குழந்தைகளே, அமெரிக்க சுற்றுலா பயணம் போகலாமா?, நீங்களும் வாரீங்களா? உங்களுக்கு அமெரிக்காவில் என்னென்ன இடங்கள் பிடிக்கும்? நியூ யார்க், வாஷிங்டன், ஒர்லாண்டோ, லாஸ் வேகஸ், கலிபோர்னியா டிஸ்னி லேண்ட் இப்படி நிறைய இடங்கள் உங்களுக்குத் தெரியும் இல்லையா? இந்த இடங்களெல்லாம், பெரிய ஊர்கள் அல்லவா? இங்கே இருக்கும் எல்லாமே பெரிசு பெரிசா இருப்பது ஆச்சரியமாக இருக்கு இல்லையா!. ஆனா, இவற்றில் பலவும் செயற்கை அழகு. செயற்கை அழகைக் காட்டிலும் இயற்கை அழகு, இன்னும் இனிமையா இருக்கும். மனதை அப்படியே இளக வைக்கும். இந்தியாவில் இருந்து, சுவாமி விவேகானந்தர் முதன் முறை அமெரிக்கா வந்திருந்தபோது, இங்கே இருக்கிற இயற்கை அழகைப் பார்த்து, அப்படியே பரவசப் பட்டாராம். நீங்களும் விவேகானந்தரைபோல் நாளைக்கு வரவேண்டுமல்லவா, நீங்களும் இந்த இயற்கை அழகை இரசிக்கலாமே!.
சிறுவர், சிறுமியரே, வாங்க, நம் இயற்கைச் சுற்றுலாவைத் துவங்கலாம்.
* அமெரிக்கா மேப் வரைபடத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன உடனே தெரிகிறது?. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய 'பெருங்கடல்'கள் இருக்குது இல்லையா?. கிழக்குப் பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்குப்பக்கம், பசுபிக் பெருங்கடலும் இருக்கு இல்லையா? இந்தக் கடல்களும் நிலமும் சேரும் இடத்தில் நிறைய கடற்கரைகள் இருக்கு. (கடல் + கரை = கடற்கரை). கடற்கரையில் என்ன இருக்கும்? நிறைய மணல் இருக்கும், இல்லையா?. அப்புறம் நல்லா காத்து வரும், இல்லையா!
* அடுத்து வரைபடத்தில் நீங்கள் கவனிக்கக் கூடியது, கிழக்குக் கடற்கரையின் கடலில் நீளமாக, நீட்டிக் கொண்டிருக்கும் ஃபோளிரிடா மாகாணம். இங்கே, தாழ்வான சதுப்பு நிலங்களில் நிறைய பறைவைகளைப் பார்க்கலாம். பலவிதமான பறவைகள், பலதூரம் பயணம் செய்து இங்கே வந்திருக்கும். வருடம் முழுதும் இந்தப் பறவைகள், ஒரு இடம் விட்டு ஒரு இடம் என இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். அவைகளுக்கு, யாதும் ஊரே, யாவரும் கேளிர். வண்ணப் பறவைகளைக் காணும்போது, மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று நம்ம பாரதியார் சொல்லி இருக்காரு இல்லையா! படத்தில் எவர்கிளேட்ஸ் தேசிய பூங்காவில் அழகான வெள்ளை வெளீரென ஒரு கொக்கு இருக்கிறது அல்லவா. இதற்குப் பெயர் - பெரிய வெள்ளை ஹெரான் (The great white heron) என்பது.
* அடுத்து, மேப்பில் கிழக்குப் பக்கதில் நிலத்தின் நடுவே கடல்போல நிறைய நீர் இருக்குதல்லவா? இவை ஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) எனப்படும்.
இந்த ஐந்து ஏரிகளில் இரண்டில் இருந்து வெளியேரும் ஆறில் இருந்து நயகரா நீர்வீழ்ச்சியே பிறக்கிறதாம். தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று நீங்கள் படிச்சிருப்பீங்க இல்லையா, அதுபோல, இந்த ஐந்தும் பெரியது!
* பிரம்மாண்டமான நயகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி நாம நிறைய பேரு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா. படத்தில் பெரிய படகில், இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகே சென்று பார்க்கிறார்கள் பாருங்க. இதற்குப் பெயர் 'Maid of the Mist' என்று வைத்திருக்கிறார்கள். Misty-ஆக அந்த இடமே இருக்கு இல்லையா. அதன் பக்கத்திலே போகும்போது, அதன் சாரலில் நாம்ப நனைய, சுகமா இருக்கும் இல்லையா. நம்ப கவிஞர் வைரமுத்து, இந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது, "இந்த நீர் வீழ்ச்சியில் நீருக்கு இது வீழ்ச்சியல்ல" என்று சொன்னாராம்!.
* அடுத்து, குளிர்காலத்தில் பனியால் நிறைந்து எழில் கொஞ்சும் கொலராடோ ராக்கி மலைத்தொடரின் சிகரங்கள். இங்கே பனிசறுக்கும் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு. பனிச்சறுக்குவது மட்டுமல்லாமல், ஸ்னோமொபைல், எனப்படும் பனியில் செல்லும் வாகனத்தில், பனிமலையில் பயணிக்கலாம். டாக் ஸ்லெட்ஜிங் எனப்படும், பனிநாய்களால் கட்டி இழுக்கப்படும் வாகனத்திலும் செல்லலாம். நம்ப பாரதியாரும், 'வெள்ளிப்பனியின் மீதுலாவுவோம்' என்று பாடி இருக்கிறார் இல்லையா!
* அடுத்து மேப்பில், பார்த்தால் உங்களுக்குத் தெரியும், தனியா ஒரு மாநிலம் வடமேற்குப் பக்கமா இருக்கும். அது தான் அலாஸ்கா மாகாணம். இது அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களிலேயே பெரிதான மாநிலம். பனி உறைந்த ஏரிகளும், வன விலங்குகளும் இங்கே நிறைய இருக்கு. இங்கே சுற்றுலா பார்க்கப்போகும் மக்கள் நிறைய பேராம். பலர் பெரிய கப்பலில் சென்று பார்ப்பார்கள். இந்த மாநிலம், தனியா இருந்தாலும், அமெரிக்காவோடு ஒன்றிணைந்து, ஒற்றுமையா இருக்கு. அதுபோல நாமளும் ஒண்ணா, ஒற்றுமையா இருக்கக் கத்துக்கணும். பிரிவு, பிரிவு என்று பேசக்கூடாது. அப்படிப் பேசுபவர்களையும், அன்பால், நம்மோடு இணைக்கணும்.
* கலிஃபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களுக்கு நடுவே, தாஹூ ஏரி எனப்படும் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இரம்மியமான இதில் படகுச் சவாரி செய்வது ஒரு இதமான அனுபவம். அடுத்ததாக, இந்த மாநிலத்தின் யோசிமிட்டி அருவியும், அழகான மலைகளும் கண்கவர் காட்சியாக இருக்கும்.
* நமது பட்டியலில் அடுத்து இருப்பது, பிரம்மாண்டமான அகலமும், நீளமும், ஆழமும் நிறைந்த கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு. இது அரிசோனா மாநிலத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 17 மில்லியன் வருடங்களுக்கு முன்னால், கொலரடா நதியின் அரிப்பால் உருவாகி இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்லும் இவ்விடம், இயற்கையின் விந்தையாக உள்ளது.
* இறுதியாக நம் பட்டியலில் பார்க்கப்போவது, யெல்லோஸ்டோன் மற்றும் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா. பூகம்மம், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்களால், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் புரட்டிப் போடப்பட்ட இந்த நிலப்பகுதி, பல இயற்கை விந்தைகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. பெரும் மலைகளும், பச்சை சமவெளியும் அருகேயே பார்க்கலாம். பல வன விலங்குகளில் தஞ்சமாக இருக்கும் இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து, பல நூறு வருடங்களாக, இந்தப்பரப்பின் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் வராமல் பாதுகாத்து வருகிறார்கள். குழந்தைகளே, நாம் எல்லோரும், நம் இயற்கையை மிகவும் நேசித்துப் பாதுகாக்க வேண்டும்.
அன்புச் சிறார்களே, இந்த ஆன்லைன் இயற்கைச் சுற்றுப்பயணம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பல செய்திகளை அறிந்து கொண்டீர்களா, நல்லது. இதுபோல நீங்கள் அறிய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கு. நீங்களாகவே படித்து அறியலாம். அல்லது, உங்களுக்கு இன்னும் படித்தறியும் வயது வராமல் இருந்தால், உங்கள் அம்மா, அப்பாவையோ அல்லது வீட்டில் இருக்கும் பெரியவரையோ அல்லது உங்கள் அண்ணன் அல்லது அக்காவையோ, படித்துக் காட்டச் சொல்லுங்கள். பொது அறிவுனை ஊட்டும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும்.
கடைசியாக நாம், நம் சுற்றுப்பயணத்தில் பார்த்த யெல்லோஸ்டோன் பற்றி மேலும் விரிவான கட்டுரையை நான்கு பகுதிகளில் எழுதி இருக்கிறேன். குளிர்காலத்தில் யெல்லோஸ்டோன் எப்படி இருக்கும் என இக்கட்டுரை கூறுகிறது. தவறாமல் அவற்றைப் படிக்க வேண்டும்.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப்போம்.
என்ன, இன்னொரு நாள் பார்க்கும் வரை, விடைபெறலாமா?. Bye, Bye.
இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப்போம்.
ReplyDeleteபதிவிற்கு நன்றி.
சுவாரசியமான பதிவு! அப்புறம் அங்கே புவி ஈர்ப்பு விசை மாறுதலாக இருக்கும் இடம் ஒண்ணு இருக்கில்லையா? அங்கே எடுத்த படங்கள் போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்!
ReplyDeleteசுற்றுலா நல்லா இருந்தது ஜீவா. :-)
ReplyDeleteசிறார்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்கு நாம் செய்யும் எந்தப் பணியும் இறைப்பணி தான்.
ReplyDeleteஅதுவும் இறைவன் உறைந்திருக்கும் இயற்கையைப் பற்றிய செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
குழந்தைகளுடன் பழகிப் பேசுகிற மாதிரி, பதிவிட்டிருப்பதற்குப் பாராட்டுகள். பெரியவர்களுக்கும் நிறைய செய்திகள் இருப்பது தான் இந்தப் பதிவின் விசேஷம்.
உங்கள் நட்சத்திர வாரம் மிகவும் இனிமையாகவும், விஷயத்தெளிவுடன் பொழுது போக்காகவும் இருந்தது. மிக்க நன்றி.
அருமை .
ReplyDeleteபயனுள்ள பதிவு! நன்றி!!
ReplyDeleteநட்சத்திர வாரத்தில் சிறுவர்களையும் மறக்காமல் அவர்களுக்கும் ஒரு பதிவு போட்டது நன்றாக இருந்தது.
ReplyDeleteஇதில், சில எனக்கு இப்போது தான் தெரியும்.
வாருங்கள் வேளராசி, தங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க திவா சார்,
ReplyDelete//புவி ஈர்ப்பு விசை மாறுதலாக இருக்கும் இடம் ஒண்ணு இருக்கில்லையா? //
இதுபோல சிறுவர்களைக் கவரும் சில இடங்கள் இருக்கு! நாங்கள் சென்று வந்தது - Santa Cruz-இல் இருக்கும் Mystery Spot:
http://www.roadsideamerica.com/story/2033
அது இருந்த வீடே கொஞ்சம் சாய்வான இடத்தில் இருந்ததால், அதனால் தான் சரிவாக இருந்ததாக நினைப்பு. இயற்கையா செயற்கையா எனத் தெரியவில்லை!
வாங்க குமரன்,
ReplyDelete//சுற்றுலா நல்லா இருந்தது ஜீவா. :-)//
நல்லது, :-)
வாருங்கள் திரு.ஜீவி,
ReplyDelete//குழந்தைகளுடன் பழகிப் பேசுகிற மாதிரி, பதிவிட்டிருப்பதற்குப் பாராட்டுகள்.//
தங்கள் பாராட்டுக்களுக்கு, நன்றி.
வாருங்கள் கல்யாண சுந்தர்,
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கு நன்றி.
தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.
நன்றி திரு.தேகா அவர்களே!
ReplyDeleteவாங்க வடுவூர் குமார்,
ReplyDelete//நட்சத்திர வாரத்தில் சிறுவர்களையும் மறக்காமல் அவர்களுக்கும் ஒரு பதிவு போட்டது நன்றாக இருந்தது.//
மழலைச் செல்வம், நம் செல்வமல்லவா.
நாளையின் வெடிவெள்ளிகள் நல்ல பாதையில் நடக்க வேண்டும்.
அதே இடம்தான் ஜீவா. சிறு வயதில் என் மகன் அங்க சென்று வந்தபோது எடுத்த படங்கள் கூட பெட்டியில் உண்டு!
ReplyDeleteவார இறுதியில் விரல் ஏரிச் சுற்றுப்பயணம் செஞ்சிட்டு வந்தா, இங்கிட்டு ஜீவா பெட்ரோல் செலவில்லாம இத்தினி ஊர்களுக்குக் கூட்டிக்கிட்டு போயி வந்திருக்காரு! முன்னாடியே சொல்லி இருந்தா பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி இருப்போமே ஜீவா :)
ReplyDeleteவாங்க கே.ஆர்.எஸ்,
ReplyDeleteஅதானே!
ஆனா, நீங்க இப்படி பெட்ரோல் விக்கற விலையிலே ஊர் சுத்திப்பார்க்க கிளம்புவீங்கன்னு நினைக்கலையே
!
பயணம் இனிமையா இருந்ததா?