Thursday, May 26, 2011
சுடராழி
கண்டதும் கழன்றது
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
-பூதத்தாழ்வார் (2248)
(ஆழி - சக்கரம்)
கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கினியவன் கண்டேன். அவன் கையிலேந்திய திருச்சக்கரத்தைக் கண்டேன்!
அச்சக்கரம் எப்படி இருந்ததாம் - கனலாய், சுடர்மயமாய் பிரகாசித்ததாம்.
தீபாவளிப் பட்டாசு விடும் சமயத்தில் மட்டுமே நாம் அப்படிப்பட்ட சக்கரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆழ்வாரோ, நெடுமால் விடும் சுடராழிதனைக் கண்டு சொல்கிறார். வாசனையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்களான இருவினைகளையும் - அச்சக்கரத்தைக் கண்டவுடன் தொலைத்தேன் என்கிறார்.
முன்னம் இராமன் சிவதனுசை எடுத்த கணமே அதைக் கண்டவர் அது ஒடிந்ததைக் கேட்டது போலக் கண நேரத்தில் வினைகளும் தொலைந்தது போலும்.
சரி, இரு வினைகள் என்பவை யாவை? நல்வினை, தீவினை எனக் கொண்டால், ஏன் நல்வினையும் அகல வேண்டும்? தீவினை நரகத்தில் தள்ளும். நல்வினை சொர்கத்தில் சேர்க்கும். இரண்டும் இலாமல் பரந்தாமனின் பரமபதமே வேண்டும் எனக் கொண்டாரோ!
அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.
வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(பொய்கையாழ்வார்)
அசதோமா சத் கமய
தமசோமா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.
Subscribe to:
Post Comments (Atom)
//அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.//
ReplyDeleteஆழ்வார் அழகாகச் சொல்கிறார்.
ஆழமாகவும் சொல்கிறார். அதை
அழுத்தமாகவும் ( வலியுறுத்தியும் ) சொல்கிறார்.
சுப்பு ரத்தினம்.
வாங்க சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteநன்றிகள்!