புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவிற்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே - சுத்தமாம்
விண்ணென வொன்றாய் விளங்கிடு மான்மாவை
யெண்ணுக வெப்போது மே.
விளக்கம்:
தான் காணும் பொருள் யாவற்றிலும், தன் அறிவினைக் கொண்டு ஆன்மாவில் இணைதலைச் செய்து காட்டுவர் உயர் ஞானம் பெற்றார்.
மேலும் அவர்கள் எப்போதும் ஆன்மாவை - சுத்தமான - மேகங்களற்ற ஒளிர் விடும் வெளிர் வானத்துக்கு ஒப்பாகக் கொள்வர்.
--------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் நாம் அறிவால் உணரும் அனைத்து உணர்வுகளும் சுயத்தின் சார்புடையவையாகவே இருக்கின்றன. எனக்கு பரிசு கிடைத்துவிட்டது, அல்லது என்னால் ஏதும் இயலவில்லை என்பது போல - எல்லாமே நான், எனது என்கிற உணர்வின் அடிப்படையினால். இது தாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பென அலறும் தோற்ற மயக்கத்தை ஒத்தது. பார்க்கும் தோற்றங்களுக்கு உண்மையான அடிப்படை என்ன? சுயத்தில், நான் எனது என்று தெரிவதெல்லாம் எதன் பிம்மம்? ஆன்மாவெனும் கண்ணாடியில் தெரிவது பிம்பம் எனில், ஏதோ ஒரு மூலப் பொருள் இருக்க வேண்டுமே? அந்தப் மூலப் பொருளென்ன? - என்ற கேள்விகள் சுயத்தில் எழுந்திட அறிவெனும் சுடரின் வெளிச்சத்தில் சுட்டுக் கருகாதோ அறியாமை இருள்.
காணும் பொருள் யாவற்றிலும் :
"பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா..."
போன்ற அமர வரிகளை நினைவில் கொள்க.
எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்தவன் எப்படி இருப்பான்?
அடுத்த பா சொல்கிறது:
பா 40:
உள்ள துணர் தோனுருவம் வருண முத
லுள்ள மயல்கள் ஒருங்கொழித் - துள்ளான்
திகழ்பரி பூரபோன்ற சித்தானந்தன் தானாத்
திகழ்ந்திடுவ நாளுந் தெளி.
விளக்கம்:
எங்கும் நிறை பரமனின் 'இருப்பை' உணர்ந்தவன்,
பல்வேறு உருவங்கள் மற்றும் நாமங்களில் உள்ள வேறுபாட்டை அழித்தொழித்தவனாய் இருப்பான்.
தனக்குள்ளே இருப்பவனை தினம் தினமும், தெளிவாய் ஒளிவிடும், எங்கும் நிறை சித் மற்றும் ஆனந்தமாக,
உருவங்களுக்கெல்லாம் அறிவானதாக உணர்வான்.
மேலும், அடுத்த பாவில்:
பா 41:
அறிவான் அறிவோடு அறிபடுவ பேத
முறுபரம் ஆன்மாவி லுறாதே - அறிவு
இன்புருவாய் ஒன்றாய் அஃதுறுவதன் ஆற்றான்
உருவாலே தானொளிருமொரு மோர்.
விளக்கம்:
பிரம்மத்தினைப் பற்றி அறியும் ஞான அறிவுக்கும், (Knowledge)
அந்த அறிவால் அறியப்படும் பிரம்மத்திற்கும் இடையே, (object of the Knowledge)
வேறுபாடு ஏதும், பரமன் தன்னில் இருப்பதை அறிந்ததொரு ஆன்மாவில் ஏற்படாது.
ஏனெனில், அந்தப் பரமன், அறிவு மற்றும் ஆனந்தத்தின் உருவாய், ஒன்றாய்,
இருப்பதால், அந்த ஆன்மா சுடர் விட்டு தானாக ஒளிர்ந்து கொண்டு மட்டும் இருக்கிறது.
----------------------------------------------------------------------------------
இந்த நிலையினை - நிர்விகல்ப சமாதி நிலை என்பர். இந்த நிலையின் பரமனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் ஆன்மாவிற்கு, ஒன்று, ஒன்றென, எல்லாமே ஒன்றாக மட்டும் தெரியுமாம்.
இதற்கு முந்தைய நிலையான - சவிகல்ப சமாதி நிலையில், பரமனுக்கும் தன் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டினை ஆன்மாவால் உணர இயலும் என்றும் சொல்வர்.
---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்
உள்ளேன் ஐயா! மகிழ்வுடன்!
ReplyDeleteஜீவா,
ReplyDeleteநிர்விகல்ப ச்மாதி சரி, அதென்ன சவிகல்ப சமாதி?. இரண்டையும் எப்படி வேறுபடுத்துவது?...ஏதேனும் விளக்கம் / சுட்டி கிடைக்குமா?. அட் லிஸ்ட் படித்தாவது தெரிந்து கொள்ளலாமேன்னுதான்...:-)
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறாக உணரப்படாமல் ஒன்றேவாக உணரும் நிலை நிர்விகல்ப சமாதி. இரண்டும் தனித்தனியாக உணரும் நிலை சவிகல்ப சமாதி
Deleteமிக்க நன்றி, திரு.வி.எஸ்.கே சார், தங்கள் வருகை எனக்கு ஊக்கம் ஐயா!
ReplyDeleteவாங்க மதுரையம்பதி,
ReplyDeleteசவிகல்ப சமாதி என்பது பரிபூரண சமாதி நிலைக்கு முந்தைய நிலை. இந்த நிலையில் ஜீவனும் பரமனும் வேறாகவேத் தெரிந்தாலும், சச்சிதானந்தத்தினை உணர இயலுமாம். இந்த நிலையை தாண்ட இயலவிட்டால், மீண்டும் நம் சாதரண நிலைக்கே வர வேண்டியதுதான்.
அதற்கு அடுத்த நிலை - நிர்விகல்ப சமாதி - இதுவே இறுதி நிலை - இதில் பரமனே எல்லாம் என உணர்ந்த நிலை. இந்த நிலையில் உடலுக்கு திரும்பும் ஆவலேதும் இருக்காது.
இருப்பினும் இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அவதார புருஷர்கள், தங்கள் அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக, அந்த நிலையில் இருந்தும் திரும்பி தங்கள் பூத உடலுக்கு திரும்பி வந்திருக்கிறதால், இன்னொரு நிலையும் சொல்லப்படுகிறது - அதன் பெயர் : சஹஜ நிர்விகல்ப சமாதி நிலை.
சுட்டிகள்:
ஆங்கில விக்கிபீடியாவில்
ஸ்ரீ சின்மய் தளத்தில்
இந்த இடுகையில் இருக்கும் முதல் பாடலில் இருக்கும் விண், தஹராகாசம், குடாகாசம் என்று பல இடங்களில் வரும் ஆகாசத்தைக் குறிக்கிறதா ஜீவா? எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் நிறைந்து அவற்றிற்கு அடிப்படையாக அவையேயாக இருக்கும் விண் தான் பிரம்மம் என்றும் வேதாந்தத்தில் எங்கோ சொல்லப்பட்டதாக நினைவு. இங்கே பிரம்மம் விண் போன்றது எனப்படுகிறது.
ReplyDeleteவருக குமரன்,
ReplyDeleteஅறிவியலார் அண்ட வெளிதனைத் தேடி அல்லும் பகலும் உழைத்து செயற்கை கோள்களை அனுப்பி வான்வெளிதனை படம்பிடித்து புறக்கண்ணால் பார்க்க முயற்சிக்கின்றனர்.
இங்கே மெய்யியலாரோ, 'சும்மா' இருந்துகொண்டே, அண்ட வெளிகளாய் இருப்பதை அகத்தினிலே மனக்கண் முன் பார்க்கின்றனர்!
அப்பழுக்கற்ற தெளிவான வானம் போல் பிரம்மம் என்கிறது இந்தச் செய்யுள். விண் தான் பிரம்மம் என்பதைவிட பிரம்மம்தான் விண் என்பது சரி.
(சொல்பவரின் முதிர்ச்சியைப் பொறுத்தும் இருக்கிறது. முக்தி அடைத்தவருக்கு எல்லாமே ஒன்று. அடையாதவருக்கு இரண்டு)
குடாகாசம், தகராகாசம் போன்றவற்றை இங்கு குறிப்பிடுவதாக நினைக்கவில்லை.