Monday, May 16, 2011

நல்லூரான் பாட்டு : நற்சிந்தனை

நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!

எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!

11 comments:

  1. இது யார் பாட்டு ஜீவா?

    நல்லூரான் என்பது முருகன் என்று தெரிகிறது. ஈழத்து நல்லூரான் என்றும் தோன்றுகிறது. சரி தானா?

    ReplyDelete
  2. ஆம் குமரன்!
    நல்லூர் முருகனைப் பாடும் பாட்டுதான்.
    இயற்றியது - ஈழத்து தவயோகி யோகநாத சுவாமிகள். அவரது அருந்தமிழ்க் கவிகள் 'நற்சிந்தனை' எனும் தொகுப்பில் கிடைக்கின்றது.

    ReplyDelete
  3. கிளிப் பாட்டைக் கேட்கையில்
    கிலி எல்லாம் பறந்ததடி

    அழகான பாடல்
    அழகன் அவன் பாடல்

    அருந்தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு

    படித்தாலே தேன் தமிழைச் சுவைக்கும் இன்பம்

    நான் படித்த பிடித்த சில வரிகள்

    நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப்போய்
    நல்ல மனத்தோடு நாம்பணிந்தால் - நல்லமயில்
    ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில்முருகன்
    தேறிவிடும் சிந்தை தெளி

    ___________________________


    குயில் பாட்டு:

    காட்டகத்தே வாழும் கருங்குயிலே ! கேளாய்
    பாட்டகத்தே நின்றுருக்கும் பரமன் கருணையினால்
    நாட்டகத்தே நம்போல் நல்லூரில் வந்தானெம்
    ஏட்டகத்தே எழுந்தருளும் வண்ணம்வரக் கூவாயே.

    ________________________________

    இல்லையுண் டென்று இயம்பவொண் ணாதவன்
    நல்லூரில் வந்தானென் றுந்தீபற‌
    நானே அவனென் றுந்தீபற‌

    ஊரும் பேரும் இல்லான் உவந்தெனைத்
    தானாய்வந் தாண்டானென் றுந்தீபற‌
    சஞ்சலந் தீர்ந்தனென் றுந்தீபற‌

    __________________________
    நம்பிக்கை யாய்ப்பறந்து கூவுகுயிலே
    நாங்கள்சிவ மென்றுசொல்லிக் கூவுகுயிலே

    நாமேநா மென்றுசொல்லிக் கூவுகுயிலே
    நமக்குக்குறை வில்லையென்று கூவுகுயிலே

    ______________________________

    ReplyDelete
  4. வாங்க திகழ்!
    கிளிப்பாட்டுக்கு உந்தீபறவென

    குயில்பாட்டினைத் தந்தமைக்கு நன்றிகள்!
    வெண்பாக்களையும் தான்.

    தானாய் வந்தாண்ட தனிப்பெருங்கருணைக்காரன்

    தண்டாயுதபாணி உந்தீபற!

    ReplyDelete
  5. இன்று தான் ஓராண்டுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ஈழப் படுகொலை! #May18massacre

    ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே!
    இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

    நல்லூர் கந்தன்-நல்லூர் பாடல்
    பொல்லாங்கு தீருமடி! பொல்லாங்கு தீருமடி!

    ReplyDelete
  6. ஆமாம் கே.ஆர்.எஸ்,
    மேலும்,
    >>பஞ்சம் படை வந்தாலும், பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சமாட்டோம் கிளியே<<

    பொல்லாங்கின் ஒரு பக்கம் தீர்ந்துவிட்டது, இன்னொரு பக்கம் இனிமேல்தான் தீர வேண்டும்.
    தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete
  7. சுவாமி யோகநாதன்
    சொன்ன திருப்பாட்டைந்தும்
    பூமியிற் சொன்னானடி கிளியே
    பொல்லாங்கு தீருமடி!

    சொன்னாலடி கிளியே பொல்லாங்கு தீருமடி!என்றே பாடல் உள்ளது. பெரும்பாலும் நற்சிந்தனையில் இறுதி வரிகள் பலன் சுட்டுவனவாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  8. அப்படீங்களா,
    அப்படியே மாற்றிவிட்டேன், நன்றிகள்!

    ReplyDelete
  9. தேவர் சிறைமீட்ட
    செல்வன் திருவடிகள்
    காவல் எனக்காமடி கிளியே
    கவலையெல்லாம் போகுதடி!//

    அழகான பாடல்.நன்றி..

    ReplyDelete
  10. வாங்க இராஜேஸ்வரி மேடம்,
    நன்றிகள்!

    ReplyDelete