நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய "தேறுவதெப்போ நெஞ்சே..." பாடலை இங்கு பார்க்கலாம். நீந்திக் கரை ஏற இயலாத பெருங்கடலென பிறவியினைச் சொல்வார்கள் பெரியோர்கள். பிறந்த முதலே, புலன்கள் சொல்லித்தரும் ஈர்ப்புகளில் நம்மை இழந்து விடுகிறோம். இந்த உலகில் சேர்க்கும் செல்வத்தோடும், சொந்த பந்தங்களுடனும், இன்ன பிற விருப்பங்களுடனும் இருக்கமானதொரு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த இணைப்பில் தவறேதும் இல்லை. ஆனால் அவையெல்லாம் நிலையில்லாதவை என்பதினை நாம் நமது சுயலாபத்திற்காக எளிதாக மறந்து விடுகிறோம். நிலையில்லா உலகில் நிலைப்பதெப்போ? நீந்திக் கரை ஏறுவதெப்போ? எல்லா இணைப்புகளையும் அறிந்திடும் அதே புத்தியில் ஒரு ஓரத்திலாவது, நிலையான நீலகண்டனின் நினைப்பிருந்தாலே போதுமே. அகந்தை அழிந்திட, சித்தினை அறிந்திடும் புத்தியினை நெஞ்சில் வார்க்கும் அவன் கருணையைத் தேடிட, கடைத்தேறாதோ பிறவி?
வேதம் நான்கும் சொல்லிடும் நாதன் நாமமே மெய்ப்பொருளாக இருக்கையில், வேறேன்ன வேண்டும்?
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே.
(மூன்றாம் திருமுறை - திருஞான சம்பந்தர் தேவாரம்).
இப்போது திரு.நீலகண்ட சிவனின் பாடலைப் பார்ப்போம்:
------------------------------------------------------------------------------------------
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி
எடுப்பு
தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை
ஏறுவதெப்போ நெஞ்சே
தொடுப்பு
கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான
காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)
முடிப்பு
மண்ணே பொருளே யெந்தன் மனைவி மக்களேசொந்த
கண்ணே நீங்களே அல்லால் கதியில்லை என்றிருந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)
உடலை நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி
மடமை பெருக நின்று வனமிருகம் போல் அலைந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)
அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல
கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜன்மம்
(தேறுவதெப்போ நெஞ்சே...)
சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட, இந்தப் பாடலை கேட்கலாம்:
தேறுவதெப்போ நேஞ்சே? |
-------------------------------------------------------------------
நீலகண்ட சிவன் இயற்றிய பாடல்களில் இதர புகழ் பெற்ற பாடல்கள்:
சம்போ மகாதேவா,
உமைக்குரிய திருமைந்தா,
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை
ஆஹா!
ReplyDeleteஇந்த ஞானப்பாடல்களை எல்லாம் தேடிப்படிக்க வேண்டும்! நேரம்?? :-(
வாங்க திவா,
ReplyDelete//தேடிப்படிக்க வேண்டும்!//
அதைத்தான் நான் செஞ்சிகிட்டு இருக்கேன், இங்கே வந்து பார்த்தாலே போதுமே!
இசை ங்கிற தலைப்பில்தானே இருக்கு எல்லாம்?
ReplyDeleteஸ்கூல் திறந்தால் எல்லாத்தையும் படிக்க நேரம் கிடைக்கலாம்.
ஆமாங்க, அப்புறம் தனித்தனியா படிக்கணும்னா, தேவாரம், திருப்புகழ் என்பதுபோல பகுதிகளில் இருக்கு!
ReplyDeleteஅருமையான பாடல் ஜீவா, அதிகாலை வானொலியைத் திருகிக்கேட்ட உணர்வு வருகின்றது
ReplyDeleteவாங்க பிரபா,
ReplyDeleteஅதிகாலை வானொலி என்று சொன்னவுடன் - பழைய நினைவுகள் மலர்கின்றன!
நீங்கள் சொன்னது DKP அம்மாவின் குரலோடு இரண்டறக் கலந்து இனிமையைத் தருகின்றது!
நல்ல பாடலை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் ஜீவா. நன்றிகள்.
ReplyDeleteவாங்க குமரன், நன்றிகள்.
ReplyDeleteமுந்தைய தலைமுறையினர் போற்றிப் பாதுகாத்து, பாடிப்பாடி மனம் நெகிழ்ந்து திகட்டாத தேன் என மாந்திய தமிழிசைப் பாடல் தொகுப்புகளை, இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதோடு அல்லாமல்,
ReplyDeleteஇப்பொழுதும் பாடிக்கேட்க வசதியாய்
இசையோடு அளிக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ஜீவி. சென்ற தலைமுறைப் பாடகர் பாடலை வாசகர்கள் ரசிப்பார்களா என்ற ஐயம் இருக்கத்தான் செய்தது. இப்போது அப்படிக் கவலைப்படத் தேவையில்லை எனப் புரிகிறது.
ReplyDeleteமிக அருமையான பாடல், கானா சொன்னது போல, அந்தக்கால ரேடியோ நினைவு வந்ததென்னமோ உண்மை. :-)
ReplyDeleteதொடருங்கள் கேட்க நாங்க இருக்கோம், நேரம் கிடைக்கும் போது தொடருங்கள் ஜீவா...
தொடருகிறேன், திரு.மௌலி.
ReplyDeleteதங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
சில கேள்விகள்/பாடல்கள்/கருத்துகள் என்றைக்கும் பொருந்தும். அதே போலத்தான் இதுவும் - "தேறுவதெப்போ நெஞ்சே". விடைதான் தெரியவில்லை :( அருமையான பாடலுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க கவிநயா, பொருத்தமாகச் சொன்னீர்கள்!
ReplyDeleteஜீவா
ReplyDeleteவிடுமுறையில் விட்டுப் போன இடுகைகள் எல்லாம் ஒவ்வொன்னாப் படிச்சிக்கிட்டு வாரேன்!
அது என்ன எடுப்பு, தொடுப்பு, முடிப்பு? :-)
தேவார இசைக்குப் பின் மெல்ல (நீலகண்ட) சிவனின் இசை! எனக்கு மிகவும் பிடித்த பாட்டும் கூட!
தேவார இசை பற்றி விரைவில் இசை இன்பத்தில் ஒரு தொடர் தொடங்க வேண்டும். இந்த முறை ஊருக்குப் போன போது கொஞ்சம் அள்ளிக்கிட்டு வந்திருக்கேன்!
ஞான அறிவைத் தேட விழையும் பாடல்கள் பல (சித்தர் பாடல்கள் உட்பட) சிந்தையை நோக்கிச் சொல்லாமல் நெஞ்சே நெஞ்சே-ன்னு நெஞ்சை நோக்கித் தான் சொல்லுறாங்க பார்த்தீங்களா?
வாங்க கே.ஆர்.எஸ்,
ReplyDeleteவிட்டுப்போன இடுகையெல்லாம் படிச்சாச்சா. சமீபத்தில் இட்டதெல்லாம் பாடல் இடுகைகள்தான்.
//அது என்ன எடுப்பு, தொடுப்பு, முடிப்பு? :-)//
என் வாயால் சொல்லவேண்டும் போலும், சரி: இவை முறையே பல்லவி, அனுபல்லவி, சரணம் - ஆகியவற்றுக்கு ஈடானதாகும்.
//இந்த முறை ஊருக்குப் போன போது கொஞ்சம் அள்ளிக்கிட்டு வந்திருக்கேன்!//
அப்போ, இசை இன்பத்தில் இனிமே இசை வெள்ளம் தான்!
//நெஞ்சே நெஞ்சே-ன்னு நெஞ்சை நோக்கித் தான் சொல்லுறாங்க பார்த்தீங்களா?//
ஆமாங்க, இதயக் கமலமே இறைவன் உறையும் இடம். இனிய அன்பு ஊறும் இடம். அன்பாலே தேடி அகத்தில் அவனருளைப் பெற கனிய வேண்டிய இடம் இதயம் என்கிறார்கள்!
விட்டுப் போனதை எல்லாம் சேர்த்து வச்சுப் படிச்சேன், ஊருக்குப் போகிறதுக்கு முந்தி! நல்ல அருமையான தொகுப்புக்களைத் தேடிப் பிடித்துத் தருவதற்கு இசை உலகம் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க மேடம்,
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பயணம் இனிதாய் அமையவும் வாழ்த்துக்கள்!