Friday, November 23, 2007

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா - என்
அகம்அது வீடு கொள்ள வரும்முருகா

வருவது வரட்டும் என உனை நான் பற்றிட
உறுதுணை இருக்குது உன் ஆற்றுப்படை.

அறுபடை வீடுதன் பொருளென்ன பெருமானே?
அருமருந்தாய் யோகியரும் சொல்வதென்னே?

கனல் அது பொறியாகி எழுந்தி(ட்)ட மூலதாரத்தில்
கருவாகி தண்டினில் ஏற்றிடும் திருப்பரங்குன்றமோ

மறைபொருள் உணர்த்திடும் சுவாதிஷ்ட்டானத்தில்
தவநிலையில் நின்றி(ட்)ட திருச்செந்தூரோ

பயம்தனை அகற்றிடும் மணிப்பூரத்தில்
தடைகளை தகர்த்தி(ட்)ட பழநியோ

நேரடியாய் தன்அறிவு தூர்ந்திடும் அனஹதத்தில்
சுழன்றிடும் இதயச் சுடராக சுவாமிமலையோ

இறை அன்புக்கதவை திறந்திடும் விசுத்தியில்
நிறை அன்பினை அருளும் திருத்தணிகையோ

உச்சியில் உறைந்திடுவானை பற்றிட ஆக்ஞைசக்ரத்தில்
நெற்றிக்கண் பற்ற எரியும் பழமுதிர்ச்சோலையோ

அறுபடை வீடுதன் பொருள்தனை அருள்வாயே,
அருமருந்தாம் உனை பற்றிடச் செய்வாயே,

முருகா, முருகா, முருகா, முருகா, முருகா, முருகா.

10 comments:

 1. அறுபடை வீடுகளையும், ஆறு சக்கரங்களோடு ஒப்பிட்டு எழ்ழுதிய பாடல் பிரமாதம்!

  சித்தர் கதையிலும் நீங்கள் வந்து இக்கருத்தைச் சொல்லியிருந்தீர்கள்!

  இந்த ஆறாம் படை வீட்டை குன்று தோறாடல் எனவும் சொல்லுவார்கள்!
  பழமுதிர்சோலை என ஒரு இடத்தை மட்டும் குறிப்பிடாமல், அந்த ஆறாம் சக்கர நிலை வருகையில், மனம் எல்லையற்ற பெரும்வெளியில் சஞ்சரிக்கும் என்பதாகவும் இருக்கலாமோ?

  ReplyDelete
 2. நல்ல கற்பனை ஜீவா. தெற்கிலிருந்து வடக்கு போனால் முதலில் திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம்,பழமுதிர்சோலை,பழனி
  சுவாமிமலை திருத்தணிகை என்று வரும். குறிப்பிட்ட சக்கரங்களுக்கான தலங்கள் வேறு ஏதேனும் ஸ்தல புராணங்களின் அடிப்படையானால் அதை குறிப்பிடவும்.
  ஏதோ ஒரு யோகமுறையில் தலையை தெற்காகவும் காலை வடக்காகவும் படித்ததாக நினைவு. அதன்படி அமைத்தால் சக்கரங்களுக்கான தலங்கள் திருத்தணியில் மூலாதாரம் அமையும். யோசிப்பதற்கு நல்லவிஷயம் கிடைத்தது. நன்றி

  ReplyDelete
 3. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ‍ அவன்
  ஆலயத்தில் அன்பு மலர் பூசை செய்தேன்.
  இந்த புனித தினத்தன்று

  ஓம் ஸ்ரீம் சரவண பவ

  எனும் திருமந்திரம் தங்களுக்கு உபதேசமாக
  எனது ஆசிகள்.

  இன்று திருக்கார்த்திகை தீபத்திரு நாள்.
  மலையில் தீபப் பேரொளியைக்கண்டிட‌
  வாருங்கள்.

  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 4. தீபத்திருநாளன்று அழகான தமிழ்ப் பாடல் அழகு முருகனுக்கு - நன்றி ஜீவா

  ReplyDelete
 5. வருக திரு. V.S.K மற்றும் கபீரன்பன் - அடுத்த பதிவில் இந்த ஒப்பீடை மேலும் விரிவாக்கி எழுதுகிறேன். வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

  ReplyDelete
 6. மந்திர உபதேசத்திற்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி சூரியநாராயணன் ஐயா.

  நன்நாளில் ஜோதி தரிசனமும் தங்கள் தயவால் ஆயிற்று, மிக்க நன்றி.

  ReplyDelete
 7. திரு சீனா - தங்களுக்கும் பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. மி்க நல்ல ஒப்பிடல் ஜீவா. அருமை.

  ReplyDelete
 9. வாங்க குமரன், அடுத்த பகுதியும் பார்த்தீங்களா?

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails