Wednesday, March 16, 2005

சுதந்திர வாழ்க்கை

நேற்றிரவு, நல்ல படமொன்று பார்த்தேன். அதைப்பற்றி உங்களுக்கு விவரிக்கப்போகிறேன். படத்தின் பெயர் 'லிவ்விங் ஃப்ரீ' (சுதந்திர வாழ்க்கை). ஏதோ சுதந்திர போராட்டத்தைப்பற்றி என்றெண்ண வேண்டாம். சுதந்திரமாகத் திரியும் மூன்று சிங்கக் குட்டிகளைப்பற்றியது. ஆஃப்ரிக்கா. சுதந்திரமாகத் திரியும் வன விலங்குகளுக்கு பூலோக சொர்கம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த விலங்குகளுடன் மனிதர்களும் சுமூகமாக எப்படி வாழ்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?
ஆஃப்ரிக்க கிராமம் ஒன்றருகே, மூன்று சிங்கக்குட்டிகள் அங்கு வாழும் மக்களையும், அவர்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளையும் பயமுறுத்தி வந்தது. மனிதர்களால் சிங்கக்குட்டிகளுக்கோ அல்லது, சிங்கக்குட்டிகளால் மனிதர்களுக்கோ எந்த நிமிடம் ஆபத்து வரும் என்று சொல்ல முடியாமல் இருந்தது. இந்த சமயத்தில், சிங்கக்குட்டிகளை இவ்விடத்திலிருந்து அகற்றி வனவிலங்குகள் உள்ளுறைவிடங்களுக்கு கொண்டு செல்ல வனநல ஆர்வலர்கள் முயர்ச்சிக்கிறார்கள். முதலில் சிங்கக்குட்டிகள் ஊருக்குள் நுழைந்தால் கிராம மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள அறிவிப்பு மணி முறையை ஏற்படுத்துகிறார்கள். பின்னர் சிங்கக்குட்டிகளுக்கு மிகப்பிடித்த மீன் எண்ணை தடவிய துணியை நீண்ட மூன்று கயிறுகளில் கட்டி, அவற்றை ஒரு வண்டியின் பின்னால் கட்டி இழுத்து வர, சிங்கக்குட்டிகள் அவற்றை வாசனை பிடித்து வண்டியைத் தொடருகின்றன.
இவ்வாறு முடிந்த வரை கிராமத்திலிருந்து தூரத்தில் சிங்கக்குட்டிகளை கொண்டு சென்ற பின்னர், அங்கு ஒரு கூடாரம் அமைத்து , சிங்கக்குட்டிகளின் கவனம் அவ்விடத்தை விட்டு அகலாவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். பின்னர் சிங்கக்குட்டிகளை பிடிக்க மூன்று கூண்டுகளை அமைக்கிறார்கள். கூண்டுகளில் பொறி வைத்தாலும் மூன்று சிங்கக்குட்டிகள் ஒரே சமயத்தில் சிக்காமல் தப்பிக்கின்றன. பல முறை முயன்றாலும், எட்டாக் கனியாய், எட்டினாலும் கிட்டாக் கனியாய் சிங்கக்குட்டிகள். இப்படியே என்னும் சில நாட்கள் நகருகின்றன.
சிங்கக்குட்டிகளை அகற்றுவதற்கு இன்னும் மூன்றே நாட்கள். கூடாரம் அமைத்த இடத்தில் அருகினில் சிற்றோடையில் திடீரேன வெள்ளம். கூடாரங்கள் வெள்ளதில் சேதம் அடைகின்றன. அருகே சிங்கக்குட்டிகளுக்காக கூண்டுகள் அமைத்த இடமோ சற்று மேடான இடமாததால், மூன்று சிங்கக்குட்டிகளும் சமர்த்தாக மூன்று கூண்டுகளில் அமர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகா, இத்தனை நாள் காத்திருந்த தருணம் வந்ததென, கூண்டுகளை மூடும் பொறி விசையை இயக்குகிறார்கள். ஆனால், அந்தோ, வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தினால், விசை பழுது பட்டிருக்க, கூண்டின் கதவுகள் முழுதும் மூடாமல் பாதியில் நின்று விடுகின்றன. சிங்கக்குட்டிகள் விழித்துக்கொண்டு தப்பி விடுகின்றன. ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
அன்றிறவு. பெருத்த மழை பெய்கிறது. கூண்டுகளுக்கு அருகே சிங்கங்களின் உறுமல் சத்தம் கேட்க, எட்டிப்பார்க்கிறார்கள். மழையிலிருந்து ஒதுங்க, கூண்டுக்குள் மீண்டும் சிங்கக்குட்டிகள். (கூண்டுகளின் மேல்பக்கம் மூடியிருக்கும்). உடனே, விசை இயக்கப்பட, இந்த முறை சிங்கக்குட்டிகள் சிக்கிக்கொள்கின்றன. மூன்று கூண்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அருகே இருக்கும் சரணாலயத்திற்கு கொண்டு செல்கிறார்கள். போகும் வழியில் மேலும் சோதனை. அவற்றையும் கடந்து, ஒரு வழியாக, சிங்கக்குட்டிகள் பாதுகாப்பான, சுதந்திராமான இடத்தில் கூண்டிலிருந்து திறந்து விடப்படுகின்றன.
அத்துடன் கதை முடிகிறது. கதை சொல்லப்பட்ட விதமும், பாத்திரங்கள் கையாளப்பட்ட விதமும் திரையிலிருந்து கண்களை அகற்ற இயலாமல் சிறைப்பிடிக்கின்றன. நிறைவான திரைப்படம், மனநிறைவைத் தந்தது.

5 comments:

  1. படம் ஆங்கிலப் படமா .. ? அல்லது ஆப்பிரிக்கப்படமா ?

    ReplyDelete
  2. ஆங்கிலப்படம் தான். படத்தைப்பற்றி விலாவரியான விவரங்களை புட்டு புட்டு வைக்க, தலைப்பை சுட்டுங்கள்.

    ReplyDelete
  3. ஜீவா. மிகவும் அருமையாக மனக்கண்ணில் தோன்றுமாறு எழுதி இருக்கிறீர்கள். நன்றி. நான் இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை.

    Did you had a chance to see the movie "The Ghost and the Darkness?".

    This movie is totally different one, but worth to see. :-)

    ReplyDelete
  4. ஜீவா. மிகவும் அருமையாக மனக்கண்ணில் தோன்றுமாறு எழுதி இருக்கிறீர்கள். நன்றி. நான் இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை.

    Did you had a chance to see the movie "The Ghost and the Darkness?".

    This movie is totally different one, but worth to see. :-)

    ReplyDelete
  5. நன்றி கங்கா,
    1972-இல், சிறந்த வெளிநாட்டு பட வரிசையில் கோல்டன் க்ளோப் விருதுகளில் தேர்விற்காக முன்மொழியப்பட்டது இத்திரைப்படம்.

    ReplyDelete