Friday, August 08, 2008

அம்புஜம் கிருஷ்ணா : குருவாயூரப்பனே அப்பன்

மக்கு மிக சமீப காலத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களை வழங்கிய பெருமை பெற்றவர் திருமதி. அம்புஜம் கிருஷ்ணா (1917 -1989) அவர்களாவர். அவரது பாடல் ஒன்றை இங்கே கேட்கப்போகிறோம். அதற்கு முன்னால் அவரைப்பற்றி சில வரிகள் வாசிப்போமா?

1951 இல் இவர் திருவையாறு வந்து சென்றபின் ஏற்பட்ட மாற்றத்தின் பின் பாடல்கள் பலவற்றை இயற்றினார் எனச் சொல்லப்படுகிறது. இவரது முதல் பாடலான 'உன்னை அல்லால் உற்ற துணை வேறுண்டோ...', தேவி மீனாட்சி அம்மனைப் பாடுகிறது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயற்கையாக பாடல்களை இயற்றி இருக்கிறார். இவர் அறுநூறுக்கும் மேலான பாடல்களையும் இயற்றி இருந்தாலும், அவற்றுக்கான உரிமையைக் கொண்டாடாத எளியவர். பாடல்களுக்கான இராகங்களை அமைத்தாலும், அவை தன் சிறிய இசை ஞானத்தால் அமைக்கப்பட்டவை எனச்சொல்லி, அவற்றை வாசிக்கும் இசை கலைஞரின் விருப்பதிற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம் எனச் சொன்னவர். கண்ணன் பாடல்களை பெரிதும் இயற்றிய இவர் கணவரின் பெயரும் 'கிருஷ்ணா' என அமைந்தது என்ன பொருத்தம்!.

இவர் இயற்றிய பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவை:
மனநிலை அறியேனடி மனங்கவர் - பாக்யஸ்ரீ
ஓடோடி வந்தேன் கண்ணா - தர்மவதி
என்ன சொல்லி அழைத்தால் - கானடா
பொழுது மிகவாச்சுதே - ரேவதி
காண்பதெப்போது - பிலஹரி
குருவாயூரப்பனே அப்பன் - ரீதிகௌளை

இந்த இடுகையில் 'குருவாயூரப்பனே அப்பன்' பாடலை திரு.உன்னி கிருஷ்ணன் பாடிடக் கேட்கலாம்: (ரீதிகௌளையில் அருமையான ஆலாபனை முடிந்தபின் பாடலைக் கேட்கலாம்)
(இப்பாடல் சென்ற வருடம் அகஸ்டா,ஜார்ஜியாவில் நடைபெற்றக் கச்சேரியல் பாடியது: நன்றி திரு.மஞ்சுநாத்)

குருவாயூரப்பனே அப்பன்எடுப்பு
குருவாயூரப்பனே அப்பன்
ஸ்ரீ கிருஷ்ணன்
குருவாயூரப்பனே அப்பன்

தொடுப்பு
நாராயணா என நாவாற அழைப்போர்க்கு
வருமிடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
(குருவாயூரப்பனே அப்பன்)

முடிப்பு
விழிகட்கு அமுதூட்டும் எழில் திருமேனி
தழுவக் கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்
முழுமதி முகம் திகழ் அருள்விழிச் சுடர்கள்
அழைக்கும் அன்பர்க்கு அருளும் அடிமலர் இணையும்

முன்னம் யசோதை மைந்தனாய் வந்தவன்
இன்று நமக்கிரங்கி இங்கு(/எங்கும்) எழுந்தருளி
பாலனாய் யுவனாய்ப் பாலிக்கும் தெய்வமாய்
பரவச நிலைகாட்டும் பரம புருஷன்

(குருவாயூரப்பனே அப்பன்)

* திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.
* திருமதி. சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்.
* இந்த பாடலுக்கான ஸ்வரக் குறிப்புகளை இந்த PDF மென் இதழில் பார்க்கலாம் - நன்றி திரு. சிவ்குமார்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடல்களின் பட்டியல் இங்கே. - நன்றி திரு. லக்ஷ்மணன்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் நிழற்படம் - நன்றி தி ஹிந்து நாளிதழ் தளம்

28 comments:

  1. இவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாங்க வடுவூர் குமார், பாடலை இரசித்தீர்களா?

    ReplyDelete
  3. அம்புஜம் கிருஷ்ணாவின் ஒரு பாடலின் வரிகள் பின்னே.


    மனநிலை அறியேனடி சகியே
    வரிகள்: அம்புஜம் கிருஷ்ணா
    ராகம்:பாகேஸ்ரீ

    //இவர் அறுநூறுக்கும் மேலான பாடல்களையும் இயற்றி இருந்தாலும், அவற்றுக்கான உரிமையைக் கொண்டாடாத எளியவர்.//

    பணியுமாம் என்றும் பெருமை ; சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.

    பெருமை, பெருமிதம் இன்மை; சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.

    எனும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப,

    உள்ளத்தே உயர்ந்தவர் எளியவர். அவரில் எவருமே தமது படைப்புகளை உலகத்தோருக்கு அர்ப்பணிப்பர்.
    தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என்ற பெரு நோக்குடையவர்.

    ரீதி கெளளையில் பதிவிடப்பட்ட பாடல் அழகாக, தெளிவாகப் பாடப்பட்டிருந்தது.
    பாராட்டுக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  4. பாடலும் அறியத்தந்த செய்தியும் அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நாங்கள் இதுவரை அறிந்திராதவர்களைப்பற்றிய தங்கள் இசைக்குறிப்புகள் அற்புதம் ஜீவா...
    தொடர்ந்து இதுபோன்ற அறிமுகங்களை செய்யுங்கள் ....

    ReplyDelete
  6. இப்படி கலைஞர்களை அறிமுகப்படுத்துவது நல்ல
    விஷயம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அம்புஜம் கிருஷ்ணா அவர்களுக்கு ஒரு நல்ல Intro பதிவு ஜீவா!

    இல்லையில்லை...மக்களுக்கு அம்புஜம் கிருஷ்ணாவைப் பற்றிய ஒரு நல்ல Intro பதிவு :)

    வேர் இஸ் வல்லியம்மா?
    எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க! அம்புஜம் கிருஷ்ணா என்றால் நீங்க தானே வரணும்! :)

    ReplyDelete
  8. பாடல் அழகுத் தமிழில் இனிமை கொஞ்சுகிறது. "ஓடோடி வந்தேன் கண்ணா"விற்கு நடனம் அமைத்து பார்த்திருக்கிறேன். ஆனால் இயற்றியவர் பெயர் இப்போதுதான் அறிந்து கொண்டேன். நன்றி ஜீவா.

    ReplyDelete
  9. வருக சூரி ஐயா,
    ஆம், தெளிவாக பாடி இருக்கிறார் உன்னி கிருஷ்ணன். ஆனால், கடைசி சரணம் வரிகளை வேகமாக பாடுதலால், முதல் முறை கேட்பவர்களுக்கு அவற்றை சற்றே கடினமாக இருக்கும்.

    ReplyDelete
  10. வாங்க அகரம்.அமுதா, வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க கிருத்திகா மேடம்,
    //தொடர்ந்து இதுபோன்ற அறிமுகங்களை செய்யுங்கள் //
    நல்லது, அப்படியே ஆகட்டும்.

    ReplyDelete
  12. வாங்க திவா சார், வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. வாங்க கே.ஆர்.எஸ்,
    //வேர் இஸ் வல்லியம்மா?//
    அவங்களை அனேகமா, நயாகராவில் தான் பிடிக்கணும்ன்னும் நினைக்கிறேன்!

    //எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க! //
    அப்படியே! வந்து எங்களுக்கு அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் குடும்பத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்... ;-)

    ReplyDelete
  14. வாங்க கவிநயா,
    //"ஓடோடி வந்தேன் கண்ணா"விற்கு நடனம் அமைத்து பார்த்திருக்கிறேன்.//
    அப்படியா, அருமை!

    ReplyDelete
  15. Well, Ambujam Krishna is and has been well known for her beautiful compositions ever since many doyens of Carnatic music popularized her songs. My favorite is "azhagA azhagA ...." in sudda dhanyAsi rAgam . Others are: kaNNan kuzhalOsai kETkudaDi (tilang), kaNNaniDam eDuttuch chollaDi (rAgamAlikai), pArttasArathi un pAdamE gati (kAmbhOji)

    When I hear uNNikrishNan's rendition I hear him say "varangaTku amudUTTum". Definitely a compromise on lyrical fidelity. As you wrote it is "vizhkaTku" in order to conform to etugai with other words such as "tazhuva". "muzhumati", and "azhaikkum".

    In the madyamakAlam the second line should read "inRu namakkirangi ingu ezhundaruLi". This stanza refers to Krishna who was once (munnam) a child of yashOdai has now descended here (ingu) in GuruvAyUr in the same child/youth form. S Gayatri sings as "ingu", while Sowmya sings as "engum". I think uNNi also sings as "ingu".

    ReplyDelete
  16. அட, நேத்துத் தான் அம்புஜம் கிருஷ்ணாவின் "கண்ணனிடம் எடுத்துச் சொல்லடி," பாட்டைக் கேட்டுக் கொண்டே அவங்களைப் பத்திச் சொல்லிக்கொண்டு இருந்தேன், இங்கே வந்தால் நீங்க ஒரு போஸ்டே போட்டிருக்கீங்க! படம் ரொம்பப் பழசோ??? நாரதா எழுதி இருக்கும், அழகா, அழகா பாட்டும் ரொம்பவே நல்ல பாட்டு. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. @narada:
    வாங்க திரு.சேதுராமன் சார்.
    அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் பாடல்களில் தங்களுக்கு பிடித்தவைதனை குறிப்பிட்டமைக்கு நன்றிகள்.

    'விழிகட்கு அமுதூட்டும்' என்ன அருமையான வரிகள். பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சௌம்யா பாடுகையில் 'விழிகட்கு' என்றே வருகிறது.

    மேலும் தாங்கள் சொல்வதுபோல "இங்கு எழுந்தருளி" என்பது "எங்கும்" என்பதைக் காட்டிலும் இந்த இடத்தில் தோதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இடுகையில் அதையும் சேர்த்து விடுகிறேன்.

    இங்கும் எங்கும் தங்கும் குன்றா விளக்காம் பெருமான் அவன்தாள் சரணம்.

    தங்கள் கூர்ந்த கவனிப்புக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. வாங்க கீஹா மேடம்,
    //பாட்டைக் கேட்டுக் கொண்டே அவங்களைப் பத்திச் சொல்லிக்கொண்டு இருந்தேன்,//
    ஆகா, அப்படியா, அருமை.
    //படம் ரொம்பப் பழசோ??? //
    படம் எப்போது எடுத்தது என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்தால் 70களில் எடுத்ததுபோல் தெரிகிறது அல்லவா.

    ReplyDelete
  19. Here is a beautiful rendering of "azhagA azhagA..." by the late great MLV.
    You may have to register or log in at the site and then scroll down to select the song mentioned as "azhagA"
    http://www.raaga.com/channels/carnatic/singersdetail.asp?cast=ML._Vasantha_Kumari

    ReplyDelete
  20. சேதுராமன் சார்,
    சுட்டிக்கு நன்றி.
    தாங்கள் இந்தப் பாடலை சென்னை ஆன்லைனில் இங்கு தொகுத்திருப்பதையும் பார்த்தேன்.

    ReplyDelete
  21. //படத்தைப் பார்த்தால் 70களில் எடுத்ததுபோல் தெரிகிறது அல்லவா.//

    70க்கும் முன்னால் எடுத்திருக்கவேண்டும். :))))))))

    ReplyDelete
  22. //70க்கும் முன்னால் எடுத்திருக்கவேண்டும். :))))))))//
    அப்படியா.
    ஒருவேளை வல்லியம்மாவைக் கேட்டால் சரியாச் சொல்லுவாங்க!

    ReplyDelete
  23. ஆமாம் படம் ரொம்பப் பழையது.
    ஆனால் சித்தி இன்னம் அழகாக இருப்பார்.
    எளிதில் போட்டொஎடுக்கவிடமாட்ட்டார்.

    கணவர் இருக்கும்போது அவரிடம் இருந்த உற்சாகம் அப்புறம் இல்லை.

    கீட்ட்டத்தட்ட பதினாறு மொழி கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன்.

    கண்ணன் மீதூ பாடல்கள் தன்னிச்சையாக வந்து கொண்டே இருக்கும் அப்படியே எழுதிக் கொள்வேன் என்பார்.
    அப்படி ஒரு ஈடுபாடு கிருஷ்ணன்மேல்.
    நவதிருப்பதிகளுக்குப் போகும்போதும் அப்படித்தான்,அந்த அந்தப் பெருமாள் மேல் பாடல்கள் வர வர எழுதியதாகவும் சொல்லுவார்.
    அரவிந்த லோசனன்'' அப்படி எழுதியதுதான்.
    1988 வாக்கில் யேசுதாஸின் குருவாயூரப்பன் பாடல்களைத் தெரிந்து கொள்ள மலையாளம் மொழியையும் கற்றுக்கொண்டார்.
    அற்புதமான பெண்.
    தொலைபேசியில் விளிக்கையில் 'கண்ணா சௌக்கியமா ' என்றுதான் கேட்பார்.
    ஒரு சரித்திரமே எழுத வேண்டும் அவரைப் பற்றி.
    அவர் என் மாமியாருக்குத் தங்கை.
    அதுதான் அவர் எனக்குச் சித்தியான விதம்.:)

    நன்றி ஜீவா.

    ReplyDelete
  24. வாங்க வல்லியம்மா,
    நீங்களே வந்து சொன்னது மிகவும் சந்தோஷம்.
    //பதினாறு மொழி கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன்.
    //
    பதினாறா, வாவ்!

    அவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். சரித்தரம் எழுதி அதை நாங்கள் படிக்கவும் காத்திருக்கிறோம்!

    //அவர் என் மாமியாருக்குத் தங்கை.// அதை அழகாக, சித்தி - எனத் தொடங்கிய விதத்தை இரசித்தேன்.

    ReplyDelete
  25. அவ்வித கூப்பிட வைத்தது எங்க வீட்டுக்காரரின் விருப்பத்தால். அவர் சித்தியைத் தன் அம்மா போலவே நினைத்தர்.அம்மா சொல் கூட மீறுவார்.சித்தி ஒரு சொல் சொன்னால் உடனே கட்டுப்படுவார்:)

    ReplyDelete
  26. அப்படியா வல்லியம்மா, நல்லது.
    இன்னொரு நிகழ்ச்சி, நான் படித்தறிந்தது, சட்டென்று நினைவுக்கு வருகிறது:
    ஒரு சமயம், அவர் கண்ணன் திருவுருவம் தன் வீட்டுக்கு வருவதாகக் கனவு கண்டாராம். பின்னர் சில மணி நேரத்தில் வெளியூர் சென்று திரும்பிய அவரது கணவர், அங்கிருந்து ஒரு கண்ணன் சிலையை (அ)பொம்மையை வாங்கி வந்தாராம்!
    கனவு மெய்ப்பட, பெரும்பேறு பெற்றவர் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  27. ராமனையும் சித்திக்கு ரொம்பப்பிடிக்கும்.ஆனால் கணவரும் கிருஷ்ணா.
    அதனால் கிருஷ்ஹ்ணனின் மேஎல் இன்னும் காதல் அதிகம் என்று என் மாமியார் சொல்லியிருக்கிறார்.:)

    இந்தக் கனவு போல அவருக்கு ,உள்ளுணர்வு மிகவும் அதிகம்.
    நன்றி ஜீவா.மிகப் பெரிய மனுஷி.

    ReplyDelete
  28. where can i get the CD/DVDs of Chinna chinna padam composed by ambujam krishna.

    Please guide me.

    Regards
    Ramalingam K
    ramalingam007@gmail.com

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails