சொல்லப்போனால், இராமகிருஷ்ணர் அடிப்படையில் பெரும்பாலான வங்கள்களைப்போல் சக்தி உபாசகர். சக்தி உபாசனையினால் பெற்ற சக்தியினால், சக்தியயே பரம்பொருளாய் கண்டவர்.