Showing posts with label கிளிப்பாட்டு. Show all posts
Showing posts with label கிளிப்பாட்டு. Show all posts

Monday, May 16, 2011

நல்லூரான் பாட்டு : நற்சிந்தனை

நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!

எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!

Monday, November 05, 2007

கிளிப் பாட்டொன்று கேட்கலையோ...

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே!
மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே!
கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே!
அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
நெருங்கித் துயர் வருமோ?



மாண்டு ராகம் - ஆதி தாளம்
எஸ். சௌம்யா பாடிடக் கேட்கலாம்:

சென்ற வருடம் அக்டோபர் 12இல், சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்சியில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல் இது.

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் வினைப்பயன் என்று உணர்ந்தவர், எந்த செயலுக்கான விளைவிலும் தன்னை அலைக்கழிக்க விடார். மாறாக செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார். இன்பத்தில் திளைத்து தன்னை மறப்பதும் இல்லை. துன்பத்தில் வீழ்ந்து துழல்வதும் இல்லை. சூரியனைப்போல் நடு நிலமையுடன் தன் செயலின் பயன்களைக் கொள்வார், அழிவில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்.

வந்த துன்பத்தினை போக்குவதற்கான வழியாக அன்பை பயன்படுத்தச் சொல்லுகிறார். அன்பினால் துன்பம் செய்தவரை அணுகுங்கால் பகை விலகுவதோடு, தாம் கொண்ட துன்பமெல்லாம் அழியும். துயரம் விளைவிக்கும் சோர்வும், பயமும் நம்மிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும்.

அடுத்ததாக, இனிமேல் துயர் வராமல் இருப்பதற்கான வழியாக, அறிவுச்சுடராக விளங்கும் சுப்ரமணியனை பணிந்திட்டால் போதும், துயர் நெருங்கித்தான் வருமோ என்கிறார். யாமிருக்க பயமேன் என்று சொன்னவல்லவா அவன்!

திருவைப் பணிந்து செம்மையுடன் தினமும் நம் தொழில் செய்வோமடி கிளியே. வருவதெல்லாம் வரட்டும் என்று வருவதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் மகிழ்வுற்று இருப்போமடி கிளியே!