நீண்ட நாட்களுக்குப்பின் கொய்யாப்பழரசம் சாப்பிட்டேன். விட்டுப்போன, தொட்டுப்போன சுவை நாக்கில் வந்து ஒட்டிக்கொண்டது. ஆஹா, இவ்வளவு நாளாக, இதை விட்டுப்பிரிந்தேனே என்றெண்ணுகிறேன். சுவையோடு சேர்ந்து பழைய நினவுகளும் வந்து நிழலாடத்துவங்கின.
சிறு வயதில் கொய்யாப்பழத்தின் மீது அவ்வளவு ப்ரியம் இருந்ததில்லை. கொய்யா பழத்தில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை கொய்யாவின் உட்புறம் கனிந்தாலும் வெள்ளையாக இருக்கும். மற்றொரு வகையிலோ, கொய்யா கனிந்தபின் உட்புறம் சிவப்பாக இருக்கும். இந்த சிவப்பு கொய்யாவில் இனிப்புச்சுவை அதிகமாக இருக்கும். நல்ல காய் வாட்டமாக கொய்யா இருக்கும்போது, அது சிறிது துவர்ப்பாக இருக்கும். இதற்கெனவே, கொய்யாக்காயை விரும்பிச்சாப்பிடுவோரும் உண்டு. ஆனால், நானோ கனியிருக்க காய் கவர்ந்தட்று என்று, காயைக்கொள்வேனில்லை. அம்மா சொல்கிறார்கள் என்பதற்காக, ஒன்றே ஒன்று மட்டும் சாப்பிடுவேன் போலும்.
இப்போதெல்லாம், பழங்கள் மட்டுமே விற்கும் பழக்கடைகள் கூட வந்து விட்டன.
அந்த நாட்களில் பல்பொருள் அங்காடிகள் ஒன்றிரண்டுதான் இருக்கும். சின்னஞ்சிறு கடைகள் நிறைய உண்டு. சிறிய கடைகளிலில் வாழைப்பழத்தைத் தவிர மற்ற பழங்கள் விற்றதாக நினைவில்லை. மற்றபடி, பழம் வாங்க வேண்டுமென்றால் மொத்த விற்பனை செய்யும் மார்க்கெட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.
கூடையில் பழங்களை சுமந்துகோண்டு கூவி விற்போருண்டு. பெரும்பாலும் பெண்கள், சிலசமயம் வயதான ஆண்கள். தெருவில் 'கொய்யா,கொய்யா' என்று குரல் வரும். அவர்களுக்கு பிழைப்பே அதுதான். வேகாதவெய்யிலில் தளரா நடையுடன், நம்பிக்கையை கையில் பிடித்துக்கொண்டு, பழம் வாங்கலையோ என்று கேட்பார்கள். பெரும்பாலும், கூடையில் பழம் விற்பவர்களிடமே அம்மா பழம் வாங்குவார், பேரம் பேசி. விற்பவர்கள் சில சமயம், 'அம்மா, நீதான் முதல் போணி, இப்படி கொறைச்சுக் கேட்டா எப்படி' என்று வினவுவார்கள். நாமும், நியாமான விலைக்கு வந்து விட்டோம் என்றெண்ணி, வாங்கிவிடுவோம்.
பெரும்பாலும், வெள்ளை கொய்யாக்கள்தான் கிடைக்கும். சிலசமயமே கனிந்த சிவப்பு கொய்யா கிடக்கும். அதுவும் வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், வெள்ளையா, சிவப்பா என்று தெரியாது. விற்பவர் சொன்னல்தான் உண்டு. சிலசமயம் சாப்பிட்டுப்பாரம்மா என்று, மாதிரிக்குத் தருவார்கள். அப்போது நிச்சயம் நன்றாகத்தான் இருக்கவேண்டும். அங்காடிக்குச் சென்று வாங்கினால் இந்த வசதி இருக்காது என நினைக்கிறேன்.
சில கொய்யாக்களில் விதைகள் நிறைய இருக்கும். முற்றிய விதைகள் சுவைக்குத்தடை. மற்றபடி, கொய்யாக்களின் சுவையே தனி. துவர்ப்பும், இனிப்பும் கலந்து, நாவை வருட, ஐம்புலன்களில் ஒன்றை திருப்திப்படுத்தியாயிற்று. அவன் இசைவோடு.
"ஆனால், நானோ கனியிருக்க காய் கவர்ந்தட்று என்று, காயைக்கொள்வேனில்லை". நல்ல presence of mind உங்களுக்கு! உங்கள் வரிகளிலும் சுவை கூடியே உள்ளது! உங்கள் அனுபவம் என்னையும் என் சிறு வயதை ஒரு கணம் எட்டிப்பார்க்க வைத்துவிட்டது! நல்ல பதிப்பு..
ReplyDeleteசுவையை சுவைத்து அதைச் சொன்னதற்கு நன்றிகள்!
ReplyDeleteதிரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுவையானது!