Saturday, April 30, 2005

எதிர்பார்ப்புகள் - கவிதை

1.
இரவெல்லாம் விழிமூடி விழிப்பில்லை
பகலெல்லாம் விழிதிறந்தும் விழிப்பில்லை
இடையிடையே விழித்துக்கோண்டேனே
எதிர்பார்ப்பை விலக்கியபோது.
2.
மணிமணி எண்ணம்
மணிரதம் நடை
மான் துள்ளல்
கூடவே கரையான் எதிர்பார்ப்்புகள்.
3.
உருண்டோடிக்கொண்டு இருக்கையில்
நேற்றை அசைபோடுகையில்
நாளையை எதிர்பார்க்கையில்
இப்பொழுதை தொலைக்கிறேனே.

Friday, April 29, 2005

குடும்பப் பெயர்

குடும்பப் பெயர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நமது மாநிலத்திலேதான் குடும்பப் பெயர்(Family Name) அல்லது சர் நேம் (Sur Name) அல்லது Last Name கிடையாதே. வெறும் இனிஷியல்தான்.
தந்தையின் பெயரை (இப்போது தாயின் பெயரோ) இனிஷியலாகக் கொள்ளும் பழக்கம் நம்மிடம் உள்ளது. நம்மூரை விட்டு வெளியே வந்தாலோ, இந்த இனிஷியலை விரிவாக்கி அதையே குடும்பப் பெயராக கொள்ளத்தொடங்குகிறோம்.
வேறுவழியில்லாமல்.

இத்தனைக்கும் இந்த இனிஷியல் பழக்கம் தொன்று தொட்டு ஏற்பட்டதல்ல. அந்தக்காலத்தில் அரசர்கள் வம்சப்பெயர்களியும், குடிமக்கள் ஊர்ப்பெயர்களையும் குடும்பப்பெயர்களாக கொண்டிருந்தனர். பின்னர் மக்கள் தொகை பல்கிப்பெருக, ஊர்ப்பெயர்கள் போதாதென்பதால், ஜாதிப்பெயர்கள் குடும்பப்பெயர்களாக வந்து ஒட்டிக் கொண்டன. இதன் வழியாக தேவையில்லாத வேறுபாடுகள் நம்முள்ளே விதைக்கப்பட்டும் விட்டது. பெயரளவில் ஜாதிப்பெயர்களை விட்டுவிட்டாலும், மனதளவில் வேறுபாடுகள் களையறுக்கப் படவில்லை என்பது வேறு விஷயம். ஊர்ப்பெயர்களும், வம்சப்பெயர்களும், ஜாதிப்பெயர்களும் வழக்கொழிந்து போக, நமக்கு மீதம் விட்டது இனிஷியல் மட்டும் தான்.

இதில் நல்லது ஏதேனும் உண்டா என்றால் இருக்கத்தான் செய்கிறது!
* வெளிநாடுகளில் மரியாதையாக ஒருவரை அழைக்க, அவரது குடும்பப்பெயர் கொண்டே அழைக்கப்படுகிறார். அப்போது நம்மை நம் பெற்றோர் பெயர் கொண்டு அழைக்கும்போது, என் பெருமையெல்லாம் என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தை/தாய்க்கேப் போய்ச் சேரட்டும் எனப் பெருமிதம் கொள்ளலாம்.
* நாங்கள் தமிழர், எங்களுக்கு தனித்துவம்தான் முக்கியம் என்று நீட்டி முழக்கலாம்!;-)

இதனால் சங்கடங்களும் வருகின்றன:
* குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பப்பெயர் கொண்டு அழைக்க முடிவதில்லை.
* வெளிநாடுகளில் குடும்பப் பெயர் கேட்க்கப்படும் நேரத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் ஒவ்வொரு பெயர் கொள்வதால், மற்றவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது.
* இதனை விளக்க மற்றவர்களுக்கு, நாங்கள் குடும்பப் பெயர் கொள்ளும் பழக்கம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டது என மற்றவர்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.
* உலகத்தோடு ஒட்டி ஒழுகாதார் பல கற்றும் அறிவிலாதர் என்ற சொல் ஏற்படுகிறது.
* பெயரைக்கொண்டு ஜீனலாஜி போன்ற விஷயங்கள் செய்ய இயலாமல் போகிறது.

சரி, மாற்றம் வர வேண்டும் என்றால் என்னவாக மாற்றலாம்?
மீண்டும் வேறுபாடுகள் வராமல், அவரவருக்கு பிடித்த தம் மூதாதயர் பெயரையோ, ஏன் தங்கள் தாய் தந்தை பெயரையோ, வேறு எந்த பிடித்த பெயரையோ கொள்ளலாம். தேர்வு தம் சந்ததி அனைவருக்கும் பொருந்தும் பெயராக இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் மாற்றி விடுவார்கள்!

மேலும் 'Middle Name' ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். குடும்பப் பெயர் பெற்றோர் பெயாராக இல்லாத பட்சத்தில், இந்த 'நடுப்பெயரை' பெற்றோரில் ஒருவர் பெயராகக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட பெயர்களால் ஏற்படும் குழப்பங்கள் குறையலாம். வலைப்பதிவுகளில் பதிவாளர்கள் பெயரில் பின்னூட்டங்களில் வராத குழப்பமா என்கிறீர்களா?

நமது மக்கள்தொகை விரிவாகும் வேகத்தில், சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' வில் வருவதுபோல், அவரவருக்கு அரசாங்கம் ஒரு அடையாள எண்ணும் இரண்டு பைட் (யுனிகோட் என்றால் மூன்று பைட் வேண்டும்) கொண்ட பெயரும் தரும்வரை தான் இந்த பெயருக்கு 'மவுஸ்'. அதற்குள் செய்ய வேண்டியதை செய்து கொள்வோம் ;-)

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Tuesday, April 26, 2005

வாழ்க்கையின் குறிக்கோள்(கள்) என்ன?

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு குறிக்கோளோடு நாம் செயல்படுகிறோம். இளம் பருவத்தில் கல்வி கற்பதும் (எனக்கு விளையாடுவதுதான் என்கிறீர்களா, எனக்கும் அப்படித்தான்), பின்னர் வேலை கிடைக்க முயல்வதும், பின்னர் பணம் ஈட்டுவதும், ஈட்டிய பணத்தை சேமிப்பது/பெருக்குவதும், மண வாழ்க்கையில் இல்லறம் நடத்துவதும், முதுமைப்பருவத்தில் தம் சந்ததியருக்கு வழிநடத்துதலும் பொதுவான குறிக்கோள்களாக நம் சமூகத்தில் இருந்்து வருகின்றன.

மேலே சொன்னது, எழுதுவதற்கும், படிப்பதற்கும் எளிதாக இருந்தாலும், இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் தான் எத்தனை அல்லல்கள், எத்தனை தடுமாற்றங்கள்? நாம் நினைத்த காரியம் நடக்காவிட்டால், எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வி நம்முள் பெரிதாக எழுகிறது. நம் மொத்த வாழ்க்கையும் எதோ ஒரு சிறு நிகழ்வினால் நிர்ணயக்கப்பட்டுள்ளதுபோல். நம் தோல்விகளும், ஏமாற்றங்களும் நம்மை வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றன.

வேடிக்கை என்னவென்றால், தேல்விகளும் ஏமாற்றங்களும் ஏற்்படும்போதுதான் இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். இயற்கையாகவே நாம் ஏமாற்றங்களை தவிர்த்து வாழ முடியாதா? அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும் நம் மனதை பாதிக்காத வகையில் நம் மனதை பக்குவப்படுத்திக்கொள்ள முடியாதா?

இந்த கேள்விக்கும் இன்ன பிறவற்றிற்கும் என் சிற்றறிவிற்கு எட்டியவரை விடைபெயர முயல்கிறேன்.

முடியும். நம் மொத்த வாழ்விற்கும் குறிக்கோள் இதுவென்று ஒன்றினைக் கொண்டோமாயானால், அது முடியும். எந்த சூழ்நிலையிலும், எந்த தடுமாற்றம் ஏற்பட்டாலும் , என் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினால் போதும், தெளிவு பிறந்துவிடும்.

என்னது, நம் மொத்த வாழ்வுக்கும் ஒரு பெரிய குறிக்கோள் உண்டா?

ஆம். தமிழில் இதனை அழகாக ' அறம் பொருள் இன்பம் வீடு' என்பார்கள். பகவத் கீதையும்் இதையே, 'தர்மம் அர்தம் காமம் மோக்க்ஷம்' என்கிறது.

ஏதோ பெரிதாக சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி சுலபமாக இருக்கிறதே?

உலகத்தின் மிக உன்னதமான கருத்துக்கள் எல்லாமே சுலபமானதே. நாம் தான் அவற்றின் மதிப்புத் தெரியாமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளோம்.
பொருள் மற்றும் இன்பம் பெறுவது நம் மானிடப்பிறப்பின் இயல்பான குணமே. புத்த மதம் சொல்வதைப்போல் அவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. இந்து மதத்தின் உயரிய வழிமுறை அறம் வழியே பொருள் மற்றும் இன்பம் ஈட்டுவதே. அதுவே வாழ்க்கையின் முக்கிய நெறிமுறை.

அறம் என்றால் என்ன?

முதுபெரும் இந்தியாவில் அறம் என்னவென்று எடுத்துரைக்கும் நூல்களை பட்டியலிடத்தொடங்கினால் எண்ணி மாளாது. நாம் அனைவரும் கொஞ்சமாவது படித்திருப்போம். ஆனால் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே விட்டு விட்டோம். அவற்றைக் கூட்டுச் சுரைக்காயாக பயன்படுத்திக்கொள்ளும் கலை நம்மிடமே உள்ளது. அறம் என்றால் என்னவென்று திருவள்ளுவர் 380 குறள்களில் சொல்லியிருக்கிறார். கசடற கற்போம், கற்ற வழி நிற்போம்.

வாழ்க்கையின் இறுதியான குறிக்கோள் வீடுபேறு அடைதல். எல்லாவற்றையும் துறந்த துறவியால் மட்டும் தான் வீடுபேறு (மோக்க்ஷம்்) அடைய முடியும் என்பதல்ல. அறம் வழி நின்றவர் அனவரும் அடையலாம். மேலும் மோக்க்ஷம் என்பது உண்மையில் ஒரு இடமல்ல, அது ஒரு நிலை. குழந்தைப்பருவம் போல ஒரு நிலை. என்ன, ஒரே ஒரு வேறுபாடு. மோக்க்ஷம் என்னும் நிலையை அடைந்தவர் குழந்தை அல்லது மற்ற நிலைகளை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியதில்லை. இந்த கடைசி நிலையைப் பற்றி அறிந்து கொள்ளவோ, யொசித்துக்கொண்டு இருக்கவோ வேண்டியதில்லை. நம் செயலிகளில் தினம் தினம் அறம் வழி நடந்து நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வதால், தானாகவே அந்நிலை நமக்குத் தெளிவு பெறும். தன்னை அறிதல் வேண்டும் என்ற உந்துதல் தானாகவே ஏற்படும்.

If Winter comes, Can Spring be far behind?

Sunday, April 24, 2005

தாயே என் சரஸ்வதி

ஜேசுதாஸ் பாடி முதல் முறை கேட்ட பாடல்.
வள் அருள் வேண்டி நின்று பாடிடத் தோணுது.

தாயே என் சரஸ்வதி - கலை
ஞானம் அருள்வாயே...
(தாயே...)
மாயே என் கலைவாணி - சேய்
என்பால் கனிவாய்...
(தாயே...)
தாயே என் குறை தீர - நாவில்
நீ அமர வேண்டும் - நாவால்
உன் புகழ் பாடி - பாமாலை
சூட்ட வேண்டும்...
(தாயே...)
ஆகமங்கள் கூறுகின்ற ஆத்ம
சுகம் நான் பெறவே...
இராக தாள சந்தி சேர்த்து
தூய கானம் பாடிடவே...
யேக நாத ரூபிணி...
நாசிகாபூஷிணி...
தாகம் தீர்ப்பாய் கலைமகளே
வரம் யாவும் தருவாயே...
(தாயே...)

Friday, April 22, 2005

அட்லாண்டாவில் சந்திரமுகி

ரஜினி படம் என்றாலே வெகு ஜோர்தான். படத்தின் ஜோர் பாதி என்றால், படம் பார்ப்பவர்களை கவனிப்பது மீதி ஜோர். ரஜினி படத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்!. படம் பார்ப்பவர்கள் சினிமா என்பதை மறந்து, ஒரு நேரடி நிகழ்சியாக எண்ணிக்கொள்ள செய்கிறது படம். சென்ற முறை பாபா படம் அட்லாண்டாவில் திரையிடப்பட்டதும், இந்த மாயத்திரையில் நேரடி நிகழ்சியே நடந்தேறியது.
பாபா படத்தில் சொதப்பல்கள் பல இருந்தாலும், ரசிகர்களின் விசில்களுக்கு குறைவிருந்ததில்லை.

இந்தமுறை ரஜினி படத்திற்கு அட்லாண்டா ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் ஆவலாகவே இருந்தது.
இன்னும் இரண்டே நிமிடங்கள் இருக்கையில் திரையரங்கை அடைந்தோம். உடனடியாக நுழைவுச்சீட்டு விற்கும் இடத்தை அடைந்தோம்.
அதிலொன்றும் அதிக சிரமம் இல்லை. நம்மூர் ஆட்களின் வரிசை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டியதுதான். கண்டதும், மூன்று சீட்டுகளை பெற்றுக்கொண்டோம் - முப்பது டாலர்களுக்கு.

நுழைவிற்கு மட்டும்தான் சீட்டாம். அமர்வதற்கு அல்லவாம்!. கிடைத்த இடத்தை பிடித்துக்கோள்ள வேண்டியதுதானாம். முன்னமே வந்தவர்கள்
கைக்குட்டடையெல்லாம் பத்தாதென்று கம்பளி விரித்தார்களோ என்னவோ மொத்த சீட்டையும் பிடித்து விட்டார்கள்.கம்பளி போதாக்குறைக்கு,
கையில் செல்பேசி வேறு, நமக்கு பாவ்லா காட்ட. எங்களுக்கு மிஞ்சியது முதல் வரிசை சீட்தான். ஒரமாக இருந்த ஒரு முதல் வரிசை இருக்கையை
பிடித்துகொண்டேன். ஆரம்பக் காட்சிகள் 3D படம் போல இருந்தாலும் பின்னர் பழகி விட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு காட்சி என அறிவித்து இருந்ததால், படம் 2 மணிநேரப்படமோ என்ற சந்தேகம் வேறு. இடைவேளை விடமாட்டார்கள் என்று
எங்கேயோ படித்ததாக ஞாபகம். வந்திருந்த கூட்டத்தப்பார்த்து ஒரு நோட்டம் விட்டேன். பலதரவகைப்பட்டவரும் இருந்தனர். நம்மூர் கொட்டகையில்
தலைவருக்கு விசில் அடித்துக்கொண்டு இருந்தவர் முதல், தமிழை இதற்குமுன் கேள்விப்படாதவர் வரை சகலவிதமானவரும் 'உள்ளேன் அய்யா'
சொல்லியவாறு. தீவிர ரஜினி ரசிகர்களின் பக்தி தெரிந்த விஷயமே. புதியவர்களின் ஈடுபாட்டைப்பார்ப்பதிலே ஆவல்.

குடும்ப சகிதமாக ஆஜராகியிருந்த குடும்பத்தலைவர்கள் ஒருபுறம். அவர்களின் 'என் குடும்பத்தை நான் ரஜினி படத்திற்கு அழைத்து வந்துள்ளேன்'
என்ற பெருமிதம் அவர்களின் பார்வையிலேயே தெரியும். கையில் கைகுழந்தையுடன் கணவன்மார்கள்/மனைவிமார்கள் ஒருபுறம். படத்தையும்
விட மனசில்லாமல், குழந்தையையும் விட மனசில்லாமல், இரண்டிலும் ஒரு கண் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு இருப்பார்கள். பெண்கள்
சங்கம்/சங்கீத சங்கம் என்று சங்க தோழியர் கூட்டம் இன்னொரு புறம். கேட்டால், 'அவருக்கு தமிழ் படமெல்லாம் பிடிக்காது' என்று பெருமையாக
சொல்லிக்கொள்வார்கள். நமக்குத்தான் தெரியும், கணவன்மார்கள் வீட்டில் இருந்தால் படம் பார்க்க வர மறுக்கும் சிறுவர்களுக்கு 'பேபி சிட்டிங்' மிச்சம் என்று!.

சில நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிட்டது. சண்டைக்காட்சியுடன் படம் துவங்குகிறது. தலைவர் ரஜினி ,அவரின் ஷூ வழியாக திரையில் நுழைகிறார். பார்ப்பவர்கள் முகமெங்கும் தவறாமல் புன்னகை!. பின்னால் விசில் பறக்கிறது.
தமிழ்நாடுபோல், திரைக்கருகே வந்து கண்ணில் ஒற்றிக்கொள்ள யாரும் இல்லை!.

படமெங்கும் ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த மனநல மருத்துவர் என்று சொல்லப்படும்போது, எல்லோரும் உரத்த குரலில் 'ஓ' போடுகிறார்கள்!.
இப்படியாக படம் களை கட்ட, வேட்டைக்காரன் அரண்மணைக்கு படத்திலிருக்கும் மொத்த பாத்திரங்களும் (கே.ஆர்.விஜயா தவிர) நுழைகிறார்கள்.
இத்தனை பேரும் ஒரே இடத்தில் இருப்பதலோ என்னவோ ரஜினிக்கு அவ்வளவாக சோபிக்க வாய்ப்பில்லை. கிடைத்த நேரத்தில், வடிவேலுவுடன் நகைச்சுவை. அல்லது காமடி என்ற பெயரால் சகிக்க முடியாத கூத்து. ரஜினிக்கு ஆனாலும் இது தேவையில்லாததுதான்.

இது நடுவில் ரஜினி அரண்மணையைவிட்டு வெளியூருக்கு போய் விடுகிறார். நடுவில் ஜோதிகா, சந்திரமுகியின் ஆவி இருக்கும் அறைக்கதவை திறந்து அதை வெளியே விட்டு விடுகிறாராம். அதற்காக எதற்கு ரஜினியை வெளியூருக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரியவில்லை. திரும்பி வரும் ரஜினி அரண்மணையில் நடக்கும் மர்மங்களுக்கான காரணங்களை ஆராய்கிறார். பிரபு கொல்லப்பட இருக்கும் தருணங்களில் அவரை காப்பாற்றுகிறார்!. (விஷம் மற்றும் மீன் தொட்டி விழுந்து கொலை - அதரப்பழசு. சந்திரமுகியின் ஆவியும், இயக்குனரும்(!) சமகாலத்தவர்களோ?). 'கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, சூப்பர் ஸ்டாரை பாரப்பா', என்று பின்னால் இருந்து உரத்த குரல் வருகிறது!.

மாளவிகா, டேன்ஸ் மாஸ்டர், மந்திரவாதி, அடியாள் போன்ற பாத்திரங்கள் ஜவ்வு போன்று கதையை இழுக்க உதவுகின்றன. வேறு விஷேசமில்லை. அங்கங்கே சில இடங்களில் மட்டும் நகைச்சுவை ரசிக்கும்படியாகவும் உள்ளது. 'ஜோதிகா பாவம், என்ன கொடுமை இது' என்று சீரியசாக பிரபு சொல்லும் இடத்தில் எல்லோரும் சிரிக்கிறார்கள். (இயக்குனரையும் பார்த்து). இளம் கல்ல்லூரிப் பெண்கள் தாங்கள் வந்திருப்பதைக் காட்டிக்கொள்ள, நடுவே சத்தமாக subtitle-ஐ ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்!, அவர்களை முறைப்பவர்களையும் பொருட்பருத்தாமல்.

சந்திரமுகி ஆவி ரகசியத்தைக் கண்டு பிடித்த பின்னால் ஜோதிகாவின் உடலின் சந்திரமுகியின் ஆவியை வெளியேற்ற ரஜினி திட்டமிடுகிறார். பைத்தியம் போல தலையை கலைத்துக்கொண்டு ஜோதிகா பரதநாட்டியம் ஆடுகிறார். அந்த சமயம் மூன்று சதுர துளைகள் வழியே, ரஜினி உட்பட மூன்று பேரும் பரதநாட்டியத்தைப்பார்ப்பது Very Funny. நல்ல வேளை, பரதநாட்டியம் முழுதுமாக கலைந்த தலையுடன் இல்லை. அதுவரை, இயக்குனரை பாராட்ட வேண்டும். ஜோதிகா என்னவோ பெரிதாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். பிதாமகனில் லைலாவுக்கு முன்னால் இது ஒன்றுமில்ல்லை.

விதியை தன் மதியால் வென்றார் ரஜினி என்பதே முடிவு. முடிவு எனக்கு ஒகே. அதிரடி ரசிகர்களுக்கு? அதிரடி படங்களுக்கு நடுவே இது வித்யாசமாக இருக்கும். இந்த படம் வெற்றியடைந்து, அதன் மூலமாவது, இப்போது தொடர்ந்து வரும் சகிக்க முடியாத 'தனிநபர் சாடுதல்' முடிவுக்கு வந்தால் நல்லதே.

Saturday, April 16, 2005

பேட்ரிக் - நம் சங்கீதம் கற்ற ஜூலு பாடகர்

பி.பி.சி - யின் பழைய செய்திகளில் ஒன்று தேடலில் அகப்பட்டது.
செய்தி வியப்பானதாக இருந்தது.

பேட்ரிக் என்பவர் தென் ஆப்ரிக்காவில் நமது சங்கீதத்தைக்கேட்டு அதன்பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு, சங்கீதம் கற்க, சென்னைக்கே வந்து விட்டார். சினிமாவில் சேர்வதற்காக கிராமத்திலிருத்து சென்னைக்கு வந்தவர்கள் கதையயைக் கேட்டிருக்கிறோம். ஆப்ரிக்காவில் இருந்து சென்னக்கு வந்தவரின் கதையைக் கேட்பது எனக்கு இதுவே முதல்முறை.

அப்புறம் பெரிய சிரமங்களுக்கு இடையே, ஒருவழியாக கற்றுக்கொண்டு தன் நாடு திரும்பினார்.

அவர் சங்கீதம் கற்றுக்கொள்ள பட்ட இடர்களும், அவற்றையும் தாண்டி எப்படி வெற்றி கொண்டார் என்பதும் சங்கீதம் கர்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஊக்கப்பாடம்.

விவரமாய் பேட்ரிக்கின் பற்றிப்படிக்க சுட்டுங்கள் பி.பி.சி தளத்தை.
சுட்டி இங்கே.

Sunday, April 10, 2005

மகரந்த மழை

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கிறோம். காய்ந்து, மொட்டையாய்போன மரங்களெல்லாம் நன்றாக துளிர் விடத்துவங்கி விட்டன.

அட்லாண்டாவில் இந்த வாரத்தின் புதுவரவு என்ன தெரியுமா?
மகரந்த மழை.
நகரெங்கும் பச்சை வண்ணத்தூளை தூவினாற்போல் உள்ளது. புதிதாக பூக்கும் பூக்களிலல் இருந்து மகரந்தத் தூள் வெளியேறி நகரெங்கும பரவுகிறது.
இது இயற்கை நடத்தும் பச்சை ஹோலிப்பண்டிகையோ என வியக்கிறேன்.
வீட்டின் கதவுகள் மீதும், வீட்டின் வெளிப்புறத்திலும், வாகனங்கள் மீதும் பச்சைப்பொடி படியத்துவங்கி விட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களுக்கு இது இருக்கும்.
இதற்கு அப்பால் வண்ணமற்ற/கண்ணுக்குத்தெரியாத மகரந்த தூள்களின் அளவும் காற்றில் கலந்திருக்கும்.

சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தும். சென்ற வருடம், இந்த சமயம் வசந்தம் வந்துவிட்டது, டென்னிஸ் விளையாடலாம் என்று துவங்கி, சளி பிடித்துக் கொண்டதுதான் மிச்சம். ஃப்ளோநேஸ் போன்ற ஒவ்வாமை தடுக்கும் மருந்துகளும் அதிக விற்பனயாகும் இந்த காலத்தில். தொலைக்காட்சி பெட்டியில் விளம்பரங்களில் பாதி இந்த மருந்துகளாகவே இருக்கும்!.

வெறுங்காலுடன் தோட்டம் அல்லது திண்ணை சென்று வந்தால் ஞாபகமாக கை/கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மற்ற காலங்களைக் காட்டிலும் இந்த காலத்தில் மேலும் சில முறைகள் தரைக் கம்பளத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
தும்மல் வரும்போது தூக்கி எறியக்கூடிய நேப்கின் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். நோய்கள் அண்டாமல் இருந்தால்தானே இயற்கையை அனுபவிக்க முடியும்.

Saturday, April 09, 2005

நான் எந்த காலிங் கார்ட் பயன்படுத்துகிறேன்?

புலம் பெயர்ந்தவர்கள் தாய் நாட்டுடன் தொடர்புகொள்ள எளியதொரு சாதனம் காலிங் கார்ட்.
நான் எந்த காலிங் கார்ட் பயன்படுத்துகிறேன் என சமீபத்தில் கேட்பவருக்கு சொல்வது - எதுவும் இல்லை என்பதுதான்!
ஏனெனில், அமெரிக்காவில் இப்போது Voice over IP (VOIP) தெலைபேசி நிறுவனங்கள் வந்து விட்டன. அவற்றின் மூலம் அதிகம் செலவாகாமல் உங்கள் தொலைபேசியிலிருந்தே எந்த ஒரு நாட்டு தொலைபேசியுடனும் தொரட்பு கொள்ளலாம்.
இந்தியாவிலும் இருக்கிறது என கேள்விப்பட்டேன். சென்னையில் BSNL, 'Internet Phone' என்ற பெயரில் வழங்குகிறது என அறிகிறேன்.

இங்கு அமெரிக்காவில் எனது VOIP தொலைபேசி நிறுவனத்தின் பெயர் வானேஜ்.
(Vonage). இதற்கு உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு பிராட்பேண்ட் (broadand) இணையத்தொடர்பு மட்டுமே. உங்களுடைய பழைய தொலைபேசி நிறுவனத்தின் இணைப்பு தேவையில்லை.

VOIP தொலைபேசி எப்படி வேலை செய்கிறது?
இதன் முக்கியபாகம், உங்கள் தொலைபேசியிலிருந்து வெளிவரும் அனலாக் சிக்னலை, டிஜிடல் சிக்னலாக மாற்றும் சாதனமே. பின்னர் இந்த டிஜிடல் சிக்னலை இணையத்தொடர்பு மூலமாக செலுத்தி, கடைசியாக, நீங்கள் டயல் செய்த தொலைபேசி எண்ணை அடையும். இவ்வாறு பேசுவதற்கு உங்களிடமோ அல்லது நீங்கள் பேசும் நபரிடமோ கணிணி இருக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் கேபிள்/டி.எஸ்.எல் போன்ற வேகமான இணையத்தொடர்பு வேண்டும். 'டயல்-அப்' போதாது. மேற்சொன்ன சாதனத்தை தொலைபேசி நிறுவனமே இலவசமாக உங்களுக்கு தருகிறது, அவர்களது சேவையை பயன்படுத்தத் தொடங்கினால்.

எவ்வளவு செலவாகிறது?
அமெரிக்காவிலிருந்து சென்னைக்குப்பேச நிமிடத்திற்கு 10 cent மட்டுமே ஆகிறது. மற்ற இடங்களுக்கு, இடத்திற்கு தகுந்தாற்போல் சற்றே வேறுபடுகிறது.
அமெரிக்காவிற்குள்ளேயே அளவின்றி 'long-distance' பேசிக்கொள்ள மாதத்திற்கு 25 டாலரும், மாதம் 500 நிமிட அளவிற்கு 15 டாலரும் ஆகிறது. இது சம்பிரதாய தொலைபேசி நிறுவனங்களைவிட விலை குறைவுதான்.

தரம்?
அமெரிக்காவிற்குள்ளேயே பேசிக்கொள்வதில் எந்த வித்யாசமும் இல்லை. இந்தியாவிற்கு பேசும்போது, சிறிது குறைவாக இருப்பதுபோல் இருக்கிறது. ஆனால், காலிங் கார்ட்களைவிட எவ்வளவோ தேவலாம். மேலும் காலிங் கார்ட்டில் ஒவ்வொரு சமயம் தரம் வெவ்வேறாக இருக்கும். எந்த ஒரு புது கார்டையும் அதிக நபர்கள் பயன்படுத்த துவங்கினால் அம்பேல்!

அனுகூலம்?
காலிங்கார்ட்களைப்போல் 1-800 எண்களை டயல் செய்ய வேண்டாம். அந்த எண் டயல் செய்தால் சில சமயம் கிடைக்காமல் தவிக்க வேண்டியதில்லை.
நேராக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் எண்ணை சொடுக்கினால் போதும். ஒவ்வொரு கார்ட் கட்டினம் முடிந்தவுடன் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கட்டினம் முடியப்போகிறதே என்று பேச்சை குறைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பதை இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். வாய்ஸ் மெயில் போன்ற இதர வசதிகளும் உண்டு.

ஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்?

புலால் மறுப்பதற்கு ஐந்து காரணங்கள்:

1. அறம் / மறை காரணம்

புலால் உண்ணுதலை அறம் போதிக்கும் மறைகள் மறுக்கசொல்லுவதால்.
(வேதங்கள், திருக்குறள், திருமந்திரம், கீதை மற்றும் பல மறைகள்)
தன் ருசிக்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்ணுதல் அறமாகாது.

2. வினைப்பயன் காரணம்

நாம் செய்யும் எல்லா செயல்களும், நம் உணவின் தேர்வு உட்பட வினையென்னும் விளைவாய் திரும்புகிறதென்பது. அந்த உயிரினங்களின் வதையானது ஊழ்வினையாய் திரும்பாமல் தவிர்க்க.

3. றிவுத்தாகம் காரணம் (Supreme Conciousness)

உடலின் இரசாயனக்கூறுகளுக்கு நாம் உண்ணும் உணவே முதல். ஒருவருடைய றிவு, உணர்வுகள், அனுபவ வினைகள் ஆகியவற்றுக்கும் அவர் உண்ணும் உணவுக்கும் தொடர்புண்டு. ஒருவர், உயர்ந்த அறிவு, சமாதானம், மகிழ்சி மற்றும் மற்ற உயிர்களிடம் கருணை கொண்டவராக இருக்கவேண்டும் என விரும்பினால், புலால் உண்ணுதல் அந்த விருப்பவத்திற்கு எதிர்வினையாகத்தான் அமையும். புலால் உண்ணுவதால், பெருங்கோபம், மன உளைச்சல், பொறாமை, சந்தேகம், இறப்பைப்பற்றிய அதீத பயம் போன்றவை அவர் உண்ணும் மாமிசத்தலேயே அவருக்கு ஏற்படக்கூடும். இன்றைய சிக்கல் மிகுந்த சமுதாய சூழ்நிலையில், மேற்சொன்ன தீக்குணங்கள் தோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காரணங்களை சொல்லலாம் என்பது வேறு விஷயம். ஆனால் அவற்றில் இதுவும் ஒன்று.

4. உடல் நலம் காரணம்

புலால் தவிர்த்த உணவு ஜீரணமானதற்கு எளிதென்றும், பலவிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன என்றும் மருத்துவத்துறை கூறுகிறது. இன்றைய சூழ்நிலையில் மனித இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் பல்வேறு நோய்கள் புலால் தவிர்ப்பவர்களுக்கு உணவால் வரும் சாதகம் குறைவே. அவர்களிடம் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகம்.

5. சுற்றுப்புற சூழல் காரணம்

இந்த உலகம் பெருந்துன்பத்தில் உழல்கிறது. தினந்தேறும் குறைந்துபோகும் உயிரினங்களால். மாமிசத்திற்காக உயிர்வதைப்படுவதை தவிர்ப்பதால் உயிரினங்கள் அழிவதையும், காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதால், அதனால் அழிந்துபோகும் காடுகளை காப்பாற்றவும், ஏன் நீர், காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் கூட உதவும். இந்த ஒரு காரணத்திற்காகவே மாமிசம் உண்பதை நிறுத்தியவர்களும் உண்டு.

Wednesday, April 06, 2005

iTunes

ஆப்பிள் நிறுவனத்தின் iTunes மென்பொருள், உங்கள் mp3 க்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும், பாடல் பற்றிய தகவல்களை நேரடியாக யுனிகோடில் செலுத்திக்கொள்ளவும் முடியும்.
இதன் பயன்பாடுகள்:
1. பாடல்களை தொகுத்துக்கொள்ளுதல். இந்த தொகுதி வழியாக, உங்கள் கோப்புத் தொகுதிகளையும் (folder) மாற்றி அமைக்க முடியும்.
2. உங்களுக்கேற்ற கலவையை ஏற்படுத்தி, அவற்றை மட்டும் பாடச்செய்தல்
3. mp3 ID Tag களை யுனிகோடில் மாற்றி அமைக்க முடியும்.
4. CD க்களை கொளுத்திக்கொள்ளவும் முடியும்.
5. CD யின் அட்டையை ப்ரிண்ட் செய்யும்போதும், இதே யுனிகோடில் இருக்கிறது.

ஆக பாடல்களை பாடச்செய்யவும், தொகுத்துக்கொள்ளவும், IDTag களை மாற்றவும், CD யில் கொளுத்தவும் இந்த ஒரு மென்பொருள் போதும் உங்களுக்கு.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இது இலவசம்.

ஆப்பிள் தளத்திலிருந்து நீங்கள் iTunes-ஐ இறக்கிக்கொள்ளலாம்.


iTunes Posted by Hello

Monday, April 04, 2005

மும்பை எக்ஸ்பிரஸ் - பாடல்கள் - முன்னோட்டம்

மும்பை எக்ஸ்பிரஸ் பாடல்கள்களை ஒரு முறை கேட்டவுடன் செய்யும் பதிவு இது.

பூ பூத்தது என்று ஒரு மெலடி ட்யூட் பாடல் - ஆண் பாடகர் தெரியவில்லை. பெண் பாடகர் ஷ்ரேயா போலத்தெரிகிறது. intelude களில் ட்ரம்ஸ் மற்றும் பியானோ அசத்தலாகவும் நீளமாகவும் இருந்தது.

கமல் இரண்டு பாடல்களை பாடுகிறார் - அதில் ஒன்று ட்ரெயினில் பாடுவது போலும்.
படத்தோடு சேர்ந்து பார்க்க மட்டுமே இந்த பாடல் என நினக்கிறென். அன்பே சிவம் 'எலே மச்சி' போல ஆரம்பித்தாலும், பாடலில் intelude கள் நீளமாக இருக்கிறது.

இன்னொன்று 'குரங்கு கையில் மாலையை கொடுத்தது யாரு' என்று பல்லவி. இதிலும் நிறைய Rock & Roll Drums. பின்னணியில் நிறைய பியானோ. (பூ பூத்தது போலவே)
இவையெல்லாம் அக்னி நட்சத்திரத்தை ஞாபகம் செய்கிறது.

வந்தேமாதரம் என்று குழந்தைகள் பாடும் பாடலும் உள்ளது.

கமலும் இளையராஜாவும் இணைந்து எட்டாத உயரத்தையெல்லாம் தொட்டபின், இன்னும் செய்ய என்ன இருக்கிறது?
என்ன செய்திருக்கிறார்கள் இந்த பாடத்தில், பார்ப்போம்.

Sunday, April 03, 2005

மலேரியா

சமீபத்தில் அமெரிக்க நோய்தடுப்பு நிறுவனமான CDC இந்தியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு மலேரியவைப்பற்றி எச்சரிக்கை விடுத்தது. ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1000 பேர் மலேரியாவில் இறப்பதாகவும் செய்தி சொல்கிறது.
செய்தியின் சுட்டி இங்கே.
பல நூற்றாண்டுகளுக்கு, இந்தியாவில் மலேரியா பெரிய பிரச்சனை என்பது தெரியும். ஆனால் இன்னமும் மலேரியவின் தாக்கம் பெரிதுமாக இருக்கிறது.

70 களில் மிகப்பரவலாக இருந்த மலேரியா, பல்வேறு திட்டங்களின் உதவியால், கணிசமாக 80 களில் குறைக்கப்பட்டது. ஆனால், 80 களில் இருந்து இன்றுவரை பெரிதான முன்னேற்றம் ஏதும் இல்லை. 90 களில் புதிய காரணங்களாலும், தொழில்மயமாக்கத்தின் விளைவும், நீர்தேக்கங்களின் சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ( பதிவின் இறுதியில் கொடுத்துள்ள அட்டவணை ஆண்டு வாரியாக விவரிக்கிறது)

மலேரியாவைபற்றி அடிப்படை தகவல்களை சேகரித்து இங்கு பதிவு செய்கிறேன்.

மலேரியா எவ்வாறு வருகிறது:
கொசு கடிப்பதால் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் பெண் கொசு கடித்தால் மட்டுமே வரும். எப்படி பெண் கொசுவை கண்டு பிடிப்பது என்று கேட்காதீர்கள். மாலை நேரத்திலிருந்து நள்ளிரவுக்குள் கடிக்கும் சொசுக்களில்தான் மலேரியா பரவுகிறது. அதாவது மலேரியா கிருமியை கொசு உங்களுக்கு இரவல் தந்து விடுகிறது. பெண்களை விட ஆண்களையே அதிகமாக கடிக்கிறதாம். (ஆமாம் சார், நம்புங்கள்!). கொசுவிற்கு மோப்ப சக்தி உண்டு. ஒருவரை முகர்ந்து பார்த்து, தனக்கு பிடிக்காவிட்டால் கடிக்காதாம்.

கடிக்கும் சொசுவிற்கு பற்கள் உண்டா?
கொசு கடிக்கிறது என்று சொல்வதை விட, குடிக்கிறது என்றே சொல்ல வேண்டும், உங்கள் இரத்தத்தை. 2-3 மூன்று நாட்களுக்கு ஒருமுறை 30 முதல் 150 முட்டைகள் வரை இடும் பெண் கொசுவிற்கு ஊட்டச்சத்து மிக்க பானமே உங்கள் ரத்தம்!. கொசு இரத்தத்தை உறுஞ்சுவதற்காக அதற்கு இரண்டு ஊசி போன்ற குழல்கள் உண்டு. ஒரு குழல் மூலம் இரத்தத்தை உறிஞ்சியவாறே, மற்றொரு குழல் மூலன் தன் எச்சிலை செலுத்துகிறது. எச்சிலில் உள்ள இரசாயனப் பொருட்கள், இரத்தம் கட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது.
அதனால் உங்களுக்கு அதிகம் வலிக்காமலும், வீங்காமலும் இருக்கிறது. அப்போதுதானே அதன் வேலையயை தடையின்றி செயல்படுத்த முடியும்!

மலேரியாவின் அறிகுறிகள் என்ன:
அதிகமான காய்ச்சல், நடுநடுக்கம், சிலசமயம் குளிர் காய்ச்சல் மற்றும் வேர்த்துப்போகுதல்.

ஒருவருக்கு மலேரியா வந்துள்ளதா என தீர்மானிப்பது எப்படி:
இரத்தச் சோதனை மூலம், மலேரியா கிருமிகளில் எதேனும் ஒன்று இரத்தத்தில் உள்ளதா எனக் கண்டறிவது.

மலேரியாவை குணப்படுத்துவது பற்றி:
மலேரியாவை 48 மணி நேரத்திலேயே குணப்படுத்தி விடலாம். ஆனாலும், கவனிக்காமல் விட்டுவிட்டால், அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம்.

மலேரியா வராமல் தடுப்பது பற்றி:
மற்ற பல நோய்களுக்கு இருப்பதுபோல் வருமுன் தடுக்கும் தடுப்பூசி மலேரியாவிற்கு இதுவரை இல்லை. சாதரணமாக கொசு அண்டாமல் பார்த்துக்கொள்வதே மலேரியாவிலிருந்து தப்ப சிறந்த வழி. கதவு/ஜன்னல்களை மூடிவைத்தல், கொசுவர்த்தி/மேட்/லோஷன்/சொசு வலை போன்றவற்றை பயன்படுத்துதல் போன்ற வழிகளில்.
உயரமான மலைப்பகுதிகளில் (இந்தியாவில்) மலேரியா பரவும் வாய்ப்பு அதிகம்.
வீட்டிற்குள் இருளான பகுதிகளும், ஈரப்பதமான பகுதிகளும் கொசுக்கள் பதுங்கியுருக்க ஏதுவான இடங்கள். மாலை முதல் நள்ளிரவு வரை வீட்டுக்குள் புகுந்தபின் இதுபோன்ற இடங்களில் பதுங்கி இருந்து, பின்னர் நீங்கள் தூக்கியபின் உங்களை கடிக்கக்கூடும்.
உடுத்திய துணிகள் போன்றவற்றை கொடியில் தொங்கப்போட வேண்டாம்.
நீர்த்தேக்கங்களுக்கு (ஓடை, குளம்) அருகே வசிப்பர்கள் அதிக கவனமாக இருக்கலாம். நீர் தேங்குவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் மலேரியா புள்ளி விவரம்

வருடம்பாதிக்கப்பட்டவர்
இறப்புகள்

1947

75 million

8,00,000

1961

49151

--

1965

99667

--

1976

6.47 million

59

1984

2.18 million

247

1985

1.86 million

213

1986

1.79 million

323

1987

1.66 million

188

1988

1.85 million

209

1989

2.05 million

268

1990

2.02 million

353

1991

2.12 million

421

1992

2.13 million

422

1993

2.21 million

354

1994

2.51 million

1122

1995

2.93 million

1151

1996

3.04 million

1010

1997

2.57 million

874

1998

2.09 million

648மேலும் விவரங்களுக்கு:
உலக சுகதார நிறுவனம் ( WHO ) : மலேரியா பகுதி

மலேரியா தடுப்பூசி உறுவாக்கும் முயற்சிகள்

LinkWithin

Related Posts with Thumbnails