Friday, March 18, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 1

நவம்பர் 2003 - நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கையில் வந்த ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கிறேன். இன்னமும் முழுவதாக, முடிக்காததால், பகுதிகளில், ஒரு தொடரைப்போல் வெளிவரும். அமெரிக்காவின் வித்யாசமான, அதே சமயம் வியத்தகு இயற்கை வனப்பை, அனுபவித்தவர்களும், கேள்வியால் மட்டுமே அறிந்தவர்களும், கேள்விப்படாதவர்களும் ஒருசேர படித்து நுகருங்கள்.

யெல்லோஸ்டோன் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா, அமெரிக்கா - அளவிடமுடியா பரிசுகள்


கிராண்ட் டெட்டானில் எங்கள் கேபினிலிருந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தால் எப்படி இருந்தது தெரியுமா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனிவெளி. அவற்றுக்கப்பால் வெளிர்ஊதா நிறத்து ஆஸ்பன் (Aspen) மரங்கள். அவற்றுக்கும் அப்பால் வெள்ளைவெளிர் சூரிய கதிர்கள். அதையும் தாண்டினால் மீண்டும் பூமியில் விண்ணைப்பிளந்து நிற்கும் ராக்கி மலைத்தொடர்கள். இந்த அழகிய பிரதேசம் பல கவிதைகளை மட்டுமல்ல, முதன்முறையாக தேசிய பூங்கா ஒன்றை அமைக்கும் அமெரிக்க சட்டத்தையும் உருவாக்கியது என்றால் பாருங்களேன். ஆனால் நானோ உங்களுக்கு இவ்விடம் தரும் அன்றாடப்பரிசுகளை அளவிடப்போகிறேன்.

இது மார்ச் மாதம். சூடு என்னும் சொல்லே மிகத்தொலைவில் இருந்தது - நாங்களோ குளிர் காலத்தின் இருக்கமான பிடிகளில். என் குதிரைகளோ தங்கள் தோள்களை சிலிர்த்துக்கொண்டும், தங்கள் வாலை வயிற்றுக்கடியில் இழுத்துக்கொண்டும் இருந்தன. அவற்றுக்காக, காய்ந்த புல்லை வெளியே எடுக்க, படர்ந்திருந்த பனியை அகற்றியபோது, என் திடீர் செய்கையை எதிர்பாராத நீல நிற ஹெரான் பறவை ஒன்று (இந்த சீசனில் இதுதான் முதல்முறை பார்க்கிறேன்) விண்ணுக்குப் பறந்து, சில்லென்ற எதிர்காற்றில் விரைந்தது, ஜுராசிக் காலத்து பறவை - டெர்ரோடாக்டெல் போலத்தோன்றியது எனக்கு. இதுதான் முதல் பரிசு.

பகலில் வயோமிங் வானொலியில் எச்சரிக்கைகள் வந்தவண்ணமாய் இருந்தன. நீண்ட குளிர்கால ஓய்விற்குப்பின் கரடிகள் வெளிவரக்கூடுமாம். பசியில் உணவு தேடிக்கொண்டிருக்கும் விலங்குகளிடம் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தனர். அதே சமயம், கேபினிலில் ஓர் ஓரத்திலிருந்த விறகுகளிலிருந்து வெளிவந்த ஈக்கள், நீண்ட நாள் வாழ்வோமென்ற நம்பிக்கையில் மேலே பறந்து, ஜன்னல் கதவுகளில் மோதி, என் தேனீர் கோப்பையில் வந்து விழுந்தன. வாழ்க்கை இருக்கிறதே - மிக அபாயகரமான, சிக்கலான மற்றும் சிறிது நெருடலுடன் கூடிய பெருமையுடன், உலகத்தின் இந்த மூலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது எனக்கு. இது இரண்டாவது பரிசு.

பின்னர், நாளின் முடிவினை பூமியின் சோர்வான மூச்சில் தெரிந்தது. அதில் சென்ற ஆறு மாதங்களாக காய்ந்த இலை, தழை, காய்ந்த புல் மற்றும் உரைந்துபோன குளத்தில் நான்கு அடிக்கு கேழே செத்துப்போன கியோட் ஓநாய் ஆகியவை மக்கி உரமாகியது தெரிந்தது. இருந்தாலும், குளிர்காலம் முழுதும் சேர்ந்துபோன குப்பைகளிலும், குதிரை லாயத்திலும் புதிதாக துளிர்க்கப்போகும் உயிர்களின் வாடை நன்றாகத் தெரிகிறது. இதுவோ கணக்கிட இயலா பரிசு.

நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் காலத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டிருக்கிறோம். செப்டம்பரின் இறுதி முதல் நேற்றுவரை இங்கு இருப்பது நான் ஒருவன் மட்டும்தான் என்பதுபோல உணர்ந்தேன். நானும் எனது கியோட் ஓநாய்களும், எல்விஸின் வளைவுகளை இடுப்பில் கோண்ட கறுப்பு மூஸ் எருது, இளம் குட்டியுடம் இரண்டு அமெரிக்க கழுகுகள் (பால்ட் ஈகிள்) மற்றும் பத்து ட்ரம்பீடர் வாத்துகளும். அன்றாடம் இந்த உயிரினங்களில் எத்தனை மிஞ்சுகிறது என்பதை தவறாமல் கவனித்தேன், நான் வாழ்வானா சாவேனா என்பதற்கும் அவைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோல். ஆனால், இன்னும் இரண்டே மாதத்தில் (மார்ச் மாதமும் ஏப்ரல் மாதமும் கரைந்து உருகி மே மாதம் ஆகும் வரை!) மீண்டும் பனி உரையத் தொடங்குமுன், ராக்கி மலைகளில் பல்வேறு உயிர்கள் பல்கிப்பெறுகும் என்று தெருவில் நடந்து போகும் ஒருவர் என்னிடம் வந்து சொன்னால், அதில்சந்தேகம் ஏதும் எனக்கு இருக்காது.

கோடைக்காலம் வந்தால் போதும், இங்கு காடுவாழ் உயிரினங்களின் வளர்ச்சி கொந்தளிக்கும். விலங்கினங்கள் காட்டில் சிந்திச்சிதறும் இடங்கள் - மனிதர்கள் நமக்கோ சாதாரண இடங்கள், ஆனால் மான் போன்ற விலங்குகளுக்கோ இவை காப்பிடங்கள். தற்போது உயிரினங்கள் அதிகமாக அடர்ந்திருப்பது தேசிய பூங்காக்களுக்கு அருகாமையில் இருக்கும் காப்பிடங்களில்தான். அவற்றில் யெல்லோஸ்டோன் & கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா - தங்கள் பங்கிற்கு நம் மனதில் அகலா இடத்தை பிடிக்கின்றது. இதைப்போன்று வட அமெரிக்காவில் இன்னும் மிக சில இடங்களே உள்ளன - அதுவும் ஐரோப்பியர்கள் வருவதற்குமுன் எப்படி இருந்ததோனவோ அப்படியே இன்றும் இருக்கும் இடங்கள். அவற்றில் இதுவும் ஒன்று. ஜான் கால்டர் (லெவிஸ் & க்ளார்க் எக்ஸ்பெடிஷனச் சேர்ந்த) 1807-இல் இந்த வழியேதான் சென்றாராம். 200 வருடங்கள் கழித்து இன்னமும் அவர் பார்த்த உயிரினங்களை இன்னமும் பார்க்கமுடியும். கிராண்ட் டெட்டானில் மட்டும், கோடைக்காலத்தில் 18 வகை மாமிசஉண்ணி வகை விலங்கினங்கள் இருந்தது. அவற்றில் ஊல்வெரென்கள், ஓநாய்கள், கறுப்பு மற்றும் பழுப்பு நிற கரடிகளும் அடங்கும். இதைத் தவிர, குட்டியிட்டு பால் கொடுக்கும் அமெரிக்க விலங்குகளில் 7 வகைகள், 22 வகை எலி இன விலங்குகள், 6 வகை ஒளவால்கள், 5 வகை தவளை இன விலங்குகள், 16 வகை மீன்கள், 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 900 வகை மலர் தரும் தாவரங்கள், 7 வகை ஊசி இனத் தாவரங்களும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

(அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...)

5 comments:

 1. நல்ல பதிவு. படிக்க இனிமையாக இருந்தது.
  தொடருங்கள்!

  ReplyDelete
 2. சூப்பரு பதிவு. யெல்லோஸ்டோன் போய் இருக்கிறீர்களா?

  ReplyDelete
 3. நன்றி பாலா, இந்த கேள்விக்கு பதில் தொடரின் இறுதியில் சொல்கிறேனே! ;-)

  ReplyDelete
 4. Interesting one. Admired your style of translation. Keep writing!!!

  ReplyDelete
 5. ஜீவா,
  அருமை. தொடருங்கள் :-).

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails