Monday, November 17, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிநான்கு

சென்ற பகுதியில் மறுமொழிகளால் நிறைத்தருளிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு வந்தனங்கள் பலப்பல. ஜீவன் முக்தரைப் பற்றி அறிந்திட, அவர் எழுப்பிய வினாக்கள், ஆத்ம போதத்தில், அடுத்து வரும் செய்யுள்களுக்கு, முன்னோடியாய் அமைந்திருக்கின்றன என்றால், வியப்பும் மேலிடுகிறது. இப்போது பார்க்கப்போகிற இரண்டு பாக்களுமே, ஜீவன் முக்தரைப் பற்றியவைதான்!

இந்தப்பாடல், ஜீவன் முக்தன் ஒருவன், எப்படி உலகத்தில் வாழ்வான் எனச் சொல்கிறது:
பா 51:
அனித்தவெளி யின்பிச்சை யற்றானா யான்மா
தானின்பித் திருத்தி தன்னையுற் - றனிசமுன்
தன்னொளி யாற்குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தானொளிர்வன் றான்.
(சீர்களைப் பிரித்தபின்:)
அனித்தவெளியில் இன்ப இச்சை அற்றனாய் ஆன்மா
தான் இன்பித்தில் இருத்தி தன்னையுற்ற நிஜமுன்
தன்னொளியால் குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தான் ஒளிர்வன் தான்.

பொருள்:
தன்னின் வெளியே இருக்கும் உலகத்தின் பால் ஏற்படக்கூடிய இச்சை அல்லது விருப்பம் தீர்ந்திருக்க,
அவ்விச்சைகளெல்லாம், இப்போது தன் ஆன்மாவின் மேல் அன்பாய் மாறியிருக்க,
அந்த 'தான்'(ஆன்மா) தரும் அணையா ஒளியால்,
குடத்தினுள் வைத்த விளக்குபோல, அவன், அவ்வான்மாவால் ஒளிர்வான்.

விளக்கம்:
பரமனின் ஒரு பகுதியாக ஒளிரும், விகாரமேற்படா ஆன்மா, எப்போதும் ஒவ்வொருவர் உள்ளும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஜீவன் எப்போதுமே, தன்னின் வெளியிலேயே தான் கவனம் செலுத்தி வருவதால், தன் அக ஒளியை தானே கவனிக்க இயலுவதில்லை. ஜீவன் முக்தன், தன் உபாதிகளை எல்லாம் இழந்து வருவதனால், அவனால், வெளி உலகத்தின் ஈடுபாடுகளை புறக்கணித்து, தன் அகவொளியினை உணர இயல்கிறது.
வெளி இன்பங்களில் சிதறடிக்கும் உபாதிகளை இழந்தவன், தன் ஆன்மாவின் பெருமையைப் போற்றும் அன்பில் திளைத்திட,
அவனின் அகங்காரமிலாத மனதில், ஒளிர்ந்திடும் ஒளியினை உணர, அந்த ஒளியாகவே மாறிட, அம்மனதும் விழைகிறது.
எப்படி, கண்ணாடிக் குடத்தினுள், ஒளிதரும் விளக்கினை வைத்துவிட்டு, வெளியில் இருந்து பார்த்தால், அக்குடமே, ஒளியுடன் திகழ்கிறதோ, அதுபோல, அந்த ஜீவனும் ஒளிர்வான்.

கீதையில் கண்ணனும் உரைப்பான்: (2.55):
பார்த்தா, எப்போதும் தன்னுடைய மனதில் எழும் ஆசைகளைத் இழந்து, தனக்குள் மகிழ்ச்சியுடன் ஒருவன் இருப்பானேயானால், அவன் நிலையான ஞானம் அடைந்தவன் எனக் கூறப்படுவான்.

பா 52:
உபாதியுற் றானேனு மொட்டாவிண் போலவ்
உபாதித்தரு மங்களொ டொட்டா - னுபாதியில்லான்
முற்றறிவ னெனுமுனி மூடனென வாயுபோற்
பற்றறச் சஞ்சரிப் பான்.
(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதியுற்றா னேனும் ஒட்டா விண் போல
உபாதி தரும் அங்களோடு ஒட்டான் - உபாதியில்லான்
முற்றறிவன் எனும் முனி, மூடன் என வாயுபோல்
பற்று அறச் சஞ்சரிப் பான்.

பொருள்:
உபாதிகளைக் கொண்டவனாய் இருப்பினும், ஜீவன் முக்தன், விண்ணைப்போல, அந்த உபாதிகள் தரும் குறைபாடுகளோடு, ஒட்டாமல் இருப்பான். அவைகளால், அவனுக்கு மாறுதல்கள் ஏதும் ஏற்படா. உபாதிகள் முற்றிலும் அறும் வரை, வாயுபோல இப்பூவுலகில் ஒட்டாமல் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான்.

விளக்கம்:
உபாதி : எவையெல்லாம், நான், எனது, என்று ஜீவனை, நினைக்க வைக்கிறதோ, அவையெல்லாம் உபாதிகளாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றின் விளைவால், ஆவதெல்லாமே, என்னால் எனக் கொள்கிறோம். நம்மோடு பிறந்த இவ் உபாதிகளை ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

ஜீவன் முக்தனுக்கு, இன்னும் உபாதிகள் முழுமையாக முடிவடையவில்லை. அவற்றுக்கு அவன் பார்வையாளனாக இருப்பினும், அவைகளோடு, தாமரை இலைத் தண்ணீர் போல, ஒட்டாமல் அவன் இருப்பான். உபாதிகளால் ஜீவனில் ஏற்படும் குறைபாடுகளான, மறு பிறப்பு, நிலையிலாமை, இறப்பு போன்றவை ஜீவன் முக்தனுக்கு இல்லை.

விண்ணைப்போல : பொதுவாக வானம், வெளிர் நீல நிறத்தில் தெரிகிறது. சில நேரம், கருமைத் தூசிகளாலோ, அல்லது கரும் மேகங்களாலோ, கருமையாகவும் தெரிகிறது. ஆனால், ஆகாயத்திற்கு, இதனால், பாதிப்போ, அல்லது மாற்றமோ, இல்லையே. விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே இருக்கும் பார்வையில் தான் பிழை. விண்ணுக்கேதும் குறை இல்லை. அதுபோல, ஜீவன் முக்தர், உண்ணுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், அதனால், அவர்களுக்கேதும் குறைவில்லை.

மூடன்: ஜீவன் முக்தர், யார் என்ன சொன்னாலும், போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி, அவர், யாதொரு மாறுதலும் அதனால் அடையாமல், அமைதியாக அதைக் கேட்டுக்கொள்வார் - கிட்டத்தட்ட மூடன் போல. எல்லாவற்றில் அவர் பிரம்மத்தினையே பார்ப்பதால், தனக்காக, ஏதையும் செய்ய இயலார்.

மேலும்:
ஜீவன் முக்தனுக்கு, பிராப்த கர்ம வினைகள், இன்னமும் இருந்திடலாம் என்றும், இவ்வினைகள் முழுவதும் முடியும் வரை, நிலையான, இறுதியான முக்தி அடைய இயலாது என்றும் சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ, ஜீவன் முக்தி என்னும் நிலையே, இறுதியான நிலை. இந்நிலையிலேயே, எல்லா வினைகளும் அற்று இருப்பார்கள் என்கிறார்கள். இப்படி ஏதும், பொதுமைப்படுத்தாமல், ஒவ்வொரு ஞானிக்கும், ஒவ்வொரு விதமாக, இறைவனின் திரு உளத்திற்கு ஏற்றால் போல் அவ்வாறு அமைந்தது எனக் கொள்ளவே வேண்டும். எதுவாக இருப்பினும், உபாதிகளை இழந்து, எல்லாமும் ஆன பரமனை அடைந்து, துவங்கிய இடத்தை, மீண்டும் அடைவதுதான் ஜீவனின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்த பகுதியில், ஜீவன் முக்தன் பூவுலகை அகலும் இறுதியான நிலையினையும், அவன் பரமனை அடைவதைப் பற்றியும், ஆத்ம போதம் செல்லுவதைப் பார்ப்போம்.

18 comments:

 1. சிலவற்றில் ஒப்புதல் இல்லாவிடினும், ஜீவன் முக்தி (தெய்வ பிறவி / நிலையான வாழ்வு) பற்றி நீங்கள் விளக்க முயன்றிருப்பது நன்றாக இருக்கிறது. தெய்வ அவதாரங்கள், தெய்வப் பிறவிகள், இறைத் தூதர்கள் என்ற வகையில் பிறப்பது அனைத்துமே ஜீவன் முக்தி பெற்றவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. தெளிவாகச் சொல்லிவருகிறீர்கள் ஜீவா. வாழ்த்துக்கள்....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...

  ReplyDelete
 3. வாருங்கள் கோவியாரே,
  வருகைக்கு நன்றி. தெய்வ அவதாரங்களைப் பற்றி இங்கே விளக்க முயலவில்லை. மனதினாய் பிறந்த ஜீவாத்மா பற்றி மட்டுமே. சிலருக்கு, இந்த ஆத்மா, எப்போதுமே தெளிவுடன் இருக்கிறது - ஆனால் அறியாமையினால், அந்த தெளிவு உணர்ந்திட இயலாமலும் இருக்கிறது. சிலருக்கு, இறுதி நிலையில்தான் தெளிவு பிறக்கிறது. இதுதான் வேறுபாடு. இதை இந்த தத்துவம் என்றும் அந்த தத்துவம் என்றும் பெயரிடுகிறார்கள். முடிந்தவரை, இப்பெயர்களை நான் தவிர்க்கப் பார்க்கிறென். ஏனெனில், ஜீவாத்மாவிற்கு தத்துவங்களின் பெயரெல்லாம் தெரியது. அப்பெயர்களால் யாதொரு பயனும் இல்லை.

  ReplyDelete
 4. வாருங்கள் மௌலி சார், வருகைக்கு நன்றி.
  அடுத்த பகுதி இனிமேல் தான்...

  ReplyDelete
 5. //ஜீவன் முக்தரைப் பற்றி அறிந்திட, அவர் எழுப்பிய வினாக்கள், ஆத்ம போதத்தில், அடுத்து வரும் செய்யுள்களுக்கு, முன்னோடியாய் அமைந்திருக்கின்றன என்றால், வியப்பும் மேலிடுகிறது.//

  ஹா ஹா ஹா
  சம்பவாமி பதிவே பதிவே! :)

  ReplyDelete
 6. கண்ணாடிக் குடத்தில் இட்ட விளக்கின் உவமை அருமை!

  குடத்தில் இட்ட விளக்கால் இப்போது உலகோர்க்கு பயனும் உண்டு உல்லவா? தானும் அணையாது, உலகுக்கும் பயன் தரும் இக்கண்ணாடிக் குட விளக்கு நிலை தான் சரணாகதனுக்கு என்று சரணாகதி கத்யத்தில் வரும்! அதை ஆத்ம போதத்தில் பொருத்திப் பார்க்கிறேன்! அருமையாக இருக்கு!

  //ஒவ்வொரு ஞானிக்கும், ஒவ்வொரு விதமாக, இறைவனின் திரு உளத்திற்கு ஏற்றால் போல் அவ்வாறு அமைந்தது எனக் கொள்ளவே வேண்டும்//

  மிகவும் சரி!

  //இதை இந்த தத்துவம் என்றும் அந்த தத்துவம் என்றும் பெயரிடுகிறார்கள். முடிந்தவரை, இப்பெயர்களை நான் தவிர்க்கப் பார்க்கிறென்//

  அப்படியே தொடருங்கள் ஜீவா! நலம்!

  //ஏனெனில், ஜீவாத்மாவிற்கு தத்துவங்களின் பெயரெல்லாம் தெரியது//

  தத்துவங்களின் சாரமே தெரியும்!
  ஜீவாத்மா நாம ரூபம் இல்லாதவன்! இருந்தாலும் பிறவிகளில் நாம ரூபம் கொள்வது போல்...
  தத்துவங்களும் நாம ரூபம் இல்லாதவை...நம் பிறவிகளில் அவையும் நாம ரூபம் கொள்கின்றன! :)

  ReplyDelete
 7. சென்ற பதிவில் எழுப்பிய கேள்விகள் கூட, நம் அனைவரின் புரிதலை ஒருங்கு படுத்தத் தான்!
  Process Oriented-ஆக step by step கேள்வி-விடைன்னு வரும் போது தத்துவங்களின் சாரம் எளிதாகப் புரியும்!

  இதுவும் குணானுபாவம் தான்! இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல், சரியாகப் புரிந்து கொண்டு, கருத்துரையாடிய ஜீவாவுக்கும் அடியேன் நன்றிகள் பல!

  ReplyDelete
 8. வாங்க கே.ஆர்.எஸ்,
  கண்ணாடிக் குடத்தினை தாங்கள் வைத்துப் பார்த்து அருமை!
  //பிறவிகளில் நாம ரூபம் கொள்வது போல்...//
  அதுபோலவே, இவற்றில் உள்ள வேறுபாடுகளை தத்துவ ஆராய்ச்சி செய்வதும், ஒரு சாதாரண சாதகனுக்கு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுத்தும் என நினைக்கிறேன்!

  ReplyDelete
 9. //Process Oriented-ஆக step by step கேள்வி-விடைன்னு வரும் போது தத்துவங்களின் சாரம் எளிதாகப் புரியும்! //
  நிச்சயமாக. அது தான் சிறப்பான வழியும் கூட.
  //இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல்,//
  சரியாப்போச்சு, என்னைவிடவும் மகிழ்வடைந்தார் யார்!

  ReplyDelete
 10. ஜனக மகாராஜாவை ஜீவன் முக்தர்னு படிச்சிருக்கேன். விளக்கு உதாரணமும் வானம் உதாரணமும் நல்லாருக்கு. மிகவும் தெளிவான புரிதலோட எழுதறீங்க. வாழ்த்துகள் ஜீவா.

  ReplyDelete
 11. வாங்க கவிநயாக்கா,
  ஜீவன் முக்தர் அப்படீன்னு நாம படிச்சவங்க பட்டியலைத் தரலாமுன்னு பார்த்தால் - எங்கே - நாம யாரு அவங்களை ஜீவன் முக்தரா இல்லையான்னு சொல்லறதுன்னு விட்டுட்டேன்!
  :-)

  ReplyDelete
 12. //அதுபோலவே, இவற்றில் உள்ள வேறுபாடுகளை தத்துவ ஆராய்ச்சி செய்வதும், ஒரு சாதாரண சாதகனுக்கு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுத்தும் என நினைக்கிறேன்!//

  ஆமாம் ஜீவா!
  சாதகன் மேலோட்டமாகச் சாதகம் செய்தால் அப்படி ஆகும்!
  தத்துவத்தின் பொருள் தெரியுதோ இல்லையோ, தத்துவப் பற்று-ன்னு பிடிச்சிக்கிட்டா கஷ்டம் தான்! :)

  ஆனால் தத்துவத்தின் பொருள் இறைவன் என்று நினைத்துச் சாதகம் செய்தால் இப்படி ஆகாது! ஏன் என்றால் ஆசார்யர்கள் அனைவரும் பொருளைத் தானே தேடுகிறார்கள்! பெயர்களைத் தேடவில்லையே!

  அதனால் தான் அவர்களால் தத்துவ வேறுபாடுகளை எந்த பேதமும் இல்லாமல் தத்துவ ஆராய்ச்சி செய்ய முடிந்தது! அதில் தனிப்பட்ட பெயர் அபிமானங்கள் இருக்காது!

  இரமணர் ஒளவையின் பாட்டுக்கு (இடும்பை கூர் என் வயிரே) எதிர்ப்பாட்டு எழுதினார்-ன்னு நினைப்பதில்லை! இரண்டையுமே இரு பெரும் தத்துவமாகத் தான் பார்க்கப்படுகிறது அல்லவா?

  ReplyDelete
 13. ஆம், கே.ஆர்.எஸ்,
  கிட்டத்தட்ட அந்த ஆச்சார்யர்களைப் போலவே நாம் உண்மையைத் தேடிப்போக வேண்டும். அதன் பின், ஆகா, அவர்கள் சொல்லுவது எல்லாமே, ஒன்றுக்கு ஒன்று முரணாகத் தெரிந்தாலும், எல்லாமே சரி என்பது புரிபடும்.

  ReplyDelete
 14. //அதுபோலவே, இவற்றில் உள்ள வேறுபாடுகளை தத்துவ ஆராய்ச்சி செய்வதும், ஒரு சாதாரண சாதகனுக்கு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படுத்தும் என நினைக்கிறேன்!//

  சரிதான். அது வெறும் intellectual exercise ஆ முடியவே வாய்ப்பு அதிகம். என்ன சொல்லப்படுகிரதுன்னு சிந்தனை....அனுபவம்....அதே முக்கியம்.

  ReplyDelete
 15. வாங்க திவா சார்!
  //சிந்தனை....அனுபவம்....அதே முக்கியம்.//
  அனுபவம்!

  ReplyDelete
 16. //உபாதிகளைக் கொண்டவனாய் இருப்பினும், ஜீவன் முக்தன், விண்ணைப்போல, அந்த உபாதிகள் தரும் குறைபாடுகளோடு, ஒட்டாமல் இருப்பான்.//

  அருமையான பதிவு ஜீவா அவர்களே! ஆனால் இவற்றை practicalஆக கடைபிடிப்பது தான் மிக கடினம் இல்லையா? இளமையில் பணத்தின் பின் அலையும் மனிதன் முதுமையில் பணம் இருக்கும் போது அதை அனுபவிக்க முடியாமல் நோயினால் அவதிப்படுகிறான். ஒரு வேளை 'உனக்கு மேலே நான் ஒருவன் இருக்கிறேன்' என்று அந்த பரம்பொருள் நமக்கு உணர்த்துவதற்காக தான் நோயை கொடுக்கிறானோ?

  ReplyDelete
 17. வாருங்கள் eகுரு(!),
  கடினமாக தெரிவதற்கு காரணம், நிலையிலாவற்றின் பின்னால் திரிவதால் தான். திக்குத் தெரியாமல் காட்டில் தேடி அலைந்தால், இலக்கு கிட்டுவது எப்போது? நிலையான ஒன்றே, நம் இறுதி இலக்கு என்று மனதால் அறிந்தவனுக்கு, தன் உலக வாழ்வியல் தேவைகளின் ஈடுபாட்டின் நீளத்தினை கணக்கிட கடினமாயிராது. வாழ்க்கையின் பல்வேறு தேவைகளை ஏற்றுக்கொண்டும், அதே சமயத்தில், அவற்றோடு, ஒட்டாமலும், தனக்கும் அவற்றுக்கும் உள்ள தொடர்பின் நீளத்தை சரியான வரையுறைகளால் கணக்கிட்டும், வாழ்க்கை நடத்துபவனுக்கு, ஜீவன் முக்தனின் நிலையை எட்டிட இயலும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 18. e குரு
  ஆன்மீக முன்னேற்றம் எவ்வளவு இந்ந்த ஜன்மத்தில் கிடைக்கிறதோ அந்ந்த விட்ட இடத்தில் இருந்து அடுத்த ஜன்மத்தில் தொடரும். அதனால் அந்த நிலை அடைய நேரம் போதாதோ என்று நினைக்க வேண்டாம்.
  ஜீவா குறிப்பிட்ட நிலை வர காலம் ஆகும்தான். இதை பிராக்டிகலாக கடைபிடிக்க இப்போது நம்மை சொல்லவில்லை! :-))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails