"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:- ஆத்திச்சூடி, ஔவையார்
தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)
தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்
(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,
பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்
(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,
திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்
(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,
திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்
திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.
தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே
(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே
(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா
(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.
பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.
~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.
அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)
இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை
ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!
மாரிமுத்தா பிள்ளை?
ReplyDeleteஇதுவரை கேள்விப்பட்டது இல்லையே ஜீவா! ஆனால், இங்கே கொடுத்திருக்கிற சில வரிகளிலேயே ரத்தினச் சுருக்கமாக வெளிப்பட்ட பாடம் மெய் சிலிர்க்க வைக்கிறதே. இன்னமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலும் பிறந்திருக்கிறது.
வாங்க எஸ்.கே சார்,
ReplyDeleteமாரிமுத்தாப்பிள்ளை தமிழிசை மூவரில் ஒருவர். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் காலத்துக்கு முன்னாலேயே நமது சங்கீதத்தில் ஏராளமான பாடல்களைப் பாடிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
இங்கே குறிப்பிட்ட பாடல் சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடப்பட, முன்பொரு இடுகையில் குறிப்பிட்டிருந்தேன்.
நன்றிகள்.
//அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
ReplyDeleteஎங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.//
அந்த ஏகம்தான் ஸத்யம் ( என்றும் அழியாதது )
ஸுந்தரம் ( எல்லா மங்களத்தையும் தர வல்லது )
ஆன்மீகம் ( ஆன்மா என்ன என்பதை அறிய எமை இழுத்துச்செல்வது)
ஆனால் அதை அதாவது அந்த ஏகம் ஸத்யம் என்பதை
ஞானிகள் பலவிதமாகக் கூறுவர். ( ஏகம் ஸத்யம். விப்ராஹ பகுதா வதந்தி.
சுப்பு ரத்தினம்.
வருக
http://vazhvuneri.blogspot.com
ஈடு இணையில்லாத இதயக் கமல தரினப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete