Wednesday, July 09, 2008

அருள் செய்ய வேண்டும் அய்யா!

ந்த இடுகையில் நாம் பார்க்கப்போகிற பாடலில் ஆசிரியர் மிகவும் இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார் என்பதே இவரது இசைப்புலமையை பறை சாற்றும். நீதிமதி இராகத்தில் இவர் இயற்றிய 'மோகன கர முத்துக்குமரா' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தி. அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இவர் யார்? கோடீஸ்வர ஐயர் (1870-1936), என்பது இவரது பெயர்.
"கவி குஞ்சர பாரதி" என்றொரு பெரும் புலமை வாய்ந்த கவியின் பேரன். "கவிகுஞ்சர தாசன்" என்று தன் தாத்தாவின் பெயரோடு 'தாசன்' என சேர்த்துக் கொண்டார், இவரது சாகித்ய முத்திரைகளில்.

இவரது படைப்புகளின் பட்டியலைப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது:
* சித்தி விநாயகர் பதிகம்
* சண்முக மாலை
* சுந்தரேஸ்வர பதிகம்
* கயற்கண்ணி பதிற்றுப்பத்து
* மீனாட்சி அந்தாதி

இங்கு பார்க்கப்போகிற பாடலின் இராகம் இரசிகப்பிரியா. 72 மேளகர்த்தா இராகங்களில் கடைசி இராகமாகிய இந்த இராகம், மிகவும் சுவையானது. இது, விறுவிறுப்பான பாடல்களை அமைப்பதற்கு ஏற்ற இராகம். முன்பொருமுறை திரு.சிமுலேஷன் அவர்கள் இந்த இராகத்தைப்பற்றி எழுதி இருந்தார். இதோ அதன் சுட்டி. இரசிகப்பிரியாவில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் சித்ரவீணை இரவிகிரண் அவர்கள் இயற்றிய 'இரசிகப்பிரிய, இராக இரசிகப்பிரியே!. அந்தப்பாடலை இங்கு கேட்கலாம். அந்தப் பாடல் போலவே, இந்த இடுகையில் நாம் பார்க்கப்போகும் இந்தப் பாடல் வரியிலும் இராகத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பது, தற்செயலோ, தவச்செயலோ!

இராகம்: இரசிகப்பிரியா
(72வது மேளம்)
இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
பாடுபவர் : டி.எம்.கிருஷ்ணா

எடுப்பு
அருள் செய்ய வேண்டும் அய்யா - அரசே முருகய்யா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

தொடுப்பு
மருளுரவே என்னை மயக்கிடும்
மாய வல் இருள் அறவே ஞான
சூரியன் என வந்தோர் சொல்
அருள் செய்ய வேண்டும் அய்யா!

முடிப்பு
நிலையா காயம் இலையே இதனை
நிலையென்று
எண்ணுவதென்ன மாயம்?
நிலையென்று உனையே
நினைந்து நான் உய்ய

நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரியா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

arulseyya_vEndum_i...


பாடலைக் கேட்டீர்களா, எப்படி விறுவிறுப்பாக அமைந்துள்ளதல்லவா!. பாடல் வரிகளில் நான் வியந்தது என்னவென்றால், பல சொற்கள், மிகச்சிரிய சொற்கள் - மருள் உர, இருள் அற, மாய, வல், ஞான, நேச, கவி என இப்படியாக!
விறுவிறுப்பில், அருணகிரியாரை அல்லவா நினைவு படுத்துகிறது!

இவ்வளவு எளிய பாட்டில் எவ்வளவு உயர்ந்த தத்துவமும் அடங்கி இருக்கு! இப்பாடலில், முருகனின் அழகைப்பற்றிப் பாடவில்லை. அவன் அணிந்திருக்கும் வேல், மயில் அல்லது சேவல் பற்றிக் குறிப்பில்லை. அவன் சிவன் சுதன் என்றோ அவனே சிவனே எனவோ சொல்லவில்லை. அவன் முகுந்தன் மருகன் எனச் சொல்லவில்லை. வேறு எதைப்பற்றித்தான் இருக்கு? எதைப்பற்ற வேண்டும் என்றிருக்கு! எதைப்பற்ற வேண்டும்? நிலையானதைப் பற்ற வேண்டும். நிலையிலா உடலைப்பற்றி என்ன பயன்? மிஞ்சுவது மாயை தரும் மருள் மட்டுமே. தொடக்கமில்லா மாயை, இங்கே இப்போதே முடிவு பெற, முடிவில்லா, நிலையான, முருகனை நினைக்க, அதுவே துன்பங்களில் இருந்து மீள்வதற்கான வழி. உன்னைப் பற்றிட அருள் செய்ய வேண்டும் முருகய்யா!

ஓவியரும் இசைக்கலைஞருமான திரு.S.ராஜம் அவர்கள் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள் என்பது கேள்வி. இதுபோன்ற தமிழ் கீர்த்தனைகளை மக்களிடையே பரவிடச் செய்திடல் வேண்டும். இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிகளில் நிறைய தமிழ் கீர்த்தனைகளைக் கொடுத்து, தமிழிசையை வளர்க்க வேண்டும்.

பி.கு: இந்தப் பாடலை இன்னும் சில பாடகர்கள் பாடிக் கேட்கையில், பாடல் வரிகளில் சற்றே மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்களும் சற்றே மாற்றத்துடன் இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம்!

உசாத்துணை:
* கர்நாடிகா.நெட்
* வித்வன்.காம்

26 comments:

  1. //நிலையா காயம் இலையே இதனை
    நிலையென்று எண்ணுவதென்ன மாயம்?
    நிலையென்று உனையே
    நினைந்து நான் உய்ய//

    ஆஹா!

    ReplyDelete
  2. மிக அழகிய பாடல். கேட்கும் போதே மெய்மறந்து விட்டேன். நிலையாமை பற்றிய அழகிய பாடலை அறிந்தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் திரு ஜீ அவர்களே

    ReplyDelete
  3. வாங்க திவா சார், தங்கள் இரசிப்பிற்கு நன்றி!

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி அமுதா, மறுமொழிக்கு நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பாடல் ஜீவா. நீங்கள் சொன்னது போல் விறுவிறுப்பான ராகத்தில் இனிமையாய் பொருள் செறிந்து விளங்குகிறது. நன்றி.

    ReplyDelete
  6. கோடிஸ்வரர் அறிமுகம் நன்று ஜீவா.
    இப்பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    இவரது பெண்வழி வாரிசுகள் மும்பை-பெங்களூர் என்று சுற்றி பின்னர் மதுரையில் செட்டிலானார்காள். இப்போதும் மதுரை எல்லீஸ் நகரில் இருக்கிறார்கள் :)

    ReplyDelete
  7. //நிலையா காயம் இலையே இதனை
    நிலையென்று எண்ணுவதென்ன மாயம்?//

    காயமே அது பொய்யடா
    காற்றடைத்ததொரு பையடா ..

    எனக்கேட்டது நினைவுக்கு வருகிறது.

    ரசிகப்பிரியாவில் அமைந்துள்ள இப்பாடல் மிகவும் நன்றாக உள்ளது.
    நீங்கள் குறிப்பிட்டது போல், இதே பாடலை ஒரு சில மற்ற ராகங்களிலும்
    கேட்டிருக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

    கோடீஸ்வர ஐயர் தனது எல்லாப் பாடல்களையுமே இவ்வாறு
    எளிய சொற்களில்தான் அமைத்துள்ளார் எனவும் தெரிகிறது.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  8. வாங்க கவிநயா,
    கேட்ட முதல் முறையே மனதில் இடம் பிடிக்கும்

    பாடல்களில் ஒன்று இது!

    ReplyDelete
  9. வாங்க மௌலி,
    உங்களைத் தான் சில இடுகைகளாகக் காணோமே என நினைத்திருந்தேன், வருகைக்கு நன்றி.
    மதுரை எல்லீஸ் நகரில் இருக்கிறார்களா, நல்லது.
    இதுபோன்ற நேரடி தகவல்களை அறிவதில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    மேலும், சொற்களில்தான் சற்றே மாற்றங்களைக் கண்டேன். இராகத்தில் மாற்ற, இருப்பதாகத் தெரியவில்லை.
    'மாய வல் இருள்' என்பதற்கு பதிலாக 'மாயா...இருள்' என்றும், 'நிலையென்று உனையே நினைந்து நான் உய்ய...' என்பதற்கு பதிலாக, 'நிலையே...என்று நான் உய்ய' என்பதுபோல சில மாற்றங்கள்.
    வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  11. http://www.youtube.com/watch?v=HPXhmVHBj3w



    இந்தப்பாடலை இன்னொரு ராகத்திலும் பாடலாம் என்று எழுதியிருந்தேன்.
    ஒன்றல்ல, பல ராகங்களுடன் இந்தப் பாடல் அமைகிறது.

    ஒருவிதமாக மிஸ்ர சிவரஞ்சனி ராகத்தில் ( அப்பப்ப கெளரி மனோகரி வரும்.
    கண்டுக்ககூடாது ) கம்போஸ் செய்தால், நன்றாகவே வருகிறது.

    கோடீஸ்வர ஐயர் கோவித்துக்கொண்டால், நீங்கள் தான் அதற்கு ப் பொறுப்பு
    என்று சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன். ஆமாம், இத்தனை தத்துவம்
    நிறைந்த பாடல் ஒன்றைத் தந்து விட்டு, அதற்கு மெட்டுப் போடாமல்
    இந்தக் கிழவனால் இருக்கமுடியவில்லை.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    http://www.youtube.com/watch?v=HPXhmVHBj3w

    ReplyDelete
  12. நன்றாக இருக்கிறது சுப்புரத்தினம் ஐயா.
    அழகான இசை அமைப்பிற்கும், அழகாக பாடித் தந்தமைக்கும், தங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பலப்பல.

    ReplyDelete
  13. படித்ததில் பிடித்ததாக என் கட்டுரைகள் இரண்டை பரிந்துரைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி, திரு. ரமேஷ் சதாசிவம்.

    ReplyDelete
  15. /எளிய பாட்டில் எவ்வளவு உயர்ந்த தத்துவமும் அடங்கி இருக்கு!//
    இந்தப் பாடலை எனது தங்கை என்று ரசிகப்பிரியாவில் பாடிக் காண்பித்தாள்.
    இதையும் இன்னும் ஒருமுறை கேட்டிடுவோம் என நான் இன்று வந்தேன்.
    அப்பொழுது இந்த வரி மீண்டும்
    கண்ணில் பட்டது. உண்மையில் உயர்வுக்கு அடிகோலுவதே எளிமையே.
    தன்னை எளியவனாகிக் கருதுபவன் தருமத்திற்குத் தலை வணங்குகிறான்.
    தர்மத்தை அவன் காக்க, தருமம் அவனைக் காக்கிறது. தருமம் தான் நிலைத்து நிற்கும்
    என நிலைப்பாடு கொண்டவனே சத்யவழிதனை மேற்கொள்கிறான்.
    ஆகவே தான் உயர் வேதாந்த கோட்பாடுகளில்
    "சத்யம் வத" ( உண்மை பேசு) என்ற வாக்கியத்திற்கு " தர்மம் சர" (தருமத்தை அனுசரி)
    எனும் பொருள் சொல்லப்படுகிறது.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    வருக.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  16. அருமையானதொரு பதிவு.

    பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. //நிலையா காயம் இலையே இதனை
    நிலையென்று எண்ணுவதென்ன மாயம்?
    நிலையென்று உனையே
    நினைந்து நான் உய்ய//

    அருமையான வரிகள் பல அன்பர்களின் அற்புத முத்துக்களை முத்தெடுத்து அளிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜீவா.

    ReplyDelete
  18. மீள்வருகைக்கு மிக்க நன்றி சுப்புரத்தினம் ஐயா.
    எளிமைக்கும் உயர்வுக்குமான இணைப்பினை அழகான வாக்கியங்களில் கொடுத்துள்ளீர்கள்.
    வேதாத்திரி மகரிஷி சொல்லுவார்: "The Greatest Truth are always the Simplest!" என்று.

    ReplyDelete
  19. வாங்க பா.ந.இளவரசன்,
    நல்லது, மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. வாங்க கைலாஷி சார்,
    தங்களை அந்த வரிகள் ஈர்த்திருப்பதைக்கண்டு ஆனந்தம்.

    ReplyDelete
  21. அருமையான பதிவு.பாராடுக்கள்.
    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  22. வாங்க விஜய், பாராட்டுக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  23. Just a small note on the mudras: KOTIswara Iyer has used both his composer mudrai "kavikunjcaradAsan" and the rAgam mudrai in all the 72 mELakarttA rAga kritis composed on Murugan under the banner "kandagAnAmudam". For an article on another song "VAraNa mukhavA" of his please visit
    http://chennaionline.com/musicnew/Thamizhsongs/2003/12song01.asp

    One descendant relative of KI is one Mohan Santhanam of Chennai. He is a musician who gives several concerts every year in India.

    ReplyDelete
  24. //KOTIswara Iyer has used both his composer mudrai "kavikunjcaradAsan" and the rAgam mudrai in all the 72 mELakarttA rAga kritis //
    Thanks for that additional note Sir!
    Its amazing to see what an visionary he was and how organized he was!

    ReplyDelete
  25. Royal Carpet Karnatik web site gives some interesting pieces of information about Koteeswara Iyer:

    1) He was a disciple of Patnam Subramania Iyer and Poochi Iyengar.

    2) He worked for CID department, and later at the Madras High Court.

    3) Ayyappa songs fame Veeramani was Koteeswara Iyer's grandson.

    ReplyDelete
  26. வாங்க ரவி!
    முதல் இரண்டு செய்திகளையும் கேள்விப் பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால், மூன்றாவது செய்தி புதிது, வியப்புக்குள்ளானேன்!
    இங்கே இச்செய்திகளை சேர்த்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete