Tuesday, December 30, 2008

கனவில் வந்த கதைகள் - செய்வது நானா?

ப்போதெல்லாம் நாங்கள் ப்ரான்ஸில் பாரிஸ் நகரத்தில் வசித்து வந்தோம். பாரிஸில் வசிப்பதில் என்ன சிறப்பு என்றால், ஐரோப்பிய நண்பர்கள் பலரும் அந்த வழியாக பயணிப்பதால், தங்கள் பயணத்தின் இடையே, எங்களை வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். அப்படித்தான் அன்று ஒரு நண்பன், என்னைப் பார்க்க வந்திருந்தான் - கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையுடன்!

ப்போது, இப்போதைக் காட்டிலும், அறிவியல் முன்னேற்றங்கள் மிகையாய் மிகுந்த காலம். செயற்கைக் கருத்தரிப்பு வேகமாய் வளர்ந்திருந்தது. மக்கள் தொகையும் வெகுவாகக் குறைந்து, செயற்கையாக கருவினை வளர்ப்பதும், அதன் மூலமாக, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், சகஜமாய் இருந்தது. நண்பன் கையில் கொண்டு வந்திருந்த பையில் அப்படியொரு செயற்கை கரு இருந்தது!. அவனுக்கு ஒரு வாரத்திற்கு, பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதினால், அக்கருவினை என்னால் கவனித்துக் கொள்ள இயலுமா எனக் கேட்க வந்திருந்தான்.

ப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு அவனே விடை பயின்றான். "தினமும், இரண்டு வேளே, குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அதைச் சுற்றி தேங்கி இருந்த தண்ணீரை விலக்கி விட்டு, புதிய தண்ணீரில் நிரப்பி, மீண்டும், குளிர் சாதனப் பெட்டியிலேயே வைத்து விட வேண்டும். அவ்வளவுதான்." என்றான் நண்பன். அவ்வளவுதானே என்று மனம் சொன்னாலும், அதை வெளிக்காட்டுவதில் தயக்கம் இருந்தது. "உடனேயே மாற்றி விட வேண்டுமா?, சற்று தாமதமானால், ஆபத்தில்லையே?" என்று கேட்டு வைத்தேன். "நிறைய நேரம் ஆக்கலாகாது. ஒரு முப்பது நொடிக்குள் மாற்றி விட வேண்டும்" என்றான். என் தயக்கம் அவ்வளவாகத் தெளியா விட்டாலும், நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் படியாகி விட்டது, இறுதியில்.

ரண்டு நாட்களுக்கு, மிகவும் கவனமாக, பக்கத்தில் ஸ்டாப் வாட்ச் எல்லாம் வைத்துக் கொண்டு, பத்து நொடிக்குள் தண்ணீரை மாற்றி விட்டு, மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டேன். ஆனால் அதற்கப்புறம், அந்த செயற்கைக் கரு எப்படி இருக்கிறது, எப்படி வளர்கிறது, அன்றாடம் என்னென்ன மாற்றங்கள் அடைகிறது என்பதெல்லாம் கவனிக்கலானேன். எனது அறிவியல் ஆர்வம், என்ன வந்து பிடித்துக்கொள்ள, அதன் பின்னரெல்லாம், தண்ணீரை மாற்ற, முப்பது நொடிகள் வரை கூட ஆகத் தொடங்கியது. கூடவே, அறிவியலின் ஆக்கமும், அதைச் சார்ந்த பெருமையும் வந்து ஒட்டிக் கொண்டது. நான் ஏதோ, ஆராய்சியாளன் போல முதலில் உணர்த் தொடங்கினேன். பின்னால் ஏதோ, நானே ஆக்குபவன் போலவும், இறுமாப்புகள் வந்து ஆக்ரமித்துக் கொண்டன. இப்போதெல்லாம், தண்ணீர் மாற்றுவதையும் ஒரு ஸ்டெயிலாகச் செய்து வருகிறேன் என்றால் பாருங்களேன்.

ப்படியாக ஒரு வாரமும் ஆனது. நண்பனோ திரும்பி வரக் காணோம்! ஆனால், அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்னும் ஒரு வாரகாலம், அவனது பயணம் நீடிக்கிறதாம், அடுத்த வாரம் திரும்பி விடுவானாம். எனக்கோ உள்ளூர மகிழ்ச்சி! இன்னொரு வாரம், நமக்கு தண்ணீர் மாற்றும் வேலை, என்பதைவிட, இன்னொரு வாரம், நான் இந்த உயிரை வளர்க்கப் போகிறேன், என்ற எண்ணமே, ஓங்கி இருந்தது. என்னவோ தெரியவில்லை, மற்ற செயல்களைக் காட்டிலும், இச்செயலில் இப்படியொரு தற்பெருமை வந்து ஒட்டிக்கொள்கிறது! இது ஆக்கும் வேலை என்பதாலோ!.

ன்றொருநாள், தண்ணீரை மாற்றுகையில், அந்தப் பையுனுள் ஏதோ அசைந்ததுபோல இருக்க, சற்றே அதிர்ந்து பின் வாங்கினேன். அது நிஜமாகவே அசைந்ததா, அல்லது மனப் பிரமையா என்பதும் சந்தேகம். மெதுவாக, அதன் அருகினில் சென்று, உன்னித்துக் கவனிக்க, அதில் அசைவேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் மிகுந்த கவனத்துடன் தண்ணீரை மாற்றினேன். மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைப்பதற்குச் செல்லுமுன்தான் கவனித்தேன், கிட்டதட்ட, இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டதை. அடடா, என்ற நினைப்புடன், இன்னொரு சந்தேகமும் வந்து ஒட்டிக் கொண்டது. குளிர் நீரை மாற்றினேனா, அல்லது, வெது வெதுப்பான நீரை, தவறாக மாற்றி விட்டேனா என்று. தண்ணீரை லேசாக தொட்டுப்பார்க்க, அது சுட்டது, என்னை. அவசரத்தில், ஒரு வேளை, வென்னீர் குழாயில் எடுத்துவிட்டேனோ என்ற சந்தேகம் பிடித்துக்கொள்ள, மீண்டும் தண்ணீரை மாற்றலானேன்.

டுத்த முறை தண்ணீர் மாற்றியபின், ஏதோ ஒரு மாற்றம் அதில் நிகழ்வது போலிருந்தது. திரவமாய் நிறைந்திருந்த அந்தப்பையே, கடினப் பட்டது போலத் தெரிந்தது. அந்தப் பை, வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை, சற்றே, அசைத்துப்பார்க்க, அந்தப் பையில் இருந்து, ஏதோ ஊதா நிறத்தில், தண்ணீரில் கலப்பது போல் இருந்தது. நான் என்ன செய்கிறேன் என்பதை என்னாலாயே சரியாய்ச் சொல்ல இயலாதவனாய் அதிர்ந்தேன். அவ்வளவுதான், ஏதோ நிகழ்ந்து விட்டது. ஒரு உயிரைக் கொன்று விட்டேன், என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணத்தில் பதற்றத்தின் ஆக்ரமிப்பு, வேறேதும் எண்ணத் தோணாமால், ஆக்ரமித்துக் கொண்டது.

யகோ, நண்பன் வந்து கேட்டால், என் செய்வேன்?. யானே கள்வன், யானே அழிவின் காரணம், யானே அழித்தேன். என்னால் ஏதும் ஆக்க இயலுமோ? ஆனால், அழிக்க மட்டும் இயல்கிறதே? இப்படியும் ஒரு பிறவியோ? என் செய்வேன், என்ன செய்தாலும், சரி செய்ய இயலுமோ, அந்தக் கருவை மீண்டும், முன்பிருந்த நிலைக்கே கொண்டு செல்ல இயலுமோ? என ஓயாமல் பிதற்றினேன், அரற்றினேன், ஓலமிட்டேன். அழகாக வளர்ந்த கருவில், ஆலமிட்டது எப்படி? இது அவன் ஜாலமோ? இல்லை என் கோலமோ? ஏதும் அறிந்திலேன் என அழுதேன். ஒருவேளை, நான், எனது செயல் என்கிற அகந்தை வந்து ஆட்கொண்டதோ? எனவெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தபோது - தொலைபேசியோ மணியடித்திட, அதையும் பொருட்படுத்த இயலவில்லை. ஒரு வேளை, அது நண்பனாய் இருந்தால், என்ன பதில் சொல்வேன்? என்னை நம்பி ஒப்படைத்த செயலை, பொறுப்பில்லாமல், கெடுத்தேனே. தொலைத்தேனே.

ற்றாமையில் நான் அழுது புலம்பிட, அச்சத்தம் கேட்டு, அம்மா அங்கே வந்தார். நடந்ததை அறிந்து கொண்டு ஆறுதல் சொல்லலானார். "அப்பா, ஆக்கலும், அழித்தலும், நம் கரத்தில் இல்லை. எல்லாம் வன் செயல். நாம் வெறும் கருவி மட்டுமே. எய்தவன் அங்கிருக்க, இங்கே அம்பை நொந்து என்ன பயன்?." என்றார். என்ன இருந்தாலும், அத்தண்ணீர் மாற்றும் செயலுடன், அந்த அளவிற்கு நான் ஒன்றியிருக்கக் கூடாது. அதன் மேல், என் விருப்புகளை ஆழ்த்தினேன் அல்லவோ. அதனால்தான் இப்படியானதோ? செயலைச் செய்கையில், எதற்காக, "செய்வது நான், செய்வது நான்" - என்கிற எண்ண ஓட்டங்கள். அம்மா சொல்வது சரிதான், செய்வதெல்லாம் வன் என்றிருக்க, எங்கிருந்து வந்தது நான் என்கிற எண்ணம்? எப்போதும் செயல் நடந்து முடிந்தபின், 'அப்படி நடந்திருக்கக் கூடாது' எனச் சொல்வது எத்தனை எளிதாக இருக்கிறது!. செயலை அழித்து, பொருளின் முந்தைய நிலைக்கு, எப்போதும் கொண்டு செல்ல இயன்றால், எவ்வளவு நன்றாக இருக்கும், கனவுபோல? ஓ, ஒருவேளை இது கனவு தானோ, என்கிற வினவலின் விளைவில், கனவும் கலைந்தது. நல்லவேளை, இது கனவுதான் என்ற பெருமூச்சும் வந்திட, எல்லாமும் இயல்பானது.

Sunday, December 28, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (5)

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் - யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) - 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)


14. பாபநாசன் சிவன் (1890 - 1973)
'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா

தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 - 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

Friday, December 26, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (4)

இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.


இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி


தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.


பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)


அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)

Wednesday, December 24, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (3)

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"


என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.


நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே


இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.


தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)

Sunday, December 21, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

Saturday, December 20, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (1)

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;

சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

பிற்சேர்க்கை:
கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
(இவ்விரண்டும் , ஜெயா டி.வி யின் ஒளிபரப்பில் இடம்பெறவில்லையென்பது வருத்தமானதே.)

(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினேழு

பா 56:

எதுகுறுக்கு மேல்கீழா மெங்குநிறை வாகும்
எதுசச்சித் தின்பிரண் டிலா ததானந்தம்
நித்தமா யொன்றாய் நிகழ்வதெது வாகுமவ்
வத்து பிரம மதி.
(சீர்களைப் பிரித்து:)
எது குறுக்கு மேல் கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித் இன்ப இரண்டிலாத ஆனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் அதி.

பொருள்:
குறுக்கு, மேல், கீழ் என எங்கும் நிறைந்திருக்கும் எப்பொருளோ,
எது சத் எனவும், சித் எனவும், ஆனந்தம் எனவுமான பொருளோ,
எது இரண்டு என்றில்லாமல்,
எது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறதோ,
எது எப்போதும் ஒளிர்ந்து திகழ்கிறதோ,
அப்படிப்பட்ட பொருளே, பிரம்மம் எனக் கொள்வாய்.

விளக்கம்:
வேதங்கள் யாவும் கூறும் உண்மைப் பொருளாம், தன்னை அறிந்தார் உணர்வதாம்,
பிரம்மம் என்னும் மெய்ப்பொருள் எப்படி இருக்குமாம்?
இவ்வெண்பா சொல்லும்:
பிரம்மம் என்னும் வஸ்து, எல்லாவற்றுக்கும் மேலேயிலிருந்து, எல்லாவற்றுக்கும் கீழ் வரையும், இரண்டுக்கும் இடைப்பட்ட இடமெலாமும், இப்படியாக எல்லா இடமும், நிறைந்திருக்குமாம்.

முன்னே இருப்பதும் பிரம்மம், பின்னே இருப்பதும் பிரம்மம்,
வலப்பக்கம் இருப்பதும் பிரம்மம், இடப்பக்கம் இருப்பதும் பிரம்மம்,
கீழேயும் பிரம்மம், மேலேயும் பிரம்மம்.
இங்கே இருப்பது எல்லாமும் பிரம்மம். பிரம்மம் மட்டுமே.
-முண்டக உபநிடதம்.

அது சத்(களம்), சித் (சாதனம்), ஆனந்தம் (இலக்கு) எனவாய் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால், அதில் ஆடுகளமும் ஆட்டமும் - சத்; எல்லையில்லா பிரபஞ்சத்திலோ எல்லாமே சத்; கிரிக்கெட் ஆட பயன்படும் பந்து, மட்டை, கையுறை போன்றவை சாதனம் - ஆகவே அவை சித். அடைய வேண்டிய வெற்றியானது ஆனந்தம். இந்த மூன்றுமாய் இருக்கிறது பிரம்மம். அதவாது, அடைய வேண்டிய இலக்காகவும், அடைவதற்கான களமாகவும், அடையத் தேவையான சாதனமாகவும் இருக்கிறது.

ஜீவனாய் இருக்கும்வரை இரண்டெனத் தெரிந்தது. பிரம்ம நிலையில் எல்லாமே ஒன்றுதான். ஒன்று என எங்கெங்கும் நிகழ்வாய் திகழ்கிறது.


"அதுவும் (தெரியா பிரம்மம்) நிறைவானது, இதுவும் (தெரிந்த பிரம்மம்) நிறைவானது.
இந்த நிறை (தெரிந்த பிரம்மம்), அந்த நிறையில்(தெரியா பிரம்மம்) இருந்து தான் உருவானது.
இந்த நிறையின் முழுமை, யாதெனத் தெளிந்தபின், அந்த நிறையே இங்கும், எங்கும் நிறைந்தது."
- பிரஹதாரண்யக உபநிடதம்


சுட்டிகள்:
* சச்சிதானந்தம் பற்றி மகாபெரியவர் 'அருள்மொழி அமுதம்' தனில் சொல்வது:
"‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்."

* திண்ணையில் எஸ்ஸார்ஸி : வேத வன விருட்சம்:
"சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை
பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்"

Tuesday, December 16, 2008

மார்கழி : எப்படிப் பாடினாரோ!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.

Thursday, December 11, 2008

தமிழ்க்கவி யோகியர் மூவர்

தமிழிசை மூவரைப் பற்றிப் பார்த்தோம். தன்னிகரிலா தமிழ்க் கவிஞர்களுள், தவித்திரு யோகியர் மூவரை இவ்விடுகையில் பார்ப்போம். இந்த மூவரும் கிட்டத்தட்ட, ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர். நேரடியாக இல்லாவிட்டாலும், ஒவ்வொருவரும், அவருக்கு முன்னால் வந்தவர்களால், ஈர்க்கப்பட்டவர்கள்!
யாரோ, அவர் யாரோ? என்ன பேரோ?

* தாயுமானவர் (1706 - 1744)
* இராமலிங்க வள்ளலார் (1823 - 1874)
* மகாகவி பாரதியார் (1882 - 1921)

இம்மூவரைப் பற்றித்தான் சொல்ல விழைகிறேன்!. திருமூலர், அருணகிரியார், பட்டினத்தார், எனப்பல யோகியரும் சீரார்ந்த இந்நாட்டில், இம்மூவரையும், குறிப்பாகச் சொல்வதற்குக் காரணம், அவர்களது கருத்தில் ஒற்றுமைகளும், ஒருவர் பால் இன்னொருவர் ஈர்க்கப்பட்டதுமே!. விரிவாகப் பார்க்கலாமா?

தாயுமானவரைப் பற்றி நமக்குத் தெரியும். அரசாங்க பதவியில் இருந்தவாறே, யோக வழியில் நடந்தவர். அரசியே, அவருக்கு ஆபத்தாக, மதுரை அரசைத் துறந்து, இராமநாதபுரம் அரசுக்குச் சென்றவர். அங்கும், நாளும் நெடிதாய் தவத்தில் திகழ்ந்தவர். வஞ்சகர்களின் சூழ்ச்சியால், அவர் ஒரு சமயம் தவத்தில் இருக்கையில், அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டு, அவரது உடலுக்கு தீமூட்டி விடப்பட, தீப்பிடித்து எரியும் உடலோடு, தவம் கலைந்து எழுந்திட, பின்னர், இனியும் இவ்வுடலால் பயனில்லை, இந்நிலையிலேயே, இப்பிறவி முடியட்டும் என்றெண்ணி, முக்தி அடைந்தவர். அரசாங்க அலுவல்களிலும், தவத்தில் ஆழ்ந்த நேரங்களிலும் போக, இதர நேரங்களில், இவர் இனிக்க இனிக்க எழுதி வைத்த அருந்தமிழ் கவிதைகள், வையத்தில் மாந்தரை நன்னெறிக்கு உய்விப்பன. வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் சமரசம் செய்வதை இவரிடம் பார்க்கலாம்.

அருட்பெரும்ஜோதி வள்ளலார், சுத்த சன்மார்கம் மொழிந்தவர். வேதாந்தம், சித்தாந்தம் மட்டுமல்லாமல், ஆறு அந்தங்களுக்கும் சமரசம் செய்தவர். வள்ளலாரின், திருவருட்பா பாடல்களைப் பார்த்தால், தாயுமானவர் விட்ட இடத்திலிருந்து, வள்ளலார் தொடர்ந்து போல இருக்கும். ஒருமுறை அன்பர் ஒருவர், வள்ளலாரிடம், தாங்கள், முற்பிறவியில் தாயுமானவரோ என வினவ, அதற்கு சுவாமிகள் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். அந்த அன்பர், தொடர்ந்து, தனது வினாவை வலியுறுத்த, வள்ளலார், 'உம், இருக்கலாம்' என்றாராம்!. இந்த சம்பவம் சுவையானதாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், வள்ளலாரும், தாயுமானவரைப் போல, சமய சமரசத்தினை வலியுறித்தியவர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என முன்மொழிந்தவர். வள்ளலாரே, வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபினில் தானும் ஒருவன் என்கிறார்.

தாயுமானவர் பாடல்களில் 'ஆகாரபுவனம் - சிதம்பர இரகசியம்' என்றொரு பகுதி உண்டு. அப்பகுதியில் இருந்து:
சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப்பொருளும் தான் ஒன்று ஆகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்டது இல்லை;
பகர்வு அரிய தில்லைமன்றுள் பார்த்தபோது அங்கு
என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன
எச்சமயத்தவரும் வந்து இறைஞ்சா நிற்பர்
கல்மார்க்க நெஞ்சம் உள எனக்கும் தானே
கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும்.
ஆகாயத் தலமாம் தில்லைச் சிதம்பரத்தில் நடராசன் ஆடும் ஆனந்த நடத்திற்கு 'பொது நடம்' என்றொரு பெயர். அப்பெயர் போலவே, அவன் அரூபமாக சிதம்பர இரகசியத்தை உரைப்பது, அவன் எல்லா சமயங்களுக்கும் பொதுவானவன் - எனச் சன்மார்கம் சொல்லுகிறார். எல்லா சமயங்கள் உரைப்பதும், திருச்சிற்றம்பலத்திலேயே அடங்கி உள்ளது என்கிறார்.

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கி தரிசித்தபோது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய் உறவாம் பொருளே
காய்வகை இல்லா உளத்தே கவிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்பிரியும்
சோதிநடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே.(திருவருட்பா - 4133)
என்பார் வள்ளலார். எங்கும் நிறைப் பரவெளியில், ஆகாயத் தலமதில், பொன்னம்பலவன் நிறைந்திருந்தான் என, தான் சிறு வயதிலேயே கண்ட ஆனந்த களிப்பினை, சோதி வடிவானைப் பற்றி அருட்பெரும்சோதியார் போற்றுதல், என்னப் பொருத்தம்!

தாயுமானவர், மற்றும் வள்ளலாரின் தாக்கத்தினை மகாகவி பாரதியிடம் நிறையவே காணலாம். சுதேசமித்திரனில், பாரதி வள்ளலாரைப் போற்றி, 'தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு' ஆதிகர்த்தாவாக வள்ளலார் விளங்குகிறார் என்கிறார். மேலும், 'ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான் வங்கம், மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன' என்கிறார். 'எம்மதமும் சம்மதம்' எனும் வள்ளலாரின் சமய சமரச கொள்கையினை மகிழ்வுடன் பாரதியும் ஏற்றார். பாரதி, திருவருட்பாக்களையும் நன்கு அறிந்திருந்தார். 'நான் படும் பாடு சிவனே உலகோர் நவிலும் பஞ்சு...' எனத் தொடங்கும் திருவருட்பாவை அடிக்கடி பாடிக்கொண்டிருப்பாராம். 'களக்கமற பொதுநடம்...' எனத்துவங்கும் திருவருட்பாவினை சற்றே மாற்றி அமைத்து, அதில் கர்சன் பிரபுவினை, 'கர்சன் என்ற குரங்கு' என வருமாறு மாற்றி அமைத்திருந்தார்.

'எல்லா உயிரும் இன்புற்று வாழ்க' எனச்சொன்ன வள்ளலார் போலவே, பாரதியும் ஆகாயத்தின் மீதேறி, 'புவியில் துன்பமும், வருமையும் நீங்கி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்' என வேண்டுவார் - 'பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்', எனும் கவியில் பாரதி. 'பாருக்குள்ளே தெய்வம் ஒன்று' என பாரதியும் சமய சமரசம் பாடிடக் காணலாம். 'இகத்தில் பரம்' என்பார் வள்ளலார். 'செத்த பிறகு என்ன சிவலோகம், வைகுந்தம்? இத்தரை மீதினில், இதே நாளில், இப்பொழுதே முக்தியை நாடி சுத்த அறிவு நிலையில் களிப்போம்.' என்று சங்கினை முழங்குவார் பாரதி.

வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தின் முடிபு, 'மரணமில்லாப் பெருவாழ்வு'. பாரதியும், இக்கருத்தை, 'பாரதி - அறுபத்தாறு' பகுதியில் உரைப்பதைக் காணலாம். இப்பகுதியினை எழுதுவதற்கு முன்பு, நாற்பது நாள் மௌன விரதத்தினைக் கடைப் பிடித்தாராம், பாரதி. ஓயாது, ஏதாவது, பேசிக் கொண்டும் , பாடிக் கொண்டும் இருக்கும் பாரதி மௌன விரதம் இருந்தாரென்றால், அது அவருக்கு புதுச்சேரியில் ஏற்பட்ட யோகியர் தொடர்பாலாகும். தாயுமானவரின் குருவின் பெயர் 'மௌனகுரு தேசிகர்'. அவர், திருமூலர் வழியில் வந்தவர். இவர்கள் தாக்கம் பாரதிக்கு, புதுவையில் இருக்கும் காலத்தில் வளர்ந்திருந்தது. மேலும், பாரதி, தனது பகவத் கீதை உரையினில், தாயுமானவரை மேற்கோள் காட்டுகிறார். தனது 'ஆனந்தக் களிப்புச் சந்தத்திற்கு' 'தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்' என்றே பெயர் இடுகிறார் பாரதி. தேமாச் சீரில் முடியும் 'வந்த மாதரம் என்போம்', 'தாயின் மணிக்கொடி பாரீர்' போன்றவை இச்சந்தத்தில் வரும்.

இப்படியாக, பாரதிக்கும், தனக்கு முன் வந்த சித்தர்களின் மேலான ஈர்ப்புகள் தெளிவாகின்றன. பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமான காலத்தில், மருத்துவர்களையும், அவர்கள் தந்த மருந்துகளையும் துறந்து, கிட்டத்தட்ட, தன் பூவுடலைத் துறக்கும் முடிவினை பாரதி எடுத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதில் தாயுமானவரின் முடிவினையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. தாயுமானவரும், பாரதியும், ஒன்றுபோல கிட்டத்தட்ட 38 வயது வரைதான் வாழ்ந்திருக்கிறார்கள்.! 'முக்தி என்றொரு நிலை சமைத்தாய்' எனப் பரமனைப் பாடிய பாரதிக்கு, அந்நிலையைத் தழுவிடும் நேரமும் வந்திட, அதை இனிதே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

உசாத்துணை: ஊரன் அடிகள்

Sunday, December 07, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு

சென்ற சில வெண்பாக்களில், ஜீவன் முக்தரைப் பற்றியும், அவர் முக்தி அடைந்த பின், பரமனை முழுதும் அறிந்த நிலையில், அந்த பரமனும், ஜீவனும் வேறில்லா நிலைதனை அடைதலைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, நாம் பார்க்கப்போகிற சில பாக்களில், பரமனை எட்டிய ஜீவனின் ஆன்மா, பரமன் எப்படிப்பட்டதென அறியும் என்பது சொல்லப்படுகிறது.

பா 54:
எவ்வடை விற்பிறி தேதுமடை தாற்கின்றோ
வெவ்வின்பி னிற்பிறி தின்பின்றோ - வெவ்வறிவு
தன்னிற் பிறிதறிவு தானின்ற மோவது
தன்னைப் பிரமமெனச் சார்.
(சீர்களைப் பிரித்து)
எவ்வடைவில் பிறிது ஏதும் அடைதல் இன்றோ
எவ்வின்பினில் பிறிது இன்ப(ம்) இன்றோ - எவ்வறிவு
தன்னில் பிறிதறிவு தான் இன்றமோ அது
தன்னைப் பிரம்மம் எனச் சார்.

பொருள்:
எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.

பா 55:

எதுகாணக் கண்டார் கேதுவுமே யின்றோ
வேதுவான பின்சன்மா மின்றோ - வேதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
வானது தான்பிரம மாம்.
(சீர்களைப் பிரித்தபின்)
எதுக்காணக் கண்டார்க் ஏதுவுமே இன்றோ
எதுவானபின் சன்மா இன்றோ - எதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
ஆனது தான் பிரம்மமாம்.

பொருள்:
எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.

விளக்கம்:
எல்லோரும் ஏதோ ஒரு பொருளை அடைய, அன்றாடம் ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால், எதை அடைந்தாலும், அதனால் அடையும் நிறைவானது தற்காலிகமாகவே இருக்கின்றது. தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடைதலும், நிறைவின்மையும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறவிக்குப் பின் பிறவியிலும், இத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முற்றுப் பெறுவது எப்போது?
பிரம்மம், என்னும் அந்நிலைதனை அடைந்தால் மட்டுமே, தேடல் நிற்கிறது. அதன் பின், அடைவதற்கு வேறோன்றும் இல்லை என்னும் நிறைவினை தருகின்றது.
பொருள் மட்டும் இன்றி, இன்பத்தையும் தேடி அன்றாடம் அலைகின்றோம். ஆனால், கிட்டும் இன்பமெல்லாம் நிறைவினைத் தருவதில்லை. நிலையான பேரின்பம் மட்டுமே, அடைதலுக்கு வேறொரு இன்பம் தேவையில்லை என்கிற நிறைவினைத் தந்திட இயலுமாம்.
பொருளும், இன்பமும் மட்டுமல்ல, பலவற்றையும் கற்றும், கண்டும், கேட்டும், அறிகிறோம். புலன் வழி கற்கும் அறிவோ, பொருளறிவாகவே இருக்கிறது. பேரின்பம் தரும் பெரும் ஞானத்தினை, புலன்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவினைத் தருவதில்லை. பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது. (பார்க்க - கபீரின் கனிமொழிகள் : கற்றவர் படும் பாடு.) தான் யாரெனும் தன்னறிவு தந்திடும், உயர் ஞானத்தினை அடைந்திடுதல் மட்டுமே, பேரின்பம் தரும். அதுவே அடைய வேண்டிய எல்லா அறிவுகளிலும் உயர்வான ஞானம்.

அப்படிப்பட்ட பிரம்மத்தினைக் கண்டபின், காண்பதற்கு வேறொன்றுமில்லை. எல்லாமே ஒன்றாதக் தெரிவதால். தானும், அண்ட சராசரங்களும், அகில உலகமும், எல்லாமும், ஒன்றாகவே இருப்பதால், அந்த அனுபூதி நிலையில், வேறொன்று எனக் காண்பதற்கு இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மமாகவே மாறிய பின், பிறப்புச்சுழலும் அறுகிறது. மீண்டும் அல்லல் தரும் பிறப்பு என்னும் நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தினை அடைந்த பின், அடைவதற்கு உகந்த பொருள் என்று ஏதுமில்லை.

Friday, December 05, 2008

கண்ணன் காட்டும் கர்மயோகம்

நம்ம திவாய்யா பதிவில், கண்ணன் காட்டும் கர்ம வழி என்கிற தலைப்பில், கீதை மூன்றாம் அத்தியாய சுலோகங்களைச் சொல்லி, கர்ம யோகம் பற்றி விளக்கமா சொல்லியிருந்தார். அதன் முடிவில், அதைப்படித்ததில், நமக்குப் புரிந்ததை எழுதித் தரச் சொல்லி இருந்தார். இதோ அது:

செயலா, துறவா? செயல்களைத் துறந்து, தியானித்து,
சச்சிதானந்த சொரூபத்தினைக் காண விழைவது ஞான வழி.

செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!)
செயல்களை செய்யும்போதோ, நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக் கண்ணாடிகளால்,
இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்
ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை.

விருப்பு, வெறுப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?
செயலில் எப்படிப்பட்ட பலன் ஏற்படினும், அதை ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால்.
இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

கர்ம யோகம்:
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,
நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக் கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.

எல்லாம், இயற்கையால், முக்குணங்களின் தூண்டுதலால், நடப்பவை.
ஆகவே, தன்னால் நடந்தது என்ற ஆணவத்தினை அழித்தொழி.

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

இராஜச குணத்தால், தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி
- இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே குறிக்கோள்.

அந்த உயரிய குறிக்கோளை அடைய, ஆசையை ஒழித்து, பலன்களில் மேல் பற்று வைக்காமல்,
பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

Monday, December 01, 2008

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008

இந்த வருடம் ஜெயா டி.வி யில் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சியில் இடம் பெறப் போகும் கச்சேரிகளின் நிகழ்ச்சிப் பட்டியல்:

டிசம்பர் 1 : கதரி கோபால்நாத் - சேக்ஸ்
டிசம்பர் 2 : வி.சங்கரநாரயணன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 3 : எஸ். சௌம்யா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 4 : ரஞ்சனி & காயத்ரி - வாய்ப்பாட்டு
டிசம்பர் 5 : சஞ்சய் சுப்ரமணியம் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 6 : சுதா ரகுநாதன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 7 : அருணா சாய்ராம் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 8 : நெய்வேலி சந்தானகோபாலன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 9 : விஜய் சிவா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 10: ஓ.எஸ். அருண் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 11: நித்யஸ்ரீ மஹாதேவன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 12: கணேஷ் & குமரேஷ் - வயலின்
டிசம்பர் 13: உன்னி கிருஷ்ணன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 14: டி.எம். கிருஷ்ணா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 15: விசாகா ஹரி - வாய்ப்பாட்டு

இந்நிகழ்சிகள் நடைபெறும் அரங்கம் :
குமரராஜா முத்தைய்யா அரங்கம்,
செட்டிநாடு வித்யாசரமம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
(நிகழ்சிகள் மாலை 5 மணிக்கு துவக்கம்)
ஜெயா டி.வியில் இந்நிகழ்சிகள் டிசம்பர் 15க்கு மேல் ஒளிபரப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு : மேக்ஸிமா மீடியா - தொலைபேசி # : 23723336

LinkWithin

Related Posts with Thumbnails