"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"
என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.
4. திவ்யப் பிரபந்தம்
முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.
நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி
என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே
இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!
பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!
நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:
ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!
5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.
தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.
(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)
என்னிடம் சிரீவரமங்கலநகர் பாசுரங்களை சௌம்யா பாடிய பாடல்களில் இசைத்தட்டு (குறுவட்டு) இருக்கிறது. சென்ற முறை சென்னைக்குச் சென்ற போது வாங்கினேன். அதில் முதல் பாடல் இந்த 'நோற்ற நோன்பிலேன்'. இந்தத் தலத்தின் இறைவன் பெயர் 'தோத்தாத்ரி நாதன்'. தோத்தாரி இல்லை.
ReplyDeleteவருக குமரன்,
ReplyDelete//சிரீவரமங்கலநகர் பாசுரங்களை சௌம்யா பாடிய பாடல்களில் இசைத்தட்டு (குறுவட்டு) இருக்கிறது.//
ஆட, தனியாக இசைத்தொகுப்பே வழங்கி இருக்கிறாரா, நல்லது!
//இந்தத் தலத்தின் இறைவன் பெயர் 'தோத்தாத்ரி நாதன்'//
ஆமாம், நான் தான் பிழை செய்து விட்டேன்.
திருத்தி விடுகிறேன் குமரன்.
'தோத்தாத்ரி' எனப் பெயர்கொண்டவர்களையும் கேள்விப் பட்டிருக்கிறேன்!
எம்பார் கண்ணனுக்குத் தனியாக ஒரு கைத்தட்டல்-செளம்யா சொன்னபடி :)
ReplyDeleteபா + சுரம் = பாசுரம் = இசைப்பா என்பது மிகவும் சரி!
ஆழ்வார்கள் தங்கள் பாடல்கள் பலவற்றுக்குத் தாங்களே சில பண்களை அமைத்தார்கள்! சந்தையாகப் பாடும்படிக்கு! ஆனால் அந்த இசைக் குறிப்புகள் பின்னாளில் மறைந்து போயின! அப்புறம் வந்த நாதமுனிகள் தான் அத்தனையும் ஒன்றாகத் திரட்டி இசையோடு பாடும் படி செய்து வைத்தார்! அதற்கென்று அரையர்களையும் உருவாக்கி வைத்தார்!
//நோற்ற நோன்பிலேன்//
ReplyDeleteஇந்தப் பாடல் தான் ஜீவா, சரணாகதியின் முதல் துவக்கப் பாடல்! அதை இங்கு இசையோடு இட்டமைக்கு நன்றி!
நீங்கள் "என் வாசகத்தில்", அந்த "என்"-னைக் கோடு போட்டீர்களே! அதே போல் கோடு போடும் பாடல் இது!
"என்"னால் ஒன்றுமே முடியாது! நோன்பு, ஞானம், கர்மம் என்று பேசுகிறேனே தவிர, நோன்பில்லை, ஞானமில்லை, "என்" வாசகமும் இல்லை! "என்" செயலும் இல்லை! -இப்படி வெளிப்படையாக ஒத்துக் கொண்டு தான் பாட ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார்!
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேன் - ஆகிஞ்சன்யம் என்பார்கள்! "என்"னால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை!
ஆனாலும், உன்னை விட்டு ஒன்றும்
ஆற்றகின்றிலேன் = அனன்ய கதித்தவம் என்பார்கள்!
இப்படி
* "நோற்ற நோன்பிலேன்" என்று வானமாமலையில் ஒப்புக் கொண்டு,
* "ஆரா அமுதே, அடியேன் உடலாம்" என்று குடந்தையில் அலறி
* "மானே நோக்கு" என்று திருவல்லவாய் தலத்தில் கெஞ்சி
* "பிறந்தவாறும்" என்று அவதாரக் கண்ணனைப் பார்த்து பிறவிச் சுழல் இரகசியம் கேட்க
* இறுதியில் "அகலகில்லேன்" என்று திருவேங்கடத்தில் பரிபூர்ண சரணாகதி செய்கிறார்!
புகல் ஒன்று இல்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று இறுதிப் பாடல்!
நீங்கள் இட்ட பாடல் "என்"னில் ஆரம்பித்து, இறுதிப் பாடல் "அடியேனில்" முடியும்!
//என்னை வருக//
ReplyDeleteஇந்தப் பாட்டும் ரொம்ப நல்லா இருந்திச்சி! எந்தை வருக, ரகுநாயக வருக-ன்னு அருணகிரி துவங்குவது போலவே துவங்குது-ல்ல?
"உலகம்" என்று தொடங்கும் கம்ப விருத்தம் பாடலும் அருமை!
//அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது//
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
வாங்க கே.ஆர்.எஸ்,
ReplyDelete//அதற்கென்று அரையர்களையும் உருவாக்கி வைத்தார்!//
குறிப்பிட்டமைக்கு நன்றிகள்.
//இந்தப் பாடல் தான் ஜீவா, சரணாகதியின் முதல் துவக்கப் பாடல்! //
ReplyDeleteஆகா, அருமை!
அப்படியே நம்மாழ்வார் பாசுரங்களின் சாரத்தை வரிகளில் வடித்தமைக்கு நன்றிகள்!
>>தோத்தாத்ரி' எனப் பெயர்கொண்டவர்களையும் கேள்விப் பட்டிருக்கிறேன்!<<
ReplyDeleteThat is true! I was familiar with a name like "tOttAdri IyengAr"
I don't know what "tOtt(a)" means, But "Adri" is mountain/hill in sanskrit. So as Kumaran said tOttAdri stands for "Lord of tOttAdri". As you said VAnamAmalai stands for tOttAdri, whatever "vAnam" represents--be it sky (vAnam) or the king of that region.
Yes Sir,
ReplyDeleteAlso, வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலால், அதனாலும் - வானமாமலை - என்றொரு இடத்தில் பார்த்தேன்.