Friday, November 07, 2008

இறையருள் - கேள்வி பதில்

இறைவன் உருவம் கொண்டவனா, உருவம் அற்றவனா?
உருவத்தில் பார்ப்பவர்களுக்கு, உருவம் கொண்டவன், உருவத்தையும் தாண்டி, அனைத்திலும் பார்ப்பவர்களுக்கு, உருவமற்றவன். தியாகராஜர் சொல்லுவது போல், உண்டு என்பவர்களுக்கு அவன் உண்டு. இல்லை என்பவர்களுக்கு அவன் இல்லை. ஏனெனில், அவர்களால் கண்டு கொள்ள இயல வில்லை.

அதெப்படி இரண்டாகவும் இருக்க முடியும்?
ஏனெனில் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. இரண்டு என்று மட்டும் இல்லாமல். எல்லாமுமாக. ஒன்றே எல்லாமுமாக. திறக்கமுடியாத பூட்டு என்பது இல்லையே. சரியான சாவியை கண்டுபிடிக்க முடியாதவர் மட்டுமே உண்டு. எங்கும் இறைவன் இருக்க, அவனைத் தேடி எங்கும் அலைவார் உண்டு. தங்கும் அருள் கிட்ட, மிஞ்சும் அன்பு வேண்டும். அதற்கு அவனிடம் தஞ்சம் கொள்வதே வழி.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், என்றால், ஏன் சில இடத்தில் இன்பங்கள், சில இடத்தில் துன்பங்கள்?
இறைவன் எங்கும் நிறைந்திருந்திருந்தாலும், நாம் இறைவனை விட்டு, பிரிந்தல்லவோ இருக்கிறோம். இறைவனோடு இரண்டற கலக்காதவரை, துன்பம் இருக்கத்தான் செய்யும்.

அப்படியானால், மண்ணுலகில் இன்பம் இல்லையா?
மண்ணுலகிலும் இன்பம் உண்டு. இந்த உடல் உயிரை சுமக்கையிலும் இன்பம் உண்டு. விண்ணுலகுக்கு சென்று சொர்கத்தனை அடைந்தால்தான் இன்பம் என்றில்லை. விண்ணுலகத்தை விண்ணில் காணாமல், தன்னில் காண்பவரும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், 'இகத்தில் பரம்' என்பார்கள். பரமனை தங்கள் அகத்தில் கண்ட அவர்களின், உடலுக்கும் சிதைவில்லை. அவர்கள் முக்தி அடைந்தாகும், உடலோடே மறைவார்கள். இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் போல.

இறைவனை அறிவது எப்படி?
இறையருள் பெறுவதன் மூலம்.

இறையருளினைப் பெறுவது எப்படி?
By Awareness. மனதை திறந்து வைப்பதன் மூலம், மனதில் அன்பு தூர்ந்திட, அருள் தானாகக் கிடைக்கும்.

மனதை திறந்து வைப்பது என்றால் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தினமும் காலையில் உங்களுக்கு வாக்கிங் செல்வது பழக்கம். இன்றைக்கு நீங்கள் நடந்து செல்லும் பொழுது, அந்தப் பக்கத்தில் இருந்து, இன்னொருவரும் நடந்து வர, ஒரு ஹலோ சொல்கிறீர்கள். அவரும், புன்னகைத்து, ஹலோ சொல்கிறார். ஆனால் அது, அந்த ஹலோவுடன் நின்று விடுகிறது. அடுத்த நாள், மீண்டும் அவரை பார்க்கிறீர். இப்போது, அது ஹலோவைத் தாண்டி, விசாரிப்பில் தொடர்கிறது. இன்னொரு நாள், விசாரிப்பு நீள்கிறது. இப்படியே போகப்போக, அவருடனான நட்பு, பல்கிப் பெருகுகிறது. இப்போதெல்லாம், வாக்கிங் கிளம்ப, செருப்பை மாட்டிக் கொள்ளும்போதே, அவரைப்பற்றிய நினைப்பும், கூடவே வந்து ஒட்டிக் கொள்கிறது. இதெல்லாம் எப்படி நடந்தேறியது? திறந்து வைத்த மனதால்.

மனதை திறந்து வைத்தால், இறையருள் எப்படிக் கிடைக்கும்?
மேலே சொன்ன உதாரணத்தில், மனது திறந்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்?. நம்மைச் சுற்றியே நாமே எழுப்பிக்கொள்ளும் ஈகோ சுவர்கள், நான், எனது, நானே பெரியவன், போன்ற தற்பெருமை நினைவுகள் வந்து மனதை ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்க, அந்த புதிய நண்பர் ஹலோ சொன்னாலும், சற்றே முகம் கடுகடுக்க, அங்கேயே முறிந்தது தொடர்பு. இதை, வேதாந்தம், அகங்காரம் - எனச் சொல்லும். இறையருள் எப்போதுமே இருந்து வந்தாலும், இந்த அகங்காரம் இருக்கும் வரை, மனதுக்கு, அதனால் ஒரு பயனும் கிட்டுவதில்லை. ஆனால், மனதை திறந்து வைத்தாலோ, அகங்காரத்தின் ஆளுமை குறையக் குறைய, இறை அருளானது அன்பாக இதயத்தில் மலர்கிறது. அந்த அன்பே, இறைவனை அடைந்திட வழி வகுக்கிறது. இந்த எளிய வழியைத் தான் பக்தி யோகம், ஞான யோகம் என்றும், கர்ம யோகம் என்றும் பலவாறு சொல்லி வைத்தனர் பெரியோர்கள். உண்மையில் எல்லாமே ஒன்றுதான். இறைவன் யாரெனவே அறியாமல், இறைவனிடம் அன்பு செலுத்த இயலுமா? அல்லது, அன்பு செலுத்தாமல், இறைவனை அறியத்தான் இயலுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், அன்பானது வியாபித்து இருக்க, அதுவே கர்மம். இவை எல்லாவற்றுக்கும் துவக்கப் புள்ளியாக, மனதினை தூய்மைப் படுத்துதல் என்னும் யோகம் ஆதாரமாய் அமைகிறது. மனதில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் களைந்து, மனத்துக்கண் மாசிலனாய் சாதகம் செய்திட, அவ்வறமே அகத்தைக் காக்கும், பின் ஜகத்தைக் காக்கும்.

இறைவன், இறைவன் என்று பிதற்றுகிறார்களே, இறைவனைக் காணாமலேயே பிதற்ற இவர்களென்ன பித்தர்களா?
ஆம், பித்தர்களே. இறைவனின் மீது பித்துப் பிடித்த பித்தர்களே. இவர்கள் இறைவனையும், 'பித்தன்' என்பார்கள்!. அறிமுகம், நட்பாகி, நட்பு, உறவாகி, உறவு, உற்ற துணையாகி வழிநடத்த, அந்த இறை அன்பு, அவனில் மேல் ஏற்படும் பித்தே, பின் எல்லாமுமாகி, எல்லாவற்றையும் வழிநடத்த, வழிவகுக்கும்.

மெய்யியலில் என் புரிதல்களை பிதற்றியிருக்கிறேன், பொறுமையுடன் படித்தமைக்கு நன்றிகள்!

16 comments:

 1. உண்டு என்றால் அது உண்டு
  இல்லை என்றால் அது இல்லை
  ______கவியரசர் கண்ணதாசன்

  கட்டுரை நிறைவாக உள்ளது!
  -----------------------
  "இதயக் கமலத்தில் என்றும் இருக்கின்ற, உன்னை எப்படிப் பிரிவேன் முருகா"

  அல்லது

  "இதயக் கமலத்தில் என்றும் இருக்கும் உன்னை மறக்க முடியாது முருகா"

  Template வாசகம் இப்படி இருந்தால் இன்னும் சிறக்கும்!

  ReplyDelete
 2. //இறைவன், இறைவன் என்று பிதற்றுகிறார்களே, இறைவனைக் காணாமலேயே பிதற்ற இவர்களென்ன பித்தர்களா?//

  பித்தன், பிறை சூடிய, பெம்மான், அருளாளனின் அருள் நிறைந்து இருக்க வாழ்த்துகள். அருமையான பதிவு. மனதைத் திறந்து வைக்கும் உதாரணம் எளிமையாகவும் இருக்கின்றது.

  ReplyDelete
 3. வாருங்கள் வாத்தியார் ஐயா,
  த(எ)ங்கள் இதயங்கனிந்த தலைவரை - கவியரசரை முன்மொழிந்தமைக்கு நன்றி!
  Template - இவ்வாசகத்தின் மூலம், கவிஞர் கடலூர் எம்.சுப்ரமணியன் ஆவார். - அவரது பாடலின் பல்லவி இது:
  "இதயக் கோவிலில் வசித்திடும் உன்னையே எப்படி மறப்பேன் ஐயா?"
  முழுப்பாடல் வரிகளுக்கும் இந்த இடுகையில் பார்க்கலாம். அந்த பல்லவியை சற்றே மாற்றி அமைத்துள்ளேன்.
  இந்த வரிகளை, மேலோட்டமாக பார்க்கும்போது, முருகனை மறக்க முயல்வது போலவும், எப்படியாவது மறக்க முயல்வேனோ எனச் சொல்லுவது போலத் தோற்றமளிக்கும். ஆனால் - சற்று ஆழ்ந்தால் - 'உன்னை மறக்க முயன்றாலும் முடியாது - ஏனெனில் நீயே என்னில் என்று இருப்பதால்' என்கிற பொருள் தந்திடும். நேரடியாகச் சொல்வதைவிட மறைத்துச் சொல்லுவதிலும் சுகம் அல்லவா!

  ReplyDelete
 4. நன்றாக, எளிமையாச் சொல்லியிருக்கீங்க ஜீவா.

  //நான், எனது, நானே பெரியவன், போன்ற தற்பெருமை நினைவுகள் வந்து மனதை ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்க, அந்த புதிய நண்பர் ஹலோ சொன்னாலும், சற்றே முகம் கடுகடுக்க, அங்கேயே முறிந்தது தொடர்பு. இதை, வேதாந்தம், அகங்காரம் - எனச் சொல்லும்.அகங்காரத்தின் ஆளுமை குறையக் குறைய, இறை அருளானது அன்பாக இதயத்தில் மலர்கிறது. அந்த அன்பே, இறைவனை அடைந்திட வழி வகுக்கிறது. //

  மிக உண்மை.

  //இறைவனை அறியத்தான் இயலுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், அன்பானது வியாபித்து இருக்க, அதுவே கர்மம். இவை எல்லாவற்றுக்கும் துவக்கப் புள்ளியாக, மனதினை தூய்மைப் படுத்துதல் என்னும் யோகம் ஆதாரமாய் அமைகிறது.//

  ஆமாம், அன்பில்லாத கர்மா மற்றும் நான் என்ற எண்ணத்துடன் செய்யும் கர்மா, மற்றவர்களுக்கு போதிக்க மட்டுமே கர்மா இவையெல்லாம் மிகப் பெரிய எதிரிகள்...அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்..எப்போ இவற்றை மொத்தமா விலக்கறோமோ
  அப்போ மாசிலனாய் ஆகிடுவோம்...ஆனா எல்லா நேரமும் அப்படியே இருக்க முடியறதில்லையே.. :(..அந்த பக்குவமும் இறைதான் அருளணும்.

  ReplyDelete
 5. வாருங்கள் கீதாம்மா,
  //பித்தன், பிறை சூடிய, பெம்மான், அருளாளனின் அருள் நிறைந்து இருக்க வாழ்த்துகள்//
  வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றிகள்.
  பித்தன் மேல் பித்துப்பிடித்து பித்தனாகவே மாறி

  பிறப்பின் பித்து அகலவேண்டும்!

  ReplyDelete
 6. //இறைவன் யாரெனவே அறியாமல், இறைவனிடம் அன்பு செலுத்த இயலுமா? அல்லது, அன்பு செலுத்தாமல், இறைவனை அறியத்தான் இயலுமா?//

  நன்று.

  விடைகளை உள்ளடக்கிய வினாக்கள்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாருங்கள் மௌலியண்ணா,
  எளிமையாக இருந்தது மகிழ்ச்சி.
  //அந்த பக்குவமும் இறைதான் அருளணும்.//
  'பக்குவம்' என்ற அழகான சொல்லைச் சொன்னீர்கள்!
  பக்குவப் படுதலும், தேர்ந்த ஆன்ம முதிர்ச்சியும் தான், நம் இலக்காக இருக்க வேண்டும்.

  ReplyDelete
 8. வாருங்கள் அ.நம்பி -
  அழகு நம்பி, அன்பு நம்பி, அறிவு நம்பி!
  //
  விடைகளை உள்ளடக்கிய வினாக்கள்.//
  :-) விடைகளைச் சொல்லுவதை விட, அதைப் படிப்பவருக்கு, சுயதேடலைத் துவக்கிடும் வினாக்களை தர இயலுமானால், அதுவே மாணப் பெரிது.
  தங்கள் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 9. //அந்த புதிய நண்பர் ஹலோ சொன்னாலும், சற்றே முகம் கடுகடுக்க, அங்கேயே முறிந்தது தொடர்பு//
  :-))
  காலத்துக்கேற்ற பதிவு. தொடருங்கள். வாரம் ஒரு முறையாவது...

  ReplyDelete
 10. வாருங்கள் திவாய்யா,
  //காலத்துக்கேற்ற பதிவு. //
  மிக்க மகிழ்ச்சி!
  //தொடருங்கள். வாரம் ஒரு முறையாவது...//
  ஆகட்டும் ஐயா.

  ReplyDelete
 11. அருமையான பதிவு ஜீவா. தெளிவான சிந்தனை. இறைவனின் தன்மையைப் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னது இது - "இறையன்பர்கள் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்."

  ReplyDelete
 12. வாருங்கள் கவிநயாக்கா,
  அழகான இராமகிருஷ்ணரின் அருளமுதத்தினை மொழிந்தீர்கள், மிக்க நன்றி.

  ReplyDelete
 13. //அவர்களின், உடலுக்கும் சிதைவில்லை. அவர்கள் முக்தி அடைந்தாகும், //

  இதற்கு பெயர் ஜீவன் முக்தி, அதாவது தெய்வீக வாழ்க்கை. முக்தி எல்லோருக்குமே கிடைக்கும், ஜீவன் முக்தி என்பது முயற்சியையும், நல்லூழையும், ஆசிர்வாதத்தையும் அல்லது மூன்றையுமே பொறுத்தது.

  ReplyDelete
 14. வாருங்கள் கோவியாரே,
  ஜீவன் முக்தி பற்றி வேதாத்திரி மகரிஷி இவ்வாறாக சொல்வார்: "உணர்வில் சிவமே ஜீவனாக இயங்கும் உண்மை உணர்ந்த பேரின்ப அனுபவமே ஜீவன் முக்தி எனப்படும்."
  வரப்போகும், ஆத்ம போதம் பகுதியிலும், ஜீவன் முக்தன் எப்படிப்பட்டவன் என விளக்கும் செய்யுள் உள்ளது!

  ReplyDelete
 15. "இறைவனை அறிவது எப்படி?
  இறையருள் பெறுவதன் மூலம்.

  இறையருளினைப் பெறுவது எப்படி?
  By Awareness. மனதை திறந்து வைப்பதன் மூலம், மனதில் அன்பு தூர்ந்திட, அருள் தானாகக் கிடைக்கும்." மிகவும் எளிமையான விளக்கங்கள் இது போன்ற சுய கேள்விகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுவது பல புதிய ஆர்வலர்களை உருவாக்கும். நல்ல பணி ஜீவா தொடருங்கள்.

  ReplyDelete
 16. வாருங்கள் கிருத்திகா மேடம்,
  நீங்கள் சொல்லுவது சரியே, மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails