எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். இசையமைப்பாளர் 'வித்யாசாகர்' என்று அறிவித்தவுடனேயே, நான் இவர் நல்ல தேர்வென்று நினைத்தேன். ஏனெனில், வித்யாசாகர், இயக்குனரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றமாதிரி இசையமைப்பதில் வல்லவர். சமீப காலங்களில் ட்ப்பாங்கூத்து கேட்டவர்களுக்கு, குத்திய குத்துப்பாடல்களாகட்டும், நெடுங்காலமாக அர்ஜூன் படங்களில் அமைத்த மெலடி பாடல்களாகட்டும். இளையராஜாவிற்கு அடுத்ததாக, ரஜினிக்கு ஹிட் கொடுக்கக்கூடிய வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் வித்யாசாகருக்கே. இப்படி இருக்கையில், பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா?
1. தேவுடா தேவுடா (SPB)
அனேகமாக இது அறிமுகமாகப்பாடலாக இருக்கவேண்டும். SPB சரியான தேர்வுதான். ஆரம்ப prelude நன்றாக இருந்த்தது. ஆனால், வாலியின் வரிகள், சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இசைக்கும், பாடல் வரிகளுக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் உள்ளது. காதில் விழுவதெல்லாம் வெறும் 'டம் டம்' மத்தள சப்தமே. தெலுங்கு வார்த்தைகளிளை ஆங்காகே இறைத்திருப்பதை கவனிக்கவும். பழைய ஞாபகம் வரவேண்டுமே?
மேலும், பாடலில், 'ரிப்பீட்டு...' என்று சொல்லுமிடம் பாபா படப்பாடல் 'டிப்பு டிப்பு' பாடலை நினைவுப்படுத்துகிறது. படத்தில் பார்கும்போது ரஜினி காட்டும் வேடிக்கையில் ஹிட் ஆனால்தான் உண்டு.
2. கொஞ்ச நேரம் (ஆஷா போன்ஸ்லே, மது பாலகிருஷ்ணன்)
வித்யாசாகர் என்றவுடனேயே, மது பாலகிருஷ்ணனை வைத்து மெலடி எதிர்பார்த்ததுதான். சதுரங்கம் படத்திலேயும் இதுபோல ஒருபாடல் இருக்கிறது. முதல் interlude-இல் வயலின்கள் ஒளிர்கின்றன. மது நன்றாக பாடியுள்ளார். ஜேசுதாஸ் ரஜினிக்கு கொடுத்த பல வெற்றிப்பாடல்களை இது நினைவு படுத்துகிறது. இசை வாத்தியங்கள் அனத்தும் நன்றாக கையாளப்பட்டுள்ளன. ஆனால், பாடகி தேர்வில் ஒரு பெரிய குறை. ஆஷா போன்ஸ்லே வடிவில். எதற்காக இவரை பாடச்சொல்லியிருக்கிறார்கள்? அவர் இந்த பாடல் பாட சொந்த செலவில் சென்னை வந்தாராம். நல்லது, ஆனால், தமிழை சரியாக உச்சரிக்கவாவது தெரிய வேண்டாமா?, நன்றாக வர வேண்டிய பாட்டு, குட்டிச்சுவர். ராம்குமார் காதுகளில் விழுந்தால் சரி.
3. அத்தித்தோம் (SPB, வைஷாலி)
பாடல் பாறை ஒலிகளுடன் தொடங்குகிறது பாடல். பறைஞானி வித்யாசாகர் பாடலயிற்றே. ஆனால் அளவோடு உபயோகப்படுத்தி இருப்பதால் நன்றாக இருக்கிறது. மேலும் பாதியில் அதுவே மிருதங்கமாக மாறும்போதும் அழகு. கிராமியப்பாடலா, இல்லை கிளாசிக்கல் பாடலா என வியக்கும் வகையில் இருக்கிறது. SPB பாடியிருக்கும் விதம், சின்னத்தம்பி படப்பாடல்களை நினைவு படுத்துகிறது. எளிதாக ஆல்பத்தின் சிறந்த பாடல். எளிமையும் அழகும் ததும்ப, இந்த மாதிரி பாடல்கள் அமைககக்கூடியவர்கள் வெகு சிலரே.
4. கொக்கு பற பற (டிப்பு, ராஜலக்ஷ்மி, மாணிக்க விநாயகம்)
ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல், சீனத்து இசையை நினைவுபடுத்தினாலும், பின்னர் ட்யூன் மாறுகிறது. இது ரஜினி, பிரபு, நயன், ஜோதிகா அனைவரும் சேர்ந்து பட்டம் விடும் பாட்டு என நினைக்கிறேன். பாபா படத்திலும் பட்டம், இந்த படத்திலும் பட்டம். ரஜினி அடுத்த தேர்தலில் பட்டம் சின்னத்தில் நின்றால், இந்த பாடல் வசதியாக இருக்கும்! ராஜலக்ஷ்மியின் ஹம்மிங், அதைத்தொடர்ந்து டிரம்ஸ், blow horn ஆகியவற்றின் 'தொடர்' நன்றாக இருந்தது.
5. ரா ரா (பின்னி கிருஷ்ண குமார், டிப்பு)
பாடல் வரிகள் முழுதும் தெலுங்கில் இருப்பது வியப்பு. சந்திரமுகி தெலுங்குப்பட பாடலை இங்கு தெரியாமல் சேர்த்து விட்டார்களா? இசை மொழிக்கு அப்பாற்பட்டது என்பார்கள். இசையை மட்டும் கேட்கும் போது படையப்பா பாடல் 'மின்சார கண்ணா' நினைவில் வந்தது. தொடர்ந்து கேட்க, பின்னியின் குரலும், பாடும் விதமும் சலங்கை ஒலி பாடல்களின் சாயல் தெரிகிறது. நடுவில் 'லக்கலக்க...' என்று ஏன் வருகின்றது எனத் தெரியவில்லை. படம் பார்த்தால் தெரியும். ஜதிகள் வருவதால் அநேகமாக பரதநாட்டியம் பாட்டில் இருக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டே கதையை கற்பனை செய்யலாமே!.
6. அண்ணனோட பாட்டு (கார்த்திக், கே கே, சுஜாதா)
நாட்டுப்புற பாடல் வரிகளுடன் தொடங்கும் பாடல், பின்னர் திரையரங்கில் இளசுகளை சீட்டிலிருந்து எழுந்து ஆட்டம் போட வைக்கும் பாடலாக மாறுகிறது. கார்த்திக், கே கே இருவரும் கலக்கியிருக்கிறார்கள். பாடலை எழுதியது எந்த ப்ரகஸ்பதி எனத்தெரியவில்லை. இது அண்ணனோட பாட்டு, பார்ப்பவரை ஆட்டம் போட வைக்கணும், சீட்டிலேயே உட்கார்ந்திருப்பவர்கள் 'போயும் போயும் இந்த படத்தை பார்க்க வந்தோமே' என முணுமுணுக்காமல் இருக்க இந்த பாட்டில் அர்தமுள்ள பாட்டாகவும் இருக்கவேணும் என்று இயக்குனர் சொன்னவுடன், அவர் சொன்னதையே இவரும் எழுதிவிட்டார். அதற்கு ஒரு ட்யூனும் போட்டு விட்டால் பாட்டகிவிட்டது. ஓ, மாற்றி சொல்லிவிட்டேனா? இதற்கு நடுவில் வாத்தியங்கள் வேறொரு பாடலை (அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு சிரிப்பு... பாடல்)வேறு வாசிக்கின்றன. படக்காட்சிக்கு தேவைப்படும் விதத்தில் இது சரி, இல்லாவிட்டால் இது கொஞ்சம் ஓவர்.
மொத்தத்தில் ஒரு சுமாரான (நல்ல விதத்தில்) ஆல்பமாக அமைந்துள்ளது. பாபா ஆல்பத்தைவிட சிறிது மேலாகவே இருக்கிறது. 'தேவுடா தேவுடா' பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானின் தாக்கம் நன்றாகத் தெரிகிறது. இசை அமைக்க வ்ரும் முன் முத்து, படையப்பா, பாபா பட பாடல்களை பத்துமுறை கேட்டுவிட்டு வந்தாரோ?
இருந்தாலும் வித்யாசாகர் தன்மேலிருந்த எதிர்பார்ப்பு என்னும் பளுவை ஒரளவு நன்றாகவே சமாளித்திருக்கிறார். எனக்கு வித்யாசாகரிடம் பிடித்த சோலோ வயலின் இந்த ஆல்பம் முழுவதிலும் இடம்பெறாததில் சிறிது வருத்தம்தான்.
'அத்தித்தோம்' பாடலும் 'கொக்கு பறபற' பாடலும் சூப்பர்.
'ரா ரா' பாடல் படத்தோடு சேர்ந்து கேட்க, பார்க்க வேண்டும். 'அண்ணனோட பாட்டு' Fast Forward.
please donot make any more audio review... that will be good for the readers!
ReplyDelete//இளையராஜாவிற்கு அடுத்ததாக, ரஜினிக்கு ஹிட் கொடுக்கக்கூடிய வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் வித்யாசாகருக்கே.//
ReplyDeleteAR ரஹ்மானை வேண்டுமென்றே புறக்கப்பதுபோல் இருக்கிறது.
அர்விந்,
ReplyDeleteஏ.ஆர். ரஹ்மானை வேண்டுமென்றே ஒதுக்கவில்லை. பாபா படத்திற்கு அப்புறம் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானை தேர்ந்தெடுக்க மாட்டர்கள் என்று நினைத்தேன். அதனால் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ள வில்லை. அவ்வளவே.
//அத்தித்தோம் (SPB, வைஷாலி)//
ReplyDeleteஇந்த பாட்டு இசைஞானியின் கரகாட்டக்காரன் 'மாங்குயிலே பூங்குயிலே' பாட்டுப் போல இல்லையா? கேட்டுப்பாருங்களேன்...
ra ra - is the climax song for jothiga. it suppose to be a masterpice baratha natiyam , but not sure about jothiga's performance. btw, it's tamil song in malayalam. just wondering what language in telugu, probably malayalam - to complete the cycle.
ReplyDeleteThat was one damn honest review, WOW!
ReplyDeleteவிஜய்,
ReplyDeleteஆம், பாடலின் ஆரம்பமும், தாளமும், 'மாங்குயிலே' வின் டிட்டோ. என்ன செய்வது, இசைஞானியின் தாக்கத்திலிருந்து தப்பவே முடியாதுபோல. ஆனால் இந்த பாடலில், ட்யூன் வேறு. மேலும் விதயாசாகர் நல்ல வேறுபாடுகளை காட்டுகிறார்.
படம் பார்த்தபின்:
ReplyDelete1. தேவுடா தேவுடா பாடல் மனதில் நிற்கவில்லை
2. கொஞ்ச நேரம் பாடலில் இஸ்தான்புல்-லின் அழகும், ரஜினி,நயன் தாரா- வின் உடைகளின் நிறத்தேர்வும் நன்றாக ஒத்துப்போகின்றன.பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.பல முறை இந்த பாடலை கேட்டபின், ஆஷா போன்ஸ்லே-வை சகித்துக்கொள்ளலாம் போலத் தோன்றுகிறது.
3. அத்திதோம் நல்ல பாடலானாலும், லாஜிக்கே இல்லாமல் ரஜினி, நயன்தாராவை அவமதித்தபின் பாடுவதால், மனதில் ஒட்டவில்லை,விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும்.
4. கொக்கு பறபற பாடல் மேற்சொன்னாற்போல் எந்தவித நெருடலும் ஏற்படுத்தாதனால்,பிடித்திருந்தது.
5. ரா ரா பாடல், வெறும் ஒலியைக்கேட்டபோது ஏற்பட்ட எதிர்பார்ப்பை காட்சி நிறவு செய்யவில்லை. ஆனால் சொதப்பாமல் எடுத்திருந்தார்கள்.
6. அண்ணனோட பாட்டு பாடல், சீரியசாகபோய்கொண்டிருந்த இடத்தில் தீடீரென ஏற்பட்ட அதிரடி கூத்துபோல இருந்ததால், மனதில் ஒட்டவில்லை. இந்த பாடலை தவிர்த்திருக்கலாம், அல்லது மேலும் மர்மத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு பாட்டு செய்திருக்கலாம்.