Monday, November 05, 2007

கிளிப் பாட்டொன்று கேட்கலையோ...

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே!
மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே!
கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே!
அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
நெருங்கித் துயர் வருமோ?



மாண்டு ராகம் - ஆதி தாளம்
எஸ். சௌம்யா பாடிடக் கேட்கலாம்:

சென்ற வருடம் அக்டோபர் 12இல், சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்சியில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல் இது.

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் வினைப்பயன் என்று உணர்ந்தவர், எந்த செயலுக்கான விளைவிலும் தன்னை அலைக்கழிக்க விடார். மாறாக செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார். இன்பத்தில் திளைத்து தன்னை மறப்பதும் இல்லை. துன்பத்தில் வீழ்ந்து துழல்வதும் இல்லை. சூரியனைப்போல் நடு நிலமையுடன் தன் செயலின் பயன்களைக் கொள்வார், அழிவில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்.

வந்த துன்பத்தினை போக்குவதற்கான வழியாக அன்பை பயன்படுத்தச் சொல்லுகிறார். அன்பினால் துன்பம் செய்தவரை அணுகுங்கால் பகை விலகுவதோடு, தாம் கொண்ட துன்பமெல்லாம் அழியும். துயரம் விளைவிக்கும் சோர்வும், பயமும் நம்மிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும்.

அடுத்ததாக, இனிமேல் துயர் வராமல் இருப்பதற்கான வழியாக, அறிவுச்சுடராக விளங்கும் சுப்ரமணியனை பணிந்திட்டால் போதும், துயர் நெருங்கித்தான் வருமோ என்கிறார். யாமிருக்க பயமேன் என்று சொன்னவல்லவா அவன்!

திருவைப் பணிந்து செம்மையுடன் தினமும் நம் தொழில் செய்வோமடி கிளியே. வருவதெல்லாம் வரட்டும் என்று வருவதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் மகிழ்வுற்று இருப்போமடி கிளியே!

6 comments:

  1. ஞாயிற்றை யெண்ணி யென்றும்
    நடுமை நிலை பயின்று,
    ஆயிர மாண் டுலகில் - கிளியே!
    அழிவின்றி வாழ்வோமடீ


    ஆஹா சூரிய நமஸ்காரம் தினமும் செய்துவந்தால் நீண்டநாள் வாழலாமென்பதைத்தான் இப்படி கூறுகிறாறோ

    ReplyDelete
  2. வாங்க தி.ரா.ச சார்.
    அப்படியும் பொருள் கொள்ளலாம் போலிருக்கிறது!
    ஆதித்தன் அருள், அகத்தின் வளைவும் நெளிவும் இகம் நன்றாக இருப்பதோடு, அகமும் செழித்திட வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இதோ இப்போது இங்கே காலை. உடனே போய் ஆதித்தனை வணங்குகிறேன்!

    ReplyDelete
  3. ஆதித்தனை வணங்குபவர்கள் 1000 ஆண்டுகள் வாழலாம். ஒரு கருத்து. இது தான் வேறு கோணத்தில் சிந்திக்கும் Lateral Thinking ?? or Thinking Differently ??

    அன்பினில் அழியும் - அன்புக் கழிவில்லை.

    முண்டாசுக் கவிஞனின் வைர வரிகள்

    ReplyDelete
  4. வாங்க சீனா சார்!

    //அன்பினில் அழியும் - அன்புக் கழிவில்லை.//
    ஆகா, ஆதித்தனைப்போல் பிரகாசிக்கும் வைர வரிகள்தான்!

    வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி!

    ReplyDelete
  5. //தூய பெருங்கனலைச்
    சுப்பிர மண்ணி யனை
    நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
    நெருங்கித் துயர் வருமோ?//

    ஆமாம், சுப்பிரமணியன் தூய பெருங்கனலாம் நெற்றிக்கண்ணிலிருந்து வந்தவனல்லவா?.... அவனை கார்த்திகை மாதத்தில் நேயத்துடன் பணிவோம்.

    ReplyDelete
  6. // தூய பெருங்கனலாம் நெற்றிக்கண்ணிலிருந்து வந்தவனல்லவா?.... //
    அடடா, அது என் நினைவுக்கு எட்டவில்லையே.
    சரியான சமயத்தில் சுட்டியதற்கு நன்றி திரு. மதுரையம்பதி.

    ReplyDelete