Thursday, July 03, 2008

நரேந்திரனின் பயிற்சிக் களம் - 2

இராமகிருஷ்ண ஆசரமத்தில் ஏனைய சீடர்களுள் ஒருவராக நரேந்திரனும், பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், அவர்களிடையே குன்றிலிட்ட விளக்கு போல ஒளி வீசித் திகழ்ந்தார் எனவே சொல்ல வேண்டும். நரேந்திரனின் பயிற்சிக் களத்தில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை முன்பொரு இடுகையொன்றில் பார்த்தோம். சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளான இந்த ஜூலை நான்கில், நரேந்திரனாய் இருந்தபோது நிகழ்ந்த முக்கியமானதொரு சம்பவத்தினையும், இன்னும் சிலவற்றையும் இங்கு பார்ப்போம்.

அப்போதெல்லாம், உருவ வழிபாட்டில் அவ்வளவு நம்பிக்கை இல்லாதவராக இருந்தார் நரேந்திரன். ஆனால் கடவுளை அவரால் முழுதுமாக மறுக்கவும் இயலவில்லை - அதற்கு காரணம் சிறுவயது முதலே அவருக்கு ஏற்பட்ட கடவுள் சம்பந்தப்பட்ட கனவுகளும், தன் குருவுடன் அவர் கண்ட காட்சிகளும்தான். இவையெல்லாம் உண்மையா என்கிற ஆர்வத்தினால்தானே, இராமகிருஷ்ண ஆசரமத்தில் ஒரு சீடராக பயில்கிறார். அந்த முயற்சியை அவ்வளவு எளிதாக விட்டுவிடவும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் எப்படியாவது கடவுள் இருக்கிறாரா என்று அறிந்து கொள்வதில் திடமாகிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒருநாள் அந்த சம்பவம் இப்படியாக நிகழ வேண்டும் என்றிருந்தது:

அன்றொருநாள், காலையில் வேலைதேடி வீட்டை விட்டுப் புறப்பட்டதுதான். அவர் வேலைதேடிச் சென்ற இடங்களில் எங்கும் அவரைப் பற்றி சரியானதொரு கருத்தில்லை. இருந்தால்தானே வேலை தருவார்கள்? அன்று நல்ல மழை வேறு. அன்று முழுதும் உணவும் இல்லை. மிகுந்த அலைச்சலுக்குப்பின், அந்த மாலை நேரத்தில் சற்றே ஓய்வுக்காக ஒரு வீட்டின் முன்னே திண்ணைப்புறமாக அமருகிறார். கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வருகிறது அவருக்கு. ஏதேதோ எண்ணங்கள் வரலாயின, சுயக்கட்டுப்பாடின்றி. திடீரென, நம்ப இயலாத காட்சி ஒன்றையும் காணலானார், ஒவ்வொரு திரையாக விலகுவதுபோல. அவரது ஆன்மாவைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொரு திரையும் விலகி விலகி, இறுதியில் இறைவனின் கருணையையும் சத்தியத்தையும் காண்கிறார்.
கருணையான இறைவனின் படைப்பினிலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும், இறைவனைக் கண்டறியும் இயல்பு மட்டும் இம்மியளவும் சிதையாமல் இருக்கிறது!
என்று வியந்தாராம் இந்த நிகழ்வைப் பற்றி பின்னர் விவரிக்கையில். இந்த நிகழ்விற்குப்பின், எல்லாவற்றையும் உணர்ந்தவராக அமைதி அடைந்தார். இந்த நிகழ்வு, கிட்டத்தட்ட ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம். மற்றவர்கள் என்ன சொன்னாலும், துறவே தனக்கான பாதை என்பதில் திடமானார். அமைதியும், சுதந்திரமும் அவரை வசீகரித்ததைக் காண முடிந்தது. இராமகிருஷ்ணர் இப்போதெல்லாம் கொல்கத்தாவிற்கு தினமும் வருகிறாராம், அவரது ஆசியினைப் பெற்று, துறவறத்தினை மேற்கொள்ள வேண்டியதுதான் என முடிவு செய்தார்.

அதுபோலவே, இராமகிருஷ்ணருடன் தக்ஷினேஸ்வரம் திரும்பினார் நரேன். ஆசரமத்தில், அன்றொருநாள், இராமகிருஷ்ணர், பாடலும், ஆடலுமாய் ஆனந்தக் களிப்பில் மூழ்கி இருக்கிறார். கண்கள் முழுதும் கண்ணீர். பாடல் வரிகளோ, நரேந்திரனின் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல இருந்ததாம். மற்ற சீடர்கள், இராமகிருஷ்ணரை அணுகி, அவரது துயரத்திற்கான காரணம் என்னவென்று வினவினர். சட்டென்று இராமகிருஷ்ணரோ, 'ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது எனக்கும் நரேந்திரனுக்கும் இடையிலானது, மற்றவர்களுக்கு அல்ல' என்றாராம்! பின்னர் அன்றிரவு, நரேந்திரனை தனியாக அழைத்து, 'எனக்குத் தெரியும் நீ அன்னையின் கைங்கர்யத்திற்காகவே பிறந்தவன் என்று. நீ துறவியாவாய் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், நான் இந்த உலகத்தில் இருக்கும் வரையாவது நீயும் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டாராம், மீண்டும் கண்ணீரோடு!.

சீக்கிரமே, ஒரு தற்காலிக வேலையும் கிடைத்திட, வீட்டுத்தேவைகளை கொஞ்சமாவது நிறைவேற்ற இயன்றது நரேந்திரனால். இருந்தாலும் வறுமை வலியதல்லவா?. ஒருநாள் நரேந்திரனுக்கு தோன்றியது - நம் குருநாதரின் பிரார்த்தனைகளை காளி தேவியோ கேட்டுக்கொண்டிருக்கிறாள். நம் குருநாதர் ஏன் நமக்காக பிரார்த்தனை செய்து, நமது வருமையை போக்கக்கூடாது? - என்று. இந்த எண்ணத்தினை நரேன் இராமகிருஷ்ணரிடம் சொல்ல, அதற்கவர், நீ ஏன் காளிமாதாவை நேரடியாக கேட்கக்கூடாது? என்று திருப்பிவிட்டார்!. அது போதாதென்று, 'நீ காளியன்னையை ஜகன்மாதாவாக கொள்ளாததால்தான் இப்படியெல்லாம்" என்றுவேறு சொல்லி வைத்தார். தொடர்ந்து, 'இன்று செவ்வாய்கிழமை. அன்னைக்கு உகந்த நாள். அவள் கோயிலுக்குச் சென்று, அவள் உருவமுன் மண்டியிடு. அங்கு உனக்கு என்ன வேண்டுமோ, அதை தயங்காமல் கேள்; அது நிறைவேறும்' என்றாரே பார்க்கலாம்.

அன்றிரவு, ஒன்பது மணிக்கு, காளி கோயிலை அடைகிறார் நரேந்திரநாத். கோயிலின் முன் பகுதியில் நுழையும்பொழுதே, அவரது இதயம் துள்ளிக் குதித்தது - இன்றேயாவது காளியின் தரிசனம் கிடைக்குமோ என்ற ஆவலில். உள்ளே சென்று அன்னையின் திருவுருவின்மேல் கண் பதிக்கிறார். அங்கு அவர் கண்ணில் தெரிந்து கற்சிலையாக இல்லை. சாட்சாத் காளி தேவியே இருப்பதுபோலவே உணர்கிறார்; வேண்டும் வரத்தினை அளித்திடத் தயாராக - அது மகிழ்ச்சியான இல்லற வாழ்வாகவோ அல்லது ஆனந்தமயமான ஆன்மீக வாழ்வோ - எதுவாக இருப்பினும். இதைப்பார்த்து ஆகா, எனப் பரவசப்பட்ட நரேன், அன்னையிடம் கேட்டது - ஞானமும், பகுத்தறிவும், அன்னையின் இடையுறா தரிசனமும் மட்டுமே; பத்தும் செய்யும் பணத்தைப்பற்றி ஏதும் கேட்க மறந்து விட்டார் போலும். அங்கிருந்து ஆசரமத்தில் குருவின் அறைக்குத் திரும்பினார். குருவும், விடாது, 'என்னப்பா, பணத்தைப் பற்றிக்கேட்டாயா அன்னையிடம்?' என வினவ, இவர், 'அதை மறந்து விட்டேனே' என்கிறார். அதற்கு அவர், 'சரி அடுத்த முறை சென்று, மறக்காமல் கேள்' என்கிறார். நரேனோ, அடுத்தமுறையும் மறந்து விடுகிறார். இப்படியாக மூன்று முறைகளாக இந்த 'விளையாடல்' தொடர, நரேனுக்கு திடீரெனத் தோன்றுகிறது, ஒருவேளை, காளியைப்பார்த்த உடன், பொருள் கேட்காமல் மறந்து போவதும், தன் குரு இராமகிருஷ்ணரின் செயல்தானோ என்று - உலகியல் பொருட்களின் மீதான பற்றைப் போக்கத்தான் இப்படி செய்கிறாரோ என்று. பின்னர் இராமகிருஷ்ணரிடம் வந்து, 'ஐயா, பொருள் என் குடும்பத்தினைக் காப்பாற்றவே தேவைப்படுகிறது, நீங்கள் அவர்களுக்காவது ஏதாவது செய்ய வேண்டும்' எனக்கேட்டார்!. குருவும், 'நரேந்திரா, உலக வாழ்வை எல்லோரும் போல வாழ உனக்கு விதிக்கப்படவில்லை' என்று சொல்லி, 'உன் குடும்பத்திற்கு எளியதொரு வாழ்க்கை கிடைக்கும்' என உறுதி அளித்தார்.

மேற்சொன்ன சம்பவம் நரேந்திரனின் மனதில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியது எனலாம். அது அவரது ஆன்மீகப் புரிதலை வளப்படுத்தியது. கடவுள் எவ்வாறு இந்த உலகத்தின் நிகழ்வுகளில் தலைப்படுகிறார் என்பது பற்றிய புதியதொரு புரிதலை அவருக்கு கற்பித்தது. இதுகாறும் அவர் கடவுள் என்பவர் தன்னைச்சாரா வெளிப்பொருள் எனவும், மேல் உலகத்தில் இருந்து கொண்டு, இந்த உலகத்தைப் படைத்தவராகவோ மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தார். இப்போதோ,
* கடவுளின் தலைப்படுதல் எல்லாப் பொருட்களின் ஆக்கத்திலும் இருப்பதையும்,
* அண்ட சராசரங்களிலும், அதிலுள்ள அனைத்திலும் விரிந்து பரந்திருப்பவர் என்பதையும்,
* ஒவ்வொரு பொருளின் உயிரிலும், பேரறிவிலும்(Consciousness) உட்புகுந்திருக்கிறார் என்பதையும்,
* உருவங்களில் வெளிப்பட்டும், மற்றவற்றில் வெளிப்படாமலும் இருக்கிறார் என்பதையும் உணர்கிறார்.

இப்படி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் 'உலக ஆத்மா'வினை - கடவுள் என்னும் 'நபர்' ஆகப் பார்க்கையில் - அதுதான் இஷ்ட தெய்வம் (அ) இஷ்ட தேவதை எனப்படும் Personal God. வெவ்வேறு மதங்கள், அந்த நபரை வெவ்வேறு உறவுப் பெயர் கொண்டும் பார்க்கின்றன - தந்தையாக, தாயாக, அரசனாக, அன்புக்குரிய காதலனாக - இப்படியெல்லாம். இந்த உறவு முறைகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடுகளைக் கொண்டிருப்பதாகவும் - அன்னை காளியும் அவற்றில் ஒன்று என்கிற புரிதலுக்கு வருகிறார்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக, குரு இராமகிருஷ்ணரின் அருகாமையில் இப்படியாக, நரேந்திரனின் ஆன்மீக வாழ்க்கை அச்சில் வார்க்கப்பட்டு வந்தது! எல்லா வகையிலும் இராமகிருஷ்ணர், ஒரு அற்புதமான குருவாக அமைந்திருந்தார் என்பதில் ஐயமில்லை.

(இன்னும் வளரலாம்...)

உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தர்

26 comments:

  1. கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டீ-- மானே
    வளர்த்தவனே எடுத்துக் கொண்டாண்டீ

    எதிரில் வந்து கெடுக்கவில்லை
    இதயமுகம் பார்க்கவில்லை
    எங்கிருந்தோ ஏவிவிட்டான் கணையை
    அது என் தலையில் போட்டதடி பழியை"

    என்னும் 'தங்கப்பதுமை' பாடல்வரிகள் நினைவுக்கு வந்தன ஜீவா.

    தொடருங்கள்

    ReplyDelete
  2. விவேகானந்தரைப்பற்றிய அரிய செய்திகளை அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  3. //அது போதாதென்று, 'நீ காளியன்னையை ஜகன்மாதாவாக கொள்ளாததால்தான் இப்படியெல்லாம்" என்றுவேறு சொல்லி வைத்தார்.//

    அருமை, அருமை

    ReplyDelete
  4. நல்லதொரு பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி திரு.வி.எஸ்.கே சார்!

    ReplyDelete
  5. வாங்க அமுதா மேடம், தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  6. வாங்க கைலாஷி சார்!
    கொல்கத்தாவிலேயே பிறந்து வளந்திருந்தும் நரேந்திரன் காளியை உடனடியாகக் கொண்டாரில்லை!

    ReplyDelete
  7. மூன்று முறை அன்னையைக் கண்டும் அவளிடம் பொருள் வேண்டிக் கேட்காத நரேந்திரரின் அந்த வாழ்க்கைச் சம்பவம், எனக்கு மிகப் பிடித்த, மனதை நெகிழ வைக்கும் ஒன்று. அவரைப் பற்றிய செய்திகளுக்கு நன்றி ஜீவா.

    ReplyDelete
  8. வாங்க கவிநயா,
    ஆம், அந்த சம்பவம் மனதை நெகிழ வைப்பதுதான்.

    ReplyDelete
  9. //கருணையான இறைவனின் படைப்பினிலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும், இறைவனைக் கண்டறியும் இயல்பு மட்டும் இம்மியளவும் சிதையாமல் இருக்கிறது!//

    துன்பம் எனும் நினைவே துன்பத்தைத் தரும். எதில் துன்பம் இல்லை ?
    நாலடியார் சொல்லுவார்:
    ஈட்டலும் துன்பம், மற்றீட்டிய ஒண்பொருளைக்
    காத்தலும் அங்கே கடுந்துன்பம் = காத்தல்
    குறைபடின் துன்பம்; கெடின் துன்பம்; துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.

    குசேலோபாக்கியானத்தில் இன்னொரு கோணத்தில் துன்பம் என்ன என்றால்:

    மதலையைப் பெரு நாள் துன்பம்
    வளர்த்திடு நாளும் துன்பம்
    விதலை நோயடையில் துன்பம்
    வியன் பருவத்துத் துன்பம்
    கதமுறு காலர் வந்து கைப்பற்றில்
    கணக்கில் துன்பம்.
    இதமுறு பாலர் தம்மால் எ ந் நாளு ந்
    துன்பமாமே !!

    ஆதலால்தான், ந பிரஜயா, ந கர்மணா, தனேன த்யாகேன இதி விமுச்யதே !
    ( மக்களால் அல்ல, நாம் செய்யும் கருமங்களின் பலன்களால் அல்ல, செல்வத்தால்
    அல்ல, தியாகத்தால்தான் முக்தி பெற இயலும் )

    இறைவன் படைப்பில் மாயையும் ஒன்றே. மாயைதனை இன்பம் என நினைப்பர்
    துன்பப் பெருங்கடலில் மூழ்கவே செய்வர். ஆனந்தம் தருவது முக்தி ஒன்றே.
    அது நிலை பெறுவது ஞானத்தால். ஞானம் பெறுவது தியாகத்தால். ஆம்.
    "தான்" எனும் உணர்வினைத் தியாகம் செய்ய இறைவனைக் காணும் இயல்பு
    மேலோங்கும்.
    நரேந்திரன் இறைவனைக் காண்பதும் இது போலத்தான் என நினைக்கிறேன்.

    //திடீரென, நம்ப இயலாத காட்சி ஒன்றையும் காணலானார், ஒவ்வொரு திரையாக விலகுவதுபோல. அவரது ஆன்மாவைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொரு திரையும் விலகி விலகி, இறுதியில் இறைவனின் கருணையையும் சத்தியத்தையும் காண்கிறார்.//

    சத்தியம் என்பதுவே ஆனந்தம் . எல்லா இன்பமும் அதுவே. முக்தி தருவதும் அதுவே.
    அந்த உணர்வு நிலைதான் :

    //கடவுளின் தலைப்படுதல் எல்லாப் பொருட்களின் ஆக்கத்திலும் இருப்பதையும்,
    * அண்ட சராசரங்களிலும், அதிலுள்ள அனைத்திலும் விரிந்து பரந்திருப்பவர் என்பதையும்,
    * ஒவ்வொரு பொருளின் உயிரிலும், பேரறிவிலும்(Consciousness) உட்புகுந்திருக்கிறார்...",
    * //

    ராமகிருஷ்ண உபனிடதம் சொல்லும் எல்லாம் இதில் உள்ளது.

    உங்கள் பதிவுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்தல் கிடைக்கும் என்பது
    திண்ணம்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  10. //(இன்னும் வளரலாம்...)//

    வளரக் காத்திருக்கோம்!

    ReplyDelete
  11. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    துன்பம் பற்றிய இலக்கியத் துளிகளை இன்புறத் தந்தீர்கள்!
    //உங்கள் பதிவுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்தல் கிடைக்கும் என்பது
    திண்ணம். //
    நல்லது, அப்படியானல் அது மட்டுமே நான் வேண்டும் பேறு.

    ReplyDelete
  12. வாங்க கீதா மேடம்,
    இன்னும் வளரலாம், அவன் அருள் இருப்பின்.

    ReplyDelete
  13. //ஆனந்தம் தருவது முக்தி ஒன்றே.
    அது நிலை பெறுவது ஞானத்தால். ஞானம் பெறுவது தியாகத்தால். ஆம்.
    "தான்" எனும் உணர்வினைத் தியாகம் செய்ய இறைவனைக் காணும் இயல்பு
    மேலோங்கும்.//

    mmmmmமெளலியும் கிட்டத் தட்ட இதே தான் எழுதி உள்ளார், இல்லையா??? பூரண சரணாகதிக்கும், இந்த "தான்" உணர்வைத் தியாகம் செய்வதற்கும் வித்தியாசம் இல்லைனே நினைக்கிறேன். யோசிக்கணும்!!!!!

    ReplyDelete
  14. "எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் 'உலக ஆத்மா'வினை - கடவுள் என்னும் 'நபர்' ஆகப் பார்க்கையில் - அதுதான் இஷ்ட தெய்வம் (அ) இஷ்ட தேவதை எனப்படும் Personal God. வெவ்வேறு மதங்கள், அந்த நபரை வெவ்வேறு உறவுப் பெயர் கொண்டும் பார்க்கின்றன - தந்தையாக, தாயாக, அரசனாக, அன்புக்குரிய காதலனாக - இப்படியெல்லாம். இந்த உறவு முறைகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடுகளைக் கொண்டிருப்பதாகவும் - அன்னை காளியும் அவற்றில் ஒன்று என்கிற புரிதலுக்கு வருகிறார்." ஆஹா அருமையான வரிகள். தன்னுள்ளும், பிறருள்ளும் காணும் கடவுளை புரிந்து கொள்ளும் திறனிருந்தால் வாழ்வில் வேறென்ன வேண்டும். வாழ்த்துக்கள். மிக நல்ல பதிவினை இட்டதற்கு.

    ReplyDelete
  15. வாருங்கள் கிருத்திகா மேடம்,
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. நல்ல பதிவு. அவசியம் வளர வேண்டும்.

    ReplyDelete
  17. வாங்க திவா சார்.

    ReplyDelete
  18. வாங்க சிபியார் - படம் புதுசா இருக்கு!

    ReplyDelete
  19. நரேந்திரனின் கதையைப் படித்து மகிழ்ந்தேன் ஜீவா. நன்றிகள்.

    ReplyDelete
  20. வாங்க குமரன், நல்லது!

    ReplyDelete
  21. ஜீவா.. வணக்கம்... விவேகானந்தர் பற்றிய கட்டுரை அருமை... ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் படித்ததுண்டா? அதை படிக்க படிக்க மனதில் நிம்மதி பரவுவதை நான் உணர்ந்திருக்கிறேன். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது, தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.. என் தளத்திற்கு வந்தமைக்கு நன்றி...தொடர்ந்து வரவும்..

    ReplyDelete
  22. ஜீவா... இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை...... தங்கள் விவாதத்திற்கு பதிலளித்திருக்கிறேன்

    ReplyDelete
  23. வாங்க ரமேஷ்,
    அமுத மொழிகளை ஆங்காங்கே படித்திருக்கிறேனே தவிர, முழுதாக படித்ததில்லை.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. Anonymous6:07 AM

    seithi koduthamaiku nantri

    ReplyDelete
  25. Anonymous6:07 AM

    seithi koduthamaiku nantri

    ReplyDelete