Friday, April 22, 2005

அட்லாண்டாவில் சந்திரமுகி

ரஜினி படம் என்றாலே வெகு ஜோர்தான். படத்தின் ஜோர் பாதி என்றால், படம் பார்ப்பவர்களை கவனிப்பது மீதி ஜோர். ரஜினி படத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்!. படம் பார்ப்பவர்கள் சினிமா என்பதை மறந்து, ஒரு நேரடி நிகழ்சியாக எண்ணிக்கொள்ள செய்கிறது படம். சென்ற முறை பாபா படம் அட்லாண்டாவில் திரையிடப்பட்டதும், இந்த மாயத்திரையில் நேரடி நிகழ்சியே நடந்தேறியது.
பாபா படத்தில் சொதப்பல்கள் பல இருந்தாலும், ரசிகர்களின் விசில்களுக்கு குறைவிருந்ததில்லை.

இந்தமுறை ரஜினி படத்திற்கு அட்லாண்டா ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் ஆவலாகவே இருந்தது.
இன்னும் இரண்டே நிமிடங்கள் இருக்கையில் திரையரங்கை அடைந்தோம். உடனடியாக நுழைவுச்சீட்டு விற்கும் இடத்தை அடைந்தோம்.
அதிலொன்றும் அதிக சிரமம் இல்லை. நம்மூர் ஆட்களின் வரிசை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டியதுதான். கண்டதும், மூன்று சீட்டுகளை பெற்றுக்கொண்டோம் - முப்பது டாலர்களுக்கு.

நுழைவிற்கு மட்டும்தான் சீட்டாம். அமர்வதற்கு அல்லவாம்!. கிடைத்த இடத்தை பிடித்துக்கோள்ள வேண்டியதுதானாம். முன்னமே வந்தவர்கள்
கைக்குட்டடையெல்லாம் பத்தாதென்று கம்பளி விரித்தார்களோ என்னவோ மொத்த சீட்டையும் பிடித்து விட்டார்கள்.கம்பளி போதாக்குறைக்கு,
கையில் செல்பேசி வேறு, நமக்கு பாவ்லா காட்ட. எங்களுக்கு மிஞ்சியது முதல் வரிசை சீட்தான். ஒரமாக இருந்த ஒரு முதல் வரிசை இருக்கையை
பிடித்துகொண்டேன். ஆரம்பக் காட்சிகள் 3D படம் போல இருந்தாலும் பின்னர் பழகி விட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு காட்சி என அறிவித்து இருந்ததால், படம் 2 மணிநேரப்படமோ என்ற சந்தேகம் வேறு. இடைவேளை விடமாட்டார்கள் என்று
எங்கேயோ படித்ததாக ஞாபகம். வந்திருந்த கூட்டத்தப்பார்த்து ஒரு நோட்டம் விட்டேன். பலதரவகைப்பட்டவரும் இருந்தனர். நம்மூர் கொட்டகையில்
தலைவருக்கு விசில் அடித்துக்கொண்டு இருந்தவர் முதல், தமிழை இதற்குமுன் கேள்விப்படாதவர் வரை சகலவிதமானவரும் 'உள்ளேன் அய்யா'
சொல்லியவாறு. தீவிர ரஜினி ரசிகர்களின் பக்தி தெரிந்த விஷயமே. புதியவர்களின் ஈடுபாட்டைப்பார்ப்பதிலே ஆவல்.

குடும்ப சகிதமாக ஆஜராகியிருந்த குடும்பத்தலைவர்கள் ஒருபுறம். அவர்களின் 'என் குடும்பத்தை நான் ரஜினி படத்திற்கு அழைத்து வந்துள்ளேன்'
என்ற பெருமிதம் அவர்களின் பார்வையிலேயே தெரியும். கையில் கைகுழந்தையுடன் கணவன்மார்கள்/மனைவிமார்கள் ஒருபுறம். படத்தையும்
விட மனசில்லாமல், குழந்தையையும் விட மனசில்லாமல், இரண்டிலும் ஒரு கண் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு இருப்பார்கள். பெண்கள்
சங்கம்/சங்கீத சங்கம் என்று சங்க தோழியர் கூட்டம் இன்னொரு புறம். கேட்டால், 'அவருக்கு தமிழ் படமெல்லாம் பிடிக்காது' என்று பெருமையாக
சொல்லிக்கொள்வார்கள். நமக்குத்தான் தெரியும், கணவன்மார்கள் வீட்டில் இருந்தால் படம் பார்க்க வர மறுக்கும் சிறுவர்களுக்கு 'பேபி சிட்டிங்' மிச்சம் என்று!.

சில நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிட்டது. சண்டைக்காட்சியுடன் படம் துவங்குகிறது. தலைவர் ரஜினி ,அவரின் ஷூ வழியாக திரையில் நுழைகிறார். பார்ப்பவர்கள் முகமெங்கும் தவறாமல் புன்னகை!. பின்னால் விசில் பறக்கிறது.
தமிழ்நாடுபோல், திரைக்கருகே வந்து கண்ணில் ஒற்றிக்கொள்ள யாரும் இல்லை!.

படமெங்கும் ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த மனநல மருத்துவர் என்று சொல்லப்படும்போது, எல்லோரும் உரத்த குரலில் 'ஓ' போடுகிறார்கள்!.
இப்படியாக படம் களை கட்ட, வேட்டைக்காரன் அரண்மணைக்கு படத்திலிருக்கும் மொத்த பாத்திரங்களும் (கே.ஆர்.விஜயா தவிர) நுழைகிறார்கள்.
இத்தனை பேரும் ஒரே இடத்தில் இருப்பதலோ என்னவோ ரஜினிக்கு அவ்வளவாக சோபிக்க வாய்ப்பில்லை. கிடைத்த நேரத்தில், வடிவேலுவுடன் நகைச்சுவை. அல்லது காமடி என்ற பெயரால் சகிக்க முடியாத கூத்து. ரஜினிக்கு ஆனாலும் இது தேவையில்லாததுதான்.

இது நடுவில் ரஜினி அரண்மணையைவிட்டு வெளியூருக்கு போய் விடுகிறார். நடுவில் ஜோதிகா, சந்திரமுகியின் ஆவி இருக்கும் அறைக்கதவை திறந்து அதை வெளியே விட்டு விடுகிறாராம். அதற்காக எதற்கு ரஜினியை வெளியூருக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரியவில்லை. திரும்பி வரும் ரஜினி அரண்மணையில் நடக்கும் மர்மங்களுக்கான காரணங்களை ஆராய்கிறார். பிரபு கொல்லப்பட இருக்கும் தருணங்களில் அவரை காப்பாற்றுகிறார்!. (விஷம் மற்றும் மீன் தொட்டி விழுந்து கொலை - அதரப்பழசு. சந்திரமுகியின் ஆவியும், இயக்குனரும்(!) சமகாலத்தவர்களோ?). 'கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, சூப்பர் ஸ்டாரை பாரப்பா', என்று பின்னால் இருந்து உரத்த குரல் வருகிறது!.

மாளவிகா, டேன்ஸ் மாஸ்டர், மந்திரவாதி, அடியாள் போன்ற பாத்திரங்கள் ஜவ்வு போன்று கதையை இழுக்க உதவுகின்றன. வேறு விஷேசமில்லை. அங்கங்கே சில இடங்களில் மட்டும் நகைச்சுவை ரசிக்கும்படியாகவும் உள்ளது. 'ஜோதிகா பாவம், என்ன கொடுமை இது' என்று சீரியசாக பிரபு சொல்லும் இடத்தில் எல்லோரும் சிரிக்கிறார்கள். (இயக்குனரையும் பார்த்து). இளம் கல்ல்லூரிப் பெண்கள் தாங்கள் வந்திருப்பதைக் காட்டிக்கொள்ள, நடுவே சத்தமாக subtitle-ஐ ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்!, அவர்களை முறைப்பவர்களையும் பொருட்பருத்தாமல்.

சந்திரமுகி ஆவி ரகசியத்தைக் கண்டு பிடித்த பின்னால் ஜோதிகாவின் உடலின் சந்திரமுகியின் ஆவியை வெளியேற்ற ரஜினி திட்டமிடுகிறார். பைத்தியம் போல தலையை கலைத்துக்கொண்டு ஜோதிகா பரதநாட்டியம் ஆடுகிறார். அந்த சமயம் மூன்று சதுர துளைகள் வழியே, ரஜினி உட்பட மூன்று பேரும் பரதநாட்டியத்தைப்பார்ப்பது Very Funny. நல்ல வேளை, பரதநாட்டியம் முழுதுமாக கலைந்த தலையுடன் இல்லை. அதுவரை, இயக்குனரை பாராட்ட வேண்டும். ஜோதிகா என்னவோ பெரிதாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். பிதாமகனில் லைலாவுக்கு முன்னால் இது ஒன்றுமில்ல்லை.

விதியை தன் மதியால் வென்றார் ரஜினி என்பதே முடிவு. முடிவு எனக்கு ஒகே. அதிரடி ரசிகர்களுக்கு? அதிரடி படங்களுக்கு நடுவே இது வித்யாசமாக இருக்கும். இந்த படம் வெற்றியடைந்து, அதன் மூலமாவது, இப்போது தொடர்ந்து வரும் சகிக்க முடியாத 'தனிநபர் சாடுதல்' முடிவுக்கு வந்தால் நல்லதே.

6 comments:

 1. Anonymous11:00 PM

  படத்தில் ஆவி புகுந்ததாக காட்டவேயில்லையே.. அது ஆவிக் கதையே கிடையாதே.. சந்திர முகியென்ற ஆவியே அங்கில்லையே..

  ஜோதிகா தனக்கேற்பட்ட நோயால் தன்னை சந்திரமுகியாக நினைத்துக் கொள்கிறார்.. அது தானே கதை..மற்றும் படி சந்திரமுகி அவருக்குள் புகுந்து கொள்வது என்றெல்லாம் கதையை நினைத்தீர்கள் என்றால்...

  நல்லா பாத்தீங்க படம் போங்க..

  ReplyDelete
 2. மந்திரவாதி வைத்து, சக்கரத்தில் உக்காரவைப்பதற்கு அய்யா? ஜோதிகா
  கதவு திறந்தவுடன் பாம்பு அறைக்கு வெளியே வருவதுபோல் காட்டுவதும், ஜோதிகா சக்ரத்தில் உக்காரவைத்தது, வேட்டையக்கார ராஜாவை எரித்ததும் பாம்பு வெளியே போவதுபோல் காடுவதும் எதற்காக?

  split personality-யின் விளக்கம் புரியாமல் இல்லை. ஆவிக்கதைகளில் வழக்கமாக கொடுக்கப்படும் அறிவியல் விளக்கம்தானே, அது!. அதனால் ஆவிக்கதை இல்லாமல் ஆகாது!

  ReplyDelete
 3. அட..அட! இதோ நான் சொன்ன இரண்டு வசிப்புகள் குறித்த உதாரணம்.

  http://rozavasanth.blogspot.com/2005/04/blog-post_22.html

  பாம்பு விஷயம் சொல்ல மறந்துவிட்டது. ஜீவ சொல்வது போல் பாம்பை ஆவிவாசிப்பு பிண்ணணியில் பார்க்கமுடியும். ஆனால் அதை ஏற்றுகொள்ளாத 'பிளவாளுமை' வாசிப்பில், பாம்பை ஒரு குறியீடாய் மட்டும் பார்க்கலாம். பாம்பு என காட்டப்படுவது உண்மையில் பாம்பாக இருக்க அவசியமில்லை. ஏனேனில் துவக்கம், இறுதி தவிர பாம்பு கதையில் குறிக்கிடுவதில்லை. ஜோதிகா, ரஜினி, அறையீல் உலவும் எந்த காட்சியிலும் அது குறிக்கிடுவதில்லை. அரண்மணையில் இருக்கும் சந்திரமுகி பிரச்சனையின் ஒரு குறியீடாய் பாம்பை காண்பிப்பதாய் வாசிக்க முடியும். பிரச்சனை தீர்ந்து பாம்பு வெளியேறுகிறது.

  ReplyDelete
 4. ரோசா, நீங்கள் சொல்லுவதுபோல் இரண்டுவித வாசிப்பிற்கும் இடமளிக்கிறது கதை.
  இன்னும் சொல்லப்போனால், ஆவி என்பதுகூட மனப்பிராந்தியே என்று வாதிடலாம், மர்மாக நிகழ்ந்தவை யாவும் குறியீடுகள்தான் எனலாம். இவையெல்லாம் நம் 'மனம்' என்னும் மிக அதிசயமான பொருளால் சாத்தியமாகிறது.
  எனக்குத் தெரிந்தவரை மனோதத்துவ நிபுணர்கள், வெறும் மருத்துவ தீர்வுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. ஆன்மீகம், மாந்தரீகம் போன்ற தீர்வுகளும் பயன்படுத்துவதுண்டு, அமெரிக்காவிலும். நோயாளி எந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்பதை கண்டறிந்து அதற்கேற்றார்போல் தீர்வை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இந்த கதையில் மாந்தரீகம்/ஆவி போன்ற நம்பிக்கைகளை தீர்விற்கு துணை புரிந்துள்ளன என்றே நினைக்கிறேன. இரண்டு வாசிப்பையும் இணைத்து, மூன்றாவது வாசிப்பு எனலாமா இதை?

  ReplyDelete
 5. சந்தேகமில்லாமல் ஆவிக்கதைதான் இது. ஆவி பிடிக்காதவர்களுக்காய் கொஞ்சம் பிளவாளுமை மிக்ஸிங். மந்திரவாதி அரண்மணைக்குள் நுழையும்போதே சொல்வார், இருக்கு, இங்க ஒரு பிரச்சினை இருக்கு. இதைத் தவிர மந்திரவாதி முதலில் பூஜை செய்யும்போதும் இதையே சொல்வார், சந்திரமுகியை சக்கரத்தில் உட்காரவைக்க முயற்சி செய்தேன், இடையில் யாரோ என் பூஜையில் குறுக்கிட்டு விட்டார்கள்.

  படத்தைக் கவனமாய்ப் பார்த்தவர்களுக்குத் தெரியும். சந்திரமுகியின் சாம்பல் அந்த அறையில் வைக்கப்பட்டு இருக்கும், அந்த அறையைச் சுத்தம் செய்யும்போது ஜோதிகா மேல் அந்த அஸ்திக் கலசம் உடைந்து விழும், அப்போதுதான் சந்திரமுகி ஜோதிகாவைப் பிடித்துக்கொள்வதுபோல் காட்டி இருப்பார்கள். ரஜினி சொல்லும்போதுகூட பிளவாளுமைதான் சந்திரமுகி ஜோதிகாவை அடையச் சாதகமாக இருந்தது என்று ஒரு இடத்தில் சொல்வார்.

  ReplyDelete
 6. படம் பார்த்தபின் இசை விமர்சனம்:
  1. தேவுடா தேவுடா பாடல் மனதில் நிற்கவில்லை
  2. கொஞ்ச நேரம் பாடலில் இஸ்தான்புல்-லின் அழகும், ரஜினி,நயன் தாரா- வின் உடைகளின் நிறத்தேர்வும் நன்றாக ஒத்துப்போகின்றன.பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.பல முறை இந்த பாடலை கேட்டபின், ஆஷா போன்ஸ்லே-வை சகித்துக்கொள்ளலாம் போலத் தோன்றுகிறது.
  3. அத்திதோம் நல்ல பாடலானாலும், லாஜிக்கே இல்லாமல் ரஜினி, நயன்தாராவை அவமதித்தபின் பாடுவதால், மனதில் ஒட்டவில்லை,விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும்.
  4. கொக்கு பறபற பாடல் மேற்சொன்னாற்போல் எந்தவித நெருடலும் ஏற்படுத்தாதனால்,பிடித்திருந்தது.
  5. ரா ரா பாடல், வெறும் ஒலியைக்கேட்டபோது ஏற்பட்ட எதிர்பார்ப்பை காட்சி நிறவு செய்யவில்லை. ஆனால் சொதப்பாமல் எடுத்திருந்தார்கள்.
  6. அண்ணனோட பாட்டு பாடல், சீரியசாகபோய்கொண்டிருந்த இடத்தில் தீடீரென ஏற்பட்ட அதிரடி கூத்துபோல இருந்ததால், மனதில் ஒட்டவில்லை. இந்த பாடலை தவிர்த்திருக்கலாம், அல்லது மேலும் மர்மத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு பாட்டு செய்திருக்கலாம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails