Sunday, March 27, 2005

பாரதி - என் அரசவைக்கவி

திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள் ஓர் கவி.
பாரதி - என் அரசவைக்கவி.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என்னவைக்கு அழைத்தேன்,
கவி பாட.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உருதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொருநாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.

10 comments:

 1. இது முந்தைய பதிவு, தற்போது யுனிகோடில் பதிக்கப்படுகிறது.

  ReplyDelete
 2. ஜீவா,
  கவிதை அசத்தல்.

  ReplyDelete
 3. நன்றி முத்து.
  மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக, என் பதிவு வெளிவரும் அதே நேரத்தில் நீங்களும் பதிவு செய்துள்ளீர்கள்.
  Coincidence - ஐ பார்த்தீர்களா?

  ReplyDelete
 4. அருமையான கவிதை
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஹரி.

  ReplyDelete
 6. அசத்தலான நடை..
  இது ரொம்ப நல்லா இருக்கு...
  கலக்கல்....

  ReplyDelete
 7. Anonymous1:33 AM

  Romba naaal kalithu oru alagaana kavithai padika mudinthathu.

  Anban
  Sriram

  ReplyDelete
 8. ///பாரதிக்கு முன்னால்,
  அரசன் - நான்,
  சிற்றரசனானேன் - ஒருவேளை
  கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
  ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
  உளவு சொல்லவில்லையே.///

  ரசித்துச் சிரித்தேனைய்யா! கவிதை அருமை. இவ்வரிகள் என்னுள் களுக் கென்ற சிரிப்பை ஏற்படுத்திவிட்டது!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails