இந்தப் பதிவில் எப்படி மறப்பேன் ஐயா என்கிற உருப்படியினைப் பார்ப்போம். அழகு தமிழில் நிறைவான பாடல்கள் பல படைத்துள்ள கடலூர் எம்.சுப்ரமணியன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அவரது தமிழிசைத் தொண்டு போற்றுதலுக்கு உரியது. 'பாடலீசன்' என்பது அவரது முத்திரை என நினைக்கிறேன். அவருடைய இன்னொரு பாடல் மிகப் பிரபலமானது - இராகமாலிகையில் அமைந்தது - நீங்களே சொல்லுங்களேன்.
இந்தப் பாடலைக் கேட்குமுன் சிறியதொரு முகவுரை: இதயக் கமலத்தில், அனஹதத்தில், தூய அன்பாக மலர்ந்திடும் முருகனை எப்படி மறக்க இயலும்? சந்தோக்ய உபநிடதம் அத்தியாயம் எட்டில் (1.3) சொல்லப்பட்டுள்ளதை இங்கே நினைவு கூறுகிறேன்: "இந்த இதயக் கமலத்தில் தான் எல்லாமும் இருக்கிறது. சொர்கமும், பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஆகாசமும், நெருப்பும், காற்றும், சூரியனும், சந்திரனும், சுடர் விடும் விண்மீன்களும் இங்கேதான் இருக்கின்றன."
இப்படி எல்லாமுமாய் இருக்கும் தூய சச்சிதானந்தம், தூய அன்பில் துலங்கிடும். துலங்கித் துலங்கி துளிர் விடும். துளிர் துளிர் விட, தூர்ந்து வளரும். தூர்ந்து வளர வளர, துரியம் அதை அடைந்திட பாதை தனைக் காட்டிடும்.
இதயக் கமலத்தில் அன்பே வடிவாய், ஆனந்தப் புன்னகையுடன், அருந்தவப் புதல்வனாய், பழனியப்பனாய், அவன் அருள் வேண்டி, இந்தப் பாடலை படித்திடுவோம்:
எடுப்பு:
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா? - முருகா - என்
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா?
தொடுப்பு:
பதமலரை தினம் இசை என்னும் மலராலே
பாடிப் பணிந்தேனய்யா - பழனியப்பனே...
முடிப்பு:
பட்டம் பதவி என்ற புகழறியேன் - நான்
பட்டம் பதவி என்ற புகழறியேன்... கந்தக்
கோட்டமே சதமென்று நம்பி வந்தேன்
கஷ்டமே வந்தாலும்... முருகா...
கஷ்டமே வந்தாலும், கை தூக்கி விடுவாயே
கண்கண்ட தெய்வமே - பாடலீசன் குமரா...
என் இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா, முருகா...
----------------------------------
இராகம்: சூத்ரதாரி (நடபைரவி ஜன்யம்) (ஸ ரி2 ம ப த1 ஸ் - ஸ் த1 ப ம ரி2 ஸ)
தாளம்: ஆதி
இயற்றியவர்: கடலூர் எம்.சுப்ரமணியம்
பாடுபவர்: நித்யஸ்ரீ மஹாதேவன்
இதயக் கோயிலில் வசித்திடும்
M.சுரமணியன் அவர்கள் இயற்றிய அந்த இன்னொரு பாடல்:
ReplyDeleteஇராகத்தில் சிறந்த இராகமெது?
கல்யாணியா காம்போதியா?
பாடலை கேட்க இங்கே செல்லவும்.
அருமையான பாடல்; அருமையான வர்ணனை, விளக்கங்கள்.. இனிமையாக நிதயஸ்ரீ
ReplyDeleteஅவர்களின் குரலில்,உருக்கும் கானம்! நல்ல பதிவு. தமிழிசை வளர்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள்; வாழ்த்துக்கள்.
இது வரை கேட்காத பாடல் இது ஜீவா. அறிமுகத்திற்கு நன்றிகள். பாடலீசன் என்பது பாடலிபுத்திர ஈசன் என்று பிரியவேண்டும் என்று நினைக்கிறேன். பாடகர் பலுக்குவதைக் கேட்டால் அப்படித் தான் தோன்றுகிறது. படித்த போது முதலில் பாடல் + ஈசன் என்று புரிந்து கொண்டேன். :-)
ReplyDeleteஇந்தப் பாடலை முருகனருள் பதிவில் இடலாமே.
சிறப்பான பாடல் அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteஅட எங்க ஊர் ஆசாமி எழுதி இருக்காரா!
ReplyDeleteபாடலீசனார் எங்க ஊர் ஈசனார். ப்ருஹன்நாயகி சமேத பாடலீஸர். ஊரில் முக்கியமான கோவில் அவருடையதுதான்.
திரு.ஜீவி ஐயா,
ReplyDeleteஅருமையான பாடல் - பெருமை திரு. எம்.சுப்ரமணியனைச் சாரும்.
இனிமையான குரல் - பெருமை திருமதி. நித்யஸ்ரீ அவர்களைச் சாரும்.
குமரன்,
ReplyDeleteகடலூர்க்காரர் திரு.திவா குறிப்பிட்டுள்ளது போல,
கடலூர் (அருகே உள்ள திருப்பாதிரிபுலியூர்) உறையும் பாடலீஸ்வரை குறிப்பிட்டுள்ளார் என நினைக்கவும் வாய்ப்புண்டு. அவரூர் ஆயிற்றே!
பாடலீஸ்வரர் ஆலயத்தில் முருகனும் உண்டு - ஆறுமுகனை அருணகிரியாரும்
'நிணமொடு' என்று தொடங்கும் திருப்புகழில் அழைக்கிறார்!
வருக, திரு.ஆ.கோகுலன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஆம், திரு.திவா.
ReplyDeleteகடலூர் தங்கள் ஊரென இதுவரை தெரியாது - அதனாலென்ன இப்போது தெரிந்துவிட்டது!
பாடலீஸ்வரரை குறிப்பிட்டமைக்கு நன்றி. ஒரு கடலூர்க்காரரே நேரில் வந்து சொன்னது நல்லது!
எ த்தனை அழகிய பாடல்! ரசித்தேன்
ReplyDeleteமிகவும்.
ஆமாங்க ஷைலஜா மேடம்,
ReplyDeleteஎத்தனை என்று வியக்க வைக்கும் அழகு!
குறிப்பாக:
//கஷ்டமே வந்தாலும்... முருகா...
கஷ்டமே வந்தாலும், கை தூக்கி விடுவாயே..//
என்ற இடத்தில்,
"கஷ்டமே வந்தாலும்...(கஷ்டம் வாராது, அப்படியே வந்தாலும்...)
முருகா என்றொருதரம் சொன்னால் போதுமே - நீ என்னை அந்த கஷ்டத்தில் இருந்து கை தூக்கி விடுவாயே..."
என்கிற பொருளை எவ்வளவு சுருக்கமாக சொல்கிறார்!
கம்பன், "எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்" என்று சொல்லுவதுபோல்!
பாடலைப்பற்றி எழுதுவதா அல்லது பாடல் அமைந்துள்ள ராகத்தைப்ப்ற்றியா,
ReplyDeleteபாடலாசிரியரையா அல்லது நித்யஸ்ரீ அவர்களின் குரல் வளத்தையா ?
எதைப் பாராட்டுவேன்
அதை எப்படிப் பாராட்டுவேன் ? அதனால்,
இத்தனையும் ஒருங்கே கொணர்ந்து இங்கே தந்திட்ட
உங்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.
கடலூர் சுப்பிரமணியம் 72 மேள கர்த்தா ராகங்களிலும் பாடல்கள்
எழுதியிருக்கிறார் எனத் தெரிகிறது. முழுக்க முழுக்க சம்ஸ்க்ருத
சொற்கள் அடங்கிய பாடல்களும் இருக்கின்றன்.
கம்பீர நாட்டையில் சக்தி வினாயகம் பஜேஹம்.
கீரவாணியில் ... வாணி ! வரம் அருள் !
இன்னொரு ராகமாலிகை .. வண்ண வண்ண மலர்
நீலாம்பரியில் இதுவும் அருமை. மாயாதீத மஹேஸ்வரி.
http://www.musicindiaonline.com/p/x/VUp2x6G6ld.As1NMvHdW/
நிற்க. நீங்கள் குறிப்பிட்ட இராகமாலிகையில் பூபாளம் வரும்போது
காது கொடுத்துக் கேட்டேன். ஒரு வரியை இரண்டு தரம் பாடுகிறார்கள். முதல்
தடவையில் பூபாளத்துடன் இன்னொன்றும் கலந்திருப்பது போன்ற
பிரமை ஏற்படுகிறது. சிந்து பைரவியோ ? தெரியவில்லை. இல்லை..
என் காதுகள்தான் சரியாக கேட்கவில்லையோ ! ஸ்வர பேதமா ?
இருக்கவே இருக்காது .. ஒருவேளை அதீத ஸஞ்சாரம் என்பார்களே
அதுவா ?
இருக்கட்டும். நேற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்கள் பாகவதம் கேட்டுக்
கொண்டிருந்தேன். ஆத்மாவின் ஸ்வபாவமான இயல்பினை ஸத்யம் என்றும் அனந்தம் என்றும் சுகம் என்று வர்ணிக்கிறார்கள். அந்த ஸத்ய, சுக, அனந்த, ஆனந்த நிலையில் மனம் லயித்து நிற்பதற்கு, மும்மூர்த்திகளும், தியாகராஜரும் போல், கடலூர் சுப்பிரமணியமும் துணை நிற்கிறார்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamulla valaipathivugal.blogspot.com
கடலூராரை மும்மூர்த்திகளுக்கு ஒப்பிட்டது பெருமையாக இருக்கிறது சூரி ஐயா.
ReplyDeleteMLV மற்றும் DKP இவருடைய பாடல்களை பாடி பெருமைப் படுத்தினார்களாம்.
நீங்கள் குறிப்பிட்ட - மாயாதீத மஹேஸ்வரி - அருமையாக இருந்தது : நீலாம்பரி - ஸப - பஸநிபம - ஸபகம - ஸபநிகம - ஸஞ்சாரங்களில் மனம் லயித்தது.
Thanks, Jeeva. I am going to borrow your lyrics (posted here) in an article I am writing for my periscope blog. I will let you know when I publish it and post the link in carnatic music Facebook page.
ReplyDeleteElsewhere I read that the rAgam for this song was mentioned as "manolayam" (mentioned by his grandson in a comment on a youtube posting. You mention it as "sUtradAri" Are you saying Nityasri sings it in sUtradAri? I can't tell "karaNDi" from "pAtALa karaNDi" . So please clarify for me.
ReplyDelete