Wednesday, January 05, 2011

சுதந்திரமும் சிதம்பரமும்

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

இவை எல்லாம் பார்வையின் வீச்சின் பழுதுகள் தானோ.

"குலோத்துங்கா, சோழநாடு முன்னூற்று முப்பது காத தூரம் தானே பரவியுள்ளது. உனக்குப்பின் யார் திரிபுவனச் சக்ரவர்த்தி என பட்டப்பெயர் தந்தது?. பட்டத்தினாலோ, விருதினாலோ நாடு விரிந்துவிடாது." என்று கம்பன் கேட்டதுபோல, நமது பார்வையின் வீச்சு முன்னூற்று முப்பது காத தூரம் வரைதான் செல்கிறது. இருப்பினும், நமக்கு நாம் தான் புவியாளும் மன்னன் என்ற எண்ணம். நான் சுதந்திரமாய் நினைப்பதைச் செய்வேன். என் விருப்பங்களுக்கு குறுக்கே வரும் யாரையும் துச்சமெனக் கொள்வேன். எப்படியும் என் எண்ணத்தை நிறைவேற்றி விடுவேன். இப்படிப்பட்ட நினைப்புகளில் நாம் நம்மைச் சக்ரவர்த்தியாகத்தான் எண்ணிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் நினைப்பதெல்லாம் நிகழ்த்திவிடும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் நாம் நினைப்பது போலில்லை. அது வன் நினைப்பது போல்.

இராமலிங்க வள்ளலார் பெருமான் இறைவனிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

"என்னிடம் உண்மையில் ஒரு சுதந்திரமும் இல்லை. உன்னால் நிகழுவதே எல்லாம். என் மூலமாய் நடப்பது எல்லாமும் உன்னால். ஓரளவிற்கு நீ தயவு செய்வது போல், நின் சகல சுதந்திரத்தையும் என்பால் காட்டி தயை செய்." என்கிறார்.

இதன் மூலம், உண்மையான சுதந்திரம் பெற்றவன் இறைவன் மட்டுமே என்பது தெளிவாகிறது.

தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் இதே கருத்தை
"தில்லை சிதம்பரமே" என்று பாடுவார் காபிநாராயணி இராகப் பாடலில்:


எடுப்பு
தில்லை சிதம்பரமே - அல்லாமல்
வேறில்லை சுதந்திரமே!

தொடுப்பு
சொல்லுக் கெளிது நெஞ்சே
சொல்லுவாய் - சிவகாம வல்லிக்கு அன்புள்ள
சபைவாணன் வீற்றிருக்கும்

முடிப்பு
காசினி தன்னில் கைலாசன் என்றொரு
நடராஜன் இருந்து பாபநாசம் செய்வதிதுவே
வாசம் செய்வோருக்கு மோசம் வராது - எம
பாசம் வராது - மனக்கேசம் வராது!

~~~~~~
தொடர்ந்து வள்ளலார் பெருமான், தற்சுதந்திரமின்மை என்கிற பகுதியில் சொல்வதைப் பார்த்தோமேயானால்,


"நான் என்று எதைச் சொல்வேன் அது நீயே ஆனாய்
ஞானம் சேர் ஆன்மாணு நானோ நீ தானே
ஊன் என்னும் உடல் எனதோ அதுவுமுனதாமே
உடல்பெற்ற உயிர் உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான் இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்த சுதந்தரம் உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக் கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே."

நான் என்பது நீ அல்லவோ! என்று வள்ளலார் என்றும் தன்னை உணர்ந்த ஞானத்தில் சொல்கிறார்: "தனித்த சுதந்திரம் தரும் தயவெல்லாம் அவன்பால் இருக்கிறது" என்றும், "அதனாலே, அச்சுதந்திரத்தை எனக்களித்து நானாய் விளங்கத் தயவு செய்வாய்" எனும் அவரது வேண்டுதலும் தெளிவாகிறது.

அவன் எது வேண்டத்தக்கது என்பதை அறிந்தவனாய் இருக்கிறான்.
அதை முழுதுமாய் தருபவனாயும் இருக்கிறான்.
அவன் அருள் செய்வதையே நான் வேண்டினேன்.
அவன் அருள் செய்வதல்லாததை நான் வேண்டிலேன். சுதந்திரமாய் வேண்டிலேன்.

“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினன் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே”
- திருவாசகம், எட்டாம் திருமுறை.

என்றும் மாணிக்கவாசகர் வேண்டுவதுபோல், தனக்குவமை இலாதன் அருள் செய்ய, அதுவே நம் சுதந்திரமாய் இருக்கவே வேண்டுதல்கள்.

5 comments:

 1. மனமாகிய ஆகாசத்தில் நடனமிடும் நடராஜனைப் படம் பிடித்துக்காட்டிவிட்டீர்கள், அருமையான எழுத்து. உங்கள் உணர்வுகள் முழுமையாகப் பதிவாகி உள்ளதையும் உணரமுடிகிறது.

  ReplyDelete
 2. வாங்க கீதாம்மா, தங்களுக்கு நடனமிடும் நடராஜர் இவ்விடுகையில் காணக்கிட்டியது பற்றி மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 3. மிக நல்ல பதிவு, பாடலை பின்னர் கேட்டுக் கொள்கிறேன் [வேலை செய்யும் இடத்தில் கேட்க முடியாது :)))]

  //வேண்டத்தக்கது அறிவோய் நீ ....வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே என்றும் வள்ளலார் வேண்டுவதுபோல்...”
  இது மணிவாசகரின் பாடலல்லவோ ?

  ReplyDelete
 4. வாங்க கபீரன்பன்,
  இதுபோல மணிவாசகர் பாடலும் ஒன்று இருப்பதாக நினைவு. தேடிப்பார்க்கிறேன்.
  நன்றிகள்!

  ReplyDelete
 5. கபீரன்பன், நீங்கள் சொன்னதுபோல அப்பாடல் மணிவாசகரின் பாடல்தான். ஓரிறு குறிப்புகள் வள்ளலாரைச் சுட்டினாலும், அவற்றை உறுதி செய்ய இயலவில்லை. ஆகவே பதிவிலும் மாற்றி விடுகிறேன், நன்றிகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails