Saturday, February 02, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஏழு

பா 37:

நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்

பிரம்மமே யான் அவனென்னும் உறுதி

அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்

ஒழிக்கும் இரசாயனம் ஒத்து.


விளக்கம்:
யானே அவன் - யானே பிரம்மம் என்று கொள்ளும் அந்த அசைக்கமுடியாத உறுதியினால்
சத்-சித்தினில் தொடர்ந்து நிரந்தரமாய் தெரியும் ஒளியின் பிம்பம்.
எப்படி இரசாயன மருந்தினை உட்கொண்ட உடன் அது தணிக்கும் நோய்கள் அது அழிப்பது போல,
அறியாமையினால் ஏற்படும் தடுமாற்றங்களை அந்த உறுதி அழித்திடுமாம்.

-------------------------------------------------------------------------------

உறுதி என்கிற சொல்லாடலை கவனிக்கவும்! (நம்பிக்கை மட்டுமல்ல, உறுதி, அசைக்க முடியாத உறுதி).
இரசாயனம் - பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது, பேரின்பம் அன்றுள்ளே. மற்ற மருந்துகள் உள்ளுக்குத் தின்றாலும் வல்லே வல்லே என்றே...

நிரந்தரமாய் நிகழ்த்தப்படும்: - தொடர்ந்து ஒரு ஆன்மீக சாதகன் யோகத்தினில் ஆழ்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிற பிரம்மத்தினை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே இருப்பானேயானால், அந்த பிரம்மத்தின் பிம்பத்தினை தன் அகத்தில் திகழ்வதனைக் காணுவான்.

ஒரு ஆன்மீக சாதகன் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அடுத்த பா சொல்கிறது.

பா 38:
ஏகாந்த தேசத் திருந்தாசையின்றி வெளி

போகாது வென்று பொறிகளை - ஏகமா

அந்தமி லான்மாவை அன்னியமில்(லா) புந்தியானாய்ச்

சிந்திக்க வேண்டுதன் தெரி.
விளக்கம்:
ஏனையவரின் அருகாமையில்லாத தனியானதொரு இடத்தில்,
ஆசைகள் ஏதுமில்லாமல்,
மனது அகத்தை விட்டு வெளியே போகாது கட்டுப்படுத்தி,
ஐந்து புலன்களையும் வென்று,
முடிவில்லாத ஆன்மாவில் இடராத கவனத்தை நிறுத்தி,
தன்னை விட்டு வெளியே இல்லாத உயர் ஞானத்தினை அடைய,
இரண்டென்றில்லாமல் ஒன்றாய் (ஏகமாய்) ஆன்மாவைக் கருதி தியானிக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

6 comments:

  1. //அப்பிரம்மமே யான் அவனென்னும் உறுதி//

    //உறுதி என்கிற சொல்லாடலை கவனிக்கவும்! (நம்பிக்கை மட்டுமல்ல, உறுதி, அசைக்க முடியாத உறுதி)//

    நல்ல விளக்கம் ஜீவா!
    அப்பிரம்மமே யான் என்னும் உறுதின்னு சொல்லி இருக்கலாம்
    அப்பிரம்மமே அவன் என்னும் உறுதின்னும் சொல்லி இருக்கலாம்

    ஆனா அப்பிரம்மமே "யான்-அவன்" என்னும் உறுதி-ன்னு பிரிக்காமல் சேர்த்து சொல்லுவது தான் அருமை!

    வரிகளில் கூட பிரிவு இல்லை-ன்னா அதுக்கு எவ்வளவு உறுதி, திட விசுவாசம் வேணும்?

    ReplyDelete
  2. கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள் KRS!
    , மிக்க மகிழ்ச்சி!
    பிரம்மமே - யான்
    யானே - அவன்
    அவன் - பிரம்மம்
    ஒரு சுழற்சி போலுள்ளது - பிறவிச்சுழல் தீர்க்கும் சுழல்
    இச்சுழலோ?!

    ReplyDelete
  3. Jeeva,

    Atmabodham - ungal vilakaavuraiyudan padikka naerndhadhu. Nandraayirukkiradhu.

    Atmabodhathai ezhudhiyavar yaar? Ramanaraa?

    ReplyDelete
  4. விஜய்,
    ஆத்ம போதம் ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது.
    ரமணர் தமிழில் வெண்பாக்களாக வடித்திருக்கிறார்.
    அதைப்பற்றி ஒரு கதையே உண்டு. அதனை தொடக்கத்தில் தந்திருக்கிறேன், இந்நேரம் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ஸோஹம் ஹம்ஸோஹம் (ஸ அஹம் - அவன் நான்) என்ற மந்திரத்தைப் பற்றி 37ம் பாடல் நன்கு சொல்கிறது ஜீவா.

    இராமகிருஷ்ணர் 'எடுத்தவுடனேயே ஒரு சாதகன் ஸோஹம் என்று தொடங்காமல் தாஸோஹம் என்று தொடங்கினால் நல்லது' என்றொரு கருத்தைச் சொல்லுவார். அது இங்கே நினைவிற்கு வருகிறது.

    இங்கே சொல்லப்படும் உறுதியைத் தானே கீதையில் கண்ணன் 'த்ருடநிச்ஸய' என்று சொல்லுகிறார்.

    இருக்கும் பொருளெல்லாம் பிரம்மம் என்ற தெளிவு பிறக்க மற்றவர் யாரும் இல்லாத ஏகாந்த தேசத்திற்குச் சென்று சாதகம் செய்ய வேண்டியிருப்பது ஒரு முரண் தான். ஆனால் அது உண்மையும் கூட. எல்லாமும் பிரம்மம் என்று தோன்றாதவரை நான், அவன், அது என்ற பிரிவினைகள் இருக்கத் தானே செய்கின்றன; அவை இருக்கும் வரை 'மற்றவர்கள்' இல்லாத இடத்திற்குச் சென்று சாதகம் செய்வது தேவையாகிறது போலும்.

    ReplyDelete
  6. விளக்கம் நன்று குமரன்.

    ReplyDelete