Sunday, February 10, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஒன்பது - அகலும் மடமை

பா 42:

ஆன்மா வெனும் அவ்வரணியில் இவ்விதம்

ஆன்மத் தியான வகமதனன் - தான்முயன்று

சந்ததஞ் செய்தலாற் சார்ஞானத்தீ மடமையி

இந்தனமெல்லாம் எரிக்கு மே.


அரணி : தீக்கடை கோல் - குச்சிபோன்ற இந்த கோல் தனை வேகமாக உரசி தீ மூட்டுவர்.
இந்தனம் : விறகு

விளக்கம்:
ஞானத்தீயானது அறியாமை என்னும் மடமையை எரித்திடுமாம்.
எதைப் போல?
தீக்கிடை கோல் கொண்டு விறகில் உரசி உரசி, சிறுபொறியின் மூலம் கிளப்பப்படும் தீ போல.
எவ்வாறு?
தொடர்ந்து முயற்சியுடன், உராய்வு விசையினைத் தருவதன் மூலமாக.
அதுபோல,
ஆன்மாவெனும் கோல் கொண்டு தொடர்ந்து தளராத முயற்சியுடன் உள்ளார்ந்து தியானம் செய்யச் செய்ய -
என்னவாகும்?
சிறு பொறி மூட்டும் ஞானத்தீ கனன்று கொழுந்து விட்டு எரியும்.
கூடவே, ஆன்மாவை பிரித்து வைத்திருக்கும் அறியாமை எரிந்து போகும்.
பிறகென்ன?
ஆன்மா தன் தனித்ததல்ல என அறிய, பின் எல்லாம் பேரின்பமயமே.

பா 43:

அருணனாலே அல் அகலுதல் போல்முன்

மரும் அறிவால் அம் மடமை இரியவே

பொங்கும் ஆன்மா பரிபூரண மாகவே

பொங்கும் ஆதித்தனைப் போல்.


அல் : இரவு
இரிதல் : தேய்ந்து அழிதல்

விளக்கம்:
அருணனின் வருகையால் இரவென்னும் இருள் அகலுதல் போல்,
ஞானமென்னும் அறிவின் வருகையால் அறியாமை என்னும் மடமை தேய்ந்து மறையும்.
மேலும், பேரறிவினால், ஆன்மா பொங்கி நிறைந்திடும், பரிபூரணமாக நிறைத்திடும்.
பொங்கிடும் ஆதவனின் கதிர்கள், இருள் நிறைந்திருந்த இடத்திலெல்லாம் பரவி நிறைப்பது போல்.

சூரியன் - பிரம்மத்தினைப்போல் எப்போதும் தானாகவே ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது.
அறியாமை அழிந்தவுடன், ஆன்மா தன் உண்மையான சொரூபத்தினை தானாக உணர்ந்திடும். அதற்கு வேறெந்த பயிற்சியும் தேவையில்லை. வேறொருவரின் துணையும் தேவயில்லை.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

2 comments:

  1. //அறியாமை அழிந்தவுடன், ஆன்மா தன் உண்மையான சொரூபத்தினை தானாக உணர்ந்திடும்//

    இது தான் மஹா மாயா ஸ்வருபத்தின் லீலை?

    ReplyDelete
  2. ஆம், மதுரையம்பதி.
    மாயாசக்தியினைப் பற்றி மேலும் படிக்க நேரும்போது மேலும் விளக்கமாகத் தருகிறேன்.

    ReplyDelete