Monday, June 30, 2008

நீ இரங்காயெனில் புகல் ஏது?

சென்ற பதிவில், "நீர் தள்ளினால், எங்கு நான் செல்வேன்...?" என பெ.தூரனார் கேட்கப் பாடல் கேட்டோம். இந்தப் பாடலில், "நீ இரக்கம் கொள்ளாவிட்டால், எனக்கு புகலிடம் ஏது...?" என கிட்டத்தட்ட அதே கேள்வியைக் கேட்கிறார் பாபநாசம் சிவன். என்ன மாற்றம் என்றால், இங்கே வேண்டப்படுவது, தாயாரிடம். மகாலட்சுமியைப் பாடிடும் நற்றமிழ்ப் பாடல்களை நான் அதிகம் அறியேன். ஆகவே இந்தப் பாடலை, ஆகா எனச்சொல்லி, இரண்டு செவிகளையும் நன்றாக தீட்டிக் கொண்டு கேட்கிறேன்!

தாயின் பெருமையைச் சொல்லாத இலக்கியம் இல்லை.
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தெனை காத்திடும்..." எனத் தாயுமானவனைப் பாடுவார், மாணிக்க வாசகர் பெருமான். தாய் பரிந்து கவனிக்காவிட்டால், சேய் தனை காப்பவர் யார்?
தாய்க்குத் தாயாக பேருலகம் தனை ஈன்ற பெருந்தேவி,
அன்னை மகாலட்சுமி அல்லவோ அகில உலகிற்கும் அருள் சுரக்கும் தாய்! அம்மா, எனைக்காத்து இரட்சிப்பாய்.


இராகம் : அடானா
இயற்றியவர் : பாபநாசம் சிவன்

எடுப்பு
நீ இரங்காயெனில் புகல் ஏது? - அம்பா,
நீ இரங்காயெனில் புகல் ஏது?
நிகில ஜகன்நாதன் மார்பில் உறை திரு,
நீ இரங்காயெனில் புகல் ஏது?

தொடுப்பு
தாயிரங்காவெனில் சேய் உயிர் வாழுமோ?
சகல உலற்கும் நீ தாயல்லவோ?

முடிப்பு
பாற்கடலில் உதித்த திருமணியே
சௌபாக்கியலக்ஷ்மி எனை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்
மெய்ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும், அம்பா
நீ இரங்காயெனில் புகல் ஏது?

பாடுபவர்: பாரத ரத்னா, சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
நீ இரங்காயெனில்...


பாடுபவர் : சுதா ரகுநாதன்இதர குறிப்புகள்:

நாற்கவி:
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி

ஆசுகவி: உடனுக்குடன் பாடுவது

மதுரகவி: இசைநயத்துடன் பாடுவது

சித்திரகவி: சொல்லும் பொருளும் சித்திர அலங்காரமாய் பாடுவது

வித்தாரகவி: பல் வேறு வகைகளிலும் நீளமாகவும் பாடுவது

18 comments:

 1. அன்னையின் மீதான அரிய பாடலை அறியத் தந்தமைக்கு நன்றி, ஜீவா.

  ReplyDelete
 2. அழகிய பாடலை அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆசுகவி போன்றவற்றை அழகாய்ச் சுறுக்கமாய் விளக்கியருப்பது நன்று. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என்னால் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ள முடிந்ததில்லை. சிறு வயதில் சங்கீதம் கற்றுக்கொண்ட பலரும் இப்பாடலை பாடக்கேட்கும் போதெல்லாம் பெறும் ஏக்கம் கொள்ளவைக்கும் இன்றும் தான்.

  ReplyDelete
 4. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது ஜீவா. அடிக்கடி கேட்பேன்.

  ReplyDelete
 5. அடாணாவில்
  "அம்ப நீ இரங்காயெனில்" பாடல் என்
  அன்னைக்கு மிகவும் பிடித்தது மட்டுமல்ல.
  கடந்த ஐம்பது வருடங்களில் அவர் ஒரு
  ஐநூறு தரமாவது பாடியிருப்பார்.

  அவரது நினைவும் நிழல் படமும் தான்
  இப்போதுளது.
  இன்னொரு முறை இப்பாடலைக்
  கேட்கவைத்து எம்
  கண்களை நீங்கள் குளமாக்கிவிட்டீர்கள்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  பி.கு. ஜீவா வராவிடில் புகல் ஏது ?
  http://menakasury.blogspot.com
  http://ceebrospark.blogspot.com

  ReplyDelete
 6. "நீ இரங்காயெனில் புகலேது " என்ற இந்த வரிகள் என் அம்மாவை ஞா படுத்திவிட்டன. ஸ்டார் சிங்கர் இல்லையென்றாலும் கொலுப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட் என் அம்மா . அரக்கோணம் மணியகாரர் மகளான சுசீலா தேவிதான் என் அம்மா. இந்த பாடலோடு " சகல கலா வாணியே" என்ற பாடலும் ஞா இருக்கிறது. பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 7. வித்தாரகவி??
  ஓ விஸ்தார கவி. சரிதான்.

  ReplyDelete
 8. ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி,வித்தார கவி எனும் நால்வகை கவிகளுக்குமுண்டான‌
  இலக்கணம் தரும் வெண்பாக்கள் இவையே.

  வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்
  இரண்டாவது செய்யுளியல்
  1.
  கவிகமகன் வாதியே வாக்கியெனக் காசில்
  புவியின்மேல் நால்வர் புலவர் - கவிகடாம்
  ஆசு மதுரமே சித்திரம்வித் தாரமெனப்
  பேசுவோர் நால்வர்க்கும் பேர்.
  2. ஆசுகவி
  பேரெழுத்திற் சொல்லிப் பொருளிற் பெருங்கவியிற்
  சீரலங்கா ரத்திற் றெரிந்தொருவன் - நேர்கொடுத்த
  உள்ளுரைக் கப்போ துரைப்பதனை யாசென்றார்
  எள்ளாத நூலோ ரெடுத்து.
  3. மதுரகவி
  எடுத்த பொருளினோ டோசை யினிதாய்
  அடுத்தவைசெஞ் சொல்லா யணியுந் - தொடுத்த
  தொடையும் விளங்க வவைதுதிப்பச் சொல்லின்
  இடமுடைய மாமதுர யாப்பு.
  4. சித்திரகவி
  யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்
  வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா
  வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்
  பன்னுவது சித்திரத்தின் பா.

  5. வித்தாரகவி
  பாங்கார் தொடர்நிலைப்பாப் பல்பாதஞ் சேர்தனிப்பா
  ஈங்கலப் பாக்க ளிரண்டாகும் - ஆங்குத்
  தொடர்நிலைப்பா வின்விகற்பஞ் சூழ்வளையாய் சொல்லிற்
  கடையிலவே யென்றுரைத்தார் கண்டு.
  6. பிள்ளைக்கவி
  கண்டுரைக்கிற் பிள்ளைக் கவிதெங்வங் காக்கவெனக்
  கொண்டுரைக்குந் தேவர் கொலையகற்றி - ஒண்டொடியாய்
  சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம்
  முற்றுவித்தல் நூலின் முறை.

  தாங்கள் இதைச் சுட்டிக்காட்டி என்றோ படித்த ( 1951 - 1955 )இவைகள் எல்லாவற்றையும்
  நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். நன்றி. மதுரைப் பல்கலைக் கழக‌
  பாட திட்டத்தில் இச்செய்யுள்கள் உள்ளன.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 9. வாங்க கவிநயா. போன இடுகையில் "அவனே தள்ளி விட்டால் போக்கிடம்தான் ஏது?" என்று மறுமொழி இட்டிருந்தீர்கள் அல்லவா, அதிலிருந்து உருவான இடுகைதான் இது!

  ReplyDelete
 10. வாங்க அகரம் அமுதா, சுருங்கச் சொல்லின் விரைந்து பிடித்தல் எளிதல்லவா.

  ReplyDelete
 11. வாங்க கிருத்திகா,
  சிறு வயதில் கற்றுக்கொள்ளாவிடில் சங்கீதம் கற்றுக்கொள்வது கடினமே.
  இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்தல் நலம்.

  ReplyDelete
 12. வாங்க குமரன்,
  தங்களுக்குப் பிடித்த பாடலா, மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 13. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
  பாடல்கள் நீங்கா நினைவுகளுக்கு இட்டுச் செல்வதில் இன்பம். அதனை நினைவு படுத்தி பெருமைப்படுத்தி இசையினை பெருமைப் படுத்தி விட்டீர், நன்றிகள்.

  ReplyDelete
 14. வாங்க சித்தூர்.முருகேசன்,
  முதல் வரவு நல்வரவாகுக. தாங்களுக்கும் தங்கள் அன்னையின் நினைவினைத் தந்து விட்டதா! நல்லது! வருகைக்கும், நினைவு கூர்ந்தமைக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 15. வாங்க திவா சார்,
  //வித்தாரகவி??
  ஓ விஸ்தார கவி. //
  எனக்கும் அப்படியே தோன்றியது!

  ReplyDelete
 16. சுப்புரத்தினம் ஐயா,
  ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி,வித்தார கவி ஒவ்வொன்றும் பற்றி வெண்பாவே எடுத்துக் கொடுத்திட்டீங்களே, வாவ்!

  ReplyDelete
 17. நான் அடிக்கடி பாடும் பாடல். இந்த பாடலின் எளிமைக்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 18. வாங்க பத்மா அர்விந்த்,
  நெடுநாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி!
  ஆம், தாங்கள் சொல்வதுபோல, எளிமையான பாடல். எளிமையே இனிமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails