Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Sunday, July 22, 2012

சிந்தனைக்குள் ஊற்று

எண்ணம் அல்லது சிந்தனை எப்போதுமே அறிவு சார்ந்த செயல்பாட்டாகவே கருதப்பட்டது வந்தாலும், அப்படி இல்லாமால் இருப்பதும் கண்கூடு.  எண்ணம் என்பது எல்லாவற்றிற்கும் ஆதாரம், ஆவதும் அதனாலே, அழிவதும் அதனாலே என்பாருண்டு. எண்ணம் என்பது அன்றாட இயல்பான செயல்பாடுகளை விளைவிக்கும் பொழுது, அவற்றை ஒரு பொருட்டாகக் கூட நாம் கொள்ளுவதில்லை. It's mostly taken for granted. அதே எண்ணம் சற்றே எதிர்பாராத விளைவினைத் தரும்கால், அந்த எண்ணத்திற்குப் புதியதோர் பரிணாமத்தினைத் தருகிறோம். சிந்தனைகள் "உரத்த சிந்தனை", "உயர்ந்த எண்ணம்" என்றெல்லாம் பெயர் பெறுகிறது. ஒரு சிலர் சிந்தனைவாதிகள் என்றும் சிந்தனை ஊற்று என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.

மாணிக்கவாசகர் பெருமான், "சிந்தனைக்குள் தேனாக ஊற்றெடுத்தது" என்பார்.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
அடியவர் மனதில் தேனாக ஊறி நின்றானாம் பிறப்பை அறுக்கும் "பிறவா யாக்கைப் பெருமான்".

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
தேற்றம்: கருத்து; தேற்றத் தெளிவு: கருத்து தெளிவித்திடும் அதன் சாறு.

இறுதியான முடிபாக ஒரு கருத்தானது நிறுவப்பட்டு இருக்குமேயானால், அந்த கருத்தின் சாறாகவும், அக்கருத்தாகவும் உறையும் எம்பெருமான், அக்கருத்தின் பயனான தெளிவாகவும் இருக்கிறானாம். அப்படிப்பட்ட சிந்தனை அல்லவோ உரத்த சிந்தனை!. எல்லா எண்ணக் குழப்பங்களுக்கும் இறுதியான முடிபாக, இனி ஏதும் விவாதிப்பதற்கில்லை என குன்றிடை விளக்காய் விளங்கி எல்லாக் கலக்கங்களையும் அறுத்துத் தள்ளுகிறான். அப்படிப்பட்ட நிலையில் கிடைக்கும் தெளிவானது, தீர்க்கமான தெளிவாக நிலைக்கப்பெறுகிறது. மாணிக்க வாசகர் பெருமான், மீண்டும் "சிந்தனைக்குள் ஊற்றாக" சிவபெருமானைக் குறிப்பிடுகிறார். இம்முறையும் உண்பதற்கு உகந்ததான ஒன்றுடன் ஒப்பிடுகிறார். அதுவும் அரிதானதும் மிகவும் விரும்பத்தக்கதுமான அமுதுடன் ஒப்பிடுகிறார். மனிதப்பிறவியின் அடிப்படைத் தேவையான உணவோடு இயைந்து அதுவாகவே சிந்தனைக்குள் ஊறிட, வேறென்ன வேறென்ன வேண்டும்? சிவனவன் சிந்தனையுள் நின்றதனால், அவனருளாலே, அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ சிவபுராணம் சொன்னார் மாணிக்க வாசகர்.

சிந்தனைக்குள் வற்றா ஊற்றாக, அமுத சுரபியாகத் திகழுமுன், தன் சிந்தையுட் புகுந்ததையும், பூங்கழல் காட்டியதையும் சொல்கையில்:
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே!
           ....

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!

இருளெனக் கிடந்த மனத்தில், ஒளி பொருந்திய விளக்காய் எழுந்தமையால், செழுஞ்சுடர் மூர்த்தியாய் விளங்கினான் பூசனைக்கு உகந்த ஈசன். விளக்கானது இன்னொருவரின் ஒளியினைப் பிரதிபலிக்காமல், தானக ஒளி தரும் கருவி.  தானிருந்த இடத்தின் இருளை அகற்றி, ஒளியைப் பெருக்கி, எல்லா இடத்திலும் வியாபித்து என்றென்றும் இருக்கிறது.

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தானாகச் சிந்தையில் வந்து புகுந்த ஈசன், அத்தோடு நில்லாமல், தாயைக் காட்டிலும் மிகுதியான பரிவோடு உள்ளொளியினைப் பெருக்கினானாம். அதனால் விளைந்த குறைவிலா ஆனந்தத்தினை என்னென்று சொல்வது! கைவிளக்கொன்றினால், இருள் அகல்வது இயற்கையன்றோ!

அல்லது, இயற்கையான நிகழ்வுகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாததனால், அவை அன்னியப்பட்டுப் போனதோ!?

வாட்டம் இல்லா மாணிக்க வாசக! நின் வாசகத்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் எனில் இங்கு நானடைதல் வியப்பன்றே!
- இராமலிங்க வள்ளலார்.

Wednesday, January 05, 2011

சுதந்திரமும் சிதம்பரமும்

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

இவை எல்லாம் பார்வையின் வீச்சின் பழுதுகள் தானோ.

"குலோத்துங்கா, சோழநாடு முன்னூற்று முப்பது காத தூரம் தானே பரவியுள்ளது. உனக்குப்பின் யார் திரிபுவனச் சக்ரவர்த்தி என பட்டப்பெயர் தந்தது?. பட்டத்தினாலோ, விருதினாலோ நாடு விரிந்துவிடாது." என்று கம்பன் கேட்டதுபோல, நமது பார்வையின் வீச்சு முன்னூற்று முப்பது காத தூரம் வரைதான் செல்கிறது. இருப்பினும், நமக்கு நாம் தான் புவியாளும் மன்னன் என்ற எண்ணம். நான் சுதந்திரமாய் நினைப்பதைச் செய்வேன். என் விருப்பங்களுக்கு குறுக்கே வரும் யாரையும் துச்சமெனக் கொள்வேன். எப்படியும் என் எண்ணத்தை நிறைவேற்றி விடுவேன். இப்படிப்பட்ட நினைப்புகளில் நாம் நம்மைச் சக்ரவர்த்தியாகத்தான் எண்ணிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் நினைப்பதெல்லாம் நிகழ்த்திவிடும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் நாம் நினைப்பது போலில்லை. அது வன் நினைப்பது போல்.

இராமலிங்க வள்ளலார் பெருமான் இறைவனிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

"என்னிடம் உண்மையில் ஒரு சுதந்திரமும் இல்லை. உன்னால் நிகழுவதே எல்லாம். என் மூலமாய் நடப்பது எல்லாமும் உன்னால். ஓரளவிற்கு நீ தயவு செய்வது போல், நின் சகல சுதந்திரத்தையும் என்பால் காட்டி தயை செய்." என்கிறார்.

இதன் மூலம், உண்மையான சுதந்திரம் பெற்றவன் இறைவன் மட்டுமே என்பது தெளிவாகிறது.

தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் இதே கருத்தை
"தில்லை சிதம்பரமே" என்று பாடுவார் காபிநாராயணி இராகப் பாடலில்:


எடுப்பு
தில்லை சிதம்பரமே - அல்லாமல்
வேறில்லை சுதந்திரமே!

தொடுப்பு
சொல்லுக் கெளிது நெஞ்சே
சொல்லுவாய் - சிவகாம வல்லிக்கு அன்புள்ள
சபைவாணன் வீற்றிருக்கும்

முடிப்பு
காசினி தன்னில் கைலாசன் என்றொரு
நடராஜன் இருந்து பாபநாசம் செய்வதிதுவே
வாசம் செய்வோருக்கு மோசம் வராது - எம
பாசம் வராது - மனக்கேசம் வராது!

~~~~~~
தொடர்ந்து வள்ளலார் பெருமான், தற்சுதந்திரமின்மை என்கிற பகுதியில் சொல்வதைப் பார்த்தோமேயானால்,


"நான் என்று எதைச் சொல்வேன் அது நீயே ஆனாய்
ஞானம் சேர் ஆன்மாணு நானோ நீ தானே
ஊன் என்னும் உடல் எனதோ அதுவுமுனதாமே
உடல்பெற்ற உயிர் உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான் இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்த சுதந்தரம் உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக் கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே."

நான் என்பது நீ அல்லவோ! என்று வள்ளலார் என்றும் தன்னை உணர்ந்த ஞானத்தில் சொல்கிறார்: "தனித்த சுதந்திரம் தரும் தயவெல்லாம் அவன்பால் இருக்கிறது" என்றும், "அதனாலே, அச்சுதந்திரத்தை எனக்களித்து நானாய் விளங்கத் தயவு செய்வாய்" எனும் அவரது வேண்டுதலும் தெளிவாகிறது.

அவன் எது வேண்டத்தக்கது என்பதை அறிந்தவனாய் இருக்கிறான்.
அதை முழுதுமாய் தருபவனாயும் இருக்கிறான்.
அவன் அருள் செய்வதையே நான் வேண்டினேன்.
அவன் அருள் செய்வதல்லாததை நான் வேண்டிலேன். சுதந்திரமாய் வேண்டிலேன்.

“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினன் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே”
- திருவாசகம், எட்டாம் திருமுறை.

என்றும் மாணிக்கவாசகர் வேண்டுவதுபோல், தனக்குவமை இலாதன் அருள் செய்ய, அதுவே நம் சுதந்திரமாய் இருக்கவே வேண்டுதல்கள்.