Monday, June 30, 2008

நீ இரங்காயெனில் புகல் ஏது?

சென்ற பதிவில், "நீர் தள்ளினால், எங்கு நான் செல்வேன்...?" என பெ.தூரனார் கேட்கப் பாடல் கேட்டோம். இந்தப் பாடலில், "நீ இரக்கம் கொள்ளாவிட்டால், எனக்கு புகலிடம் ஏது...?" என கிட்டத்தட்ட அதே கேள்வியைக் கேட்கிறார் பாபநாசம் சிவன். என்ன மாற்றம் என்றால், இங்கே வேண்டப்படுவது, தாயாரிடம். மகாலட்சுமியைப் பாடிடும் நற்றமிழ்ப் பாடல்களை நான் அதிகம் அறியேன். ஆகவே இந்தப் பாடலை, ஆகா எனச்சொல்லி, இரண்டு செவிகளையும் நன்றாக தீட்டிக் கொண்டு கேட்கிறேன்!

தாயின் பெருமையைச் சொல்லாத இலக்கியம் இல்லை.
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தெனை காத்திடும்..." எனத் தாயுமானவனைப் பாடுவார், மாணிக்க வாசகர் பெருமான். தாய் பரிந்து கவனிக்காவிட்டால், சேய் தனை காப்பவர் யார்?
தாய்க்குத் தாயாக பேருலகம் தனை ஈன்ற பெருந்தேவி,
அன்னை மகாலட்சுமி அல்லவோ அகில உலகிற்கும் அருள் சுரக்கும் தாய்! அம்மா, எனைக்காத்து இரட்சிப்பாய்.


இராகம் : அடானா
இயற்றியவர் : பாபநாசம் சிவன்

எடுப்பு
நீ இரங்காயெனில் புகல் ஏது? - அம்பா,
நீ இரங்காயெனில் புகல் ஏது?
நிகில ஜகன்நாதன் மார்பில் உறை திரு,
நீ இரங்காயெனில் புகல் ஏது?

தொடுப்பு
தாயிரங்காவெனில் சேய் உயிர் வாழுமோ?
சகல உலற்கும் நீ தாயல்லவோ?

முடிப்பு
பாற்கடலில் உதித்த திருமணியே
சௌபாக்கியலக்ஷ்மி எனை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்
மெய்ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும், அம்பா
நீ இரங்காயெனில் புகல் ஏது?

பாடுபவர்: பாரத ரத்னா, சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
நீ இரங்காயெனில்...


பாடுபவர் : சுதா ரகுநாதன்இதர குறிப்புகள்:

நாற்கவி:
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி

ஆசுகவி: உடனுக்குடன் பாடுவது

மதுரகவி: இசைநயத்துடன் பாடுவது

சித்திரகவி: சொல்லும் பொருளும் சித்திர அலங்காரமாய் பாடுவது

வித்தாரகவி: பல் வேறு வகைகளிலும் நீளமாகவும் பாடுவது

Friday, June 27, 2008

தன்னிகரில்லா தமிழிசைச் செம்மல் பெ.தூரன்

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் "பல்கலைச் செம்மல்" எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் - விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.
மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:

1. இசைமணி மஞ்சரி (1970இல்)
2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)
3. கீர்த்தனை அமுதம் (1974இல்)
4. நவமணி இசைமாலை (19880இல்)
வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர்.
எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், 'இசைப் பேரறிஞர்' பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், 'கலைமாமணி' பட்டம் வழங்கியது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டா,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக கொண்டாடுகிறது!
விழாவின் நிகழ்ச்சி நிரல் வீட்டு முகவரிக்கு அனுப்பி இருக்கிறார்கள்!

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! "தமிழ் கலைக் களஞ்சியம்" என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் 'பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு' என்கிற தலைப்பில்! "கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து" எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.

தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:
Thooran_Keerthanigal
Thooran_Keerthanig...
Hosted by eSnips


தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:
* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)
* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)
* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)
* இன்னமும் அவர் மனம் (சஹானா)
* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)
* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)

இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.

எங்கு நான்...


எங்கு நான் செல்வேன் ஐயா
இராகம் : த்வஜவந்தி
பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

எடுப்பு
எங்கு நான் செல்வேன் ஐயா - நீர் தள்ளினால்
எங்கு நான் செல்வேன் ஐயா?

தொடுப்பு
திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை
தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!

முடிப்பு
அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்
அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!
நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!

என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.
வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,
(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)
தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.
அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.
அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,
அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.
(சிவனுக்கு 'கறை மிடறு அண்ணல்' என்றொரு பெயரும் உண்டு)
நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற
நஞ்சினை உண்ட 'விடமுண்-கண்டனை' நாடிடுவார்களாம்.

அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?
எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?
அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,
அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?

Wednesday, June 25, 2008

சாந்தி நிலவ வேண்டும்

அந்த துயரச் சம்பவ அறிவிப்பும், பின்னணியில், "வைஷ்ணவ ஜனதோ.." பாடலும்:சாந்தி நிலவ வேண்டும். உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்,

ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்.


காந்தி மகாத்மா கட்டளை அதுவே

கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்!
உலகில் சாந்தி நிலவ வேண்டும்

கொடுமை செய் தீயோர்,
மனமது திருந்த
நற்குணம் அது புகட்டிடுவோம்!
மடமை அச்சம் அறுப்போம் - மக்களின்

மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்!

திடம் தரும் அகிம்சாயோகி
நம்
தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்
களங்கமின்றி அறம் வளர்ப்போம்!

(சாந்தி நிலவ வேண்டும்)

எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி, எங்கும் சாந்தி!

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்களின் அன்பான குரலில் கேட்கலாம் இந்த பாடலை.
கூடவே, அவரது பேட்டியையும் கேட்கலாம்:


பாடலை எழுதியது - மிருதங்க வித்வான், சேதுமாதவ ராவ் அவர்கள். மகாத்மா உயிர் நீர்த்தபோது இந்தப் பாடலை எழுட, திருமதி DKP அவர்கள் பாடி, மிகவும் புகழ்பெற்ற பாடல் இது.
இராகம் : திலாங் (ஹரிகாம்போஜி ஜன்யம்)

பேட்டியின் முதல் பகுதி இங்கே.

எங்கு அமைதி நிலவுகிறதோ

எங்கு போர் மடிகிறதோ

எங்கு அன்பே ஆள்கிறதோ

அவ்விடமே புண்ணிய பூமி!

ஆம், சாந்தி நிலவ வேண்டும்.

Saturday, June 21, 2008

அப்படியே ஆகட்டும்!

"அம்மா" என்று அன்போடு சத்யகாமன் அழைத்த குரல் கேட்டு, அவன் அன்னை திரும்பிப் பார்க்கிறாள்!

"அம்மா, நல்லதொரு வழிநடத்தும் குருவினைத் தேடி அடைய வேண்டிய தருணம் வந்துவிட்டது போல உணர்கிறேன் நான். நமது மூதாதையர் பற்றிச் சொல்லுங்களேன், குருவானவர் கேட்டிடச் சொல்ல வேண்டுமல்லவா..." என வினாவெழுப்பினான், சத்யகாமன்.

"தெரியாது அன்ப" என்பதுடன் அவள் சொல்கிறாள் - "என் இளவயதில் அங்கும் இங்குமாக நான் அலைந்து கொண்டிருந்த போது நீ பிறந்தாய். உன் பெயர் சத்யகாமன். என் பெயர் ஜபலை. நீ ஏன் "சத்யகாமன் ஜபலை" என உன்னை அழைத்துக் கொள்ளக்கூடாது" என்றாளே பார்க்கலாம்!

"அப்படியே ஆகட்டும்" எனச்சொல்லி அன்னையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்ட அவன் கௌதமரிடன் வந்து "மகரிஷிக்கு வணக்கங்கள். அடியேனைத் தங்கள் சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்" என்றான்.

அவரோ, எதிர்பார்த்தபடியே, அவனது குடும்பத்தினைப் பற்றிக் கேட்கலானார். அவனோ, உண்மையை மறைக்காமல், தன் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறான்.

அதைக்கேட்ட மகரிஷியோ, "உன் பெயரில் இருக்கும் சத்யம் போலவே, நீ உண்மையை உரைப்பதிலேயே உன் உயர் பிறப்பை உணர்கிறேன். உனக்கு உயர் ஞானத்தை அடையும் உபதேசத்தினை தொடங்கி வைக்கிறேன்." என்று சொல்லி, அவனை தன் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் அவனிடம் நூறு மெலிந்து நலிந்த பசுக்களை ஒப்படைத்து அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் தந்தார். அவற்றை பெற்றுக்கொண்ட அவன், இந்த நூறு பசுக்களை ஆயிரமாக மாற்றிக் காட்டிய பின்னர், நமது குருவிடம் திருப்பி ஒப்படைக்கலாம்" என மனதில் சொல்லிக் கொண்டான்!

பல வருடங்களுக்கு காடுமேடுகளில் அலைந்து குரு தன்னிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை சிரமேற்கொள்கிறான் சத்யகாமன்.

பின்னொருநாள், அவன் மேய்த்த மாடுகளில் ஒன்று அவனருகே வந்து கேட்கிறது, "நாங்கள் இப்போது, ஓராயிரம் மாடுகளாகி விட்டோம். இப்போது உன் எண்ணப்படியே குருவிடம் எங்களை நீ திருப்பி ஒப்படைக்கலாமே?.". பின்னர், "இத்தனை வருடங்களாக நீ எங்களை கவனித்துக் கொண்டதுக்கு மாற்றாக, நான் உனக்கு பிரம்மத்தின் நான்கு பாதங்களில் ஒன்றினை சொல்லுவேன்" என்றது.

"அப்படியே ஆகட்டும் மாடு ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. இந்த நான்கும் பிரம்மத்தின் ஒரு பாதம் ஆகும். இந்த பாதத்தின் பெயர் "திகழ்ஒளி". இந்த நான்கின் மீதும் தியானிக்க ஒளியாக வேண்டும். நெருப்பாகிய அக்னி உனக்கு இதைப்பற்றி மேலும் சொல்லும்" என்றது மாடு.

மறுநாள், ஆயிரம் மாடுகளுடன், தனது குருவின் ஆசிரமத்தினை நோக்கி நடக்கலானான் சத்யகாமன். அன்று மாலைப்பொழுதைக் கழிக்க, நெருப்பினை மூட்டி அனல் வளர்க்க, அருகே வந்து அழைத்தது அக்னி, "சத்யகாமா...".

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது அக்னி.

"அப்படியே ஆகட்டும் அக்னி ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். பூமி, ஆகாசம், வானம், கடல் என்பன அந்த இன்னொரு பாதம். இதன் பெயர் "அந்தமில்லா". இந்த உண்மையினை நீ தியானித்து வந்தால், நீயும் முடிவில்லாதவனாக என்றென்றைக்கும் ஜீவித்திருப்பாய்" என்றது. மேலும் சொல்ல, அன்னப்பறவை ஒன்று வரும் என்றது.

மறுநாள் தொடர்ந்து நடந்த சத்யகாமன், அன்றைய மாலைப்பொழுதினைக் கழிக்கையில், அக்னி சொன்னது போலவே, அன்னமும் அவன் அருகில் வந்தழைத்தது.

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது அன்னம்.

"அப்படியே ஆகட்டும் அன்னம் ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். நெருப்பு, சூரியன், சந்திரன், மின்னல் என்பன. இவை நான்கும் பிரம்மத்தின் இன்னொரு பாதம். இதன் பெயர் "முழுஒளி". ஒளியால் நிறைந்து இந்தப் பாதத்தினை தியானித்தால், இதனை அறியலாம். நாளை, பறவை ஒன்று இதைப்பற்றி மேலும் சொல்லும்" என்றது.

அடுத்த நாள் அதைப்போலவே பறவை ஒன்று வந்து அவனை அன்புடன் அழைத்தது, "சத்யகாமா...".

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது பறவை.

"அப்படியே ஆகட்டும் பறவை ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். மூச்சு, கண், காது, மனம் என்பன. இந்தப் பாதத்தின் பெயர் "நிறுவப்ப்பட்டது". இதை நன்கு தியானிக்க, இந்த உலகத்தில் இருந்தாவாறே ஆகாசத்தை அறிய வேண்டும்." என்றது.

இப்படியாக, பிரம்மத்தின் நான்கு பாதங்கள் என்னவென்று சொல்லியதைக் கேட்டவாறு, தனது குருவின் ஆசிரமத்தினை வந்தடைந்தான் சத்யகாமன்.

அவனை அருகில் அழைத்த குரு, "சத்யகாமா, உன் முகம் மிகுந்த தேஜஸுடன் ஒளிருகிறதே - உயர் ஞானத்தை அடைந்தவன் போலே. என்னிடம் சொல், உனக்கு உயர் ஞானத்தை சொல்லித் தந்தவர் யாரோ?" என்றாரே பார்க்கலாம்!

அதற்கு சத்யகாமன், "பெருமதிப்பிற்குரிய ஐயா, எந்த மனிதரும் எனக்கு ஏதும் சொல்லித் தரவில்லை. எனினும், உண்மையான உயர் ஞானத்தினை உங்களிடம் இருந்து பாடம் கேட்கவே நான் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆசிரியரின் ஞானம் மட்டுமே மாணவனுக்கு பலன் தரும் என்பதனால்." என்றான்.

பின்னர் அந்த ஆசிரியரும், தன் மாணவனுக்கு அதே ஞானத்தினை சொல்லித் தந்தாராம், எந்தக் குறைவும் இல்லாமல்.


- சந்தோக்ய உபநிடதம்

Saturday, June 14, 2008

சாமியே சரணம் ஐயப்பா! : ஜேசுதாஸ் & ஒக்கேனக்கல்

இறைவனை பிரார்த்திப்பது நமது மனித இனத்திற்கே கிடைத்த பெரும் பேறு. அந்தப் பேறு கிட்டி இருப்பினும், அவனை என்ன கேட்பது? ஒரு வரம் கேட்பின், அவன் வேறெதையும் எதிர்பார்ப்போனோ? துன்பம் நேருங்கால் அதைத் துடைக்குமாறு கிடைக்கலாம். நல்ல பண்பு பெற்று நல்வாழ்வு வாழும்போது, நாதன் அருள் இருந்து, நற்செயல்களேயே செய்யும் போது, வேறெந்த துன்பமும் அண்டாதபோது வேறென்ன கேட்கலாம்? நம் அருகில் இருப்பவர்கள் நலமுடன் வாழ வேண்டலாம். ஏன் இந்த உலகமே நலமாக வாழப் பிரார்த்தனை செய்யலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரிகளில்:

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


இங்கே ஒருவர் சபரி ஐயப்பனை என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்:

எடுப்பு

என்ன வரம் கேட்பேன் நானே

என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,

என்ன வரம் கேட்பேன் நானே?

புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,

நல்ல பண்பை நான் வேண்டவா,

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே,

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

தொடுப்பு

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கணும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டணும்,

மனிதனாகப் பிறந்து விட்டேன், எப்படி நான் வாழணும்?

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.

மதங்கள் எனும் மலைகள், ஆதி எனும் தடைகள் கடந்திட

ஐயன் உன் அருளினை நான் பெறணும்.

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்

திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகணும்

மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடணும்

பேரசை என்றபோதும் ஐயன் இதை நிறைவேற்றணும்:

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

என்ன வரம் கேட்பேன் நானே?


சாமியே சரணம் ஐயப்பா!

இன்னொரு விஷயம்:
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒக்கேனக்கல் பிரச்சனை சூடாகி, விஷமிகளின் வன்மச் செயலால் நம் மனம் புண்பட்டபோது, ஜேசுதாஸ் அவர்களுக்கு பங்களூர் ராம் சேவா மண்டலியில் கச்சேரி. கச்சேரியில் கன்னடர்களுக்கு மிகவும் விருப்பமான கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலைப் பாடி முடித்த கையோடு, அவர்களுக்கு நல்லதொரு அறிவுரையும் வழங்கினாரே பார்க்கலாம்! நீங்களே கேளுங்கள்:

ஜேசுதாஸ்-அறிவுரை

Sunday, June 08, 2008

படத்தில் இருப்பது என்ன? (விடையுடன்)

படத்தில் இருக்கும் பொருள் என்னவென்று சொல்லுங்க பார்க்கலாம்?
(வினாவுக்கான விடை வெளியிடப்பட்டு விட்டது,
இடுகையின் இறுதியில் சென்று பார்க்கவும்!)ஏதோ உருண்டையாய் ரெண்டும் இருக்குது

ஏதோ பலப்பல கூர்முனைகள் கொண்டிருக்கு;

உந்தன் பொருளை குதிகுதியில் குத்திடும்

எந்தன் பெயரென்ன சொல்லு.

(முதல் இரண்டு அடிகள் அதைப் பார்த்து நாம் சொல்கிறோம்,
அடுத்த இரண்டு அடிகள் நம்மைப் பார்த்து அது சொல்கிறது!)


(படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)

விடை:
படத்தில் இருக்கும் இரண்டு பந்துகளும் 'Dryer Balls'.
தோய்த்த துணிகளை உலர வைக்கும், உலர் இயந்திரங்களில் (dryer machines) இவற்றைப் பயன்படுத்தலாம்.
இவற்றின் பயன் என்னவென்றால், துணிகள் மிகவும் சுருங்கி, வதங்கி விடாமல், மெத்தென்று இருக்க உதவிடும்.
இவற்றை, துணிகளை உலர வைக்கும்போது, அவற்றோடு சேர்த்து அந்த இயந்திரத்தில் விட்டு விடலாம்.
இதே பயன்பாடுக்காக, Fabric Softner, dryer sheets போன்றவை இருந்தாலும், அவற்றிலுள்ள வேதியல் பொருட்களால், தீங்கே.
அதற்கு மாற்றாக, இயற்கையாக துணிகளை மெத்துன்று வைக்கை இவை உதவுகிறது.
இவை பற்றி மேலும் அறிய இங்கே பார்க்கவும்.

அது சரி, கொடியில் துணிகளை உலர்த்தி, சூரிய வெளிச்சத்தில்
காய வைக்கமால், இதென்ன வேலை என்கிறீர்களா, அதுவும் சரியே!

வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்!

LinkWithin

Related Posts with Thumbnails