Tuesday, September 25, 2007

யாரிந்த நடராஜன்?

எந்த நடராஜனைப் பற்றி இந்த பதிவென்று பார்க்க இந்தப் பதிவின் பக்கம் வருகை தந்த வாசகருக்கு என் வாசக சொல்வதென்ன? எத்தனையோ நடராஜன் இங்கே இருந்தாலும் எல்லா நடராஜனுக்கும் ஆதியாய் ஆதி சிவன்் - ஆனந்த தாண்டவன் - தில்லையின் கூத்தன் - தென்னவர் தலைவன் பற்றித் தான்!

இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜ சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன என வரலாறு சொல்வதைப் படித்திருப்போம். நடராஜ சிலை முழுதும் குறியீடுகளாக நிறைந்திருப்பதை பார்க்கலாம்.

அந்தக் குறியீடுகளில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.

ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.



இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?

முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.



பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில்:

சேஷநாகம் - கால சுயற்சியையும்
கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை - அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.


பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.


வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.


தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது.


இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.


அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!



அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
- பன்னிரெண்டாம் திருமுறை

14 comments:

  1. அருமையான, அட்டகாசமான பதிவு!
    ஒவ்வொரு முத்திரையையும் விளக்கும் விதத்தில், சுட்டிக்காட்டி எடுக்கக்பட்ட விளக்கப் புகைப்படங்கள்
    பிரமாதம்!
    நடனக்கலை பயின்றவர்கள், நாதனின்
    இந்த முத்திரைகளை, நாட்டிய அபிநயங்களோடு ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினால்,மிகச் சிறப்பாக இருக்கும்.
    பக்தி என்பது லலித கலைகளோடு
    ஒன்றியிருப்பது அதன் இன்னொரு
    பரிமாணம்!

    ReplyDelete
  2. நம்ப கீதா சாம்பசிவம் மேடம் சில தாண்டவ வடிவங்களை அவங்க சிதம்பர ரகசியம் பதிவில் தந்திருக்காங்க பாருங்க

    ReplyDelete
  3. அருமையாக எழுதி இருக்கீங்க ஒவ்வொண்ணும் நல்லா அனுபவிச்சு, இந்த அளவுக்கு எல்லாம் என்னாலே எழுத முடியுமா சந்தேகம் தான். இருந்தாலும் நீங்கள் என்னையும், என்னோட பதிவையும் குறிப்பிட்டிருப்பதுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வாங்க கீதா மேடம், உங்க தொடர் பதிவுக்கு முன்னால் இது சிறு முயற்சிதான்!

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி ஜீவா.
    இதுவரை அறிந்திராத விளக்கங்கள்.
    சிவனின் காலடியில் இருப்பது காரைக்கால் அம்மையார் இல்லையா?

    சிவனின் காலடியில் இருப்பது காரைக்கால் அம்மையார் என யாரோ என் சிறுவயதில் சொன்ன ஞாபகம்.
    அதுதான் கேட்கிறேன்.

    யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் ஆலயத்தில் சிவனின் 108 விதமான நடன அபினயங்களை உள்வீதியில் வைத்திருக்கிறார்கள்.

    "மேன்மை கொள் சைவ நீதி
    விளங்குக உலகமெல்லாம்"

    மீண்டும் நன்றிகள் ஜீவா.

    ReplyDelete
  6. வாங்க வெற்றி!

    நிச்சயமாக சிவனின் காலடியில் இருப்பது அம்மையாரல்ல!


    அதே சமயம் காரைக்கால் அம்மையாரைப் பற்றி பல விஷயங்கள் இன்னமும் ஆராயப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. அம்மைதார் பற்றி மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பார்க்கலாம்.
    //யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் ஆலயத்தில் சிவனின் 108 விதமான நடன அபினயங்களை உள்வீதியில் வைத்திருக்கிறார்கள்.
    //
    அப்படியா! இது நல்லூர் கந்தன் ஆலயத்திலா அல்லது சிவன் ஆலயத்திலா?


    இங்கே அட்லாண்டா சிவன் ஆலயத்தில் படங்களாக சிவனின் நாட்டிய தாண்டவங்களை வைத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  7. ஜீவா,நான் இது வேறு யாரோ நடராஜன் என்று நினைத்தேன்.
    ஆடலழகரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததே இல்லை.
    அருமையாக Zoom பண்ணியிருக்கிறீர்கள்.்

    ReplyDelete
  8. வாங்க வடுவூரார்!



    //ஆடலழகரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததே இல்லை.
    அருமையாக Zoom பண்ணியிருக்கிறீர்கள்.்//

    இப்படிச் சொன்னவுடன், என்னையும் ஒரு முறை படங்கள் அனைத்தையும் பக்கத்தில் சென்று பார்க்க வைத்தது!

    ReplyDelete
  9. Anonymous7:34 PM

    நிறைய விஷயங்களை தெரிந்த்து கொள்ள உதவியாய் இருந்தது, நன்றி!

    ReplyDelete
  10. வாங்க சுந்தரம, நன்று!

    ReplyDelete
  11. அருமையான பதிவு - தில்லைக்கூத்தனின் அழகான படம் இதுவரை நான் பார்த்ததிலே சிறந்த படம். விளக்க உரையோ மிக அருமை. படிக்கப் படிக்க பரவசம். சிறு வயதில் தஞ்சையில் ஆருத்ரா தரிசனம் கண்ட போது "நடராசா நடராசா ந(ட்)டன சுந்தர நடராசா" என ஆடிப்பாடி அனுபவித்த நிகழ்வுகள் மனதிலே மறுபடியும் மலர்கின்றன. மிக்க நன்றி -

    ReplyDelete
  12. ஆகா, உங்கள் அனுபவ விமர்சனம் பரவசமூட்டுகிறது...!

    நடன சபேசா நதிப்புனை ஈசா
    திடமுறு தேகா சிற்சபை வாசா!

    பாடுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்!

    ReplyDelete
  13. அழகு, அற்புதம்.. அருமை..

    உங்களது விளக்கவுரைக்கு எனது நன்றிகள்..

    இவ்வளவு விளக்கமாக நான் இவற்றை இதுவரையிலும் படித்ததும் இல்லை.. பார்த்ததும் இல்லை..

    ஆன்மிகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் உண்டு. இல்லாமல் இருக்காது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு..

    கலைகளிலே ஒரு ஆலயம்.. அது ஆன்மிகம்தான்..

    ReplyDelete
  14. வாங்க உண்மைத் தமிழன்.

    ReplyDelete