6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.
எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்
பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!
இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.
பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)
அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்
நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.
சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.
அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.
இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.
அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,
அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்
நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!
(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)
நிதானமா சொல்றதாலே தான் விளக்கங்களோட படிக்கவும், கேட்கவும் முடியுது. இதுவும் நல்லாவே இருக்கு!
ReplyDeleteவாங்க கீதாம்மா,
ReplyDeleteநல்லது.
திருப்புகழை அருமையாகப் பாடியிருக்கிறார். அவர் பாடப்பாடப் பாடலின் பொருள் தானாக புரிகிறது.
ReplyDeleteசித்தர் பாடலையும் இவ்வரிசையில் சேர்த்தது அருமை. நாகப்பாம்பு பாட்டிற்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதாவது உட்பொருளை.
வருக குமரன்,
ReplyDelete//திருப்புகழை அருமையாகப் பாடியிருக்கிறார். /
ஆம், குமரன்!
//அவர் பாடப்பாடப் பாடலின் பொருள் தானாக புரிகிறது.//
அப்படியா,நல்லது!
//நாகப்பாம்பு பாட்டிற்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதாவது உட்பொருளை.//
அப்படியா. பாம்பை, அலைபாயும் மனதாக / அலையும் ஜீவனாக உருவகப் படுத்துகிறார் என்பது என் புரிதல். இப்பாடலில் சித்தர் சொல்லும் சேதியை ஒப்பிட்டு, இன்னபிற தரவுகளையும் தந்தால், நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
சித்தர் பாடலில் மொத்தம் 20 வரிகள் உள்ளன!
பாடல் கேட்க இனிமை, பொருள் புரிந்ததால், இன்னும் சிறப்பு !
ReplyDeleteஒரு தகவல்:
தினம் ஒரு திருப்பாவை பாசுர விளக்கப்பதிவு எழுதி வருகிறேன். வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.
எ.அ.பாலா
வாங்க பாலா சார்!
ReplyDelete//தினம் ஒரு திருப்பாவை...//
ஓ, அப்படியா, வருகிறேன்.
செளம்யா திருப்புகழை ரெண்டு பீட்டில் கலக்கி இருக்காங்க!
ReplyDeleteஅருமை! அருமை! ரொம்பவே உழைத்து இருக்காங்க செளம்யா!
எனது தனிமை, கழிய அறிவு தர வேணும்-என்கிற இடத்தில் ரொம்பவும் ரசித்தேன்!
//இராகம் : ஹமீர் கல்யாணி//
திருப்புகழ்-க்கு ராகம் இடவில்லையா அருணகிரியார்? தேவாரப் பண்கள் போல் திருப்புகழ்ப் பண்ணிசை இல்லையா ஜீவா?
மணிவாசகரின் தெள்ளேணம் பாட்டும் அருமை!
ReplyDeleteகைகளைத் தட்டியே பாடிக் காட்டனும் போல இருக்கு! :)
வாங்க KRS,
ReplyDelete//ரொம்பவும் ரசித்தேன்! //
அருமை!
//திருப்புகழ்-க்கு ராகம் இடவில்லையா அருணகிரியார்? //
இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா, ஒரு திருப்புகழ் புத்தகத்தில் இராகங்களின் பெயரோடு பார்த்த ஞாபகம். அது பின்னாள் வழக்கத்தின்படி வந்ததா, அல்லது அருணகிரியாரே இட்டதா, அறியேன்.
ஆனால், நெடுநாள் தொட்டே, கச்சேரிகளில் கீர்த்தனைகள் பாடுவது என்பது வழக்கத்தில் அவ்வளவாக வருவதற்கு முன்பே (அரியக்குடி இராமனுஜ ஐய்யங்காருக்கு முன்), இராக ஆலாபனைகளெல்லாம் பாடி முடித்தபின், திருப்புகழ் பாடுவது வழக்கமாயிருந்த்திருக்கிறது.
//மணிவாசகரின் தெள்ளேணம் பாட்டும் அருமை!
ReplyDeleteகைகளைத் தட்டியே பாடிக் காட்டனும் போல இருக்கு! :)//
ஆகா!