Saturday, August 30, 2008

அடி வயிற்றைக் கலக்கும் டொர்னடோக்கள்

டொர்னடோ என்கிற பேரைக் கேள்விப் படாதவருக்கு, நம்ம ஊரில் அதைப்போல வேறொன்றைக் காட்டி - இதைப்போல என விளக்குவதற்கு, ஏதுமில்லாதபடி இருக்கிறது. சுழற்றி இழுக்கும் சூறாவளிப் புயல் காற்று எனச் சொன்னால் அது தோராயமாகத்தான் இருக்கும். வானத்தில் இருந்து தரையை தொட்டுப்பார்க்கும் (இதற்கு 'touchdown' எனப்பெயர்) இதன் நீளம், வானத்தில் இருந்து தரை வரை என்றால், அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான டொர்னடோக்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சில நொடிகளே நீடிப்பவையும் உண்டு. பெரும் பொருட்சேதங்கள் ஏற்படுத்துவையும் உண்டு. முன் அறிவுப்பு மூலமாக, உயிர்சேதம் மட்டுப்படுத்தப் பட்டாலும், அதன் அபாயம் என்றைக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பூகம்பம், எரிமலை, சுனாமி என இயற்கைச் சீற்றங்கள் பலவும் இருந்தாலும், டொர்னடோக்கள் அவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை வானத்தில் இருந்து வருவதால், டொர்னடோவின் நகர்வினை யாராலும் முழுமையாக கணக்கிட முடிவதில்லை. இதுவரை நிகழ்ந்தவற்றில் இருந்து கிடைத்த பொதுவான காரணிகளில் இருந்து, டொர்னடோ நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தோராயமாக மட்டுமே கணிக்க இயல்கிறது. அக்காரணிகள் என்னவென்றால்: தரையின் அருகே இருக்கும் சூடான, அதே சமயத்தில் ஈரப்பதமான காற்று, கிழித்து வீசும் காற்று, உயரம் போகப்போக காற்றின் வீச்சில் தெரியும் திசை மாற்றம் ஆகியவையாகும். இடி மின்னலோடு ஏற்படும் சூறாவளிக் காலங்களில், காற்றும் சுழன்று வீசுவதால், அக்காலங்களில் டொர்னடா நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் நிகழும் டொர்னடாக்களில் பெரும்பான்மையானவை, மத்திய அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் உள்ள காலத்தில் ஏற்படுகின்றன. தெற்கு டகோடா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலம் வரைக்கும் இடைப்பட்ட மாநிலங்களில் தான், இவை அதிகமாக நிகழ்கின்றன. ராக்கி மலைத்தொடர்களில் இருந்து வரும் குளிர்ந்த மற்றும், வரண்ட காற்று, அதே சமயம் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வடக்கே நகரும் சூடான, மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகையில் - எதிர் எதிர் துருவங்கள் சந்தித்தால் என்னவாகும்? மழையும், பனிக்கட்டி மழையையும் பொழிய - இவற்றின் கலவை தான் காலிஃபிளவர் போன்ற தலையுடன் வானத்தை நோக்கி விரியும், டொர்னடோ. டொர்னடோவின் முழு சக்தியையோ, வீச்சையோ வல்லுனர்களால் நேரடியாக அளவிட இயலாததால், அவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டே அவற்றை அளவிட வேண்டியுள்ளது. எங்கள் வீட்டுப் பக்கத்தில், டொர்னடோ வருவதற்கு முன்பான ஆலங்கட்டி மழைகளால் மட்டுமே அவர்களின் வீட்டின் கூரைக்கு இழப்புகள் பல ஆயிரம் டாலர்கள். நல்ல வேளை டொர்னடோ தரையைத் தொடவில்லை அன்று. வீட்டின் கூரையின் மேல், படபடவென்று யாரோ கற்களை எறிந்ததுபோல இருக்க, நாங்களோ செய்தி அறிக்கையை கேட்டவாறே, அடுத்த 15 நிமிடங்களுக்கு, குளியலறையில், பாத்ரூம் டப்பில் பதுங்கிக் கொண்டோம்!


டொர்னடோ வரப்போகிறது என்று தெரிந்தால், வீட்டின் அடிமட்டத்திலோ அல்லது வேறு ஒரு பாதுகாப்பான இடத்திலோ, தஞ்சம் அடைய மக்கள் அறிவுருத்தப்படுவார்கள். சராசரியாக, டொர்னடோ உருவாகத் துவங்கிய இடத்தில், அதற்கு கீழே வசிப்பவர்கள், பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள இருப்பது 13 நிமிடங்கள் தானம். அதற்குப்பின் டொர்னடோ தரையைப் பதம் பார்க்க வாய்ப்புகள் அதிகம். அதனால், அந்தப்பகுதியை விட்டு பாதுகாப்பான வேறு இடத்துக்குப் பயணிக்ககூட நேரம் இருக்காது. தரையை தொட்டுவிட்டலோ, அங்கு குடியிருப்பு ஏதேனும் இருந்தாலும், அது அநேகமாக, வானத்தில் பறந்திருக்கும். பல இடங்களில், வெளியில் நிறுத்தப்பட்டைருந்த வாகனங்களும், வீட்டின் கூரையும், மேல்தளமும் சிதைந்து சின்னபின்னமாகியுள்ளன.

1996 இல் வெளிவந்த திரைப்படமான 'டிவிஸ்டர்' மிகவும் சுவாரஸ்யமாக டொர்னடோக் கதையைச் சொல்லி இருக்கும். இத்திரைப்படத்திற்குப்பின் டோர்னடோக்களைத் தேடிப்போய் அவற்றைப் புகைப்படம் எடுப்பவர்களும் அதிகமானார்கள். இது உயிருக்கு ஆபத்தான செயல் என்றாலும், அதையும் பணயம் வைத்து, இந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். மோசமான தட்பவெட்ப நிலையிலும், பற்கள் கடுகடுக்க, அவர்களின் வாகனங்களை பனிக்கட்டி மழைகள் பதம் பார்க்க, டொர்னடோ தொடருதல் நடைபெருகிறது. சில அஞ்சா நெஞ்சங்கள்(/ளை) டொர்னடோவைக் காட்டுவதற்கு டூர் அழைத்துப்போகும் கைட் போல வேலை செய்வதும் உண்டு. ஆனால் நிச்சயமாக அது நயகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுபோல எளிதானதாக இருக்காது! :-)

அமெச்சூர் டொர்னடோ வேட்டையாளர்களைப் போலவே, அறிவியல் ஆராய்சியாளர்களும் டொர்னடோக்களைத் தேடிப்போவதுண்டு. நிலையான ராடார் கருவிகளைக் கொண்டு மட்டும் இவற்றை ஆய்வு செய்ய இயலாது. டொர்னடோ நிகழ்ப்போகும் இடத்தில் கொண்டுபோய் டாப்ளர் ராடார் கருவுகளைப் பொருத்துவதால் ஓரளவுக்கு பயனிருக்கிறது. இப்படி ஆராய்சியாளர்கள் தங்களால் இயன்ற அளக்கும் கருவிகளை தயார் செய்து, அங்கு வைத்து விட்டு வந்தால், பல சமயம், இந்த சுழற்காற்றுகள், ஒன்றுமில்லாமல் இற்றுப்போய் விடும். அடுத்த முறை வரை, அவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

சமீப ஆண்டுகளில் சற்றே முன்னேறியிருக்கும் GPS போன்ற நுட்பங்களும் இந்தப் பணியில் கைகொடுக்கின்றது. டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவற்றுக்கு எவ்வளவு அருகே செல்லமுடியுமோ அவ்வளவு அருகில் சென்று அவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியமாகிறது. இதற்காக, ஆராய்சியாளர்கள், அமெச்சூர் காரார்களையும் உதவிக்கு கொள்கிறார்கள். டொர்னடோ பற்றியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் சின்னச்சின்னக் கருவிகளை, டொர்னடோ வரும் பாதையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். அவற்றில் ஒன்றான, 'டின்மேன்' எனப்படும் டொர்னடோக்களை படம் பிடிக்கும் கருவி, பிரபலம். இதன்மூலம், டொர்னடோவைப்பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை அவை மிக அருகாமையில் வரும் சமயம் பதிவு செய்ய முடிகிறது. இந்த தகவல்களின் உதவியால் வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் காற்றின் திசை ஆகியவற்றை மேலும் துல்லியமாக கணிக்க இயல்கிறதாம். தொடரும் ஆராய்ச்சிகள், டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடருகிறார்கள்.

20 comments:

 1. இந்த அதி பயங்கர ட்விஸ்டர் படத்தைப் பார்த்தாலே கலங்குகிறது. நீங்கள் என்னவென்றால் அங்கயே இருந்ததாகச் சொல்கிறீர்கள்.
  என்ன பாடு பட்டிருக்க்கும் மனசு:(
  வெகு அருமையான விளக்கம்
  ஜீவா.ரொம்ப நன்றி.

  ReplyDelete
 2. இந்த டொர்னாடோக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடியும் வருகிறதாம்.

  எங்க ஏரியாவிலும் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போனீச்சு, ஆலங்கட்டி மழை சாத்தினதில நம் வீட்டு கூரை கம்ப்ளீட் பாதிப்பு, நல்ல வேளை இன்சூரன்ஸ்காரர்கள் முழுக் கூரையும் மாற்ற உதவினார்கள்.

  ReplyDelete
 3. டார்னெடோல டின்மான் காணாம போகாதோ?

  ReplyDelete
 4. வாங்க வல்லியம்மா,
  நாங்கள் வசிக்கும் அட்லாண்டா எவ்வளவோ தேவலை. Tornado Alleyஇல் இருந்து, தள்ளி இருக்கு. எங்களுக்கு மேற்கே மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள், டோர்னடோக்களை, இன்னமும் அதிகமாக சந்திப்பவர்கள்.

  ReplyDelete
 5. வாங்க தெகா,
  உங்க ஏரியா என்னவென்று சொல்லவில்லையே!
  //ஆலங்கட்டி மழை சாத்தினதில நம் வீட்டு கூரை கம்ப்ளீட் பாதிப்பு//
  அங்கேயுமா, :-(
  //இன்சூரன்ஸ்காரர்கள் முழுக் கூரையும் மாற்ற //
  இதன்பின் விளைவு என்னவென்றால், இன்சூரன்ஸ் பிரீமியத்தினை அதிகப் படுத்தி விடுவார்கள்!

  ReplyDelete
 6. வாங்க திவா சார்,
  //டார்னெடோல டின்மான் காணாம போகாதோ?//
  ஆமாம், அப்படி நிகழ்வதும் உண்டு. டொர்னடோவின் நேரடிப்பாதையில் இருந்தால் எல்லாம் துவம்சம்தான். கொஞ்சம் தள்ளி இருந்தால் பிழைக்கும். ஒருமுறை, படம் பிடிக்கும் கருவியை ஒரு பெட்டியிலும், மற்ற அளாவியல் கருவிகளை இன்னொரு பெட்டியிலும் அவர்கள் வைத்துவிட்டுப் போக, படம் பிடிக்கும் கேமரா சாதனம், முழுக்க முழுக்க சிதைந்து விட்டது. ஆனால், பக்கத்திலேயே இருந்த அளிவியல் கருவிகளோ தப்பிப் பிழைத்து விட்டதாம்.

  ReplyDelete
 7. இயற்கை தனக்குள் இன்னும் சில புதிர்களை வைத்துக்கொண்டுதான் இருக்கிறது...

  வித்தியாசமான பதிவுகளுக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 8. [[உங்க ஏரியா என்னவென்று சொல்லவில்லையே!]]

  அட, ஆமால்லை. நான் அட்லாண்டாவிலதான் இருக்கேன். :-). இப்பத்தான் உங்க ப்ரோஃபைல் பார்த்தேன், நீங்களும் இங்கதான் இருக்கீங்க.

  .....//ஆலங்கட்டி மழை சாத்தினதில நம் வீட்டு கூரை கம்ப்ளீட் பாதிப்பு//
  அங்கேயுமா, :-(
  //இன்சூரன்ஸ்காரர்கள் முழுக் கூரையும் மாற்ற //
  இதன்பின் விளைவு என்னவென்றால், இன்சூரன்ஸ் பிரீமியத்தினை அதிகப் படுத்தி விடுவார்கள்!....

  இது ஒட்டுமொத்த ஏரியாவிற்குமே நடந்திருக்கிறதாலே ஏறினால் எல்லாருக்கும்தானே ஏறணும்(க்ளைம் பண்ணவங்களுக்கு-அன் ரீசனபிலா). எனக்கு எந்த மாற்றமும் புதுசா வந்த ஸ்டேட்மெண்ட்ல காமிக்கலை இது வரைக்கும். பார்ப்போம்.

  ReplyDelete
 9. வருக, King of the Mars!
  //இயற்கை தனக்குள் இன்னும் சில புதிர்களை வைத்துக்கொண்டுதான் இருக்கிறது... //
  'புதிர்' என்று அழகாகச் சொன்னீர்கள்!
  தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 10. //அட, ஆமால்லை. நான் அட்லாண்டாவிலதான் இருக்கேன். :-). //
  ஆகா, அப்படியா சேதி!
  இயற்கை நேசி இங்கதான் இருக்கீங்களா,
  இன்னொரு இயற்கைப் பதிவும் இருப்பில் இருக்கு!
  //ஏறினால் எல்லாருக்கும்தானே ஏறணும்//
  ஆமாம்!
  //எனக்கு எந்த மாற்றமும் புதுசா வந்த ஸ்டேட்மெண்ட்ல காமிக்கலை இது வரைக்கும்.//
  நல்லது, அடுத்தமுறை புதுப்பிக்கும்போதும் இருக்கலாம்!

  ReplyDelete
 11. டொர்னாடோவின் அதி பயங்கர வேகமும் சுழற்சியும் நினைத்தாலே நடுக்கம்தான். நிறைய விவரங்களுடன் அருமையாக பதிந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 12. வருக கவிநயாக்கா.

  ReplyDelete
 13. கட்டாயம் அடிவயிற்றைக் கலக்கும் ஒன்று தான் இந்த சுழற்காற்றுகள். ஒவ்வொரு முறை டொர்னேடோ வார்னிங்க் வரும் போதெல்லாம் எங்கள் மகள் அழத்தொடங்கிவிடுகிறாள். சில நேரம் பயத்தால் நடுங்கவும் தொடங்கிவிடுவாள். வீட்டின் அடிப்பகுதியில் இருக்கும் குளியலறையில் குடும்பம் முழுவதும் பதுங்கியிருப்போம். அங்கேயே ஏதாவது விளையாடத் தொடங்கிய பின்னர் கொஞ்சம் தேறி பயத்தை மறந்துவிடுவாள். எச்சரிக்கை முடிந்தவுடன் மேலே வருவோம். வந்த பின்னர் ஒரு மணி நேரமாவது 'ஏன் இப்படி பயமுறுத்தினார்கள் இந்த தொலைக்காட்சிக்காரர்கள்?' என்று கேட்டுக் கொண்டே இருப்பாள்.

  நீங்கள் சொன்ன சுழற்காற்றுப்பாதையில் எங்கள் மாநிலம் இல்லாவிட்டாலும் சில நேரங்களில் இந்தச் சுழற்காற்று அடித்து நொறுக்கியிருக்கிறது. அதனால் எச்சரிக்கை வரும் போதெல்லாம் கேட்டுக் கொண்டு பதுங்கிக் கொள்கிறோம்.

  ReplyDelete
 14. டொர்னடோவைப் பற்றியதான உங்களது விவரிப்பும், விவர சேகரிப்பும் பல புதுச் செய்திகளைத் தெரிந்து கொள்வதாக இருந்தது.
  நேஷனல் புக் டிரஸ்டின் புத்தகமான உங்களின் "காற்றின் ஆற்றல்" (Wing Energy) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூலை
  படித்திருக்கிறேன். மூல நூலின் சுவையைக்கூட கூட்டி, திருநெல்வேலிக்கு அருகிலிருக்கும் கயத்தாறு (கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடம்) பகுதிகளில் இருக்கும் காற்றாலைகளைப் பற்றி அழகாக, நிறைய விவரங்களுடன் குறிப்பிட்டிருப்பீர்கள். குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு, புதிது புதிதாக தகுந்த தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் உங்கள் பணி பாராட்டத்தக்கதாகும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. வாருங்கள் திரு.ஜீவி,
  தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். தொலைக்காட்சி சேனல்கள், அவர்கள் பங்குக்கு கொஞ்சம் அதிகமாகவே பயமுறுத்துவதாகத்தான் தெரிகிறது.

  ReplyDelete
 16. Wind Energy புத்தகத்தைப்பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. இப்போது அமெரிக்காவில், எப்போதைக்கும் இல்லாதவாறு இதர மாற்று சக்திகளின் மகத்துவம் அதிகருக்க்கிறது. Pertol-இன் விலை, ஏகத்தாறாய் உயர்ந்திருக்கையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிற்கும் இருவரும், காற்று ஆற்றல் போன்ற தூய்மையான மின்சக்தி உருவாக்கும் முயற்சிகளில் முழுகவனம் செலுத்தப்போவதாக உறுதி தருகின்றனர்!

  ReplyDelete
 17. நேற்று CNN-இல் பார்த்த செய்தியில் இருந்து.
  சூறாவளிப்புயல்காற்று ஆகியவற்றை ஆன்லைனில் துல்லியமாக தற்போதைய நிலவரம் தெரிந்துகொள்ள இந்தத்தளம் வழி காட்டுகிறது:
  http://www.hurricanetrack.com/Java/track.html

  ReplyDelete
 18. இதை பற்றி கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்த இடுகை மூலம் நிறைய தெரிந்து கொண்டேன் ஜீவா. நன்றி.

  ReplyDelete
 19. வாங்க மௌலி சார்!
  //இந்த இடுகை மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்//
  நல்லது!

  ReplyDelete
 20. வாருங்கள் குமரன்,
  உங்கள் மறுமொழிக்கு நான் மறுமொழியிட இயலாமலே, தள்ளிப்போய் விட்டது!
  தங்கள் மகளை பாதித்த விதம் கண்டு வருத்தமுறுகிறேன். தொலைக்காட்சிகள் கொஞ்சம் மிகையாகவே பயமுறுத்துகிறார்கள் எனவே தோன்றுகிறது. குழந்தைகளுக்கு அவ்வளவா விஷயத்தை வெளிப்படுத்தாமல், விளையாட்டுக் காட்டியே அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயல வேண்டும். ஆனால் 'இரண்டும் கெட்டான்' என்று சொல்வார்களே - அந்த வயதில் இருப்பவர்களை கவனமாக பார்த்துக்கொள்வது, சற்று சிரமமே!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails