Thursday, February 28, 2008

நிர்குண பரிபூரணா, நின் தாள் சரணம்.

தொடக்கமும் முடிவும் இல்லாமல்
தொடரும் சங்கிலியாக

தொடர்ந்து ஓடிக்கொண்டே
இருக்கும் நதிநீராக

இப்போதும் அப்போதும்
எப்போதும் நகரும் நேரமாக

அசைவாகவும் அசைவற்றதிலும்
எங்கேயும் நிறைந்திருக்க

தன்நிகரில்லாமல் தன்னறிவாய்
தகைசான்றோரில் விளங்கிட

முன்வினைகளை இப்பொழுதில்
நற்செயலில் போக்கி

அகமும் புறமும் மாறுதலற்ற
பூரணமாய் ஆனந்தமடைய

நிர்குண பரிபூரணா,
நின் தாள் சரணம்.

Sunday, February 17, 2008

மூன்றாம் படை வீடு, பழநி - திருப்புகழில்...

திமிர வுததி அனைய நரக

செனன மதனில், விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு

சிறிது மிடியும் அணுகாதே


அமரர் வடிவும் அதிக குலமும்

அறிவு நிறையும் வரவேநின்


அருள தருளி யெனையு மனதோடு

அடிமை கொளவும் வரவேணும்


சமர முகவெல் அசுரர் தமது

தலைகள் உருள மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை

தகர அயிலை விடுவோனே


வெம் அரவணையில் இனிது துயிலும்

விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி

விரவும் அமரர் பெருமாளே.

-------------------------------
அருஞ்சொற் பொருள்:

திமிர - இருண்ட

உததி - கடல்

சமரம் - போர்

சலதி - கடல்

பதலை - மலை

அயில் - வேல்

மிடறு - தொண்டை

-------------------------------------------------------------

பிறப்பின் தொடக்கமே இருளில் தானே, என் இறைவா,

கருவின் இருளில் தானே, இருண்ட கடலாய், இருளில் தானோ?

நிரந்தரம் இல்லா இவ்வுலகில் பிறப்பதும் நரகம் தானே?

இறைவா, இவ்வுலகம் எனக்கு நரகம் தானே?


இந்நரகம் தனில் உழலச் செய்தாலும், நீ எனைச் செய்தாலும்,

செவிடு, குருடு, ஊனம் அல்லது வறுமை,

பிறக்கும்போதே பிணித்திடும் மரபணு நோய்கள்,

என பலவும் எனை வாட்டி வருத்தாமல்,

அமரர் அழகும், நிறைந்த குலமும், அறிவின் நிறைவும்

பெற்றிட தருவாய் உனது திருவருளை.


சிறுபதரென என்னைப் புறம் தள்ளாது,

என்னையும் உன்மனதில் பொருட்படுத்தி

என்னையும் அடிமையென ஆட்கொள்ள வரவேண்டும்.


போர் முனையில், அசுரர் தலைகள் சிதறிட

அலறலில் ஓயாக் கடலலை போல் ஒலிகள் எழ,

நீண்ட மலையாக எழுந்து நின்ற அசுரனும் பொடிப்பொடியாக,

நெடிய வேலாயுதத்தினை செலுத்திய என் இறையே,


நீ யாரென என்று யாரேனும் கேட்டால் நான் இவ்வாறு சொல்வேன்:

அரவணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் மருகனும்

கருநீலகண்டம் கொண்ட சிவனாரின் குமாரனுமான

பழனி மலையில் தண்டம் தனைத் தரித்து

அமரர்கள் அருகில் வந்து தொழுதிடும் குமரன் என்று.

Monday, February 11, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பத்து

பா 44:

ஆன்மாவெப் போதும் அடைந்துளதே யானாலுன்

தான்மடமை யாலடையா தாயமரு - மான்மடிய

வெய்தப்பெற் றாற்போ லிங்குந்தன் கண்டவணி

யெய்தப்பெற் றாற்போல வே.


கண்டவணி: கண்டம் + அணி = கழுத்தில் அணியும் அணிகலன் - கழுத்து மாலை / நகை
விளக்கம்:
ஆன்மா எப்போதுமே எல்லா இடத்திலேயும் அடைந்துள்ளதாகவும், எல்லா இடத்திலேயும் நிறைந்துள்ளதாகவும் இருந்தாலும்,
தன் அறியாமை என்னும் மடமையினால் தன் உண்மை நிலையை அடையாமல் இருக்கின்றது. நான் இந்த உடல் என்கிறது அந்தப் பேதை.

ஒருவர் கழுத்தில் சிறியதாய் விலை உயர்ந்த அணிகலன் அணிந்திருக்கிறார். ஒரு சமயம் அது தொலைந்துவிட்டது என்கிற எண்ணத்தில் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டு இருக்கிறார். திடீரென, அந்த நகை வேறெங்கும் இல்லை, தன் கழுத்தில் தான் உள்ளது என உணர்ந்தால், அவர் எப்படி நிம்மதி அடைவாரோ, அது போல,

தன் அறியாமை மடிந்தாலோ, தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தது போல உணர்வார். ஆன்மாவின் உண்மையான சொரூபம் எப்போதும் பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும், அறியாமையினால், அதனை அறியாமல் இருக்கின்றார்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Sunday, February 10, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஒன்பது - அகலும் மடமை

பா 42:

ஆன்மா வெனும் அவ்வரணியில் இவ்விதம்

ஆன்மத் தியான வகமதனன் - தான்முயன்று

சந்ததஞ் செய்தலாற் சார்ஞானத்தீ மடமையி

இந்தனமெல்லாம் எரிக்கு மே.


அரணி : தீக்கடை கோல் - குச்சிபோன்ற இந்த கோல் தனை வேகமாக உரசி தீ மூட்டுவர்.
இந்தனம் : விறகு

விளக்கம்:
ஞானத்தீயானது அறியாமை என்னும் மடமையை எரித்திடுமாம்.
எதைப் போல?
தீக்கிடை கோல் கொண்டு விறகில் உரசி உரசி, சிறுபொறியின் மூலம் கிளப்பப்படும் தீ போல.
எவ்வாறு?
தொடர்ந்து முயற்சியுடன், உராய்வு விசையினைத் தருவதன் மூலமாக.
அதுபோல,
ஆன்மாவெனும் கோல் கொண்டு தொடர்ந்து தளராத முயற்சியுடன் உள்ளார்ந்து தியானம் செய்யச் செய்ய -
என்னவாகும்?
சிறு பொறி மூட்டும் ஞானத்தீ கனன்று கொழுந்து விட்டு எரியும்.
கூடவே, ஆன்மாவை பிரித்து வைத்திருக்கும் அறியாமை எரிந்து போகும்.
பிறகென்ன?
ஆன்மா தன் தனித்ததல்ல என அறிய, பின் எல்லாம் பேரின்பமயமே.

பா 43:

அருணனாலே அல் அகலுதல் போல்முன்

மரும் அறிவால் அம் மடமை இரியவே

பொங்கும் ஆன்மா பரிபூரண மாகவே

பொங்கும் ஆதித்தனைப் போல்.


அல் : இரவு
இரிதல் : தேய்ந்து அழிதல்

விளக்கம்:
அருணனின் வருகையால் இரவென்னும் இருள் அகலுதல் போல்,
ஞானமென்னும் அறிவின் வருகையால் அறியாமை என்னும் மடமை தேய்ந்து மறையும்.
மேலும், பேரறிவினால், ஆன்மா பொங்கி நிறைந்திடும், பரிபூரணமாக நிறைத்திடும்.
பொங்கிடும் ஆதவனின் கதிர்கள், இருள் நிறைந்திருந்த இடத்திலெல்லாம் பரவி நிறைப்பது போல்.

சூரியன் - பிரம்மத்தினைப்போல் எப்போதும் தானாகவே ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது.
அறியாமை அழிந்தவுடன், ஆன்மா தன் உண்மையான சொரூபத்தினை தானாக உணர்ந்திடும். அதற்கு வேறெந்த பயிற்சியும் தேவையில்லை. வேறொருவரின் துணையும் தேவயில்லை.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Sunday, February 03, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி எட்டு

பா 39:

புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவிற்

புத்தியால் ஒன்றல் புரிவித்தே - சுத்தமாம்

விண்ணென வொன்றாய் விளங்கிடு மான்மாவை

யெண்ணுக வெப்போது மே.

விளக்கம்:
தான் காணும் பொருள் யாவற்றிலும், தன் அறிவினைக் கொண்டு ஆன்மாவில் இணைதலைச் செய்து காட்டுவர் உயர் ஞானம் பெற்றார்.
மேலும் அவர்கள் எப்போதும் ஆன்மாவை - சுத்தமான - மேகங்களற்ற ஒளிர் விடும் வெளிர் வானத்துக்கு ஒப்பாகக் கொள்வர்.
--------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் நாம் அறிவால் உணரும் அனைத்து உணர்வுகளும் சுயத்தின் சார்புடையவையாகவே இருக்கின்றன. எனக்கு பரிசு கிடைத்துவிட்டது, அல்லது என்னால் ஏதும் இயலவில்லை என்பது போல - எல்லாமே நான், எனது என்கிற உணர்வின் அடிப்படையினால். இது தாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பென அலறும் தோற்ற மயக்கத்தை ஒத்தது. பார்க்கும் தோற்றங்களுக்கு உண்மையான அடிப்படை என்ன? சுயத்தில், நான் எனது என்று தெரிவதெல்லாம் எதன் பிம்மம்? ஆன்மாவெனும் கண்ணாடியில் தெரிவது பிம்பம் எனில், ஏதோ ஒரு மூலப் பொருள் இருக்க வேண்டுமே? அந்தப் மூலப் பொருளென்ன? - என்ற கேள்விகள் சுயத்தில் எழுந்திட அறிவெனும் சுடரின் வெளிச்சத்தில் சுட்டுக் கருகாதோ அறியாமை இருள்.

காணும் பொருள் யாவற்றிலும் :
"பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா..."
போன்ற அமர வரிகளை நினைவில் கொள்க.

எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்தவன் எப்படி இருப்பான்?
அடுத்த பா சொல்கிறது:

பா 40:

உள்ள துணர் தோனுருவம் வருண முத

லுள்ள மயல்கள் ஒருங்கொழித் - துள்ளான்

திகழ்பரி பூரபோன்ற சித்தானந்தன் தானாத்

திகழ்ந்திடுவ நாளுந் தெளி.

விளக்கம்:
எங்கும் நிறை பரமனின் 'இருப்பை' உணர்ந்தவன்,
பல்வேறு உருவங்கள் மற்றும் நாமங்களில் உள்ள வேறுபாட்டை அழித்தொழித்தவனாய் இருப்பான்.
தனக்குள்ளே இருப்பவனை தினம் தினமும், தெளிவாய் ஒளிவிடும், எங்கும் நிறை சித் மற்றும் ஆனந்தமாக,
உருவங்களுக்கெல்லாம் அறிவானதாக உணர்வான்.

மேலும், அடுத்த பாவில்:

பா 41:

அறிவான் அறிவோடு அறிபடுவ பேத

முறுபரம் ஆன்மாவி லுறாதே - அறிவு

இன்புருவாய் ஒன்றாய் அஃதுறுவதன் ஆற்றான்

உருவாலே தானொளிருமொரு மோர்.

விளக்கம்:
பிரம்மத்தினைப் பற்றி அறியும் ஞான அறிவுக்கும், (Knowledge)
அந்த அறிவால் அறியப்படும் பிரம்மத்திற்கும் இடையே, (object of the Knowledge)
வேறுபாடு ஏதும், பரமன் தன்னில் இருப்பதை அறிந்ததொரு ஆன்மாவில் ஏற்படாது.
ஏனெனில், அந்தப் பரமன், அறிவு மற்றும் ஆனந்தத்தின் உருவாய், ன்றாய்,
இருப்பதால், அந்த ஆன்மா சுடர் விட்டு தானாக ஒளிர்ந்து கொண்டு மட்டும் இருக்கிறது.

----------------------------------------------------------------------------------
இந்த நிலையினை - நிர்விகல்ப சமாதி நிலை என்பர். இந்த நிலையின் பரமனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் ஆன்மாவிற்கு, ஒன்று, ஒன்றென, எல்லாமே ஒன்றாக மட்டும் தெரியுமாம்.
இதற்கு முந்தைய நிலையான - சவிகல்ப சமாதி நிலையில், பரமனுக்கும் தன் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டினை ஆன்மாவால் உணர இயலும் என்றும் சொல்வர்.


---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Saturday, February 02, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஏழு

பா 37:

நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்

பிரம்மமே யான் அவனென்னும் உறுதி

அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்

ஒழிக்கும் இரசாயனம் ஒத்து.


விளக்கம்:
யானே அவன் - யானே பிரம்மம் என்று கொள்ளும் அந்த அசைக்கமுடியாத உறுதியினால்
சத்-சித்தினில் தொடர்ந்து நிரந்தரமாய் தெரியும் ஒளியின் பிம்பம்.
எப்படி இரசாயன மருந்தினை உட்கொண்ட உடன் அது தணிக்கும் நோய்கள் அது அழிப்பது போல,
அறியாமையினால் ஏற்படும் தடுமாற்றங்களை அந்த உறுதி அழித்திடுமாம்.

-------------------------------------------------------------------------------

உறுதி என்கிற சொல்லாடலை கவனிக்கவும்! (நம்பிக்கை மட்டுமல்ல, உறுதி, அசைக்க முடியாத உறுதி).
இரசாயனம் - பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது, பேரின்பம் அன்றுள்ளே. மற்ற மருந்துகள் உள்ளுக்குத் தின்றாலும் வல்லே வல்லே என்றே...

நிரந்தரமாய் நிகழ்த்தப்படும்: - தொடர்ந்து ஒரு ஆன்மீக சாதகன் யோகத்தினில் ஆழ்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிற பிரம்மத்தினை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே இருப்பானேயானால், அந்த பிரம்மத்தின் பிம்பத்தினை தன் அகத்தில் திகழ்வதனைக் காணுவான்.

ஒரு ஆன்மீக சாதகன் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அடுத்த பா சொல்கிறது.

பா 38:
ஏகாந்த தேசத் திருந்தாசையின்றி வெளி

போகாது வென்று பொறிகளை - ஏகமா

அந்தமி லான்மாவை அன்னியமில்(லா) புந்தியானாய்ச்

சிந்திக்க வேண்டுதன் தெரி.
விளக்கம்:
ஏனையவரின் அருகாமையில்லாத தனியானதொரு இடத்தில்,
ஆசைகள் ஏதுமில்லாமல்,
மனது அகத்தை விட்டு வெளியே போகாது கட்டுப்படுத்தி,
ஐந்து புலன்களையும் வென்று,
முடிவில்லாத ஆன்மாவில் இடராத கவனத்தை நிறுத்தி,
தன்னை விட்டு வெளியே இல்லாத உயர் ஞானத்தினை அடைய,
இரண்டென்றில்லாமல் ஒன்றாய் (ஏகமாய்) ஆன்மாவைக் கருதி தியானிக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்