Sunday, November 25, 2007

அறுபடைவீடும் ஆறு சக்கரங்களும்

திருபரங்குன்றம்: மூலவருக்கு இங்கு சுப்ரமணிய சுவாமி என்று நாமம். தேவசேனாதிபதி தேவசேனையை மணந்த தலம். தங்கள் அழுக்குகளை, மூலாதாரத்திற்கு கீழுள்ள சக்கரங்களை மறந்து, இறைவனுடம் இணைவதைக் குறிப்பது, தேவசேனை-திருமுருகன் திருமணம். இந்த தலத்தில் இருக்கும் கற்பக விநாயகனை முதலில் மனத்தில் இருத்தி, அவன் அருள் பெற்று, அறுபடைவீடு தரிசனத்தை துவங்குவோம். மூலாதாரத்தில் அவனுடன் இணைந்து, சரவணபவ எனும் திருநாமம் சொல்லி, மேலான நிலைகளை, சக்கரங்களை அடைவோம்.

திருச்செந்தூர்: மூலாதாரத்தில் துவக்கிய கனல்தனை வளர்த்து அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்தை அடைய, தவ நிலையில் ஜப மாலையுடன் நின்றிடும் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமியை துதித்திடுவோம். அலைகடல் ஓசை எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதைப்போல ஓம்கார நாதம் எப்போதும் ஒலித்திக் கொண்டே இருப்பதைக் கவனிப்போம். பதஞ்சலி முனிவர் அருளியபடி ஓம்காரத்தினை ஒலித்திட, ரீங்காரமாய் சுழலாதோ சுவாதிஷ்டானம் திருச்செந்தூரில்.

பழனி - தியான மலை : பழனி மலையில் தண்டாயுதபாணி போகரின் யோகமதில் அருமருந்தாய் ஔஷதமாய் உறைகிறான்.

அவன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாகவும், காந்தமாகவும் இருக்கிறான், இழுக்கிறான். ராஜ யோகத்தில் மணிப்பூரத்தில் ஏற்படும் பயத்தினை நீக்கிட, 'யாமிருக்க பயமேன்?" என அபயம் காட்டுகிறான் பழனி மலையில் ஞான பண்டிதன்.

சுவாமிமலை: காவிரிக் கரையில் திருவேரகத்தில் அருளும் சுவாமிநாதன். அருணகிரியார் நாதனை திருப்புகழால் பாடிய அருந்தலம்.
இங்குள்ள கொடிமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது ஏற்றது. சுவாமிநாதனின் உபதேச மந்திரம் ஓம் ச-ர-வ-ண-ப-வ. இம்மந்திரத்தை தொடர்ந்து தியான நிலையில் ஒலிக்க, இதயக் கமலமாம் அனஹதத்தில் ஒளிர்வான் சரவணன். இங்கே மலையாகிய ஞானமதை நொடிப்பொழுதில் அடைந்திட இயலும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரப் பிரயோகத்தினால், அவரவர் அகத்திலேயே ஆறு சக்கரங்களில் அறுபடை வீடுகளின் தரிசனம் பெறலாம்.

திருத்தணிகை: குன்றுதோறாடல் என திருமுருகாற்றுப்படையில் அழைக்கப்படும் இந்த தலத்தில் காப்பாற்றும் கடவுளாக ஆதிமுதலே வணங்கப்பட்டவன்.

குளுமையும் அமைதியும் தவழும் இடமாதலால், விசுத சக்ரத்தில் தூய அன்பினைக் கொண்டு முருகனை அடைய ஏற்ற இடம். தன் உணர்வையெல்லாம் மறந்து இறை உணர்வு மட்டுமே இருத்தி, எல்லாவற்றிலும் முருகானாக ஆனந்த பரவசத்தினை அடைய ஏற்ற இடம்.
இந்த தலத்தின் விசேஷம் - கல் வேல் - முருகனின் வேலே முருகனாக ஆதிமுதல் வழிபட்ட இடம். அஞ்ஞானத்தை கூரிய வேலால் பிளந்து உள்ளொளி பெருகிட வழி வகுக்கும்.
பழமுதிர்ச்சோலை: அடுத்ததாக ஆக்ஞை சக்கரத்தில் அவன் அருள் பெருவதற்கு ஏற்ற தலம் பழமுதிர்ச்சோலை.

வீசிய வேல், கார்த்திகேயனின் கையிலேயே திரும்பி வருவதுபோல், எழுப்பிய குண்டலினி சக்தி நம் அஞ்ஞானத்தை அழித்து, ஞானமாக நமக்கு திரும்பித் வருவதைக் குறிக்கும்.

கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான்.

பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.உசாத்துணை :
1 )ரத்னா நவரத்னம் (Navaratnam, Ratna.
Karttikeya, the divine child: the Hindu testament of wisdom. Bombay, Bharatiya Vidya Bhavan, 1973.)
2) Himalayan Academy - Hinduism Today Magazine

12 comments:

 1. நண்பர் ஜீவா என்னைவிட 30 வயது குறைந்தவராயிருப்பினும், இறைத்தொண்டில் அவர் காட்டும் ஆர்வமும் துடிப்பும் செயல்திறமையும் என்னைவிட 30 மடங்கு அதிகமாக இருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
  மூலாதார சக்க்ரங்களை முருகனின் ஆறு படைவீட்டுடன் ஒப்பிட்டு எடுத்துரைத்த மாட்சிதான் என்னே !
  எனது நண்பர் ‍ ‍= வருமான வரி இலாகாவில் மிகப்பெரிய பதவியிலிருந்தபடியே = வேத வித்தாகவும் திகழ்கிறவர் இது பற்றி நான் கேட்ட போது கூறுகிறார்.

  இது உண்மையே.
  பார்க்கப்போனால்,
  கந்தர் அனுபூதியின் 2வது பாட்டு: முதல் இரண்டு வரிகள் நீங்கள் எடுத்துரைத்த சக்கரங்களைப்பற்றித்தான் குறிப்பிடுகின்றன்.

  உல்லாச நிராகுல யோகவித‌
  சல்லாப வினோதனும் நீயலையோ

  இந்த சக்கரங்களின் சான்னித்யத்தை உணர்ந்து அனுபவித்து மேலும் உயரும் முருக‌
  பக்தன் ஒருவன் அடையும் நிலை அடுத்த 2 வரிகளில் காணப்படுகிறது.

  எல்லாமற என்னை இழந்த நலம்
  சொல்லாய் முருகா சுரபூ பதியே..

  திருப்புகழ் ‍ 18 வது பாட்டிலே :
  " நீடார் சடாரத்தின் மீதே பராபரத்தை
  நீ காண் எனா அனைச்சொல் அருள்வாயே "
  மேன்மை பொருந்திய ஆறு ஆதாரங்களுங்கடந்து அப்பால் விளங்கும் சகஸ்ராரப் பெருவளியில் திகழும் பரம்பொருளை நீ காண்பாயாக என்று ஐக்கிய பதத்தை உபதேசித்து அருள் புரிவீர்.

  ஆறு படை வீட்டோனது பாதம் அடைந்தவர் அந்த சகஸ்ராரத்தை உணர்ந்திடுவார்
  என்பது வெள்ளிடைமலை.

  சூரிய நாராயணன்.
  சென்னை.
  A wonderful website on Muruga Bhakthi is available in
  www.kaumaram.com

  ReplyDelete
 2. கணபதியின் துணையுடன் நம்மைத் தொடரும் வல்வினைகளை வென்று,
  ஆறுமுகன் வழிகாட்ட ஆறு சக்கரங்களை உணர்வில் ஒற்றி அஞ்ஞானம் அகற்றி, அண்ட சராசரங்களில் நிறைந்திருக்கும் பெம்மானை, அந்தப் பிறவாயாக்கைப் பெரியோனை சகஸ்ர சக்கிரத்தில் பிறவிப்பயன் கண்ட பெறும்பேறாய் தரிசித்து, பிரம்மத்தை உணர்தல் தான் தவப்பேறோ?...
  அழகாகச் சொல்லி, அறுபடை வீடுகளை தரிசித்த உணர்வேற்படுத்திய அருமையான பதிவு. பயனளிக்கும் பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 3. திரு.சூரிய நாராயணன் மற்றும் திரு.ஜீவி,

  தங்கள் வருகைக்கும் கனிவான சொற்களுக்கும் நன்றி. நான் படித்ததை எடுத்துரைத்தேன், அவ்வளவுதான்.

  ReplyDelete
 4. படித்ததை சுவைபட எடுத்துரைக்கவும் ஒரு அருள் வேண்டும், திரு.ஜீவா! அது உங்களிடம் நிறையவே இருக்கிறது.

  மிக அழகான முருக விளக்கம்!
  அறுபடை வீட்டோடு ஆறு சக்கரங்களைப் பொருத்தி, சித்தர் கதையிலும் கோடி காட்டியிருந்தீர்கள்.

  இந்த விளக்கம் மிக அழகாக அமைந்துள்ளது. படங்களும் வெகு அருமை!
  பாராட்டுகள்.
  முருகனருள் முன்னிற்கும்!

  ReplyDelete
 5. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி திரு.வி.எஸ்.கே!

  ReplyDelete
 6. அருமையான பதிவு....அதற்கு ஏற்ற படங்கள். நன்றி ஜீவா சார்.

  ReplyDelete
 7. வருக திரு.மதுரையம்பதி.

  ReplyDelete
 8. சக்ரா தியானம் செய்யும் எனக்கு இது மிகச் சிறந்த தகவல்.

  ReplyDelete
 9. மிக்க நன்று புதுகைத் தென்றல். தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. முருகப் பெருமான் யோகிகளுக்கு வழி காட்டும் யோகத்தில் முன்னேற முன்னிற்கும் கடவுள் என்பது ஒரு பிரிவு யோகிகளின் நம்பிக்கையாகப் படித்திருக்கிறேன். சில வெள்நாட்டு யோகிகள் அதனைச் சொல்லிக் கதிர்காமத்திற்குச் சென்று முருகனை வழிபட்டு வந்த செய்தியையும் படித்த நினைவு.

  இங்கே நீங்கள் அறுபடை வீடுகளை வைத்து முதல் ஆறு சக்கரங்களைப் பற்றி நன்கு கூறிவிட்டீர்கள். நன்றி ஜீவா.

  ReplyDelete
 11. ஓ, அப்படியா, செய்திக்கு நன்றி குமரன்.
  //அறுபடை வீடுகளை வைத்து முதல் ஆறு சக்கரங்களைப் பற்றி நன்கு கூறிவிட்டீர்கள். //

  தெரிந்த ஒன்றைக்கு கொண்டு இன்னொன்றை விளக்கிக் கொள்ளுதல் எப்போதும் நலம்.

  ReplyDelete
 12. பார்த்தேன், ஜீவா, மறுமுறையும் பார்த்துவிட்டுத் தவறைத் திருத்திக் கொள்கிறேன். நன்றி, சுட்டிக் காட்டியதற்கு!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails